Sunday, August 26, 2018

AINDHAM VEDHAM



 ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 

               
  கண்ணிலா தந்தையின் குழப்பம்

மஹா பாரதம்  ஒரு ஒப்பற்ற செல்வம்.  உலகில்  யாருக்குமே கிடைக்காத  மா பெரும் பாக்கியம்  பாரதம், ராமாயணம், பாகவதம் ஆகியவற்றை   நாம் பெற்றது.   வாழ்வில் ஒரு முறையாவது இதை ஒவ்வொருவரும்  படித்து பயன் பெற  வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு இதை அறிமுகப்படுத்த வேண்டும்.   பழங்கதை இது என்று  எண்ணுபவர்கள்  பரிதாபத்துக்குரியவர்கள். 

''முனி ஸ்ரேஷ்டரே,  என் முன்னோர்கள்  பாண்டவர்கள் சகல சம்பத்தையும் ஒரே  நாளில் இழந்து  கௌரவர்களால்  ஏமாற்றப்பட்டு  வனத்தில்  எவ்வாறு  துன்புற்று வாழ்ந்தார்கள்.   அங்கு என்ன நடந்தது?.  சொல்லுங்கள்''  என்றான் ஜனமேஜயன்.
'' கேள்  அரசே,  பாண்டவர்கள்  ஹஸ்தினாபுரத்தை விட்டு  வடக்கு நோக்கி  நடந்தார்கள்.  வழியெல்லாம்  எண்ணற்ற  மக்கள் கண்ணீர் சிந்தி அவர்களை  மௌனமாக வரவேற்றார்கள்.    பீஷ்மர் முதல்  துரியோதனன் வரை கௌரவர்களை எல்லாம்  மக்கள் சபித்தார்கள். ' ஐயோ   இனி இந்த  துர்யோதனன் ஆட்சியில்  எப்படி நிம்மதியாக  நாம் வாழ்வோம். பேசாமல்  பாண்டவர்களோடு  நாமும் வனவாசம் செய்வோமா''  என்று கலங்கினார்கள்.  தீயவர்கள் ஆளும் நாட்டை விட நல்லவர்கள்  உள்ள காடு  நமக்கு  நன்மை தரும் என்று அநேகர்  பின்  தொடர்ந்தார்கள்.

''என்  அருமை நண்பர்களே ,   எங்கள் மீது  எந்த வருத்தமும், பரிதாபமும் வேண்டாம்.   நீங்கள் இங்கேயே  நிம்மதியாக  வாழ்வீர்கள்.  பீஷ்மர் துரோணர், போன்றவர்களுடன் என் தாய் குந்தியும் உங்கள்  அபிமானத்
துடன்  இருக்க உதவுவீர்கள். அது  போதும். காலம்  விரைவில் ஓடும். நாங்களும் திரும்புவோம்'' என்று  யுதிஷ்டிரன்  அவர்களை  தைரியப்படுத்தினான்.

கங்கைக்கரையில்  ஒரு  ஆலமரத்தடியில்  ஒரு  இரவு கழிந்தது.  சில  பிராமணர்கள்  அவர்களோடு  சேர்ந்து கொள்ள  முயன்றனர்.  ''வேண்டாம்,  நாங்கள் இனி அடர்ந்த காட்டுக்குள் செல்லப்போகிறோம்,  கொடிய  வன விலங்குகள், உயிருக்கு  ஆபத்தானவை  இருக்கும் இடம். நீங்கள் இங்கேயே  இருங்கள்.  உங்களை முன் போல்  ரட்சிக்கும்  நிலையில்  இல்லாத  துர் பாக்யசாலி நான்  இப்போது'' என்று யுதிஷ்டிரன் அவர்களை தடுத்தான். அவன் கண்களில்  நீர்  பெருகியது.

சௌனகர்  என்கிற  பிராமணர்  ''தர்ம ராஜா, உடல் மனம் இரண்டுமே  துன்பத்தால்  பாதிக்கப்படுகிறது. பற்று தான்  சகல துக்கத்தையும் வரவழைக்க வல்லது.  மனத்  துன்பம் தான்  உடல் துன்பத்துக்கு வித்து.  ஒரு சிறு விதை  மா பெரும்  விருக்ஷமாவது போல்,  மனதில்  துயரத்துக்கு இடம் கொடுத்தால்  ஒருவனை  அது அப்படியே  விழுங்கிவிடும். தாமரை  இலைத்  தண்ணீராக,  வருவதை எதிர்கொள்ள ஜனகர் உச்சரித்த  சில மந்திரங்களை சொல்கிறேன். அவை உங்களுக்கு இந்த நிலையில்  உபயோகமாகும்''என்று அந்த  ஸ்லோகங்களை  உபதேசித்தார்.

''பிராமணோத்தமரே,  பாண்டவர்கள்  என்றும்  பிராமணர்களை முதல் ஸ்தானத்தில் வைத்து உபசரித்து, அவர்களுக்கு  திருப்திகரமாக  தான தர்மங்கள் செய்யும் வழக்கம் உடையவர்கள். இப்போதும் ஒரு புல் ஆசனமாவது  தந்து வணங்கி  நீரால்  பாதம் கழுவி  காய் கனி கொடுத்து உபசரிக்கும் நிலையிலாவது  இருக்கிறோம் .
சகோதரர்களே, தௌம்யரே ,  இந்த பிராமணர்கள்  நம்மோடு  வர விருப்பம் கொண்டவர்களாக  இருந்தும் நம்மை  எதிர் நோக்கி இருக்கும் ஆபத்துகளை அவர்களும் சந்திக்க வேண்டாம்  என்று  தடுத்துவிட்டேன். இவர்களுக்கு நாம்  என்ன  செய்ய முடியும் சொல்லுங்கள்'' என்றான்  யுதிஷ்டிரன்.

இறைவனைப் பிரார்த்தித்து  சூரியன் சந்திரன் இருவருமாக  சேர்ந்து  அவர்களை  ரக்ஷித்து  காலத்தில் மழை பொழிந்து, பயிர்கள் விளைந்து, மாடு கன்று வளம் செழித்து சுபிக்ஷமாக   இருக்க  வாழ்த்துவோம்''  என்றார்  தௌம்யர் .

இனி ஹஸ்தினாபுரத்தில்  நடந்துகொண்டிருக்கும்  திருதராஷ்டிரன் விதுரன் சம்பாஷணையை தொடர்வோம்.
(இதைத் தான்  விதுர நீதி என்று தனியாக  உங்களுக்கு எழுதிக்கொண்டு வருகிறேன்)

''விதுரா  நீ  எல்லாரையும் சம நோக்குடன் அன்பு செலுத்தி  மகிழ்பவன்.  என் கடமை என்ன  சொல். எப்படி  மக்களிடம் நல்ல பெயர் பெறுவது.

''அரசே,  ஒரு ராஜ்யத்தின் பெருமை அதன் அரசனின் நேர்மை, அன்பு, வீரம்,  உண்மையான உழைப்பு,  த்யாகம்  இவற்றில்  தான் இருக்கிறது. சகுனியோடு சேர்ந்து உன் மகன்  பாண்டவர்களால் இந்த  வம்சத்திற்கு இருந்த நற் பெயர்களை  அடியோடு  அழித்து விட்டான். மக்களுக்கு  யுதிஷ்டிரனை சூதாட அழைத்து ஏமாற்றி  வென்று அவனது  ராஜ்ஜியம், சகல சொத்து, எல்லாவற்றையும்  அபகரித்த  உன் மகன் துரியோதனன் மீது கட்டுக்கடங்காத  சினம் உள்ளது.

நீ  பாண்டவர்களை  அழைத்து  அவர்கள் ராஜ்ஜியம்  சகல சொத்துக்களையும் திருப்பி அளித்து அமைதியாக  வாழ விட்டால்  ஒருவேளை  உன் மீது முன்பிருந்த மதிப்பு கொஞ்சம்  தேறலாம்.  இது நடக்காவிட்டால்  பீமன்  அர்ஜுனன் கையால்  உன் மக்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம். இது எல்லோருக்கும் தெரிந்ததே.   பாண்டவர்களும் கௌரவர்களும்  அமைதியாக  பரஸ்பர  சகோதர பாவத்துடன் வாழ்ந்தால்  மட்டுமே  உனக்கு  கடைசி கால நிம்மதி. ஒரே  வழி  தர்மனை கூப்பிட்டு  ராஜ்யத்தை அவனிடம் ஒப்படை. கர்ணன் துர்யோதனன், எல்லோரும்  அவனுக்கு கீழ்படிந்து நடக்கட்டும்.  துச்சாதனன்  சபையில்  பீமனிடமும்  த்ரௌபதியிடமும்  மன்னிப்பு  கோரட்டும். இதுவே பிழைக்கும் வழி '' என்கிறான் விதுரன்

திருதராஷ்ட்ரன் இந்த உபதேசத்தை எதிர்பார்க்கவில்லை.  அவனுக்கு விதுரன் மீது  ஆங்காரமும் அசாத்திய  கோபமும் வந்து,

''விதுரா  நீ  ஒரு பக்கமாகவே, பாண்டவர்க்காகவே பேசுபவன். எனக்கும என் மக்களுக்கும்  துரோகம் செய்கிறாய். உன் மனதில்  வேற்றுமையும் எங்கள் மேல் வெறுப்பும்  அதையே உன் நெஞ்சில் விஷமாக கொண்டிருக்கிறாய். இனி என் முன்னே  வராதே  எங்கு வேண்டுமோ அங்கேயே  போ.''    திருதராஷ்ட்ரன் எழுந்து உள்ளே போனான்.

''தெய்வமே. என் செய்வேன். இந்த வமிசம்  அழிவதை யார்  தடுக்க முடியும்''  என்று வருந்தினான்  விதுரன்.

பாண்டவர்கள்  குருக்ஷேத்ரம் சென்றார்கள். சரஸ்வதி, த்ரிசத்வதி, யமுனை  நதிகளில்  நீராடினர். ஒவ்வொரு காடாக  கடந்தனர். மேற்கு நோக்கி நடந்தனர். காம்யக வனம் அடைந்தனர்.

விதுரன் ஒரு  தேரில்  கானகத்தில் எல்லாம்  பாண்டவர்களை தேடி வந்தவன்  காம்யக வனத்தில்  அவர்களைக் கண்டான்.

''யுதிஷ்டிரா,  நான்  நியாயத்தை, நீதியை  தர்மத்தை எடுத்துச் சொன்னேன், திருதராஷ்ட்ரன் செவியில் அது ஏறவில்லை. நீ  எங்கு போகவேண்டுமோ அங்கேயே போ  என்றான். இனி நான்  அவனுக்கு  தேவையில்லை. உங்களோடு இருக்க தீர்மானித்தேன் ''  என்றான் விதுரன்.

இதற்கிடையே  திருதராஷ்டிரன்  கோபத்தில்  தான்  நீதிமான்  விதுரனை அவமதித்தது தவறு என்று புரிந்து கொண்டான்.  சஞ்சயனைக் கூப்பிட்டு ''சஞ்ஜயா, ஆத்திரத்தில் அறிவிழந்தேன். நீ சென்று  விதுரனை  என்னிடம் அழைத்து வா. அவன் இல்லையென்றால்  நான்  இறந்துவிடுவேன்'  என்றான் . சஞ்சயன் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் காம்யக  வனத்தில்  பிராமணர்கள் புடைசூழ, விதுரன்  யுதிஷ்டிரனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைக்  கண்டான். யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் அவனை வரவேற்று உபசரித்தனர். தான் வந்த காரணத்தைச் சொன்னான்  சஞ்சயன்.

விதுரன்  அரசன் ஆணையை மதித்து  பாண்டவர்களிடமிருந்து விடைபெற்று ஹஸ்தினாபுரம் திரும்பினான்.  திருதராஷ்டிரனும்  ''தம்பி சுடு சொல்லால் உன்னை  அவமதித்த என்னை மன்னித்துவிடு'' என்று கெஞ்சினான்.

''அரசே,   நீங்கள்  பெரியவர். தகாத வார்த்தை சொல்லாதீர்.எனக்கு   கௌரவர் பாண்டவர் இருவருமே சமம் தான். பாண்டவர்கள் நிரபராதியாக துன்பத்தை மேற்கொண்டதால் அவர்களிடம் பரிவு இயற்கையாக  இருந்தது. அவ்வளவே''.

விதுரன் திரும்பியது துரியோதனுக்கு  பிடிக்கவில்லை.  சகுனி, துச்சாதனன், கர்ணன்  ஆகியோரிடம்.  இந்த விதுரன் பாண்டவ நேசன்.  என் தந்தையின் மதியை பாண்டவர் பக்கம்  ஈர்க்கக் கூடியவன். பாண்டவர்கள் இனி இங்கு திரும்பக்கூடாது.  ஏதேனும் செய்து அதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

கர்ணன்  ''மாமா, துச்சாதனா, நாம் துரியோதனன் விருப்பத்தை பூர்த்தி செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.  பாண்டவர்கள் இருக்கும் வரை அவனுக்கு  நிம்மதியில்லை.  இப்போது பாண்டவர்கள்  ஆயுத பலம், படை பலம், இன்றி  கானகத்தில் இருக்கும் நிலையில் நாம்  படையோடு சென்று அவர்களை  கொன்றால் தான்  துரியோதனன் நிம்மதி யடைவான். என்ன சொல்கிறீர்கள்?'' என்றான்.

''இது நல்ல  யோசனை, உடனே  நிறைவேற்றுவோம்'' என்று அவர்கள்  நால்வரும்  ரதமேறி  ஆயுதங்களோடு  கானகம் விரைந்தனர். அவர்களது முடிவு  வேத வியாசருக்கு  ஞான திருஷ்டியில் தெரிந்து அவர்கள்  முன் தோன்றி  அதை  தடுத்தார். பிறகு  நேரே  திருதராஷ்டிரனிடம் சென்றார்.

''அரசே  உன் மக்கள்,  வம்ச  நன்மைக்காக,   நான் சொல்வதைக் கேள்.  உன் மகன் துரியோதனனை  அடக்கி வை.    பாண்டவர்களைக் கொல்கிறேன் என்று கானகம் சென்று  அவன் உயிரை வீணே இழப்பான். பதிமூன்று வருடங்களுக்கு  பிறகு அவன் மரணம் பாண்டவர்களால் சம்பவிக்கலாம். அவனது பொறாமையால்  பேராபத்து காத்திருக்கிறது. இப்போதாவது  இதை உணர்வாய்''.

திருதராஷ்ட்ரன்  வியாசரை வணங்கினான் ''முனி ஸ்ரேஷ்டரே,  எனக்கு  இந்த  சூதாட்ட திட்டம் பிடிக்கவில்லை. என்  மதி மயங்கி விட்டது. விதி வென்றது.  இணங்கினேன். பெற்ற பாசத்தால்  துரியோதனன் சொல்லுக்கு கட்டுப்பட்டேன்'' என்றான்.

வியாசர்   தொடர்ந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...