Wednesday, August 22, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி    J.K.  SIVAN 

சேஷாத்திரி ஸ்வாமிகள் 

                                                  13   கை மேல் பலன்....

நன்றாக  யோசித்துப் பார்த்தால்  ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் மனிதன் ஒவ்வொருநாளும் ஏதோ ஒரு நம்பிக்கையில் படுக்கையை விட்டு எழுந்திருந்து அலைகிறான்.   அவன் எண்ணம் ஈடேறினால் கடவுளை வாழ்த்துகிறேன். ஒரு சிலர் கடவுளை விட தங்களது முயற்சியில்  சாமர்த்தியத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக  காலரை தூக்கி விட்டுக்கொள்கிறார்கள்.

திருவண்ணாமலையில்  சேஷாத்திரி ஸ்வாமிகள் இருந்தபோது ஒரு வேடிக்கையான நம்பிக்கை சில நாவிதர்களுக்கு இருந்தது. தாடியும் மீசையுமாக திரிந்து கொண்டிருந்த ஸ்வாமிகளைப்  பிடித்து அவருக்கு  க்ஷவரம் செய்து விட்டால் அன்று முழுதும்  அநேக தலைகள் சிக்கும், அமோகமாக பணம் கொட்டும் என்று எண்ணினார்கள். ஆகவே அந்த வகுப்பார் எங்கேயாவது ஸ்வாமிகள் கண்ணில் படமாட்டாரா என்று கத்தி,   கத்திரிக்கோலோடு  காலையில் அவரைத்  தேடுவார்கள். 

சொக்கலிங்கம் அவர்களில் ஒருவன். அவனுக்கும் பணம் வேண்டும் என்று ஆசை இருக்காதா?
 ஸ்வாமிகளை தேடி அலைந்தவர்களில் அவனும் ஒருவன். 

ஒரு தடவை ஸ்வாமிகளுக்கு ஒரு நாவிதர் க்ஷவரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பக்கம் மீசையோடு தாடியோடு பாதி க்ஷவரத்திலேயே அவர் நாவிதனை விட்டு  எழுந்து ஓடி விட்டார்.

சொக்கலிங்கத்திற்கும் இந்த அனுபவம் உண்டு. ஐந்து நிமிஷம் கூட ஸ்வாமிகள் பொருந்தி ஒரு இடத்தில் உட்காரமாட்டாரே. அவருக்கான க்ஷவரக் கூலியை நான் கொடுக்கிறேன் என்று சிலர் போட்டி போட்டுக்கொண்டு நாவிதர்களிடம் கொடுப்பார்கள். சுவாமி சம்பந்தம் வேண்டும் என்று அலைந்தவர்கள் எத்தனையோ பேர் ஆயிற்றே.

ஆச்சர்யமாக ஒரு நாள் ஸ்வாமிகள் சொக்கலிங்கத்தைப்  பார்த்து விட்டார்.

''நான் உன்னிடம் க்ஷவரம் பண்ணிக்கொள்ளட்டுமா?'' ஆச்சர்யமாக  ஸ்வாமிகளே  சொக்கலிங்கத்தை கேட்டார்.

''சுவாமி தயவு செய்து பொறுமையாக உட்கார்ந்து முழுதும் சரியாக செய்து கொள்ளவேண்டும். நடுவில் எழுந்து போகவேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டான் சொக்கலிங்கம்.

''ஆஹா''  என்கிறார் சுவாமி.  அதற்கு அர்த்தம் அவருக்கே தெரியாது.. தலையை முழுதும் க்ஷவரம் செய்து கொண்டார்.  சோதனையாக  சொக்கலிங்கத்துக்கு அன்று  க்ஷவர வியாபாரமே நடக்கவில்லை. ஒருவரும் கிடைக்கவில்லை. சொக்கலிங்கம்  வருத்தத்தோடு அதிசயித்தான். 

''சரி நமது அதிர்ஷ்டம் அவ்வளவு தான்''   ---   தனது  க்ஷவரப் பெட்டியில் கத்தி கத்திரிக்கோல் எல்லாம் வைத்துக்கொண்டு நடந்தான். ஒரு பத்தடி கூட நடக்க வில்லை. ஒரு ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது . அருகே  ஒருவரும் இல்லை,  வெகுநேரம் காத்திருந்தான் எவரும் வந்து எதையும் கேட்கவில்லை.  எனவே அந்த ஐந்து ரூபாய் தாளை   எடுத்துக் கொண்டான்.      (ஐந்து ரூபாய் ஐநூறு ரூபாய்க்கு சமம் அல்லவா). பல மடங்கு அவன்  தினக்  கூலியை விட அது அதிக வருமானம் அன்று சொக்கலிங்கத்த்துக்கு.  ''சாமி  சாமி  ''  என்று சேஷாத்திரி ஸ்வாமிகளை  மனமார வேண்டினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...