Monday, August 13, 2018

NALADIYAR



நாலடியார் - J.K. SIVAN

என்ன உலகமடா, வாழ்க்கையடா?

சமண முனிவர்கள் நமக்கு அளித்த பரிசு நாலடியார். ஆஹா, நாலு வார்த்தைகளில் எவ்வளவு சிறந்த உண்மைகளை வார்த்தைகளில் புதைத்து வைத்திருக் கிறார்கள். எவ்வளவு எளிமையாக புரிகிறது. தமிழுக்கு நாலடியார் ஒரு பெருமை தரும் பூஷணம். தமிழனுக்கு வரப்பிரசாதம். இதை படித்து அனுபவிப்பவன் கொடுத்து வைத்த செல்வந்தன்.
''வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்.''

எந்த ஒரு கருவியும் தேட வேண்டாம். மிக எளிதில் அன்றாடம் நமக்கு நினைவூட்ட அந்த கெட்டிக்கார இறைவன் ஒரு உபாயம் கொடுத்து இருக்கிறான். நாம் தான் அதை புரிந்து கொள்வதில்லை.

காலத்தை அளக்கும் கருவியாக விளங்கு கிறவன் சூரியன். தினமும் சிகப்பாக உதிக்கிறான். சிகப்பு விளக்கை 'டேஞ்சர் லைட்' என்போம். நாள் தவறாமல் ஒவ்வொரு காலையும் சிவப்பாக உதயமா கி சூரியன் நினைவூட்டுகிறான். ''அடே மனிதா இந்தா உனக்கு இன்று இன்னுமொரு நாள் தரப்பட்டிருக்கிறது. போனதெல்லாம் இனி வராது. பாசக்கயிறு நெருங்கி வருகிறது. உன் ஆயுள் முடியும் முன்பே பிறருக்கு உதவி செய். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்கமுடியாது என்று உணர்ந்து கொள்'' இது தான் சூரியன் சிவப்பாகி உதித்து குறிப்பாக உணர்த்துவது- ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என நமது ஆயுளை அளவிடுவதாக சூரியன் உதிப்பதை வைத்து கணக்கிடுகிற நாளாக, இருக் கின்ற படியால் வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது தான் இந்த நாலடி மேலே சொல்வது.

''ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.''

பாவம். நாம் இரவு பகல் எப்பாடு பட்டாவது நிறைய செல்வத்தை விரும்பி அடைந்து அதைச் சேர்த்து பலவாக்கி பெருக்கிப் ''புதைத்து'' வைக்கிறோம். புதைத்து என்று ஏன் சொல்கிறேன்? புதைப்பதே பிறருக்கு தெரியாமல் இருக்க தானே. அந்த காலத்தில் வங்கிகள் இல்லை, பூமிக்கடியில் பானையில் பாத்திரத்தில் புதைத்து வைத்தார்கள் எனலாம். இப்போது மட்டும் என்னவாம்? எங்கோ ஒரு வங்கியில் எங்கேயோ ஒரு தேசத்தில் மறைவாக சேர்த்து வைப்பது,. நிறைய பெரியமனிதர் வீட்டு குளியலறையில், படுக்கையறை கட்டிலுக்குள், சுவற்றில், வாகன ஷெட் (SHED ) பூமியின் அடியில், எங்கோ எவர் வீட்டிலோ இன்னொருவர் பேரில், எப்போது கண்டுபிடித்து விடுவார்களோ? இதோ வெளியே வரப்போகிறது என்று சொல்லியே பயத்தை அவனுக்கு அளிக்கிறதே இந்த பணம். எது பெருஞ்செல்வம்? நமக்கே உதவாமல் எங்கோ மறைந்து கிடக்கும் இதுவா, தான தர்மத்தில் கிடைக்கும் சந்தோஷமா? அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! கானல் நீரைத் தேடி ஓடுகிறாய். அது உதவும் என்று கனவு கண்டு ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், நீ சேர்த்த பணத்தை பாராமலேயே உன் வாழ் நாட்கள் ஒழியுமே ! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்! -- ஏதோ CBI ல் பணியாற்றியவர் போல் சமணர் சொல்கிறாரே.

''மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.''

அதோ போகிறாளே கங்கம்மா, கைத்தடி ஊன்றி, இடுப்புக்கு மேல் முதுகு ஆடு போல் வளைந்து தரை பார்த்த தலையாக என்றும் குனிந்தவாறே நடக்கிறாளே, கண் தெரியாமல் தட்டுதடுமாறி, காது கேளாமல், எண்ணற்ற நோயுடன் செல்லும் இவளை பல வருடங்களுக்கு முன் எத்தனை பேர் சுற்றினர். கண்ணே, மானே தேனே, மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று பிதற்றினார்களே. அந்த கங்கம்மாவோ, கனகம்மாவோ, கண்ணம்மாவோ, இப்படி நாம் மாறுவோம் என்று ஒரு கணமும் நினைத்தார்களா? அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கொம்பாவது கைவசம் வேண்டாமா? எப்படி நாலடியார்?
''தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் மீப்போர்வை
பொய்ம்மறைய க் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்''.

தங்க பஸ்பம் வாங்கி சாப்பிட்டு, பாதம், முந்திரி குங்குமப்பூ என்று விழுங்கி, எங்கோ ரூ வைத்தியன் ஊர் ஊராய், ஒவ்வொரு ஒவ்வொரு வேளை ஒவ்வொரு ஊர் ஹோட்டலில் தங்கி தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம் தாயத்து எல்லாம் கொடுப்பதை நம்பி நூறு வயது வாழ ஆசைப்பட்டாய். நிறைய காசு கொடுத்து வாங்கினாய், சருமத்தை சோப்பால் கழுவி வாசனைத் திரவியம் தடவி வளர்திட்டாய். ஒரு கணம் எப்போவாவது யோசித்தாயா ? அப்பனே உன் உடம்பு, அதன் மேல் நீ பார்க்கிற வெறும் தோல் ஒரு ஸாதாரண போர்வை. அதன் உள்ளே?? ஸ்கேன் எடுத்து பார், பயந்து போவாய். பக்கம் பக்கமாக கிருமிகள், நோய்கள் உள்ளே உன்னை அழிக்க நீ உண்ட உணவில், லேகியத்திலே, பஸ்பத்திலே உருவாகி வளர்கிறதே . எத்தனையோ துளைகள் கொண்ட உன் தோல், உள்ளே இருக்கும் அழுக்கை மறைக்கின்ற போர்வை அதை தான் உன் உடம்பு என்று அறிந்துகொள். இதற்கா இத்தனை மதிப்பும் பெருமையும் அகந்தையும் உன்னிடம் !கொடுத்தாய். ஆஹா என்ன அழகியதா அல்ல அழுகியதா இந்த உடம்பு.?!

சொல்கிறேன் கேள்.

மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை
ரேஷன் கடைக்கு சர்க்கரையோ, அரிசியோ வாங்க எடுத்துக்கொண்டு செல்லும் ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.). சமண முனிவர்களே அசாத்தியமான கற்பனா சக்தி உங்களுடையது. மேலும் உங்களை பிடிக்கிறேன் படிக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...