Saturday, November 24, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்
மஹா பாரதம் J.K. SIVAN

அண்ணனும் தம்பியும். !

எனக்கு ஒரு ஆசை. ஒன்று ஏதாவது ஒரு பிறவியிலாவது லோமச ரிஷி மாதிரி எல்லாம் தெரிந்த என்சைக்கிலோ பீடியாவாக பிறக்கவேண்டும். அல்லது அது மாதிரி ஒருத்தர் கிடைத்த சிஷ்ய கோடி யுதிஷ்டிரனாகவாவது பிறக்க வேண்டும். ஆனால் யுதிஷ்டிரனாக கதைக்கு ஆசைப்பட்டுக் கொண்டு காட்டில் போய் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. கூடப்பிறந்தவர்களோ, மனைவியோ இனிமேல் உ ங்களை பணயமாக வைத்து சூதாடுகிறேன் என்று முணுமுணுத்தாலே போதும் அவர்களே கொன்றுவிடுவார்கள்.

தீர்த்த யாத்திரையில் "லோமச ரிஷி மேலும் ஒரு கதை யுதிஷ்டிரனுக்கு சொல்வது தான் இன்று உங்களை அடைகிறது. இதை கார்த்திகை சீராக ஏற்றுக்கொள்ளுங்கள்.

++

''ரிஷி பாரத்வாஜரும் ரிஷி ரைவியரும் நண்பர்கள். ரைவியருக்கு ரெண்டு பிள்ளைகள் அர்வாவசு, பரவசு என்று. யவக்ரி என்பவன் பாரத்வாஜரின் மகன். ரைவியரும் அவர் மகன்களும் வேதத்தில் நிபுணர்கள். பாரத்வஜரும் யவக்ரியும் துறவிகள். ரைவியரையும் அவர் மகன்களையும் பிராமணர்கள் போற்றி பெருமைபடுத்தினர். பாரத்வாஜர் கவனிக்கப்படவில்லை. இது யவ்க்ரிக்கு வருத்தம். கடுந்தவம் செய்தான். இந்திரன் அவன் முன் தோன்றி ''யவக்ரி , உனக்கு என்ன வேண்டும் சொல் எதற்காக நீ இப்படி தவம் செய்கிறாய்?'என வினவ,

''தேவேந்திரா, இதுவரை எவரும் அறியாத அளவுக்கு எனக்கு வேத சாஸ்திர ஞானம் வேண்டும்'' என்றான் யவக்ரி .

"ஏனப்பா வீணாக உன் உடலை வற்புறுத்திக்கொள்கிறாய். வேதம் அறிய இது வழியில்லையே'' என்று சென்று விட்டான் இந்திரன். யவக்ரி இன்னும் கடினமாக தவமிருந்தான். இந்திரன் மீண்டும் வந்தான்.

''என்னப்பா யவக்ரீ, நான் தான் ஏற்கனவே சொன்னேனே. நீ தவறான முறையில் வேத ஞானம் அடைய முயல்கிறாய் . ஒரு குருவிடம் நீ சென்று தான் வேதஞானம் பெறவோ தெரிந்து கொள்ளவோ முடியும் '- திரும்பிவிட்டான் இந்திரன்.

''இன்னும் கடின தவம் செய்து என் உடலை வெட்டி யாகத்தீயில் போட்டு உயிர் விடுவேன்'' என்றான் யவக்ரி இந்திரனைக் கூப்பிட்டு.

இந்திரன் யோசித்து ஒரு முதிய பிராமண துறவியாக யவக்ரி தவம் செய்யும் இடம் வந்தான்.

யாரோ ஒரு கிழவன் கங்கை ப்ரவாஹத்தை மணலைக் கொண்டு கொட்டி ஒரு அணை கட்டுவதைப் பார்த்து யவ்க்ரி சிரித்தான். கிழவனோ முனைந்து அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.

''முதியவரே என்ன செய்கிறீர்கள் நீங்கள்?''

''இந்த நதியை தடுத்து ஒரு அணை கட்டினால் குறுக்கே நடந்து செல்வதற்கு சௌகரியம் அல்லவா?''

''இப்படி மண்ணைப் போட்டு என்றைக்கு கங்கையில் அணை கட்டமுடியும். நீங்கள் செய்வது நடக்காதது.'' என்றான் யவக்ரி .

''அப்பனே, நானும் ஒருவழியில் உன்னைப் போல் தான். நீ கடுமையாக தவம் செய்து மற்றவரை விட அதிக வேத ஞானம் பெற முயற்சிப்பது போல் தான் நானும் இந்த மண்ணை போட்டு கங்கை யில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்''

யவக்ரி உடனே கிழவன் யார் என்று புரிந்து கொண்டு இந்திரனை வணங்குகிறான். இந்திரன் சொற்படி ஆஸ்ரமம் திரும்பி கர்வத்தை விட்டு ஒரு குருவிடம் சென்று வேதம் கற்று ஞானம் பெற முயல்கிறான்.

இவனைப்போலவே யுதிஷ்டிரா, இன்னுமொருவன் இருந்தான். அவன் ரிஷி வலதியின் மகன். வலதி தவம் செய்து இந்திரனை வேண்டினான்.

''வலது எதற்காக என்னை நோக்கி தவம் இருந்தாய் உனக்கு என்ன வேண்டும் சொல் ''

''தேவாதி தேவா, இந்திரா, எனக்கு ஒரு பிள்ளை பிறந்து அவன் மரணத்தை வென்றவனாக இருக்கவேண்டும்''

''ஓஹோ. ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரைப் போல அவன் ஆகவேண்டும் சொல் ?'' என்கிறான் இந்திரன்.

வலது சுற்றுமுற்றும் பார்க்கிறார் தூரத்தில் தெரிந்த ஒரு பெரியமலையை காட்டி அதுபோல் நிரந்தரமாக அவன் இருக்கவேண்டும்'' என்று இந்திரனிடம் வரம் பெற்றார். இந்திரன் ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.

ரிஷி வளதிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். மேதாவி என்ற அந்த பிள்ளை கர்வம் கொண்டு ரிஷிகளை அவமதிக்கிறான். தன்னுக்ஷகர் என்கிற ரிஷியிடம் அவன் வாலாட்டி சாபமடைகிறான். அவன் மரணமற்றவன் என்று தெரிந்த அவர் எந்த மலையை அவன் ஆதாரமாகக் காட்டினானோ அந்த மலையை சில மாடுகளை முட்டச்செய்தே உடைத்தெறிய, மலை சிதறியதும் அவனும் இறந்தான். அவன் தந்தை ரிஷி வலதி அவன் உடலைத் தழுவியவாறு மற்ற சீடர்களுக்கு உபதேசம் செய்கிறார்.
''எவனும் அழிவற்றவன் இல்லை. வரம் பெற்ற கர்வம் ஒருவனை அழிக்கும் என்கிறார்'.வலதி.

பாரத்வாஜர் இந்த கதையை சொல்லி தனது மகன் யவக்ரியிடம் ''அப்பனே உனக்கு கர்வம் வேண்டாம். நீ ரைவியரையும் அவர் மகன்களையும் அணுகாதே. ரைவியர் கோபம் கொண்டவர். உனக்கு துன்பம் விளைவிப்பார். அவர்களைப் பார்த்தாலும் அவர்கள் மனம் கோணாதவாறு நடந்துகொள்'' என்கிறார்.ஆனால் யவக்ரி மற்ற ரிஷிகளை துன்புறுத்துவதை, அவமதிப்பதை நிறுத்தவில்லை''

''அடடா அப்புறம் என்னாயிற்று'' என்ற யுதிஷ்டிரனோடு நாமும் காத்திருப்போம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...