Monday, August 6, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் - J.K. SIVAN

52. துன்பங்கள் தனியாக வருவதில்லை.

நாம் மகாபாரதத்தின் முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம். இனி பாண்டவர்கள் சகலத்தையும் இழந்து பரதேசிகளாக வனவாசம் போகும் இடம் வரும். கஷ்டம் மேல் கஷ்டம் யாரை விட்டது. எல்லாம் விதி.

போன கட்டுரையில் யுதிஷ்டிரன் விருந்தாளியாக ஹஸ்தினாபுர அரண்மனையில் சகோதரர்களோடு வந்து தங்கினான். அவனை சபாமண்டபத்திற்கு அழைத்து பகடை விளையாட்டில் ஈடுபடுத்தினார் துரியோதனனும் மற்றோரும். யுதிஷ்டிரனும் ஒப்புக்கொண்டு விட்டான்.பணயம் வைத்து ஆடும் சூதாட்டம் ஆரம்பமாகியது. துரியோதனனுக்கு பதில் அவன் மாமன் சகுனி ஆடப்போவதை அறிதும் விதி வசத்தால் யுதிஷ்டிரன் ஒப்புக்கொண்டு விட்டான்.

''கேள், ஜனமேஜயா, இனிமேல் தான் சம்பவங்கள் விறுவிறுப்பாக, இல்லை, இல்லை, விபரீதமாக நடைபெறப்போகின்றன.

தாயக்கட்டைகள் வந்து சேர்ந்தன. ஆட்டம் ஆரம்பமாக போகிறது.திருதராஷ்ட்ரன், பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரன் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். விதுரன் மனதில் கவலை அலை பாய்ந்தது. கூட்டம் கூட்டமாக மற்றவர்களும் ஆட்டத்தை பார்க்க ஆயத்தமானார்கள்.

யுதிஷ்டிரன் அருகில் இருந்த பெரிய மூட்டையை நகர்த்தினான். '' இந்த தங்கம், வைர ,நவமணிகள், எனது பணயம்.'' துரியோதனா உனது பணயம் என்னவோ. எதை வைத்து நீ ஆடப்போகிறாய்?' என்றான்.

'என்னிடம் உள்ள ஆபரணங்கள் செல்வங்கள் இதோ தயார்'' என்றான் துரியோதனன். ஒரு மலையென செல்வங்கள் குவிந்திருந்தன.

சகுனி கையில் தாயக்கட்டைகளை தேய்த்து உருட்டினான். யுதிஷ்டிரன் கேட்ட எண்களை சகுனி உருட்டி வீசிய தயக்கட்டைகளில் விழுந்தன. சகுனி வென்றான்.

''பரவாயில்லை நீ வென்றாலும் அடுத்த ஆட்டத்தில் பார்ப்போம் ."இந்த ஜாடியில் உள்ள அனைத்து நவமணிகளும் எனது பணயம்'' என்றான் யுதிஷ்டிரன்.

பகடைக்காய் உருண்டது. சகுனி யுதிஷ்டிரன் கேட்ட எண்ணையே பகடையில் விழுந்ததை காட்டினான். வென்றான்.

துளியும் கலங்காத யுதிஷ்டிரன் '' நீ வென்றாய். இதோ அடுத்த ஆட்டத்துக்கு என் பணயம் ''எனது தேர்''. தேர் சகுனி பக்கமாக நகர்ந்தது.

''அடுத்து வரும் ஆட்டத்துக்கு என் பணயம் ஒரு லக்ஷம் பணிப்பெண்கள்.'' சகுனி வென்றதால் யுதிஷ்டிரன் பரிசாக கிடைத்த அவர்களை பணயமாக இழந்தான்.

யுதிஷ்டிரன் வெறி பிடித்தவனாக ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தான். அடுத்தது அவனை பிரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆயுதம் தாங்கிகள்.

''வைசம்பாயனரே ஏன் இவ்வாறு நடக்கிறது? '' கவலையோடு கேட்டான் ஜனமேஜயன்.

''ஜனமேஜயா இதைத் தான் ''விதி'' என்பார்கள்''. சகுனியால் துரியோதனன் இப்போது பாண்டவர்களின் ஆயிரம் யானைகளை பெற்றான்.

''அடடா யுதிஷ்டிரா, யானைகளை தோற்றுவிட்டாயே?'' என்ற சகுனியிடம். ''அதனால் என்ன இதோ ஆயிரம் தேர்கள்'' பகடை காட்டிய எண் யுதிஷ்டிரன் கேட்டதாகவே விழுந்து தேர்களை துரியோதனன் பெற்றான்.

அர்ஜுனன் இந்திரனிடம் பெற்ற குதிரைகள் இனி துரியோதனன் வசமானது. மீண்டும் பதினாயிரம் தேர்கள் சகுனியால் துரியோதன் அரண்மனை சொத்தானது. தாமிரத்தாலும் இரும்பாலும் பாதுகாக்கப்பட்ட நானூறு நிதிகளை கஷ்டப்பட்டு சம்பாதிக்காமலேயே யுதிஷ்டிரன் கேட்ட எண்களை பகடைக்காயில் காட்டி சகுனி பெற்றான்.

''வைசம்பாயனரே, யுதிஷ்டிரனுக்கு என்னவாயிற்று? என்றான் ஜனமேஜயன்.
''இன்னும் நிறைய நடக்கப் போகிறதே கேள்'' என்றார் முனிவர்.

விதுரனால் பொறுக்க முடியவில்லை.
''திருதராஷ்டிரா, நிலைமை போவதைப் பார்த்தால் துரியோதனன் கெடுமதி உன் குலத்தையே விரைவில் அழித்துவிடும் என்று தோன்றுகிறது. அவன் பிறந்தபோதே நரியாக ஊளை இட்டதை மறந்தாயா. இவனால் இந்த வம்சம் அழியும் என்று சொன்னதை மறந்துவிட்டாயா?'' என்றான். தேன் கூட்டை தேடி உயரமான ஆபத்தான மலை உச்சிக்கு செல்பவன் தேன் எடுப்பதற்கு முன் அதலபாதாளத்தில் விழுவது நிச்சயம் என்று ஒரு ஸ்லோகத்தில் வருமே அது நடைபெறுமோ என்று பயமாக இருக்கிறது.''

''துரியோதனா, இந்த சூதாட்டத்தை நிறுத்து. உனக்கு செல்வம் நிறைய இருந்த போதிலும் பாண்டவர்களின் சொத்துக்கு ஏன் ஆசைப்படுகிறாய் யுதிஷ்டிரனை நீ சூதில் வென்றாலும் அர்ஜுனனை பீமனை யுத்தத்தில் நீ வெல்ல முடியாது. உன் உயிரை அப்போது பணயம் வைக்கப் போகிறாயே. நினைவிருக்கட்டும்'' என விதுரன் அறிவுரை சொன்னான்.

''விதுரா, போதும் உன் அறிவுரை. என் எதிரிகளை நீ புகழ்ந்து பாடுவதை நிறுத்தேன். எங்களோடு இருந்தாலும் எங்கள் அழிவுக்கு பாடுபடுபடுவன் நீ என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் மடியிலே கட்டிக்கொண்டிருக்கும் விஷப் பாம்பு அல்லவோ நீ.?''

விதுரன் எவ்வளவோ நீதிகளை எல்லாம் எடுத்துக்காட்டியும் சொல்லியும் துரியோதனன் மனம் மாறவில்லை. அவன் தந்தையும் மசியவில்லை.
இதற்குள் யுதிஷ்டிரன் தனது செல்வங்களை , தான் எதிர்பார்த்தபடியே வரிசையாக இழந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்த சகுனி

''யுதிஷ்டிரா இன்னும் என்ன இருக்கிறது உன்னிடம் பணயம் வைக்க?'' என்று கேட்டான்.

''கவலை கொள்ளவேண்டாம் சகுனி, ஆட்டம் தொடரட்டும் வேண்டிய செல்வம் இன்னும் இருக்கிறது அதெல்லாம் பணயம் வைப்பேன்''

''பசுக்கள், கன்றுகள், ஆடுகள், குதிரைகள் எல்லாமே யுதிஷ்டிரனை விட்டு அகன்றன. ஆனால் அவனது தோற்கும் ஆட்டம் தொடர்ந்து கொண்டு வந்தது. யுதிஷ்டிரன் தனது நகரம், நாடு இவற்றையும் பணயம் வைத்து தோற்றான். தனது ஆபரணங்களை இழந்தான்.

''இதோ என் சகோதரன் சக்திவாய்ந்த நகுலன். அவனைப் பணயம் வைக்கிறேன்.''
''யுதிஷ்டிரா, உன் பிரிய சகோதரன் நகுலன் எம் வசமாகி விட்டானே. இப்போது யார் ?''
''சகாதேவன் இருக்கிறானே அவனை வைத்து ஆடுகிறேன்'' என்று சொல்லி முடிப்பதற்குள் யுதிஷ்டிரன் சகாதேவனை இழந்தான்.

''மாத்ரி புத்ரர்களை மட்டும் இழந்து பீமன் அர்ஜுனன் பலத்தில் நம்பிக்கை வைத்துள்ளவனா நீ? என்று உசுப்பி விட்டான் சகுனி.
''தவறாகவே நினைக்கும் சகுனி, உன்னைப் போலவே என்னையும் எண்ணுகிறாயா. சகோதரர்கள் எங்களுக்குள் பிரிவினை உண்டாக்க்கப் பார்க்கிறாயா? இதோ பார் நமது அடுத்த ஆட்டத்துக்கு என் அருமை அஜுனனையே பணயம் வைக்கிறேன்''

''யுதிஷ்டிரா விளையாட்டில் உனக்கு இருக்கும் பற்றுதல் நம்பிக்கை என்னை மிகவும் மகிழ்விக்கிறது. உன்னால் தான் ஜெயிக்க முடியுமே.. அர்ஜுனனை இழந்தாலும் இதோ இந்த பலவான் பீமனை வைத்து ஜெயித்து இழந்ததை மீண்டும் பெற முயற்சி செய்''

''ஹே சகுனி. கொக்கரிக்காதே. பீமன் மகா வீரன். வெறும் பணயப் பொருள் அல்ல. இருப்பினும் அவனையே வைத்து ஆடி வெல்கிறேன்.
.யுதிஷ்டிரன் ஜெயிக்குமுன் பீமன் அடிமையானான்.

''யுதிஷ்டிரா இனி என்ன இருக்கிறது உன்னிடம் பணயம் வைக்க'' என்று சிரித்தான் சகுனி.
''ஏன் நானே இருக்கிறேனே. -- போடு பகடை பன்னிரண்டு. என்று யுதிஷ்டிரன் கேட்டு சகுனி அதைப் பகடையில் காட்டி யுதிஷ்டிரனையும் வென்றான்.
''சபையோர்களே, நீங்கள் எல்லாருமே பார்த்தீர்கள். யுதிஷ்டிரன் தனது பொருள், செல்வம், நாடு, சகோதர்கள் ஏன் தன்னையுமே தோற்றுவிட்டான். துரியோதனனின் கைப்பொருள் அனைத்தும் இப்போது.'' என்றான் சகுனி.
''நிறுத்து சகுனி. என்னிடம் இன்னும் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. விலை மதிப்பில்லாதது. எங்கள் திரௌபதி. அவளையே பணயம் வைத்து ஆடுகிறேன்'' என்றான் யுதிஷ்டிரன்.
''தெய்வமே அப்புறம் என்ன ஆயிற்று? கடைசி ஆட்டத்திலாவது யுதிஷ்டிரன் சகுனியை வென்று சகலத்தையும் மீட்டுக்கொண்டானா'' என்று கேட்டான் ஜனமேஜயன். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

பீஷ்மன் துரோணன் கிருபர் எல்லோருமே வியர்த்தனர். விதுரன் தனது இருகைகளாலும் தலையைத் தாங்கிக் கொண்டான்.
சகுனியின் பகடைக்காய்கள் என்ற ஜடப்பொருள் சகல சக்தி வாய்ந்த பாண்டவர்களை விழுங்கியது போல் துருபதன் செல்ல மகளையும் ஸ்வாஹா பண்ணிவிட்டது.
ஆனந்தத்தில் துரியோதனன் குதித்தான். ''இனி அந்த துருபதன் மகள் என் வேலைக்காரி. என் வீட்டை பெருக்கி துடைக்கப்போகிறவள்''.

''துரியோதனா, தகாத வார்த்தை பேசிவிட்டாய். நெருப்போடு விளையாடி விட்டாயடா. பலனை அனுபவி. துரோகம் நரகத்தின் வாசல் என்று இன்னும் புரியவில்லை உனக்கு. போய்ப் பார் .''. விதுரன் அரற்றினார்.

பிரதிகாமன் என்கிற ஒரு தூதுவனை அனுப்பினான் துரியோதனன். ''நீ போய் அந்த திரௌபதியை இங்கு கொண்டு வா. ''
தூதுவன் சபையில் நடந்ததை சொன்னதும் திரௌபதி திடுக்கிட்டாள். யோசித்தாள் . ''தூதா .என்னால் நம்ப முடியவில்லையே. என்னை பணயம் வைத்தா இழந்தார் யுதிஷ்டிரர். வேறு பொருளே இல்லையா? பாண்டவர்கள் அனைவரும் இதை பார்த்துக்கொண்டு இருந்தார்களா?

எல்லாம் இழந்தபிறகு தான் உன்னையும் பணயம் வைத்து இழந்தார்கள். ''
ஓஹோ . நீ முதலில் சென்று அந்த சபையில் கேள். தன்னை முதலில் இழந்தாரா என்னை முதலில் இழந்தாரா என்று. தன்னையே இழந்தவருக்கு என்னை வைத்து இழக்க என்ன உரிமை இருந்தது? யுதிஷ்டிரன் பதிலே சொல்லவில்லை. இடிந்து உட்கார்ந்திருந்தான்.

தூதுவன் சபைக்கு திரும்பினான். துரௌபதியின் கேள்விகளைச் சொன்னான்''. திரௌபதி மாத விடாய் - வீட்டு விலக்காக இருப்பதையும் சொன்னான்.

''அந்த கேள்வியெல்லாம் அவளை இங்கே வந்தபிறகு கேட்கச் சொல், துச்சாதனா, நீ போய் அவளை உடனே இங்கே இழுத்துவா'' என்றான் துரியோதனன்.

துச்சாதனன் திரௌபதியை பார்த்து ''உன் கணவர்கள் எங்கள் அடிமைகள். நீயும் தான். உடனே வருகிறாயா உன்னை இழுத்துச் செல்லட்டுமா என்று மிரட்ட, அவள் மறுக்க, இடுப்பில் கட்டிய ஒரு வஸ்த்ரத்துடன் மட்டும் இருந்த திரௌபதியை நெருங்கி தொட்டு அவள் கூந்தலைப் பற்றி இழுத்தான் துச்சாதனன்.

''கண்ணீரே அவள் ஆடையாக விரித்த கூந்தலுடன் குந்தியை வணங்கிவிட்டு அவளும் தொடர சபையை அடைந்தாள் .



''இந்த சபையில் நீதி நேர்மை, நியாயம் தெரிந்தவர்கள் யாருமே இல்லையா. ஒரு பெண்ணை, அவளது உடல் நலம் பெண்மைக்குண்டான பருவ நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டும் இப்படி இழுக்கப்பட்டு ஒரு வஸ்த்ரத்தோடு அவமானப் படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே. '' என்று கதறினாள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...