Wednesday, November 14, 2018

TAMIL POETS



 தமிழ் புலவர்கள் 
ஒளவையார் 

                                                         மூதுரை 

இப்போது நிறைய மழை பெய்யப்போகிறது.  புயல் மரங்களை, பல பழைய கட்டிடங்களை சாய்க்கப்போகிறது. தெருவில் சாக்கடைகளை திறந்து வைத்து நிறைய பேர் மோக்ஷத்துக்கு பதிலாக பாதாளம் செல்லப்போகிறார்கள்  என்று டிவியில்  ஒருவர் நிதானமாக  கத்திரிக்காய் விலை  சொல்வது போல் பேசுவார்.  பத்திரிகைகள் அன்று நடந்த கற்பழிப்பு, கொலைகளோடு இதையும் சேர்த்து போடும்.  கடைசியில்  வெடிக்காத  பட்டாசாகி விடும்.  இருக்கட்டும். ஒரு விஷயம் முக்கியம். அப்படி நல்ல மழை பொழிந்தால்  என்ன அர்த்தம்.  எங்கோ  நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று அவ்வை கிழவி மூலம்  அறிந்து கொள்ளலாம். ஒரு நல்லவர் இருந்தாலே  போதுமாமே!  ஜோர் மழை.  இது உண்மையென்றால் நம்மிடையே  இன்னும் சில  நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கிறது. 

மழை பெய்தால்  நல்லவருக்கு மட்டும் அல்ல,  அப்படி அல்லாதவர்களுக்கும் உபயோகம் தானே. எப்படி என்று ஒரு உதாரணம் கிழவி சொல்கிறாள்.

 விவசாயி  தோட்டத்தில்  நெல் வயலுக்கு  கிணற்றிலிருந்து  அந்தக்காலத்தில் ஏற்றம் இறைத்து பாத்தியில் நீரை பரப்பினான். இப்போது  மோட்டார்  மாட்டின் வேலையை செய்கிறது.   வாய்க்காலில் ஓடும் நீர்  பாத்திகளில்,  வரப்புகளில் ஓரத்தில் முளைத்து உயிர் வாழும் அவன் வளர்க்காத புல்  குடும்பத்துக்கும்  உணவளிக்கிறது.  அது போல .

நல்லவர் பணம்  நல்ல காரியங்களுக்கு பயன் படும். மற்றவருக்கும் அதால் நன்மை உண்டு.   எப்படி என்று என்னை விவரம் கேட்கவேண்டாம்.   சர்வே ஜனா சுகினோ பவந்து.  இது தான் அந்த மூதுரை.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை''.


சில நல்ல காரியங்களுக்கு பின்னால் முகம் பேர் தெரியாத பல பேர் பாடு பட்டு அதை சிறக்க செய்பவர்களாக இருப்பார்கள். அன்றும் இன்றும் நடப்பது இது. எல்லோருக்கும் தெரிந்தது தான்.  கல்யாண வீட்டில்  பெண் வீட்டார்  வருவோர் போவோரை உபசரித்து கொண்டிருப்பார்கள்.   குடும்பத்தை சேர்ந்தவரோ, நண்பரோ, சில ஆண்களும் பெண்களும்  மாங்கு  மாங்கு  என்று ஆடி ஓடி, வியர்வை தளும்ப  எல்லா சுற்று காரியங்களையும்  அசுர வேகத்தில் நிறைவேற்றுபவர்கள்.
இதற்கு ஒரு நல்ல  உதாரணம் என்ன?

நெல்லுக்குள்ளே  அரிசி இருக்கு யாருக்கும் சொல்லாதே என்று சின்னவயசில் ரகசியம் பேசுவோம்.  நெல்லில் அரிசி இருப்பதால் தான் அது முனை முறியாமல்  பாது காக்கிறது.  நெல்லை குத்தி உமியை நீக்கி எறிந்த பின்  தான் அரிசி. அந்த நெல்லும் உமியும் இல்லையென்றால் அரிசி ஏது ?  நெல்லையும் உமியையும்  யாரும் சீண்டுவதும் இல்லை நினைப்பதும் இல்லை. அரிசியின் மதிப்பு அதற்கில்லை.

''பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.''
ஆர்ப்பாட்டம், அலங்காரம் அதிகாரம் தூள் பறக்கும்.  வெத்து வேட்டு  ஆசாமிக்கு இது அவசியமாக இருக்கலாம். அளவைப் பார்த்தோ, உருவத்தை பார்த்தோ, எடை போடாதே.  ஒருவன்  எப்படிப்பட்டவன் என்பதை அவன் செயலால், சிந்தனையால், வாக்கின் சக்தியால் உணர்ந்து கொள்வோம்  என்று சொல்லும் இந்த மூதுரையில்  ஒளவை  அழகாக ஒரு சில உதாரணம் தருகிறாள்.

தாழம்பூ உருவத்தில் பெரியது. பெரிய பெரிய மடல்.   என்ன பிரயோஜனம்.   கம்மென்று மணம் வீசும்  மகிழம்பூ  கண்ணில் படாத அளவு  சின்ன ஸைஸ் . மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.  வாசம் வெகு தூரம் மூக்கை துளைக்கும்.  எங்கள் வீட்டு வாசலில் ஒரு மகிழ மரத்தடியில  வாசனை பிடித்துக்கொண்டு விளையாடி இருக்கிறேன். 

கடல் எல்லையற்று விரிந்து காண்கிறது.  பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது.  குடிப்பதற்கு ஒரு சொட்டும் உபயோகமில்லை.  ஆனால்   எங்கோ அதன் கரையில் தோண்டிய சிறு ஊற்றில் (ஊறலில்) வரும் நீர் பருகுவதற்குக் கூடப் பயன்படும். 
''மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.''

இன்னும் ஒளவையைக் கேட்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...