Friday, August 3, 2018

NALADIYAR

நாலடியார்                  J.K. SIVAN

காலடி சங்கரரின் வாக்கு போல் இந்த  நாலடி.

நீளமாக  கித்தான் (கிட்டத்தட்ட  கோணி)   கனமாக  ரெண்டு பக்கம்  கெட்டியாக  தைக்கப்பட்ட நடுவில் துளையில் மர  சட்டம் இணைத்து நீளமாக கைப்பிடியொடு  சாய்வு நாற்காலி (easy chair ) அந்தக்காலத்தில் முக்கால் வாசி வீடுகளில் உண்டு.  அதில் கைப்பிடி முனையில்  பலகை இணைத்து அதையே சாப்பாட்டு மேஜை  dining table  ஆக சிற்றுண்டி சாப்பிட உபயோகிப்போம்.  இன்னும் நீண்ட அந்த கைப்பிடி  இரு ;பக்கமும் இனைந்து கால்களை அதன் மேல் சௌகர்யமாக போட்டுக்கொள்ள கூட உதவும். சுகமாக அதில் ஒரு படுக்கை போல்  படுப்போம். எதிரே இப்போது டிவி  இருக்கிறது. அப்போது இல்லை. மேலே fan  இல்லை. பனையோலை விசிறியால்  சுகமாக  காற்று வாங்கிய அனுபவம் இப்போது இல்லை. இன்னொரு சுகம்  ஊஞ்சல் பலகை மேல் ஆடிக்கொண்டு உட்காருவது. காற்று தானே எங்கள் மீது வீசிக்கொள்ளும்.  நாம் விசிறிக்கொள்ள வேண்டாம்.

இப்படி சுகமாக உட்காருவதை  வெளிப்படுத்த நான் உபயோகித்த ஒரு  வார்த்தை ' ஹாய்யாக''.  ரெண்டு காலையும் நீட்டிக்கொண்டு  ஆட்டிக்கொண்டு,   உடலில் சட்டை இன்றி ஒரு  மேல்துண்டோடு, ஒரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு  ஊஞ்சலில் அமர்ந்து ஊர் வம்பு ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டு  வாய் நிறைய வெற்றிலை குதப்பி  ஆகாசத்தை பார்த்து  பேசுவது.  குனிந்தால்  வாய் நிரம்ப இருக்கும்  வெற்றிலை பாக்கு சாறு,  ரத்த வெள்ளமாக  கூடம் நிறைய   வழியுமே  அதனால் தான்.

இப்படி வாழ்க்கை  ''சுகமாக''  அனுபவிக்க  வேண்டுமானால் தேவையானது  குதிர்  நிறைய  நெல்லும், பயிர் நிலங்களும், பண்ணையும் . ஆனால் இந்த செல்வம்  எங்கும் என்றும் நிலைத்து நிற்பதல்ல.

நெய் மணக்க  வாழை இலையில் சுடச்சுட  வெங்காய  முருங்கை இல்லை  அடை , மனைவி கொண்டு வந்து    ''இன்னும்  ஒண்ணு ' என்று  பரிந்து உபசரித்து  பரிமாற சாப்பிட்டவன்  எல்லாம்  எங்கோ கூழ் ஊற்றுகிறார்கள்  என்று கேட்டு  ஓட்டமும் நடையுமாக  வரிசையில் நின்று ஒரு குவளை  கூழ் பெற வேண்டிய  பசி நிலைக்கும் தள்ளப்படலாம்.    செல்வம்  அத்தகைய  நிலையில்லாதது  என்று சொல்கிறது  ஒரு  நாலடி தமிழ்ப் பாடல்.


 '' அறு சுவை உண்டி, அமர்ந்து, இல்லாள் ஊட்ட,
மறு சிகை நீக்கி உண்டாரும், வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று. உரை''


இந்த  பணம் இருக்கிறதே.  ''உருண்டோடிடும்  பணம் காசெனும்''  விபரீதமான  பொருள்.    அது  ஓரிடத்தில் நில்லாது ஆளுக்கு ஆள்  இட த்துக்கு இடம்  நகர்ந்து செல்வதால் ''செல்வோம்'' என்று பெயர் பெற்று   காலை வாரி விடுவதால் ,  காலிழந்தும்,  அகங்காரம் என்னும் தலைக்கு மேல்  கொம்பை இழக்க வைத்து  ''செல்வம்''  ஆக காண்கிறது.

 எவ்வளவு தான்  மூட்டை மூட்டையாக  பணம் இருந்தாலும்  மற்றவரோடு  பணிவோடு  எளிமையோடு  ஒரு கூழானாலும்  கூட சேர்ந்து குடிக்காதவனிடம்  நிற்பதில்லை. சக்கரம் எப்படி ஓடுமோ அப்படி ஓடுமாம் அடுத்தவனை நோக்கி. சமண முனிவர் தெரிந்து வைத்திருக்கிறாரா அதை பற்றி நன்றாக.  சொல்கிறார் பாருங்கள்:

''துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க-
அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
சகடக்கால் போல வரும்!உரை

ஆசாமி  பெரும் பணக்காரன்  என்று பிரபல  பெயர் படைத்த  ராஜாவாக இருக்கலாம்.  எங்கு போனாலும் யானை பவனி, குதிரை, காளை   என்று வண்டிகள், வீரர்கள் அவனைச் சூழ்ந்து  அடிப் பொடிகள்,  எல்லாமே  ஒரு நாள்  காணாமல்  போய்விடும்.  எல்லாமே இழந்தாலும் பரவாயில்லை, அவன் மனைவியையும்  மற்றொருவன்கொண்டு போய்விடுவான் என்று  ஒரு சுருதி உச்சமாகவே சொல்கிறார்  நாலடியார்.

 ''யானை எருத்தம் பொலிய, குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், ஏனை
வினை உலப்ப, வேறு ஆகி வீழ்வர், தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.உரை''

மற்றுமொரு  பாடல்  சந்தம் நிறைந்ததாக  வருகிறது.  பிறகு சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...