Tuesday, November 27, 2018

MY MOTHER


ஹஸ்தம் ....சத்யம் -- J.K. SIVAN

அவளுக்கு இங்கிலிஷ் தெரியாது. சில வார்த்தைகள் பெயர்கள் மட்டுமே தெரியும். பேசினால் புரிந்து கொள்வாள். தமிழில் கேள்வி ஞானம் ஜாஸ்தி. ஞாபக சக்தி அபாரம். எழுத கஷ்டப்படுவாள். பள்ளிக்கூடம் பார்த்ததில்லை. மெதுவாக கண்ணு கிட்டே வைத்துக் கொண்டு படிப்பாள்.
அவள் தந்தை மிகப்பெரிய தமிழ் வித்வான். ராம பக்தர். மகோன்னதமான ராம பக்த கலைக் குடும்பம். வீட்டில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை, அட்டை கிழிந்து போன, மடித்தால் அப்பளமாக உடைந்து உதிரும் காலத்தால் க்ஷீணித்த பக்கங்கள். நிறைய பக்கங்களை மடித்து உடைக்கும் விளையாட்டில் மதிப்பு தெரியாமல் உடைத்திருக்கும் ஐந்து ஆறு வயது மஹா பாவி நான். என் கையில் படாமல் மேலே பாத்திரங்களுக்கு பின்னால் வைத்திருப்பாள். அது தான் அவள் லைப்ரரி. தாயுமானவர் புத்தகம் கையடக்கமான. அதில் படங்கள் பார்ப்பேன். யானை, குதிரை, ராஜா, ஆர்டினரி மனிதன், மரங்கள், மலைகள், எல்லோரும் ஒரே உயரமாக எந்த சித்திரக்காரன் அப்படி எல்லோரையும் ''சம நோக்கோடுடன் '' வரைந்தான் என்று இப்போது ஆச்சர்யப்படுகிறேன். ஆண்கள் பெண்கள் இருவருமே ஒரே பக்கம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பெண்கள் மூக்கில் புல்லாக்கு அரை அடி முன்னால் தொங்கும்.

அவளுக்கு தொண்ணூறு கடந்து விட்டது. அடிக்கடி இப்போது ஞாபகம் பிசகுகிறது. கண் பார்வை அநேகமாக மங்கி விட்டது. உணவு சரியாக ஜீரணமாகவில்லை. எனவே முழுக்க முழுக்க நீர்க்க கஞ்சி, மோர் கரைத்த சாதம் சாப்பிடுகிறாள். நன்றாக பாடுவாள். குரல் நன்றாக இருக்கும். வயதுக்கான நடுக்கம் மெருகு கொடுக்கும். அவளது யது குல காம்போதி காதில் ஒலிக்கிறது. வீட்டில் சோபா கிடையாது. தரையில் சுவற்றில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு தனது கையைப் பார்த்து கொண்டிருந்தாள். அவை கைகள் இல்லை. எலும்புக்கூடு மேல் சுருங்கிய தோலுறை. மடிப்பு மடிப்பாக சுருக்கம். எத்தனை குழந்தைகளை பிறந்தவுடன் எடுத்து தூக்கியவை. தட்டி, உணவு ஊட்டி, தூளி ஆட்டி தூங்கப்பணி, குளிப்பாட்டி, காலில் செருப்பு மாட்டி, கையில் மத்தியான உணவு சம்படத்தில் கொடுத்து தட்டிக்கொடுத்து, அணைத்து , தடவி வளர்த்தவை. அவளே முதல் முதலில் குழந்தையாக இருந்தபோது, கீழே வீழ்ந்தபோதெல்லாம் ஊன்றிக்கொண்டு அவளைக் காப்பாற்றியவை. எத்தனை பேருக்கு வீட்டில் வந்தபோதெல்லாம் வணங்கி, உபசரித்து, துணி துவைத்து, உணவு மண் அடுப்பில், குமுட்டியில் சமைத்து, அம்பாரம் பாத்திரங்களை கிணற்றடியில் தேய்த்து காய்ந்து போனவை. இப்போது அந்த கைகளால் அவளையே தூக்கிக்கொண்டு எழுந்திருக்க கஷ்டப்படுகின்றன. எத்தனை விளக்குகள் ஏற்றி இருக்கிறாள். எத்தனை கோவில், வாசலில் கோலம் போட்ட கைகள். பெரிய பெரிய பாத்திரங்களில் சாதம் சூடாக சாம்பார், ரசம், கூட்டு, தயிர், மோர், பருப்பு எல்லாம் கலந்து பிசைந்து சுற்றிலும் நீண்டு கொண்டிருக்கும் பல சின்ன சின்ன கைகளில் அளித்து சாப்பிட வைத்த கைகள். எத்தனை போட்டி அந்த சின்ன கைகளுக்கு. மீண்டும் மீண்டும் அவளிடம் உருண்டை உருண்டையாக பிசைந்த சாதம் பெற. என்ன ருசி. அடடா. எந்த சரவணபவனிலும் அது இன்று கிடைக்கவில்லையே. தயிர், பால், அன்றாடம் வாங்கியபோதெல்லாம் சுவற்றில் கரித்துண்டால் கோடு போட்ட கணக்கு தெரிந்த கைகள்.

இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு ''உம்மாச்சியை நமஸ்காரம் பண்ணு '' என்று சொல்லிக்கொடுத்த அற்புத கைகள். இன்றும் அந்த பாடம் மறக்க வில்லையே.

கணவன் கோபமாக திட்டினாலும், அவனுக்கு கை கால் அலம்ப சொம்பு நிறைய ஜாலம் கொண்டு வந்து கொடுத்து , தட்டில் உணவளித்து கால் பிடித்து விட்ட கைகள். இப்போது அந்த கைகள் பிடிப்பு இழந்து விட்டன. தத்தி தத்தி நடந்தபோது நடை பழக வைத்து பின்னாலேயே வந்து விழாமல் தக்க சமயத்தில் பிடித்து காப்பாற்றின கைகள். எத்தனையோ பேர் கண்களில் ஜலம் வடித்த போது ''சீ அசடே இதுக்கு போய் அழுவாளா, என்று தேற்றி கண்களை துடைத்து விட்ட கைகள்'' இப்போது மங்கிய கண்களில் ஜலம் வடிந்தபோது மெதுவாக துடைத்து விட்டுக்கொள்கிறது.

டஜன் டஜனாக குழந்தைகள் கொண்ட பெரிய கூட்டு குடும்பம். அத்தனைக்கும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பாட்டி விட்ட கைகள். தலைவாரி, வீட்டில் சாந்து கூட்டி நெற்றியில் இட்டு விட்ட கைகள். வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்தையும் தெரிந்த ஒரே அங்கம் கைகள் தான். இவை என் அன்னைக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே அனுபவ சின்னங்கள். பேசாத சரித்திர புத்தகங்கள். அந்த சரித்திர புத்தகம் எவனாலோ தப்பாக கூட அயோக்கியனை, கெட்டவனை நல்லவனாக திரித்து காட்டும். இந்த பத்து விறல் புத்தகம் பொய்யே சொல்லாது. சத்தியத்தின் தர்மத்தின் நியாயத்தின் வாரிசு. பாரபக்ஷமாற்ற சேவையின் சின்னம்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...