Friday, November 23, 2018

OLD CINEMAS



     
       மறந்து போகாத  சினிமா ஞாபகம்.    J.K. SIVAN
                                                         
எல்லோரும்  ஆங்கில படங்களையே பார்த்த காலம் ஒன்று உண்டு. மவுண்ட் ரோடு எனும் இபோதைய அண்ணா சாலையில் ரெண்டு தியேட்டர்கள். ஒன்று எல்பின்ஸ்டன்  ,ராவுண்டானா எதிரே.  இப்போது அங்கே  அண்ணா இப்படிப்போ என்று வழிகாட்டிக் கொண்டு நிற்கிறார். எதிரே எல்பின்ஸ்டன் மறைந்து போய் வேறு ஏதோ ஒரு கட்டிடம் நிற்கிறது.  மற்றொன்று நியூ குளோப் . இப்போது இருக்கும் LIC  அருகே அதுவும் காணாமல் போய் ஒரு வியாபார களஞ்சியம் அங்கே இருக்கிறது. ஆனால் இந்த ரெண்டு தியேட்டர்களில் பல ஆங்கில படங்களை பார்த்தவர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழ் படங்களை பொறுத்தவரை  பேச ஆரம்பித்த படங்கள் பாட ஆரம்பிக்க காரணம் முதலில் MK தியாகராஜ பாகவதர்  PUC  போன்றவர்களால்.   அக்காலத்தில் படத்தில்  நடிப்பு என்பதே  பாட தெரிந்த நடிகர்களின்  கொஞ்சமான பேச்சும் நிறைய பாட்டும் தான்.

MK  தியாகராஜ பாகவதர் பேசச்சொன்னால்  பாடுவார்.  சாப்பிடசொன்னால்  பாடுவார், நடக்கசொன்னால்  பாடுவார். அவர் குரல் அற்புதமாக இருந்தது. கர்நாடக இசை சுத்தமாக  மக்களை மயக்கியது. அவருக்கு நல்ல காலம். அவர் பாடல்களை அற்புதமாக அமைக்க பாபநாசம் சிவன் இருந்தார். பாடுவதை மட்டுமே  மக்கள் தேடியது அவரிடம்.  எனவே  அதையே சாதகமாக்கி புகழ் பெற்றார்.

பின்னர் காலம் மாறியது.  சிலர் வசனம் சொல்வதை  குரல் மாற்றி அங்க அசைவுகளோடு பேசி,  திரையில் முகம் காட்டினார்கள்.  புகழ் பெற்றனர்.  சிலர் எதற்கெடுத்தாலும் ஹா ஹா ஹா  சபாஷ் என்று அட்டகாசமாக சிரித்தே காலம் ஒட்டினார்களோ இல்லையோ படத்தை ஓட்டினார்கள். M.R .ராதா, வீரப்பா, தேங்காய் ஸ்ரீனிவாசன், அசோகன்  போன்றோர் கோணங்கி  ஹாச்யம் . ''உன்னைத்தூக்கி வெயில்லே போட'',   ''ஐயா  தெரியாதய்யா'' ,  போல  சொன்னதையே அடிக்கடி திருப்பி சொல்லும் ஹாஸ்யம் கொஞ்ச நாளில் மறைந்தது.      ஜெமினிகணேசன், பத்மினி, வைஜயந்தி மாலா  போன்றோர்  முக வசீகரத்தால் காதல் உணர்வை பெருக்கி, இனிய குரலில் ராஜா,  PB  ஸ்ரீனிவாஸ்,   ஆகியோர்  பின்பாட்டு பாடி  வலு சேர்த்து  பெருமையுற்றனர்.   MGR, NTR   போன்றோர்  மக்களை  கவரும்  பாத்திரங்களை ஏற்று,  அழகு, கம்பீரம், வீரம்  காந்த சக்தி முகம்  இவற்றால் மக்களை படத்தில்  நல்லவர்களாகவே வந்து  மக்களை அன்பால் கட்டிப் போட்டு, கொள்கை  கோட்பாடு, ஜீவ காருண்யம்,  இறை பக்தி இவற்றை  வலியுறுத்தி  உள்ளம் கவர்ந்து உயர்ந்தவர்கள்.  பல தர ரசிகர்கள் அவர்களுக்கிருந்தனர்.  தலைவர்களாக  நாட்டையே ஆளும்  தகுதியும்  பெற்றார்கள்.

கனல் பறக்கும் வசனங்களால் மக்கள் மனதில் இடம் பெற்றவர் சிவாஜி. அத்துடன் அவர் நடிப்பும் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.  அங்கம் பேசியது. அரங்கம் மகிழ்ந்தது....

நடிப்பு என்றாலே  தன்னை  இயற்கையான  தானாக இல்லாமல் வேறோருவனாக  காட்டிக் கொள்வது தானே?   தன்னையே அதில் அடையாளம் காட்டிக் கொள்ள  அதிக சாமர்த்தியமும் வேண்டுமே .  அதனால் தானே  சிலராலேயே  இந்த   நடிப்புக் கும்பலில்  தனித்து  நிற்க முடிந்தது. முடிகிறது. மற்றவர்கள்  பற்றிய  நினைப்பே  இல்லையே. எப்படி நிலைத்து நிற்பது?

சோ  நாகேஷ்  மனோரமா, தங்கவேலு  போன்றோர்   உடல் அசைவு, வார்த்தை ஜாலம்  சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்ற  அர்த்தம் தொனிக்கும்  பேச்சு  இவற்றால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். 

அதேபோல்  தான்  மனோரமா  என்ற சிறந்த ஹாஸ்ய நடிகை.  தனக்கென்றே ஒரு பாணி வைத்திருந்தார்.  கணீர்  என்று குரல். நாகேஷுக்கு  இணையாக கேட்டோம். ஒரு பெண் நாதஸ்வரம் வாசித்து நான் எந்த நிகழ்ச்சியும் போனதில்லை. அதை  ஹாஸ்யமாகவே நடித்துக் காட்டிய  ஜில் ஜில் ரமாமணி.  சைதாப்பேட்டை சொக்கு  ஜாம்பஜார் ஜக்குவை  வா வாதியாரே என்று அழைத்தது  சொந்தக்குரலில்  எல்லோர்  காதிலுமே  வெகுகாலம் எதிரொலித்ததே. சிறந்த குணசித்திர நடிகை. எனக்கு மட்டுமல்ல. எத்தனையோ லக்ஷம் தமிழர்கள் சந்தோஷமாக கவலையை மறந்து சிரிக்க  உதவிய  ஒரு பெண்மணி. அவர் ஊட்டிய  மகிழ்ச்சியை  மறக்க  பல யுகம் வேண்டும்.

 ஒரு  காட்சியை  எப்படி மனம் யோசித்து  வெளிப்படுத்த நினைக்கிறதோ, அதை தனக்கே உரிய  முறையில், ஸ்வபாவமாக  உணர்த்தும்  வழியில்  தெரிவிப்பது.  உடல் அசைவோ, குரல் வித்யாசமோ, நடையிலோ, அங்க  சேஷ்டையிலோ,  முகத்தில் கண்களில், வாயால்,  எல்லாம்  காட்டும்போது  அதை அடுத்தவன்  பார்க்கும்போது  அதே  ரீதியில் புரிந்து கொண்டு ரசிக்க வேண்டும்.  இதில்  தான் சிவாஜி, மனோரமா, நாகேஷ், நம்பியார்  எல்லோருமே  மார்க் தட்டிச் சென்றார்கள்.  ஹாஸ்யத்தால்  உலக வாழ்வின் உண்மைகள், உபதேசமாக, சிந்தனையைத் தூண்டிவிட  சுய வசனம், பாட்டு இவற்றால்  தட்டி எழுப்பின ஒரே  சிரிப்பு நடிகர்  NS   கிருஷ்ணன்.   தனது ஹாஸ்ய காட்சியை தானே அமைத்து  வசனம் பாடல்கள் எல்லாம் தானும் மனைவி  T .டீ.எ. மதுரமுமாக பங்கேற்று   கோடிக்கணக்கான மக்களின் கை  தட்டலை பெற்றார்கள்.  அதனால் அல்லவோ  திநகரில்  அவரால்  மட்டுமே  சிலையாக  இன்றும் நிற்க முடிகிறது.   தமிழகத்துக்கு  கலை உலக  பரிசு இவர்கள்.

 சார்லி சாப்ளின்  ஒரு உலக அளவில்  இணையற்ற  ஹாஸ்ய நடிகன், சோகம் தோய்ந்த ஹாஸ்யத்தால் யதார்த்தம் உணர்த்தி  ரசிகர் நெஞ்சங்களை  நெகிழ்த்தினார்.  ராஜ் கபூரும்  ஒரு விதத்தில் இதை பின்பற்றி  வெற்றி கண்டவர்.  முகேஷ்  பாடல்கள் அவருக்கு பெரிதும் உதவியது.

ஹாஸ்யம்  என்ற போர்வையில்,  உடல் ஊனம் காட்டி சிரிப்பு மூட்டுவது  காட்டு மிராண்டித்தனம்.  குள்ளம், நெட்டை,  கூனன், குண்டன், மொட்டை,   தொத்துவாய், செவிடன்  பிச்சைக்காரன், பைத்தியம், குறைபாடுள்ள கண்,  போன்றெல்லாம் மனிதர்களின்  இயற்கைக் குறைகளை ஹாஸ்யமாக காட்டி  சிரிக்கவைத்த  மட்டமான  ஹாஸ்யமும் மறைந்து போய்விட்டதா இன்னும் கொஞ்சம் தலை காட்டுகிறதா?   தயிர் வடை தேசிகன்,  ஓமக்குச்சி  போன்ற  நடிகர்கள் தங்கள் வாழ்க்கை நடக்க லிப்டி மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கும்படியாக வாழ வேண்டி இருந்தது. அக்கிரமம். அநியாயம்.   பலர் மனதை நோகடிக்கும்  ஒரு வான் மற்றவனை   உதைத்து, அடித்து  ஹாஸ்யமாக காட்டி  கொஞ்சநாள்  செந்தில்  கவுண்டமணிகள் , லாரல் ஹார்டிகள்  பிழைத்தனர்.  மக்கள்  வெகுகாலம் இதை  ரசிக்கமாட்டார்கள் என்று புரிந்து கொண்டார்கள்.

சோக காட்சிக்கேன்றே  சிரிக்காத முகத்தோடு கலைந்த தலையோடு திலீப்குமார் வலம் வந்தார். ஒரே மாதிரியான சோக  உணர்ச்சியையே காட்டும் முகம்...தத்துவப்பாடல்களை  பாட  அதற்கு அற்புத  பின்னணியாக   முகமது ரபி, மன்னாடே, தலத் மஹ்மூத்,  SD  பர்மன்   ஆகியோர் அவர்களுக்கு கிடைத்திருந்தார்கள்.  தெலுங்கு தமிழில்  இப்படியே  நாகேஸ்வர ராவ் இப்படியே  நோயாளியாக,  ஏமாளியாக, தோற்றவனாக,   காட்டிக் கொண்டு  கண்டசாலாவின் பாட்டில்  பெயர் பெற்றார்.  இவர்கள்  கண்ணிலேயே  இயற்கையாக  ஒரு சோக இழை இருந்தது.  அவர்களை எல்லாம் நினைத்து  அந்த காட்சிகளை  மனதில் மீண்டும் ஒட்டிக்கொண்டு  இன்றும்  பழைய ரசிகர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...