Saturday, November 10, 2018

ORU ARPUDHA GNANI

ஒரு அற்புத ஞானி J.K SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்
தீர்க்க தரிசனம்

தூர திருஷ்டி என்கிற வார்த்தை தெரியுமா? நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. எங்கோ இருந்து கொண்டு வேறு எங்கோ தொலை தூரத்தில் நடக்கும், நடந்த ஒரு காட்சியை நேரே பார்த்தாற்போல் சொல்லும் சக்தி தான் அது.

மகான்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருக்கிற ஒன்றை இங்கிருந்தே பார்த்தது போல் சொல்ல முடியும். ஆகவே ஞான திருஷ்டி என்பது கண்ணை மூடி எங்கோ என்றோ நடந்ததை அப்படியே நேரில் பார்த்தது போல் சொல்வது. இது நமக்கெல்லாம் சாத்தியமில்லை. நமக்கு எதிரே இருக்கும் பசுவும் பத்தடி தூரத்தில் வரும் பஸ் நம்பரும் கண்ணுக்குத் தெரியாமல் தவிக்கிறோம். சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கோ இதெல்லாம் சர்வ சாதாரணமாக இயன்றது. அதை அவர் பெரிதாக மதிக்கவும் இல்லை. லட்சியமும் பண்ணவில்லை. தானாகவே யாரைக் கண்டாலும் அவர்களுக்கான விஷயங்களை குறிப்பாக சொல்லிவிட்டு கிளம்பினார். ஒரு வாய் பாலுக்கு கூட காத்திருந்ததில்லை. சுயநலம் விளம்பரம் கருதாத லோகோபகாரம் என்றால் அவர் செய்தது ஒன்றே என்று திட்டவட்டமாக சொல்ல முடியும். இப்போது வாய்ச் சவடால் காவிகள் என்ன போடு போடுகிறது!

புதுச்சேரியில் ஒரு பெரிய பணக்காரர். பாவம் குஷ்டரோகம். அவதிப்பட்டார். மருந்தில் குணமாகவில்லை. யாரோ சொல்லி திருவண்ணாமலை வந்து ஸ்வாமிகளை தேடினார். அவரைப் பார்த்த ஸ்வாமிகள் ஒன்றுமே பேசாமல் சென்றுவிட்டார்.

ஒழுக்கை ராமசாமி பாகவதர், டி.வி. சுப்ரமணிய அய்யர், அரும்பலூர் வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், ஆகியோர்கள் ஸ்வாமிகளின் பக்தர்கள். அவர்கள் ஒருநாள் சிறுவள்ளூர் ஆர். வி. வேங்கடசுப்பையர் வீட்டில் சேஷாத்திரி ஸ்வாமிகள் இருப்பதை அறிந்து அங்கு சென்றார்கள்.

அந்த நேரம் பார்த்து மேலே சொன்ன குஷ்டரோகி பணக்காரரும் ஸ்வாமிகளைத் தேடி அங்கு வந்தார்.

''ஸ்வாமி இந்த குஷ்டரோக வியாதிக்கு ஏதாவது மருந்து இருக்கிறதா. இருந்தால் பாவம் இந்த நோயாளிக்கு அதை தெரிவித்து அருளவேண்டும் என்று அவர்கள் ஸ்வாமிகளிடம் அந்த குஷ்டர்ரோக்கிக்காக பரிந்து பேசி வேண்டிக் கொண்டனர்.

ஸ்வாமிகள் அவர்களையும் அந்த குஷ்டரோகி பணக்காரரையும் பார்த்து தலையாட்டினார்.

''ஸ்வானகந்தி ''சாப்பிட்டால் போயிடும் '' என்று சுவாமி பதிலளித்தார்.

'' சுவாமி, அது எங்கே கிடைக்கும்?'' என்று கேட்டார் ஒருவர்.

''காசிக்குப் பக்கத்திலே மூணு மைல் தூரத்திலே கங்காதீரத்தில் இருக்கே'' என்கிறார் ஸ்வாமிகள்.

அவர்கள் விழித்தார்கள். சுவாமி காசிக்கே போனதில்லையே. திருவண்ணாமலையை தாண்டி கருப்பா சிவப்பா என்றே தெரியாதவர் சொல்கிறாரே. கிருஷ்ணஸ்வாமி அய்யர் உள்ளே சென்று சமஸ்க்ரித ஆங்கில டிக்ஷனரி பிரித்து பார்த்தார். '' swanagandhi - . AVAILABLE NEAR BENARES '' என்று போட்டிருந்ததை பார்த்து அசந்து போனார்.

அதற்குள் ஸ்வாமிகள் அந்த குஷ்டரோகியை பார்த்து ''அது கிடைச்சு குடுத்தாலும் இவனுக்கு பாதி தான் குணமாகும். கருமி கருமி பெரிய கருமி. மீதி பாதியை அனுபவிச்சே ஆகணும்'' என்கிறார். எல்லோரும் சிலையாக மாறினார்கள்.
++
திருவண்ணாமலையில் ஒருநாள் முதன்முறையாக குழுமணி நாராயண சாஸ்திரி ஸ்வாமிகளைப் பார்த்த போது '' உன் ஊர் குருமணி தானே '' என்கிறார். குழுமணி 250 மைல் அப்பால் இருக்கிறதே . இவருக்கு எப்படி தெரிந்தது? குழுமணிக்கு ஒருவேளை முதலில் குருமணி என்கிற பேராகத்தான் இருந்திருக்கும் என்றும் சாஸ்திரி வியந்தார்.

+++
பூந்தோட்டம் சுப்ரமணிய ஐயர் முதன் முதலில் ஸ்வாமியைப் பார்க்க வந்தபோது இப்படித்தான் ''சுப்ரமணியா, உன் வீட்டுப் பக்கம் அரசலாறு ஓடறதே, ஜலம் இருக்கா?'' என்று சர்வ சாதாரணமாக கேட்டபோது அசந்து போனார். கந்தல் ஆடை, அழுக்கு உடம்பு, சடை பிடித்த முடி, அரைப் பைத்தியம் போன்ற உருவம்.... இதில் ஒரு தபோநிதியா?' என்று வியந்து போனார் சுந்தரமணிய ஐயர்.
++
சேலம் போலிஸ் ஆபிசில் மேனேஜர் ஒருவர் ஸ்வாமியை முதலில் பார்த்தபோது '' அட, நீயும் ஒரு சேஷாத்திரி தானா? நானும் தான். ஏன் நீ ராம ஜபம் பண்ணலே. ஆரம்பியேன். '' என்கிறார். அந்த பக்தர் அன்றிலிருந்தே ஸ்வாமிகள் உபதேசம் ஆகிவிட்டதால் துவங்கி பின்னர் பெரிய ராம பக்தராக புகழ் பெற்று விளங்கினார். வெகுகாலம் தனது பெயர் எப்படி ஸ்வாமிகளுக்கு தெரிந்தது என்று ஆச்சர்யத்தில் இருந்தவர்.
++
செரித்தலை திருவாங்கூர் சங்கரானந்த ஸ்வாமிகள் காசிக்கு யாத்திரை கிளம்பி வழியே திருவண்ணாமலை வந்தார். ஸ்வாமிகளைப் பார்த்தார். இங்கே ஒரு பத்து நாள் தங்கவேண்டும். நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவர் இந்த அன்ன சத்திரத்தில் தங்க சாப்பாட்டுக்கும் செலவுக்கும் சீட்டு தருகிறார் என்று கேள்விப் பட்டேன் . எங்கே போய் பார்ப்பது செட்டியாரை? என்னிடம் பணம் இல்லை. ஒரு சீட்டு பெறுவதற்கு ஸ்வாமிகள் அருள் புரியவேண்டும் '' என்று வேண்டினார்.

''ஓஹோ செட்டியார் ரயிலில் வந்து இறங்கிட்டார். குதிரை ஜட்காவண்டிலே ஏறிண்டு இருக்காரே. ஓடு சீக்ரம் போய் பார் சீட்டு கொடுப்பார்''. என்கிறார் ஸ்வாமிகள்.

சங்கரானந்தா ரயிலடிக்கு ஓடினார். அப்போது தான் செட்டியார் ஸ்வாமிகள் சொன்னபடியே, குதிரை வண்டியில் மூட்டை முடிச்சோடு ஏறிக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று விஷயம் எல்லாம் சொன்னார். ஸ்வாமிகள் சொன்னதை கேட்ட செட்டியார் மானசீகமாக ஸ்வாமிகளை வணங்கி, சங்கரானந்தாவுக்கு ஒரு வருஷம் தங்க சீட்டு கொடுத்தார்.

நான் சொன்ன விஷயங்கள் கடுகளவு. எத்தனையோ பேருக்கு என்னென்னவோ அருள் பாலித்திருக்கிறார் ஸ்வாமிகள். அத்தனை பேர் சொன்ன விஷயங்களும் கிடைத்தால் நாம் எவ்வளவு புண்ணிய செய்தவர்கள் ஆவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...