Tuesday, November 6, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 

மஹா பாரதம்.

               
        ரிஷ்யஸ்ரிங்கர்  கல்யாணம்.

 ''ஜனமேஜயா,  லோமசர்  மேற்கொண்டு  யுதிஷ்டிரனுக்கு  சொன்னதை நான்  உனக்குச் சொல்கிறேன்.

கங்கை  பிரவாஹமாக  ''ஓ '' என்ற  பேரிரைச்சலோடு  பூமிக்கு  ஆகாசத்திலிருந்து இறங்கியபோது,  தனது  அடர்ந்த   செஞ்சடையில் அவளைத் தாங்கினார்  சிவன். அவள் வேகம்  உடனே குறைந்தது.  மெதுவாக  அவரது கேசங்களிளிருந்து  பல உபநதிகளாகவும், கிளை நதிகளாகவும்.  கங்கை சேர்ந்தும் பிரிந்தும்  ஓடினாள்.

 ''பகீரதா,  நான் எங்கே செல்லவேண்டும்  உன் முன்னோரைக் கரை சேர்க்க?'' என்றாள் கங்கை.  பகீரதன்  அவளிடம்  சகரர்கள்  சாம்பலான   இடத்தை காட்டுகிறான்.   கடல் போன்ற அந்த பிரதேசத்தில் கங்கை புகுந்து 
  கடல் ஒரு காலத்திலிருந்த   மணல் வெளியை நிரப்பினாள்.
கடல் அங்கே உருவாகியது.  அதனால் தான் கடலுக்கு சாகரம் என்று பெயர்.    அங்கே தான் சகர புத்ரர்கள்  அறுபதினாயிரம் பேரும் , அதற்கடுத்த சந்ததியும், முன்னோரும்  கூட  பித்ருலோகம் புகமுடியாமல்  வாடிக் கொண்டிருந்தனர்.  கங்கையால் அவர்கள் புனிதமடைந்தார்கள். பித்ரு லோகம் செல்கிறார்கள். பகீரதனை ஆசிர்வதிக்கிறார்கள்.
தொடர்ந்து  லோமசருடன் பாண்டவர்கள் நடக்கிறார்கள். 

யுதிஷ்டிரன்   பாபங்களை அகற்றும்   நந்தா,  அபரநந்தா  நதிகளை  அடைந்து ஸ்நானம் செய்தான்.  லோமசர் அந்த இடத்தை பற்றி விளக்கினார்;

''தர்மா,  இதோ பார் இது தான்  நந்தா நதி.   இந்த நதிக்கரையில்  தான்  ரிஷபர்  என்று ஒரு ரிஷி இடைவிடாது தவம் செய்து வந்தார்.  அவரது  தவம் கெடும் வகையில்  இங்குள்ளோர்  சப்தம் செய்ததைக் கண்டு  இறைவனை வேண்டினார் :

 ''யார்  சப்தம் செய்தாலும்  அந்த சப்தம் இங்கு கேட்கக் கூடாது. தேவர்கள் இங்குவந்து  தவம் செய்வது மற்றவர் கண்ணில் படக்கூடாது''    என்று வரம் கேட்டுப் பெற்றதால் கிடைத்ததால்,  இங்கு எவராவது சப்தம் செய்தால்  இடி இடிக்கும்,  நந்தாவுக்கு  மறுகரையில் எவரும் செல்லமுடியாமல்  உயர்ந்த மலைகள்  அரணாக நிற்கும்  அதோ பார். அங்கு தவம் செய்பவர்களை யாரும் பார்க்க முடியாது. ''  என்றார் லோமசர்.    

லோமசர் சொன்னதை நாம் என்று நேரே சென்று பார்க்கப்போகிறோம் என்று எனக்கு  ஆதங்கமாக இருக்கிறது.

பிறகு பாண்டவர்களும்  லோமசரும்  கௌசிகி நதியில் நீராடினார்கள்.  ''இங்கு தான் விஸ்வாமித்ரர் தவம் இருந்தார். எனவே அவர் பெயர் இந்த நதிக்கு''  என்றார் லோமசர்..

வேறொரு இடத்தில்  ''இது காச்யபர் ஆஸ்ரமம்.   இது  ரிஷ்ய ஸ்ரிங்கர் இருந்த இடம். அவரால்  செழிப் படைந்தது தான் லோமபாதனின்  தேசம்.  . அவன் தனது  மகள்  சாந்தாவை ரிஷ்யஸ்ரிங்கருக்கு   மணம்  செய்வித்தான் .''

''மகரிஷி, எனக்கு   ரிஷ்யஸ்ரிங்கர்  பற்றி சொல்லவேண்டும்'' என்று யுதிஷ்டிரன் கேட்டதால்  லோமசர் சொன்னதின்  சாராம்சம் இது;  பெரிய கதையை சுருக்கமாக  தருகிறேன். ''மற்றவை வெள்ளித்திரையில் காண்க''    என்பதற்கு பதிலாக  ''புராணங்களில் நீங்களே படிக்க''  என்று மாற்றி எழுதிக் கொள்ளவும். படிக்கவும்.

"விபாண்டகர்  என்று  ஒரு ரிஷி. அவர் மகன் ரிஷ்யஸ்ரிங்கர்.  காட்டில் ஆஸ்ரமத்தில் தவம் செய்வதைத் தவிர யாரையுமே  பார்த்ததில்லை,. அவரது தவ வலிமையால்  தலையில் ஒரு சிறு மான்  கொம்பு போல் அவனது வீர்ய சக்தி  முளைத்திருந்தது.  தமிழில் இவரைத்தான் களைக் கோட்டு (unicorn ) மாமுனி என்போம். ராமாயணத்தில்  பாலகாண்டத்தில் வருவார். 

அருகே  இருந்த அங்க தேசத்தை லோமபாதன் என்னும்  அரசன் ஆண்டு வந்தான். அவன்  தசரதனின் நண்பன்.  ஒரு சமயம் ஒரு பிராமணன் இட்ட சாபத்தால்  அங்க தேசத்தில்  இந்திரனின்  ஆணையினால்  மழை இன்றி வறட்சி நிலவியது. எப்படி மீண்டும்  மழை வரவழைப்பது. எப்படி  மக்கள் வாழ்வு நலம்பெற வைப்பது என்று  லோமபாதன்   அனைவரையும் கலந்தாலோசித்து அவர்கள் ஆலோசனைப்  படி ரிஷ்யஸ்ரிங்கரை வரவழைத்தால் மழை பொழியும் என்று அறிந்தான்.

சில  நாட்யப் பெண்களை  அழைத்து  அவர்களை  ரிஷ்யஸ்ரிங்கர்  இருந்த  ஆஸ்ரமத்துக்கு அனுப்புகிறான்.   மரங்கள், செடிகள், கொடிகளோடு,  மிதக்கும்  ஆஸ்ரமம் ஒன்று  தயார் செய்து  அதில்  சில   பெண்களை அமர்த்தி அந்த  மிதக்கும்  ஆஸ்ரமம் விபாண்டக ரிஷி ஆஸ்ரமத்திற்கு  சற்று  தூரத்தில் நதியில் தென் படுகிறது. அதில் இருந்து ஒரு பெண் வெளிவந்து  விபாண்டகர்  ஆரமத்தில் ரிஷ்யஸ்ரிங்கரை  காண்கிறாள். அதற்கு முன் பெண்களையே பார்த்திராத ரிஷ்யஸ்ரிங்கர் அவளை வினோதமாக பார்க்கிறார் . அவளை அவனுக்கு  தன்னைப்போல  ஒரு புது  ரிஷிகுமாரனாக, பிரம்மச்சாரியாக பிடிக்கிறது.

'' முனிவரே,  அதோ தெரிகிறதே அந்த ஆஸ்ரமத்தில் நிறைய கனி வர்கங்கள் உள்ளன.  உங்களை தரிசித்து போக வந்தேன்''   என்கிறாள் அந்த பெண்''

ரிஷ்யஸ்ரிங்கர் பெண் என்று ஒரு இனம் இருப்பதையே  அறியாதவர்  அவர். அவளை ஆச்சர்யமாக பார்க்கிறார். நீங்கள்  யார்? என்கிறார். அதோ தெரிகிறதே  அந்த  ஆஸ்ரமத்தில்  இருப்பவள். மெதுவாக  அவள்  ரிஷ்யஸ்ரிங்கரின்  நட்பை பெறுகிறாள்.  அவரைத்தொட்டு ஆலிங்கனம் செய்கிறாள்.  அவருக்கு இதற்குமுன் தோன்றாத  ஈர்ப்பு அவளிடம் உண்டாகிறது.அவள் சென்று விடுகிறாள். அவர்மனம் அவளை நாடுகிறது.  விபாண்டகர்  மகனிடம் மாறுதல்களை கவனித்து  என்ன நடந்தது,  யார்  இங்கு வந்தார்கள் என்று வினவ,  ''ஒரு ரிஷிகுமாரன், அவன் முகம் வித்யாசமாக இருந்தது,  கழுத்தில் காதில்  கையில், காலில் எதெல்லாமோ அணிந்திருந்தான். அவை சப்தமிட்டது.  அவனது நீண்ட  சிகையை தலையைச் சுற்றி கட்டியிருந்தது. நான் இதுவரை  பார்க்காத ஒருவன்.  என்னிடம் நட்பாக இருந்தான். அதோ தூரத்தில் தெரிகிறதே அது தான் அவன்  ஆஸ்ரமம். எனக்கு  அங்கே போகவேண்டும். அவனோடு பழகவேண்டும் என்று  ஆவல் இப்போது.ஒவ்வொருநாளும்  அவனோடு நீண்ட நேரம் கழிக்க  வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது.
'மகனே, சில ராக்ஷசர்கள் இவ்வாறு  வேறு ரூபத்தில் வருவது வழக்கம். ரிஷிகளின் தவத்தை கலைக்க  இம்மாதிரி தந்திரங்கள் செய்வார்கள். அவர்களை நம்பாதே,  அவர்கள் கொடுக்கும் பானங்களைப் பருகாதே'' என எச்சரிக்கிறார்.

விபாண்டகர் வெளியே  சென்றதும்  அந்த பெண் மீண்டும் வந்தாள் . ரிஷி மீண்டும் திரும்புவதற்குள் ரிஷ்யஸ்ரிங்கரை  தனது மிதக்கும்  ஆஸ்ரமம் கூட்டிச் செல்கிறாள்.  படகு அங்கதேசம் நோக்கி  நகர்கிறது. ரிஷ்யஸ்ரிங்கர்  அங்க தேசத்தை அடைந்ததுமே  மழை கொட்டோ கொட்டென்று  பொழிகிறது. லோமபாதனும் மக்களும்  மகிழ்கிறார்கள். லோமபாதன்  ரிஷ்யஸ்ரிங்கரை  அரண்மனைக்கு அழைத்து தனது அழகிய மகள்  சாந்தாவை  அவருக்கு மணமுடிக்கிறான். விபாண்டகர்  திரும்பி வந்து மகனை காணாமல் தேடுகிறார்.  ஞான திருஷ்டியால் எல்லாம் அறிகிறார்.

அங்கதேசம் வருகிறார். அவரை வரவழைத்து உபச்சாரம் செய்கிறார்கள், மகனையும் மருமகளையும் காண்கிறார்.

 ' மகனே  உன் அரச கடமைகளை முடித்து  உன் க்ரஹஸ்தாஸ்ரமம் முடித்து ஆஸ்ரமம் திரும்பி வா' என்று சொல்கிறார். ரிஷ்யஸ்ரிங்கர்  சந்தாவுடன்  ஆஸ்ரமம் திரும்புகிறார்.  இது தான் அந்த இடம்'' என்கிறார் லோமசர்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...