Tuesday, November 20, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம். J.K. SIVAN
மகா பாரதம்.

வந்தின் வாதத்தில் தோற்கிறான்
அஷ்டாவக்ரன் ஸ்வேதகேதுவுடன் மிதிலையில் ஜனகன் அரண்மனைக்கு சென்றானே அங்கு என்ன நடந்தது என்று யுதிஷ்டிரன் கேட்டதற்கு லோமசர் தொடர்கிறார்:

மிதிலையில் ஜனகன் அரண்மனை வாசலில் அவனை உள்ளே விடவில்லை.

''வந்தின் என்ற ஆஸ்தான வித்வானுடன் நாங்கள் வாதம் செய்யப்
போகிறோம். அவனை வரவழைக்க வேண்டும்'' என்கிறான் அஷ்டாவக்ரன்.

''பாவம் நீயோ சிறுவன். அவனிடம் தோற்று ஆற்றில் முழுகடிக்கப்பட்டு உன் மரணத்தை ஏன் வீணாக தேடிக்கொள்கிறாய். திரும்பிப் போ'' என்கிறார்கள் அரண்மனை காவலர்கள்.

''ஒருவனை அவன் வயதை, தலை நரையை , வைத்து ஞானி என்று எடை போட வேண்டாம். சிறுவயதிலும் ஞானம் பெற்றவன் அவனை விட உயர்ந்தவன்''.என்கிறான் அஷ்டாவக்ரன்.

ராஜரிஷி ஜனகர் அஷ்டாவக்ரனை சில கேள்விகள் கேட்டு சோதிக்கிறார் திருப்தி அடைகிறார். வந்தின் அஷ்டாவக்ரனுடன் வாதம் செய்ய அனுமதி கிடைக்கிறது.

வந்தின் வாதத்திற்கு வந்தான். ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கையை வைத்தே அவர்களுக்குள் வாதம் தொடர்கிறது. அந்த வாக்குவாதம் மிகச் சிறந்த வேதாந்த கோட்பாடுகளை உட்கொண்டது. (அவற்றை விவரிக்க முயன்றால் சில அத்தியாயங்கள் தேவைப் படும். அவற்றை தனியே ஒரு கட்டுரையாக கொடுக்க உத்தேசம்) . கடைசியில் வந்தின் அஷ்டாவக்ரனிடம் தோற்றுப் போகிறான்.

அவனால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிகிறான். அப்போது அஷ்டாவக்ரன் சபையோர் முன்னிலையில் ''அரசே இந்த வந்தின், ஆணவமிக்கவன். எத்தனையோ பிராமணர்களை வாதம் செய்து வென்று அவர்களை நீரில் அமிழ்த்தி கொன்றவன். எனவே அவனுக்கும் அதே தண்டனையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்கிறான்.

ஜனகன் அவனிடம், ''மகனே, வந்தின் தோற்றதை ஒப்புக்கொண்டான். அவன் உன் அடிமை. உன் சொற்படி நடக்க கட்டுப்பட்டவன்'' என்கிறான்.

வந்தின் ''அரசே உங்களது யாகங்களைப் போலவே வருணனின் யாகத்திற்கும் பிராமணர்கள் தேவைப் பட்டதால் இந்த பன்னிரண்டு வருஷமாக அனேக பிராமணர்களை வருணனிடம் அனுப்பினேன், அவர்களை திரும்பக் கொண்டுவருகிறேன்'' என்றான். சில நிமிஷங்களில் அவன் இதுவரை நீரில் மூழ்கடித்துக் கொன்ற பிராமணர்கள் அங்கே வந்து நின்றார்கள் அவர்களில் அஷ்டவக்ரனின் தந்தை கஹோதனும் இருந்தான். எனினும் அஷ்டாவக்ரனின் ஆணைப்படி வந்தின் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப் படுகிறான்.

கஹோதன் ஜனகனிடம் பெருமையாக '' எண்ணற்ற பெற்றோர்கள் பிள்ளைவரம் கேட்கிறார்கள். யாகங்கள் புரிகிறார்கள். அஞ்ஞானிகளுக்கு ஞானிகள் பிள்ளையாக பிறக்கிறார்கள். ஞானிகள் சிலரின் பிள்ளைகள் அஞ்ஞானிகளாகவே அமைகிறார்கள். என்னால் முடியாததை என் மகன் வெற்றிகரமாக செய்து முடித்தான் என்பதே எனக்கு பெருமை'' என்கிறான்.

ஸ்வேதகேது, கஹோதன், அஷ்டாவக்ரன் ஆகியோர் தங்களது ஆஸ்ரமம் திரும்புகிறார்கள். இது தான் அந்த இடம்'' என்கிறார் லோமசர்.

கதையும் மேலே தொடர்கிறது. யுதிஷ்டிரனுக்கு லோமசரோடு மேலே தீர்த்த யாத்தரையில் நடக்கிறான்.

''யுதிஷ்டிரா இது தான் சமங்கா என்கிற நதி. இதன் விசேஷம் என்ன தெரியுமா உனக்கு? இதில் தான் கஹோதன் அஷ்டாவக்ரனை ஸ்நானம் செய்யச் சொல்கிறான். நதியின் அடிவரையில் மூழ்கி எழுந்த உடன் அஷ்டாவக்ரனின் அஷ்ட கோணல்கள் நீங்கி சாதாரண உடல் ஆகிறது. அதனால் இந்த நதிக்கு ''சம அங்கா'' (அங்கங்கள் சமமாக) என்று பெயர்.

யுதிஷ்டிரனின் தீர்த்த யாத்திரை நமக்கு அநேக உப கதைகளை அள்ளி வீசுகிறது அல்லவா?

அவை இன்னும் தொடரும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...