Thursday, August 30, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
பீமனின் பலம்

வியாசர் தொடர்ந்து கூறுகிறார்:

''சுரபி என்று காமதேனுவுக்கு ஒரு பெயர் . கருணையின் அம்சம். ஒரு நாள் அழுதது. இந்திரன் அதைப் பார்த்துவிட்டு கலங்கினான்.

''ஏனம்மா காமதேனு நீ அழுகிறாய். உனக்கு என்ன குறை என் தேவலோகத்தில். உடனே சொல். நிவர்த்திக்கிறேன்.''

''தேவராஜா, எனக்கு ஒரு குறையுமில்லை. ஒருவன் எனது மகன் ஒருவனை கழுத்தில் பெரிய கலப்பையை மாட்டி கட்டையால் அடித்து துன்புறுத்துகிறான். அதன் கண்ணில் நீர் வருகிறதே. அது என்னை வாட்டுகிறது. அதால் வலியைப் பொறுத்துக்கொண்டு பளு சுமந்து நடக்கமுடியவில்லை. அதன் கஷ்டம் என் கஷ்டம் அல்லவா?''

''உனக்கு எத்தனையோ பசுக்கள், காளைகள் இருக்க ஒன்றின் துயரம் மட்டும் ஏன் வாட்டுகிறது?

''அரசே எத்தனை குழந்தைகள் இருந்தாலும் துன்பப்படும் ஒன்றின் மீது தானே கவனமும் கருணையும் இருக்கவேண்டும்.''

இந்திரன் மழையை அனுப்பினான். விவசாயி காளையோடு வீடு திரும்பினான்.

திருதராஷ்டிரா, உனக்கு எண்ணற்ற மகன்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் யார் துன்பப் படுகிறார்களோ அவர்கள் மீது உன் அபிமானமும் கருணையும் வைக்கவேண்டும். காமதேனுவின் கதையில் வருவதுபோல் பாண்டுவின் மக்களும் உன் மக்களும் ஒன்றே தான் என்றாலும் பாண்டவர்கள் படும் துன்பம் என்னை அவர்களை நினைக்க வைக்கிறது. விதுரனும் அவ்வாறே கருத்து கொண்டவன்.

உன் சகோதரன் பாண்டுவின் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கவேண்டுமானால் நீ செய்ய வேண்டியது உடனே உன் மகன் துரியோதனனை கூப்பிட்டு பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்க வைத்து அவர்களையும் ரக்ஷிப்பது. இது உன் கடமை.

"முநிஸ்ரேஷ்டரே, எனக்கு புரிகிறது. இதையே தான் பீஷ்மர், விதுரன், துரோணர் ஆகியோரும் சொல்கிறார்கள். என் மகன் துரியோதனனை நீங்களே திருத்துங்கள்

"பாண்டவர்களை சந்தித்துவிட்டு மைத்ரேய ரிஷி இங்கு வருகிறார். அவரே உன் மகன் துரியோதனனை திருத்தட்டும்.உலகம் உய்யட்டும். அவர் சொல்வதை மட்டும் தவறாமல் செய்யவேண்டும். அது முக்கியம். அவர் சொன்னதை மீறினால் அவரது சாபம் உங்கள் அனைவரையுமே அழித்துவிடும் ஜாக்ரதை.''

'அப்புறம் என்ன நடந்தது என்று இதுவரை பாரதக் கதை கேட்டுவந்த ஜனமேஜயன் கேட்க, வைசம்பாயனர் தொடர்கிறார்:

''ராஜனே, கேள் சொல்கிறேன். இவ்வாறு திருதராஷ்டிரனிடம் சொல்லிவிட்டு வியாசர் புறப்பட்டார். ரிஷி மைத்ரேயர் வந்தார். எல்லோரும் ஹஸ்தினாபுரத்தில் அவரை வணங்கி வரவேற்று உபசரித்தனர்.

திருதராஷ்ட்ரன் அவரிடம் '' குருதேவா, என் சகோதரன் மக்கள் பாண்டவர்களை சந்தித்தீர்களா? எப்படி உள்ளார்கள்?''

''ராஜனே, குருஜங்களாவில் யுதிஷ்டிரனை சந்தித்தேன். காம்யக வனத்தில் இருந்தார்கள். அடடா எத்தனை தவசிகள், முநிஸ்வரர்கள் அவனைச் சுற்றி இருந்தார்கள் தெரியுமா? மான் தோல் தரித்து, சடை முடியோடு முனிவனாக அவன் காட்சியளித்தான். அப்போது தான் உன் மக்கள் அவனுக்கு செய்த துரோகம் தெரிந்தது. மிகப் பெரிய தவறை நீங்கள் புரிந்துவிட்டீர்கள். அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உன் மக்கள் எக்காரணத்தை கொண்டும் பாண்டவர்களோடு யுத்தத்தில் ஈடுபடக்கூடாது. நீயும் பீஷ்மரும் உள்ளவரை அது நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். உன் ராஜ்யத்தில், உன் அரண்மனையில் தவறு நேர அனுமதித்து விட்டாய். மதிப்பிழந்தாய்''

அப்போது அங்கிருந்த துரியோதனன் ரிஷியின் கண்ணில் பட்டான். ரிஷி அவனிடம்
''துரியோதனா, நீ பலசாலி, கெட்டிக்காரன். சகல வசதியும், பெரும் புகழும் பெற்றவன். வீணாக பாண்டவர்களோடு சண்டை போடாதே. இது உனக்கோ, இந்த பாரத பூமிக்கோ நல்லதல்ல. நிரம்ப சக்தி வாய்ந்தவர்களை துணையாகக் கொள்வதை விட்டு எதிரியாக நினைக்காதே. பீமார்ஜுனர்
களின் பராக்கிரமம் தெய்வீகமானது. மேலும் கிருஷ்ணன் அவர்களுக்கு உறுதுணையாக உறவினனாக இருக்கிறார். மனதில் கொள். கோபத்தை விடு. அவர்களிடம் மன்னிப்பு கேள்.நட்பாக இரு !"

"ஹா ஹா'' என்று சிரித்த துரியோதனன் தனது தொடையைத் தட்டினான். அது அவனது வழக்கம். காலால் தரையை கீறினானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. மைத்ரேயருக்கு தன்னை அவன் உதாசீனப் படுத்தியது கோபம் தந்தது. கண்கள் சிவக்க, கமண்டலத்தில் ஜலம் எடுத்து தெளித்து ''ஏ துரியோதனா, என்னை இகழ்ந்தாய். விரைவில் இதன் பயன் உனக்கு கிட்டும். எந்த தொடையை தட்டினாயோ அந்த தொடையை பீமன் பிளப்பான்.!'

''முனீஸ்வரா, முனீஸ்வரா என்று திருதராஷ்ட்ரன் இது நடக்காமல் அருளவேண்டும்'' என கெஞ்சினான்.

''துரியோதனன் பாண்டவர்களோடு சமாதானமாக போவதால் யுத்தம் நிகழாது உன் மகனும் பிழைப்பான். அப்போது என் சாபம் நிறைவேறாது. வேறு வழியில்லை.'' என்றார் ரிஷி மைத்ரேயர்.

''மகரிஷி, பீமன் எவ்வாறு பலம் வாய்ந்த ஜராசந்தன், பகாசுரன் ஆகியோரை கொன்றான் என்று பீமனின் பலத்தை ஆராய திருதராஷ்ட்ரன் கேட்ட கேள்விக்கு மைத்ரேயர் பதில் சொல்லவில்லை.

''எப்போது உன் மகன் என் வார்த்தையை மதிக்கவில்லையே, இனி பேச்சில்லை.எது வேண்டுமானாலும் விதுரனைக் கேள் அவன் சொல்லுவான் '' என்றார். ரிஷி சென்றுவிட்டார்.

ஒருநாள் திருதராஷ்டிரன் ''விதுரா, பீமன் எவ்வாறு அந்த பலம் வாய்ந்த ராக்ஷசனைக் கொன்றான். உனக்கு தெரிந்தால் சொல்''

''பாண்டவர்களோடு பேசுகையில் பீமனின் பராக்கிரமம் பற்றி கேள்விப்பட்டேன். சொல்கிறேன். சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டு தோற்று பாண்டவர்கள் இரவும் பகலும் வனவாசம் செய்கையில் காம்யக வனம் அடைந்தார்கள். அடர்ந்த காடு அது. உயிர்களை தின்னும் ராக்ஷசர்கள் வாழும் இடம். நள்ளிரவு. பாண்டவர்கள் தனித்து அந்த இரவு அங்கே வரும்போது ராக்ஷச தலைவன் பார்த்து மகிழ்ந்தான். இன்று நல்ல உணவு நம்மை தேடிவருகிறது என்று அவர்களை தடுத்தான். தௌம்யர் திரௌபதி இருவரும் தான் முதலில் அந்த ராக்ஷசனை பார்த்தவர்கள். யுதிஷ்டிரன் அந்த ராக்ஷசனை பார்த்து, '' நீ யார் எதற்கு எங்களை தடுக்கிறாய்?'' என்று கேட்டான்.

''நான் பகனின் சகோதரன். இந்த காம்யகவனத்தில் நுழைந்தோரைக் கொன்று தின்பது என் வழக்கம்'' என்றான் அசுரன்.

''நான் யுதிஷ்டிரன், பாண்டவன். என் சகோதரர்கள் பீமசேனன், அர்ஜுனனைப் பற்றி நீ அறிவாயா? இந்த வனத்தில் நாங்கள் தங்கப்போகிறோம். அமைதியாகப் போ''

''என் நல்லகாலம் உங்களைப் பார்த்தேன். என் சகோதரன் பகனைக் கொன்ற பீமனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அவனே இங்கு கிடைத்தது அதிருஷ்டம். பீமன் ஏற்கனவே என் நண்பன் இடும்பனைக் கொன்ற கோபம் வேறும் எனக்கு இருந்தது நல்லதாகப் போய்விட்டது. கடன் தீர்க்கிறேன் இன்று. ''

அருகே இருந்த பீமன் ஒரு மரத்தைப் பிடுங்கினான். ராக்ஷசனை நெருங்கினான். பிடித்தான். அந்த ராக்ஷசனின் தலையில் அந்த பெரிய மரத்தின் அடிபாகம் பலமாக விழுந்து அவன் மண்டை வலித்தது. கோபத்தில் அவனும் ஒரு நீண்ட மரத்தை வேரோடு பிடுங்க இருவரும் போராடினர். சில நேரம் அவனோடு விளையாடிவிட்டு பீமன் அவனை இடுப்பில் கை கொடுத்து மேலே தூக்கினான். ஒரு க்ஷணம் அவனை துரியோதனனாக நினைத்தான் கோபமும் பலமும் அதிகரித்தது. அப்படியே மேலே சுழற்றி படு வேகமாக பூமியில் அறைந்தான். கீழே விழுந்தவன் கழுத்தை இரு கைகளாலும் நெரித்து துடிக்க வைத்தான். கொன்றான்.''

அண்ணா, இதைத் தான் கேட்டேன். என்றான் விதுரன். கிர்மிரன் என்ற அந்த ராக்ஷஸன் இவ்வாறு அழிந்த பிறகு அந்த காட்டில் ராக்ஷச பயம் இல்லை. முனிவர்கள் ரிஷிகள் அனைவரும் பாண்டவர்களோடு அங்கே வாழ்ந்தார்கள்.

பாண்டவர்கள் வனவாசம் பற்றி அறிந்த துருபதன், அவன் உறவினர், மற்ற அரசர்கள் எல்லோரும் காம்யக வனம் சென்றார்கள். கௌரவர்கள் மேல் கோபம் கொண்டார்கள். ஒரு நாள் துவாரகையிலிருந்து கிருஷ்ணனும் காம்யக வனம் வந்தான்.

கிருஷ்ணன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது.

'இந்த பூமியில் துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகியோர் இரத்தம் கலக்கபோகிறது. அவர்கள் இழைத்த அநீதியை எதிர்த்து அவர்களை யுத்தத்தில் அழித்து மீண்டும் யுதிஷ்டிரன் முடிசூட நேரம் வருகிறது'' என்று கிருஷ்ணன் அறிந்தான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...