Friday, November 23, 2018

RAGAVENDRA



ஸ்ரீ ராகவேந்திரர் J.K. SIVAN

1. 'பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய .

ஸ்ராத்த காரியங்களுக்கு நடுத்தர வர்க்கம் கஷ்டப்படாமல் சாஸ்த்ரோக்தமாக செய்து வைக்கும் ஒரு அருமையான கைங்கர்யத்தை நங்கநல்லூர் ஸ்ரீ ராகவேந்திர ஆலயம் நடத்தி வருவது நங்க நல்லூர் காரர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கூட பாக்யம். எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள்.

நங்கநல்லூர் ராகவேந்திரர் ஆலய அர்ச்சகர்கள் யாரையும் பணம் கொடு என்று கேட்பதோ தட்டை அடித்து காட்டி உத்தரவிடுவதோ இல்லை. முகத்தை பார்த்து என்ன கிடைக்கும் என்று எடை போடவில்லை. கையில் படாமல், தொடாமல் பிரசாதம், தீர்த்தம் வழங்குபவர்கள். ஆரவாரமில்லாதவர்கள். குண்டுகுண்டாக இல்லாதவர்கள். கழுத்து மறைய தங்கத்தை காணோம். ஒல்லி காவிகள். இந்த ஆலயத்தின் பூஜைகள் மனதை கவர்கிறது. மகத்தானது. எதிரே தியான மண்டபம். பக்தர்களுக்கு தான் அமைதியாக அரைமணிநேரமாவாவது அமர்ந்து தியானம் மனமில்லை, நேரமில்லை. மார்க்கெட் அழைக்கிறது.

ஸ்ரீ மந்திராலய மகானின் அருள் உலகப் பிரசித்தி. மகத்தானது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரரை அறியாத ஹிந்து கிடையாது. ஜீவசமாதியில் இருந்துகொண்டு இன்றும் பக்தர்களை போஷிப்பவர்.

மூல பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதமாக அளிக்கப்படும் மிரிதிகா என்னும் மண் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதாக லக்ஷக்கணக்கான பக்தர்கள் இன்றும் கூறுவர். எத்தனையோ குடும்பங்களில் அது பூஜையில் வைக்கப்பட்டு வருகிறது. குரு ராகவேந்திரர் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்ந்தன:
கூடை கூடையாக சொல்லலாம். ஆனால் ஒன்றிரண்டு மட்டும் சொல்கிறேன்.

ஒரு முறை சோழ ராஜாவின் ஆட்சியில் அரசியல் சிக்கல். உட்பூசல் உண்டாகி மன்னன் மனம் வாடிய நேரம் அது . ராஜ்யம் கலகத்தால், கொள்ளைகளால் ஒரு பக்கம் வாடியது. நாடு முழுதும் பஞ்சம் வேறு வாட்டி நாடே தவித்தது. அரசன் கஜானாவை காலி செய்தும் போதாமல் தன் சொந்த சொத்து, நகைகளையும் விற்று மக்களுக்கு சேவை செய்தான். அப்படியும் பஞ்சம் தீரவில்லை. நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் ராஜாவிடம் குரு ராகவேந்திரரை பற்றி சொல்லியதால் அவர் மஹிமை கேள்விப்பட்டு ராஜா ராகவேந்திரரை நாடி சென்றான். அவரை வணங்கி அவரை தஞ்சைக்கு வருகை தர அழைத்தான். மகான் உடனே தஞ்சை விரைந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி தன் தவ வலிமையால் அமைதி நிலைநாட்டி சோழநாடு மீண்டும் செழித்து மக்கள் சந்தோஷமாக வாழ வகை செய்தார். அரசன் மகிழ்வோடு ஒரு மிக விலையுயர்ந்த மணி மாலையைப் பரிசளித்தான். மகான் அதை வாங்கி தான் அப்போது பூஜை செய்து கொண்டிருந்த யாக (ஹோம) தீயிலிட்டார். அரசன் அவர் தன்னை அவமானம் செய்ததாக நினைத்து வருந்தினான். அவன் மனநிலையை ராகவேந்திரர் அரியமாட்டாரா. அல்லது அவன் அறியாமை புரியாதா?

யாகத்தீயில் அக்னி அம்சமான பரசுராமரை பிரார்த்தித்தார் . யாகத் தீயிலிருந்து மணிமாலை புத்தம் புதிதாக ஒளி வீசிக்கொண்டு மீண்டும் வெளி வந்தது. ராஜா மகானின் காலில் வீழ்ந்து ஆசி வேண்டினான்.

ராகவேந்திரருடைய சீடர்களில் ஒருவன் தனது குரு குலவாசம் முடிந்து தன் கல்வி கேள்வி பூர்த்தி ஆனவுடன் ஆச்சர்யன் ஆசியுடன் தன் வீடு திரும்பும் நேரம். அவன் விடைபெறும்போது குரு ராகவேந்திரர் துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்நானத்துக்கு தயாராயிருந்தார். வழக்கமாக சிஷ்யர்கள் குருகுல ஆஸ்ரமம் முடிந்து திரும்புகையில் சிஷ்யர்களுக்கு எதாவது பணமுடிப்பும் தரப்படும். இந்த சிஷ்யனோ பரம ஏழை. ஆச்சார்யர் ராகவேந்திரரும் எதுவும் இல்லாதவர். அந்த நேரம் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு மஹான் என்ன உதவியை சிஷ்யனுக்கு செய்யமுடியும்?

''குருவே நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்'' கைகூப்பி எதிரே நின்றான் ஏழை சிஷ்யன்.

"என்னிடம் உனக்கு தர ஒன்றுமில்லேயே அப்பா? என்றார் குரு.

“குருநாதா, எனக்கு ஒன்றுமே வேண்டாம். எனக்கு கல்வியறிவு புகட்டிய தெய்வமே, நீங்கள் அளித்த கல்விச் செல்வமே போதும். உங்கள் கையால் சிறிதளவு இந்த ஆற்று மண்ணைத் தந்தால் அதுவே எனக்கு பெரும் செல்வம்." என்றான் சீடன்.

ஒருகணம் கண்மூடி தியானித்து குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக் கொடுத்தார் பூஜ்யர் ராகவேந்திரர். அதை இருகைகளாலும் பக்தியோடு பெற்று கண்ணில் ஒற்றிக்கொண்டு பொக்கிஷமாகப் போற்றி துணியில் முடிந்து தலைமேல் வைத்துகொண்டு புறப்பட்டான் சீடன். நாளெல்லாம் நடந்து இரவில் தங்க, ஒரு ஊரில்ல ஒரு மாளிகை வாசலுக்கு வந்தான். மாளிகையின் உள்ளே சென்று ஒதுங்க வழியில்லை. வீட்டுக்கு வெளியே நல்லவேளை ஒரு சிறு திண்ணை இருந்தது. அதில் படுத்தான்.

அன்றிரவு அந்த மாளிகையின் பிரபுவின் மனைவிக்கும் பிரசவ காலம். இதுவரை நான்கு ஐந்து முறை பிரசவித்து உடனே அந்த சிசு மரணமடைந்த வருத்தம். இன்றிரவாவது பிறக்கும் இந்த குழந்தையாவது பிழைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு.

பிரசவ நேரத்தின் பொது வாசலில் ஒரு கரிய பூதம் தோன்றி உள்ளே நுழைய முயற்சித்தது. அனால் சீடன் வாசலில் தலைக்கு வைத்து படுத்திருந்த சிறிய மணல் மூட்டை ஒரு பெரிய நெருப்பு அரணாக அந்த பூதத்தை மாளிகையின் உள்ளே செல்ல விடாமல் தடுத்தது. அந்த மணல் மூட்டை தந்த வெப்பத்தில் பூதம் கத்தியது. சீடன் எழுந்து அதை நோக்கினான். குருவை நினைத்து சிறிது மணலை எடுத்து அதன் மீது வீசினான். பெரும் காட்டுத்தீயாக மாறி அந்த மணல் பூதத்தை சுட்டெரித்தது. பெரும் கூச்சலுடன் அது எரிந்து சாம்பலாகியது. சப்தத்தை கேட்டு பிரபு வெளியே ஓடிவந்தார். விவரம் அறிந்தார். ஏன் ஒவ்வொரு முறையும் தன் குழந்தைகள் மடிந்தன என்ற காரணத்தை உணர்ந்தார். அதற்குள் உள்ளேயிருந்து மருத்துவச்சி வெளியே ஓடி வந்து

“அய்யா உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்” என்று சந்தோஷத்தோடு அறிவித்தாள். இதற்கப்புறம் பிரபு தன் தங்கையை அந்த சீடனுக்கு மணம் செய்வித்து அவனும் ஒரு ப்ரபுவானான் என்று கதை நீளும். அறியவேண்டிய உண்மை மந்த்ராலய மகானின் கைப்பிடி மண்ணும் பொன்னுக்கு நிகராக ஒருவனை வாழ்வில் உயர்த்தியதுதான் .



இன்னும் சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...