Saturday, August 18, 2018

PATTINATHAR


பட்டினத்தார் J .K.. SIVAN

உயிர் போகட்டுமே...

கழுவேற்றுதல் ஒரு மரண தண்டனை. அதில் உயிர் தப்பினவன் எவனும் இல்லை.ஆனால் இப்படி ஒருவன் சாவது நினைக்கமுடியாத கோரம். கூரான, முழுவதும் எண்ணை தடவி வழுவழுவென்று இருக்கும் உயரமான மரம் ஒரு மேடையில் மேல் நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். குற்றவாளியை நிர்வாணமாக்கி, கை கால்களை கட்டி, மேலேதூக்கி, அதன் கூரான முனை அவனது ஆசன வாயை தொடும்படியாக செருகிவிடுவார்கள்.. அவன் உடலின் எடையால், எண்ணைதடவிய கூரான மரத்திலோ, (மரம் தான் அதிகம்) இரும்பு தண்டிலோ, அவன் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழுமரம் மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளே ஏற ஏற வலி தாங்காமல் ரத்தம் ஆறாக பாய, அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.

இரும்புக் கழுமரத்தை ''வெங்கழு'' என்பார்கள். ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ' ஐயனார் கோவிலில்' ஒரு வெங்கழு இருக்கிறது. பொட்டு வைத்து காத்தவராயன் என்று வழிபடுகிறார்கள். சென்னை தொல் பொருள் காட்சி சாலை (MUSEUM ) யில் சமீபத்தில் ஒரு கழு மரம் பார்த்து நடுங்கினேன். உடம்பை என்னவோ செய்தது. மனம் வலித்தது. அதில் சித்ரவதை பட்டு மடிந்தவர்களை நினைத்து துடித்தேன்.

பட்டினத்தார் ஊரை விட்டு கால் போன திக்கில் சென்றார். வானம் கூரை, பூமி பாய்.

ஒரு சமயம் திருவாரூர் பக்கம் வந்தார். அங்கே ஒரு சிறிய பிள்ளையார் கோயில். சந்நிதிக்கு எதிரே ஒரு திண்ணை உள்ள பழைய மண்டபம். பட்டினத்தார் அந்த மண்டப திண்ணையில் அமர்ந்து சிவ த்யானத்தில் ஈடுபட்டு நிர்விகல்ப சமாதியில் இணைந்துவிட்டார்.

அந்த மண்டபம் அருகே ஒரு தாமரைக் குளம். அதில் அந்த ஊர் ராணி தோழிகளுடன் வந்து ஸ்நானம் செய்வது வழக்கம். குளத்தை சுற்றி காவல் வீரர்கள். அவர்களையும் மீறி எப்படியோ ஒரு பலே திருடன் குளத்தருகே வந்துவிட்டான். ராணி தங்கியிருந்த மாளிகையில் எவரும் அவன் நுழைந்ததை கவனிக்கவில்லை. குளிக்கப்போகும் முன்பு ராணியும் தோழியரும் எல்லா நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு சென்றிருந்தது திருடனுக்கு சௌகர்யமாகப் போய்விட்டது. ராணியின் வைர முத்து நவரத்ன மணிகள் பதித்த மாலையை பார்த்தவுடன் திருடனுக்கு அதை அபேஸ் பண்ணி விட ஆசை . அதன் அழகில் லயித்திருந்த அவனுக்கு ராணியின் காவல்காரன் உள்ளே நுழைவது தெரியவில்லை. திருடனைப் பார்த்த காவல்காரன் சத்தம் போட்டான். திருடன் உயிருக்கு பயந்து ஒரே ஓட்டம் பிடித்தான்.

ஒரு புலி மானைத் துரத்துகிறது. எது வேகமாக ஓடும் என்று ஒரு கேள்வி. புலியா, மானா? மானைக் காட்டிலும் புலி வேகமாக ஓடக்கூடியது. ஆனால் மான் வேகமாக ஓடி தப்பித்துக் கொள்ளும். ஏன்? புலி இன்னொரு இட்லி, வடை, பொங்கலுக்கு ஆசையாக மானை துரத்துகிறது. மானோ தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறது. அதுபோல் திருடன் ஓடினான். வெகு சீக்கிரம் காவலாளியிடம் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்து சட்டென்று எதிரே தெரிந்த ஒரு சின்ன பிள்ளையார் கோவில் பக்கம் ஓடினான். சந்நிதி எதிரே ஒரு சிறு மண்டபம், அதில் திண்ணையில் பட்டினத்தார் கண்ணை மூடிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தது திருடனுக்கு உயிர் தப்ப சட்டென்று ஒரு ஐடியாவை கொடுத்தது.

கையில் இருந்த நகை மூட்டைகளை பட்டினத்தார் அருகே சுவரோரம் வீசிவிட்டு அவர் கழுத்தில் ராணியின் வைர முத்து நவரத்ன மணி மாலையை தொங்கவிட்டு மண்டபத்தில் தூங்குவது போல் போர்த்தி படுத்தான்.

திருடனைத் துரத்தி வந்த காவலாளிகள் சில நிமிஷத்தில் அங்கே வந்த போது யாரோ போர்த்திக் கொண்டு படுத்திருப்பதையும், ஒரு ஆள் கணை மூடிக்கொண்டு ராணியின் நகையை அணிந்த கொண்டு ஜம்மென்று
திண்ணையில் பயமே இல்லாமல் உட்கார்ந்திருப்பதும் கண்டு கோபம் வந்து, பட்டினத்தாரை சிறையிலடைக்கக் கொண்டு செல்கிறார்கள். விஷயம் ராஜா காதில் விழுந்தது. ''

''உடனே அந்த திருடனை கழுவேற்றுங்கள் '' என்று கத்தினான் ராஜா. பட்டினத்தார் இதெல்லாம் ஒன்றுமே அறியாமல் இன்னமும் ராணியின் நகை தனது கழுத்தில் மினுமினுக்க சமாதிநிலையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, அவர்களோடு கழுமரம் நோக்கி செல்கிறார். அவர் ஆடையை உருவி அவரை கழுமர உச்சியில் அமர்த்த தூக்கியபோது தான் பட்டினத்தாருக்கு தன்னை சுற்றி என்ன நடந்தது என்று புரிந்தது. அவர் பார்வை தனது கழுத்தில் விலையுயர்ந்த ஏதோ ஒரு மாலை இருப்பது புரிந்து சிரித்தார்.

ஏன் திருடினாய், என்று காவலாளிகள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை. அதற்குள் அரசனும் யார் அந்த பலே திருடன் என்று அவன் தண்டனை பெறுவதை மேற்பார்வை இட வந்துவிட்டான்.

''என்ன நெஞ்சழுத்தம், ஒன்றுமே சொல்லவில்லையே இந்த திருடன் பேசாமல் சிரிக்கிறானே''ஆச்சர்யமும் கோபமும் வந்தது ராஜாவுக்கு. .

''பரமேஸ்வரா, என்ன இது, எப்படி என் கழுத்தில் இதெல்லாம்? உன் வேலையா இது? ''சிவனே உன்னை நினைந்து மனத்தால் நான் உன்னை அனுபவித்துக் கொண்டிருந்தேனே. இதுவும் உன் திருவிளையாடலில் ஒன்றா?'' பட்டினத்தார் ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்.

"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை, இனி தெய்வமே,
உன் செயல் இது என்று உணரப்பெற்றேன். இந்த ஊன் எடுத்து
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே ''

உருகி பாடுகிறார் பட்டினத்தார். கழுவேற்றப்போகிறார்களே என்ற பயமோ உயிர் மேல் பற்றோ இல்லை. எனது முன் வினை இவ்வளவு மோசமான நிலையில் என்னை கொண்டு நிறுத்திவிட்டதே. அப்படியென்றால் நான் எவ்வளவு தீய காரியங்கள் செய்திருக்கவேண்டும் என்று அதிசயித்து வருந்துகிறார்.

என்ன ஆச்சர்யம். எல்லோர் கண்ணெதிரே அந்த கொடிய கூறிய கழுமரம் சட்டென்று தீப்பிடித்து பெரிதாக கொழுந்து விட்டு எண்ணெய் அதன் ஜிவாலையை அதிகரிக்க நன்றாக கொழுந்து விட்டு எரிந்து சாம்பலாகியது

அரசன் திகைத்தான். ''என்ன தவறு செய்து விட்டோம். யாரோ ஒரு மஹானை இம்சிக்க கொலைசெய்ய தவறான எண்ணம் கொண்டுவிட்டேன்'' ராஜா ராணியுடன் பட்டினத்தார் காலில் விழுந்து வணங்கி ''என்னை மன்னியுங்கள்'' என்கிறான். பட்டினத்தார் ஏதோ வராத பஸ் வருவதற்கு காத்திருந்தது போல் அங்கிருந்து எந்த வித உணர்ச்சியும் இன்றி நடையைக் கட்டுகிறார்.



1 comment:

  1. ஆராயாமல் தன் குடிமக்களுக்கு கொடிய தண்டனை வழங்கிய சில அரசர்களின் தவறான தீர்ப்பால் இன்று அரசர்கள் வம்சமே பூண்டோடு அழிந்துபோய்விட்டது. தற்போதைய நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளை பல ஆண்டுகள் கிடப்பில் போட்டு காலம் தாழ்ந்து நீதி வழங்குகிற நிலையுள்ளது.

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...