Monday, November 19, 2018

WHY WORRY



''நோ பீஸ் ஆப் மைண்ட்'' - J.K.SIVAN

சிவாஜி கணேசன் ஏதோ ஒரு படத்தில் ''ஆயிரம் இருந்தும்..... நோ பீஸ் ஆப் மைண்ட் '' என்று ஒரு கோட் போட்டுக்கொண்டு அரிதாரம் பூசிக்கொண்டு கையில் ஒரு கொம்பைச் சுற்றிக்கொண்டு பேசும்போது அது நடிப்பு. நாம் இதெல்லாம் செய்யாமலே ''சார், ரொம்ப நாளாகவே நோ பீஸ் ஆப் மைண்ட்'' என்று சொல்லும்போது நடிப்பதில்லை.

''ஓ அப்படியா, த்ஸோ த்ஸோ ''

''பின்னே என்ன சார். எத்தனையோ பிரசங்கங்கள் கேட்டேன். பேச்சுகள் கேட்டேன். புத்தகம் புத்தகமாக படித்தேன். இருந்தும்.... ''அமைதியில்லாதென் மனமே'' தான்.''

ஏன் திருவேங்கடம் இப்படி சொல்கிறார் என்று யோசித்தால் சில காரணங்கள் தெளிவாகிறது.

1. ப்ராப்ளம் என்னும் சிக்கல்களை நாமாகவே வரவழைத்துக் கொள்கிறோம். எப்படி என்றால் மற்றவர் விஷயங்களில் மூக்கை நீட்டுவதின் மூலம்.. நமக்கு நாம் செய்வது, சொல்வது தான் சரியான வழி என்று அவர்கள் விஷயத்தில் தலை இடுவதால். அந்த மடையனுக்கு எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் என் பேச்சைக் கேட்கவே இல்லையே இப்போது எல்லோருக்கும் அவஸ்தை'' என்று சொல்லி அலுத்துக் கொள்கிறோம்.

2. உன்னை மாதிரியே தான் அடுத்தவனுக்கும் யோசிக்கும் முடிவெடுக்கும் உரிமை, தகுதி இருக்கிறது என்பதை மறந்துவிடுவதால் சில தலைவலி நமக்கு உண்டாகிறது. அவன் எப்படி நம் வழியில் ஒரு பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்.? நாம் இப்படி செய்வோம் என்று தெரிந்து தானே கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் தனித்தனியே வெவ்வேறு உருவில், உள்ளே வேறே வேறே சிந்தனைகளோடு, படைத்திருக்கிறான். ஒருத்தர் மாதிரியா இன்னொருத்தர் இருக்கிறோம்?

3. சமயம், சந்தர்ப்பம், சூழ்நிலையைப் பொறுத்து தானே பிரச்னைகளுக்கு முடிவுகள் எடுக்கவேண்டி இருக்கிறது. மதுரையில் எங்கோ ஒரு சூழ்நிலையில் இருக்கிறவனுக்கு மதராஸ் காரன் தனது சூழ்நிலையில் எப்போதோ ஒரு பிரச்னைக்கு தான் எடுத்த ஏதோ ஒரு லாபகரமாக முடிவு எப்படி பொருந்தும்?

4. கிருஷ்ணன் எல்லோருக்கும் நல்ல படியாக வேலை செய்யும் மூளையை ஒரே அளவில் உள்ளே பொருத்தி தான் அனுப்பியிருக்கிறான். அவரவர் வாழ்வில் அதை லாபகரமாக உபயோகிப்பது அவரவர் சமயோசிதம், சாமர்த்தியம். இதற்கு அடிப்படையில் பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சோர்வின்மை சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரிப்பது என்றெல்லாம் சில உத்திகள் உண்டு. அவரவர் மனோநிலை பொறுத்தது இது.

5. எது இருக்கிறதோ இல்லையோ, உன் மீது உனக்கே நம்பிக்கை இருக்கவேண்டியது முதலில் அவசியம். அது தான் சந்தர்ப்பங்களை சமாளிக்க உதவும் ஆயுதம். சரியான முடிவு என்று நமக்கு தோன்றினால் அதை எடுத்தபிறகு அப்புறம் ஜகா வாங்க கூடாது. இந்த நம்பிக்கை தான் மனதிற்கு திடம்.
6. எதிலும் எப்போதும் நான் சொல்வது தான் முடிவு என்ற அகம்பாவம் காலை வாரிவிடும். ஐயா அப்பப்போது தலையில் குட்டிக்கொள்ளுங்கள். இது மாதிரியான ராவண எண்ணங்கள் நாம் கொஞ்சம் அசந்திருந்த போது தலை தூக்கும். ஒரே அமுக்கு. இடம் கொடுக்காமல் அதை கீழே தள்ளுங்கள். ஜாக்கிரதை. எல்லை மீறாமல் இருக்க அகம்பாவத்துக்கு இந்த தண்டனை அவசியம். பகவானே, உன் மீது பாரத்தை போட்டு விட்டு இதை செய்கிறேன் என்கிற பிரார்த்தனையும் ரொம்ப உதவும்.
7. இப்படி எடுக்கும் முடிவுகள் படிப்படியாக காலூன்றி மேலே நகர, முன்னேற, உதவும். தியானம் தவறு செய்வதை தவிர்க்கும்.

8. இதுவா அதுவா என்ற சந்தேகத்துக்கு இடமே இருக்காது. மனதில் உளைச்சல் இருக்காது. அமைதியாக ஒவ்வொரு செயலும் நல்லபடி முடியும்.

9. தியானம் கஷ்டமே இல்லை. ஒரு சில நிமிஷங்கள் தனியே, அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடி எதிலும் மனது ஓடாமல் இறை சிந்தனையில் ஈடுபட்டால் போதும். மனதில் அமைதி ஓடிவந்து குடி புகும்.

10. ஒரு மணி பாட்டரி ரீ சார்ஜ் எப்படி நாள் முழுக்க கை பேசியை வேலை செய்ய வைக்கிறது. அது போல் ஒரு சில நிமிஷ தியானம் ஒவ்வொருநாளின் மற்ற நிமிஷங்
களை அமைதியில் ஆழ்த்துகிறது.

11. எதையுமே ''அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்'' வேண்டாம். அப்புறம் ''செய்வதா வேண்டாமா'' என்ற சந்தேகத்தில் கொண்டு தள்ளிவிடும். அதால் சரியான சிந்தனை முடிவு தடைபடும். ஏதோ ஒரு சரியான முடிவு என்று தோன்றியதை எடுத்துவிட்டு அதை தொடர்ந்து வளர்த்து வருவது தான் சிறந்தது. பிய்த்துக்கொண்டு ஓடும்போது நாமும் பிய்ந்து போய்விடுகிறோம்.

12.''வருவதை எதிர் கொள்ளடா'' இருந்தால் போதும். என்ன ஆகுமோ என்ற கவலை வேண்டாம். ஆளை கொன்றுவிடும். நாளை நடப்பதை யார் அறிவார்? நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை ஒன்றே போதும். அப்படி தோல்வி அடைந்தால் அனுபவித்தவன் ஒருவன் சொன்னது ஞாபகத்துக்கு வரட்டும். தோல்வி தான் வெற்றிக்கு வாசல்படி.
எதற்கு வருத்தப்பட வேண்டும். கவலை?. சிந்திய பாலை அள்ளுவது தான் இந்த கவலையின் விளைவு.

இப்படியெல்லாம் நாம் நடந்து கொண்டோமானால் சிவாஜி போல் நோ பீஸ் ஆப் மைண்ட் பேசவேண்டாம். பாவம் கண்டசாலா எங்கேயாவது தனக்கு தானே ''அமைதியில்லாதென் மனமே'' பாடிக்கொண்டிருக்கட்டும். நாம் அவர் பாட்டை கேட்டுக்கொண்டே அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லாமல் நம் வழியே நடப்போம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...