Sunday, August 26, 2018

RASA NISHYANDHINI


ரஸ நிஷ்யந்தினி              J.K. SIVAN                              பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் 

                                                              
                         ராமன் யார் தெரியுமா? 6

தசரதனின் அரண்மனையில்  திடீரென்று  அதிக கூட்டம்  எப்படி  சேர்ந்தது? சேதி தான் காற்றைவிட விரைவில் பரவுமே .   சிறுவன்  ராமனை  விஸ்வாமித்ரர்  காட்டுக்கு  ராக்ஷஸர்களோடு யுத்தம் பெரிய அழைத்துப் போக வந்திருக்கிறார்.  தசரதனுக்கும்  முனிவருக்கும்  ஏதோ   பேச்சு வார்த்தை  என்று தான் கேட்டு மக்கள் ஓடிவந்தார்கள்.  ஆனால்  விஸ்வாமித்ரர் மட்டும் தான் பேசினார். சக்ரவர்த்தி தசரதன் மற்றவர்களைப்  போல் கையைக் கட்டிக்கொண்டு  முனிவர்  ராமனின் அவதார ரஹஸ்யத்தை சொல்வதை  ஆர்வமோடு கேட்டுக் கொண்டிருந்ததை கண்டார்கள்.    விஸ்வாமித்ரர்  தசரதனின் அரியாசனத்தில் அமர்ந்து கடல்மடை போல்  அவரது   வார்த்தைகள் வெளிப்பட்டன.

51.  ''தசரதா,  எங்கெல்லாம் புனித தீர்த்தங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் உன் மகன் ராமனை  அழைத்துச் சென்று  ஸ்நானம் செய்வித்தால்  அவனுக்கு புனிதத்தன்மை சேரும் என்று நீ நினைக்கிறாய், உண்மையில் அவனது திருவடிகளில் இருந்து சொட்டும் நீரால்  தான் இந்த அகில புவனமும் புனிதமாகிறது. 

52. ராமன் யார் ? இப்போது  கோசல நாட்டின் வருங்கால மன்னன்'' என்கிறாயே எல்லோரிடமும். அப்படியல்ல கதை. ஸ்ரீ ராமன்   கடந்தகாலம்  மற்றும்  வருங்காலம் இரண்டிற்கும் அதிபதி. அவன் இன்று நாளை இரண்டிற்குமே மன்னன்.  

53 எனக்கு
சிரிப்பு வருகிறது தசரதா, யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாய் ''என் மகன் ராமன் எல்லா வேதங்களும் கற்றவன்'' என்றாய். இல்லை  தசரதா ,  எல்லா வேதங்களாலும்   அறியப்படுபவன் ராமன், வேதத்தின் உட்பொருள்.   அனைத்தும் அறிந்தவன், வேதாந்தத்தையே உருவாக்கியவன்.

54. அரண்மனையில் அறுசுவை உண்டி போஷாக்குகள் அளித்து  உன் மகன் ராமனை வளர்ப்பதாக   கனவு காணாதே.  வைஸ்வானரம் எனும்  ஜீவன்களின்  உடலுக்குள்  உணவை   ஜீரணிக்கும்  ஜாடராக்னி உருவானவன் ராமன். உடலில்  வாயு ரூபத்தில்   ஜீரண உயிர்ச்சக்தி  அளிக்கும்  பஞ்ச  பிராணன்களான  பிராண, அபான,  சமான ,வியான, உதான, வாயுக்களாகவும் அவனே தான் உள்ளான் என்பதை நான் அறிவேன் .  

55. ராமனை  நன்றாக பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்று உனக்கு அக்கறை.  நடப்பது வேறு.  அவனை  ஏகமனதாக தியானிப்போரை எல்லாம் காப்பாற்றுவதே ராமன் தான் என்பது எனக்கு தெரியும்.

56.  ''இங்கே வா  ராமா ''    என்று நீ கூப்பிட்டவுடன் எதிரில் வந்து  நிற்பவன், எளிதில்  கிடைப்பவன்  ராமன் என்று  நீ   நம்புகிறாயே தசரதா,  எவ்வளவு வேதங்கள் படித்தாலும், யாகங்கள் புரிந்தாலும்,  தான தர்மங்கள் செய்தாலும், கடும் விரதம் இருந்தாலும் கிடைக்காதவனை  ரகுகுல திலகமாக, மகனாக நீ பெற்றிருக்கிறாய். சாதாரண ராஜகுமாரனா அவன்? பல ஜென்மங்களில் நீ செய்த  புண்ய பலன் அது.

57.  சுண்டைக்காய்  கோசல ராஜ்ஜியம் மட்டுக்குமா அவன் அரசன்!  அது இந்த அகிலபுவனத்தில் கண்ணுக்கு தெரியாத பாகம்.    ராமன் சர்வ லோக நாயகன். அவனது உருவில் ஒரு கால் பாகமே இந்த புவனம் அனைத்தும், மற்ற முக்கால் பாகம் அதெல்லாம் கடந்தது. (த்வைலோகம்) . இது எனக்கு நன்றாக தெரியும். 

58. அவனுக்கு  சிறந்த ஆச்சார்யர்களை நியமித்து  கல்வி கற்றுக்கொடுத்தவனா நீ?  பரமாத்மாவை வெறும் ப்ரசங்கங்களை ,   ப்ரவசனங்களை கேட்பதாலோ அறியமுடியாது. புத்தி கூர்மை போதாது. கட்டு கட்டாக புத்தகங்களால் பெறமுடியாது.  அவனை ஸ்ரத்தையாக  தியானிப்பவர்களுக்கு மட்டுமே  தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் ராமன்.

59.  மூன்று குணங்களில் ரஜோ குணம்  தமோ குணம் கொண்டவர்களே அதிகம், அப்படிப்பட்ட ராஜ குமாரர்கள் சிலர் தான்   உன் மகன்  ராமனின் நண்பர்கள் என்று   நீ  நினைக்கிறாய்.  ராமனை  இப்படிப்பட்டவர்கள் அணுகமுடியுமா?   தீய செயல்களில்  ஈடுபடுபவர்கள்,   அமைதி இல்லாத மனம் கொண்டவர்கள் , சஞ்சல மனத்தினர்கள் ராமனின் நிழலையாவது நெருங்கமுடியுமா?   ஆச்சார்யனிடம்  முறையாக கற்றவர்கள், தூய மனம் கொண்ட சிறந்த  பக்தர்கள் மட்டுமே  ராமன் யார்  என்று உணர்வார்கள், அவனது உண்மை ஸ்வரூபத்தை அறிவார்கள்.  அவனை நெருங்குவார்கள், அடைவார்கள்.   

60. '' ராமன் எனது இதோ என்னெதிரில் நிற்கும் என் மகன் '' -- என்று  அடையாளம் காட்டுகிறாயே  தசரதா.  இப்படி எளிதிலா அவனை புரிந்து கொள்ளமுடியும்? தசரதா, முற்றும் உணர்ந்த ஞானிகள் எப்படி ராமனை அடைபவர்கள் தெரியுமா உனக்கு?  ''நான் தான் அந்த உன்னத பரமாத்மா'' என்ற  உயர்ந்த இரண்டறக்கலந்த  நிலை அடைந்த பிறகே  தான் ராமன் உள்ளே தெரிவான். 

ஒரு சிறு கடுகு எள்  கீழே விழுந்தால் கூட  ''டமால்'' என்று சப்தம் கேட்கும் அளவுக்கு  அயோத்தியில் தசரதன் அரண்மனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த அனைவரின் ஸ்வாசம் ஒன்று தான் இயங்கியது. எல்லோருமே  எங்கும் சிலைகளாக நின்று கொண்டிருந்தார்கள்.  அடடா   நாம்  காணும்  இந்த சிறுவன்  ராமன் இப்படிப்பட்டவனா, நாம் எப்படி எல்லாம் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறோம் என்ற திகைப்பு எல்லா மனத்திலும் வியாபித்திருக்க விஸ்வாமித்ரர்  ராமனின் உண்மை ஸ்வரூபத்தை மேலும் விளக்குகிறார்.









No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...