Tuesday, August 7, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி  -  J.K. SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள் 
                               
 



9. திருவண்ணாமலை அதிசயங்கள்

சென்னை  அதை சுற்றி  தமிழ்நாட்டில் வசிக்கும்  நாம் எந்த ஜென்மத்திலோ செய்த கொஞ்சம்  புண்யம் நமக்கு  அதிக சிரமமில்லாமல்  திருவண்ணாமலையை தரிசிக்க வாய்ப்பு உள்ளது. நம்மில் பலர் அதற்கு மேலும் உபரி புண்யம் செயதிருந்ததால் அங்கே ஸ்ரீ ரமண மஹரிஷியையும் தரிசிக்க முடிந்தது. இதுவரை அறிந்திடாத பரம ஞானி. சிறுவயதிலேயே மரணஅனுபவம் நேரில் அடைந்தவர். ஜீவன் முக்தர். அவரது உபதேசங்களை,   நாடு முழுதும் என்று இல்லாமல் வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கடலலை போல் ஓயாது ஆன்ம ஞானம் தேடியவர்கள் எங்கிருந்தெல்லாமோ இருந்து திருவண்ணாமலை வந்து மகரிஷியை நேரில் தரிசித்து நாட்கள் மாதங்களாக ரமணாஸ்ரமத்தில் தங்கி அருளனுபவமாக பெற்று பயனுற்றனர்.

பால் ப்ரண்டன் என்று ஒரு ஆன்மீக வாதி. உண்மையான ஒரு யோகியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இந்திய கண்டம் முழுதும் அலைந்து திரிந்து, தேடி, வெறுத்து, சென்னை
யிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும் சமயம் ஒரு நண்பர் அவரை காஞ்சிக்கு மஹா பெரியவரை தரிசிக்க அழைத்து சென்றார். பெரியவா பால் ப்ரண்டனிடம் சம்பாஷித்து ''உனக்கு உண்மையான ஒரு யோகியை பார்க்கும் ஆவல் இருந்தால் நேரே திருவண்ணாமலைக்கு போ'' என்று அறிவுரை தந்து, அவர் அங்கே கஷ்டப்பட்டு குதிரை வண்டி, மோட்டார் வண்டி என்று புழுதியில் மண் பாதைகளில் பிரயாணம் சென்று பல மணி நேரங்களுக்குப் பிறகு ரமணரை சந்திக்கிறார்.

பார்ப்பதற்கு   ஏதோ  படிக்காத  ஒரு பிச்சைக்காரனைப் போல்  இருக்கிறாரே.  இந்த ரமணர் உண்மையிலேயே ஒரு யோகியா என்று சோதிக்க, நிறைய கேள்விகளை கேட்கவேண்டும் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

அப்போதெல்லாம் ஸ்கந்தாஸ்ரமம் ஒரு சாதாரண கூரை வேய்ந்த இடம். ஒரு கட்டிலில் கோவணதாரியாக மகரிஷி அமர்ந்திருக்கிறார். சுற்றிலும் தரையில் அநேக பக்தர்கள் அவரை தரிசிக்க அமர்ந்திருக்கிறார்கள்.

ஒளி விடும் கண்கள் மட்டுமே பேசுகின்றன. அவர் பார்வை வெளிநாட்டவரான பால் ப்ரண்டன் மீது விழுகிறது. வெள்ளைக்காரரின் விழிகளும் அவற்றை எதிர்கொண்டு அதில் சிறைப்பட்டு நகர முடியாமல் அசைவற்று நிலைத்தன.

பால் ப்ரண்டனை அழைத்துக்கொண்டு வந்த நம்மவர்  எஸ். வி. வி  அவர் நண்பர்.   சிலையாக வெள்ளைக்காரர் அமர்ந்து மஹரிஷியின் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கிறார். நேரம் ஓடியது. ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட பகவான் எல்லோரையும் பார்த்தாரே தவிர யாரோடும் பேசவில்லை.

  மகரிஷி  ரமணர் மெதுவாக எழுந்தார் கம்பை ஊன்றிக்கொண்டு.    தனது உள்ளறைக்கு செல்லும் சமயம்.

எஸ். வி. வி.   வெள்ளைக்கார நண்பரிடம் ,  ''ப்ரண்டன், ஸ்வாமிகள் எழுந்திருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் உள்ளே போய்விட்டாரானால் பிறகு பார்க்க முடியாது. உடனே அவரிடம் நீ கேட்க விரும்பிய கேள்விகளை சட்டென்று கேட்டுவிடு''   என்று ஞாபகப் படுத்தினார்.

''நன்றி,  நண்பரே, ஆம். நான் நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெறவேண்டும் என்று எழுதிக் கொண்டு வந்தேன். இந்த சிறிய நேரத்தில் அவருடைய கண்கள் என்னை சத்தித்த நேரத்தில் அத்தனை கேள்விகளுக்குமான  பதில்கள் துல்லியமாக எனக்கு கிடைத்து விட்டது. இனி கேட்பதற்கோ தெரிந்து கொள்வதற்கோ ஒன்றுமில்லை. சந்தோஷம். வாருங்கள்  போகலாம்'' என்கிறார் ப்ரண்டன்.

இன்றும் ராமணாஸ்ரமத்தில் எண்ணற்ற உள்நாட்டவர் வெளிநாட்டவர் அமைதி தேடி வந்து கொள்ளை கொள்ளையாக பெற்றுச் செல்கிறார்கள். குரங்குகள் மயில்கள் என்னோடு பலநாள் பழகியது போல் ஸ்நேகமாக இருந்தன. என் உள்ளங்கையிலிருந்து வேர்க்கடலை எடுத்து சாப்பிட்டு. மயிலோடு நான் விஷப்பரீக்ஷை வைத்துக் கொள்ளவில்லை.  இரும்பு போல் கூரான அலகைப் பார்த்ததும் கையை  துளை செய்துகொள்ள  விரும்பவில்லை. தரையில் வைத்தேன். கொத்தி கொத்தி கடலை சாப்பிட்டது. 

ரமணர் திருவண்ணாமலையின் மேல் வசித்த காலத்தில் ஒருநாள் ஒரு மாடு மேய்க்கும் பையன் அவரைப் பார்த்து '' சாமி நீங்க இந்த மொட்டைப் பாறை மலை மேலே வந்து தங்கறீங்களே.  இங்கே ஒண்ணுமே கிடைக்காதே, எப்படி என்னத்தை சாப்பிடுறீங்க?''

சிரித்துக்கொண்டே ரமணர் ''என்ன செய்யறது. உன்னைமாதிரி யாராவது ஏதாவது கொண்டுவந்து கொடுத்தால் தான் '' என்கிறார்.

''சாமி,   நான் ஒருத்தர் கிட்டே வேலை செய்றேன். அவரு சம்பளம் இன்னும் போடலே. குடுக்கலே. கேட்டேன். ரண்டு மூணு மாசத்தில் ஒண்ணரை ரூபா சம்பளம் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை உங்களுக்கே தரேன்''  --  அந்த ஏழைக்கு என்ன மனசு பாருங்கள்.

ஒரு இருளர் பிரிவு பையன். ஒருநாள் ஸ்கந்தாஸ்ரமத்தில் மகரிஷியை பார்த்து ஏனோ தெரியவில்லை கோ வென்று அழ ஆரம்பித்தான்.

''ஏன் அழறே'', என்று பகவான் கேட்க, இன்னும் மேலே சுருதி ஏறியது. பெரிதாக அழுதான்.

பக்கத்தில் மகரிஷியின் பக்தர் பழனிச்சாமி இருந்தார். அவர் '' அடே பயலே ஏண்டா இங்கே வந்து அழறே. வயிற்று வலி, மார்வலி, மண்டை வலி ஏதாவதா? பசியா? விஷயம் சொல்லு?'' என்கிறார்
பையன் மகரிஷியை கை நீட்டி காட்டி ''அதெல்லாம் இல்லீங்கோ, இவரைப்  பார்த்தா, அய்யோன்னு பாவமா இருக்குதுங்க. அழுகையா பொங்கி பொங்கி வருதுங்க'' என்றான்.

பகவான் சிரித்தார். அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. அவன் உள்ளம் இளகிவிட்டிருக்கிறது. உள்ளே அவரது கருணை பாய்ந்து புகுந்து அவனது மற்ற உணர்வுகளை விரட்டி விட்டு  மனது இதயம் முழுதுமாக அன்பால் நிரப்பி இருக்கிறது. அது ஆனந்தமாக வெளியே ப்ரவாஹித்திருக்கிறது.

ஒருநாள் ஒரு சிஷ்யனிடம் ''எனக்கு எழுத ஒரு நோட்டு கொண்டுவந்து தருகிறாயா?'' என்று கேட்டார். சிஷ்யன் மறந்து போனான். அதற்கு பிறகு மகரிஷி நோட்டை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.மறுபடியும் எவரையும் கேட்கவில்லை.

மூன்று நாளுக்கு பிறகு ஒரு அந்த ஊர் ஜில்லா போர்டு இன்ஜினீயர் மகரிஷியை தரிசிக்க வந்தவர் கையில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தோடு வந்தார். மகரிஷியிடம்

''நோட்டு கேட்டீர்களே இந்தாருங்கள்'' என பவ்யமாக வணங்கிக் கொடுத்தார்.
''உன்கிட்ட நான் எப்போ நோட்டு கேட்டேன்?''
''மூணு நாள் முன்னே என் கனவிலே நீங்க வந்து என்னை கேட்டீங்க சாமி''
''என்ன கேட்டேன்?''
''ஒரு நோட்டு புஸ்தகம் வேணும்ன்னு''
''அவ்வளவு தானா?''
''இல்லே, அது எப்படி இருக்கணும். நீள அகலம், பக்கங்கள், என்னமாதிரி இருக்கணும்'' என்று சொன்னீங்க. அதேமாதிரி தேடி கண்டுபிடிச்சு கிடைச்சு
 கொண்டுவந்திருக்கிறேன் சாமி ''
மகரிஷி மறந்து போன சிஷ்யனைக் கூப்பிட்டு ''இதோ பார் நான் உன்னைக் கேட்டா இவர் கொண்டு வந்து தந்ததை'' என்கிறார். சிஷ்யனுக்கு மறந்து போனது தேள் கொட்டியது. 

இதுபோல்  ஸ்வாரஸ்யமான  விஷயங்கள் பகவானைப் பற்றி இன்னும் சிலதுகூட இருக்கிறது. முடிந்த போதெல்லாம் சொல்கிறேன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...