Friday, November 30, 2018

MY SCHOOLING



இப்போது எழுத வருகிறது... J.K. SIVAN

​மாறுதல் ஒவ்வொரு வினாடியும் தான் நடந்து கொண்டு வருகிறது. உருவத்தில் மட்டுமா? குணத்திலும் தான்.
சமீபத்தில் சூளைமேடு சென்றபோது அதற்கும் நான் வாழ்ந்த சூளைமேட்டுக்கும் ஸ்நான பிராப்தி கூட இல்லை.
​அப்போது மண் ரோட். வளைந்து வளைந்து ரெண்டு பக்கமும் புதர், செடிகளோடு ரோடு இருந்தது. விளக்கு கம்பங்கள் கிடையாது. காம்பௌண்ட் சுவர் பார்க்கவே வழியில்லை.

நான் ​ முதலில் அக்ஷராப்யாசம் கற்றுக்கொண்டது வடபழனியில் பிள்ளைமார் தெருவை தாண்டி இருந்த -- இப்போது புலியூரா, கோடம்பாக்கமா? -- ஒரு பாண்டுரங்கன் கோவில் பக்கத்து ஆரம்ப பள்ளியில். கூரைக்கட்டு பள்ளிக்கூட​ம் . ​மண் தரை. ​ வெள்ளைக்காரன் கால கார்பொரேஷன் ஸ்கூல். சம்பளம் வாங்காத பள்ளிக்கூடம். ஐந்து வயது முடிந்தால் தான் ஒண்ணாங்கிளாஸ் சேர்த்துக் கொள்வார்கள். யாருக்குமே வயசு ரெகார்ட் கிடையாது. கேட்கமாட்டார்கள். கேட்டால் பள்ளிக்கூடம் வரமாட்டார்கள் என்று தெரியும். குத்து மதிப்பாக சொல்வதை எழுதிக் கொள்வார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரோ அல்லது வகுப்பு ஆசிரியரோ. அவ்வளவு தான். சிலர் பள்ளிக்கூடத்தில் மத்தியான வேளையில் பால் கொடுக்கிறார்கள் என்று அறிந்து நாலு வயது குழந்தைகளை கூட கொண்டு வந்து ஆறு வயது என்று சொல்லி சேர்ப்பது தெரிந்து வகுப்பு ஆசிரியர் ஒரு பிளான் போட்டார். வாசல்படியில் அல்லது சுவற்றில் ஒரு இடத்தில் பென்சிலால் ஒரு கோடு . அதன் கீழ் நிற்க வைத்து தலை கோடை தொட்டால் ஐந்து வயது முடிந்ததாக ஏற்றுக்கொள்வார். சில பையன்கள் எட்டு வயதானாலும் குள்ளம். அப்போது என்ன செய்வது? அதற்கும் ஒரு விடை எந்த ரூபத்தில் என்றால். பையனோ பெண்ணோ, இடது கையை தூக்கி தலைக்குமேல் சுற்றி வலது காது மடலை தொடவேண்டும். தொட்டால் ஐந்து வயது முடிந்துவிட்டது. நிறைய குழந்தைகள் ''கை நீளம்'' இல்லாத நல்ல குழந்தைகள் தொடமுடியாமல் கை வளர காத்திருந்தனர்.

வடபழனி கிராமத்தில். காவேரியமா ஸ்லேட்டில் ''அ'' னா ''ஆ'' வன்னா பெரிதாக எழுதிக் கொடுத்தாள் ஸ்லேட்டின் ரெண்டு பக்கமும் ஒவ்வொரு எழுத்து. அதன் மேல் அப்படியே எழுதவேண்டும். எழுத பழக வேண்டும். முடியவில்லை. இப்படி எல்லாமா கோணல் மாணலாக வளைந்து வளைந்து எழுத்து இருக்கும். அடேயப்பா எழுதுவது இத்தனை கஷ்டமா? எனக்கு பயமாகிவிட்டது. பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு ஓடிவிடலாமா? இதை எப்படி நம்மால் எழுதமுடியும்​?​. ஒரே வளைவாகவே இருக்கிறதே. இதில் எது ஆரம்பம். எது முடிவு.? ஸ்லேட்டுக் குச்சி (பலப்பம் என்று அதற்கு நாமகரணம்) பிடித்துக்கொண்டிருந்த என் கையை பற்றிக்கொண்டு காவேரியம்மாள் அந்த '' அ" "ஆ'' எழுத்துகளின் மேல் பிரயாணம் தொடர்ந்தாள் . என் பல்பம் அவற்றின் மேல் ஊர்ந்தது. ஆயிரம் நடுக்கங்கள். காலம் சென்றது. காவேரியம்மாளும் காலமாகிவிட்டாளோ, பள்ளிக்கூடத்தில் இருந்து நிறுத்தி விட்டார்களோ தெரியாது.​ அவள் கற்றுக்கொடுத்த தமிழில் தான் இப்போது எழுதுகிறேன்.
​அப்புறம் பள்ளிக்கூடத்தில் ஒரே வாத்யார் ​வரதராஜ முதலியார்​ தான். சிறு காளை பூட்டிய ஒற்றை மாட்டு வண்டியில் தான் வருவார். யாரோ சைதாப்பேட்டை என்ற ஒரு ஊரிலிருந்து தினமும் வருகிறார் என்பார்கள். சைதாப்பேட்டை எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. யானைக்கால் என்பார்களே (ELEPHANTIASIS ) இடதுகால் பெரிசாக இருக்கும் . வேஷ்டியால் இழுத்து மூடிக்கொண்டு வருவார். நடக்க முடியாமல் கஷ்டப்படுவார். கோபம் ரொம்ப ஜாஸ்தி. காளை மாட்டை அடிக்கும் கொம்போடு தான் எங்களையும் நெருங்குவார். அவ்வப்போது திடீரென்று நாற்காலியில் மரத்தடியில் தூங்கிவிடுவார். எழுப்பினால் கே திட்டுவார்.. வீட்டில் என்ன கஷ்டமோ?

அவ்வப்போது அவரது வெள்ளை காளை மாட்டுக்கு தண்ணீர் பக்கெட் கொண்டு வைப்பது, அதற்கு புல் போடுவது என்கிற வேளைகளில் நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதை பராமரித்து தடவிக்கொடுப்போம். அப்பாதுரை கெட்ட வார்ததையில் முதலியாரை திட்டிக்கொண்டு காளைமாட்டு சாணியை அப்புறப்படுத்துவார்.

​நான் ​இப்போது ரெண்டாவதில் இருந்து மூன்றாவது. நானாகவே எழுதுவேன். எழுத்துக் கூட்டி படிப்பேன். ​ தப்பாக படித்தால் ​தலையில் குட்டுவார் முதலியார். கஷ்டப்பட்டு​ ஒருவழியாக ''கல்லார்க்கும் கற்றவர்க்கும்'' வள்ளலார் செய்யுள் மனப்பாடம் ஆகியது.

பள்ளிக்கூடத்தில் எப்போதும் எங்கள் வகுப்பு கப்பும் கிளையுமாக நிறைய பறவைகள் வாழ்ந்த தூங்கு மூஞ்சி மரத்தடியில். பெரிய மரம். நிறைய கிளைகள். இலைகள். வெள்ளைக்காரன் காலத்து மரம். நிழல் கொடுத்தது. நிறைய பறவைகள் சத்தமும் போடும். எச்சமும் இடும். புத்தகத்தில், எழுதும்போது நோட்டில், தலையில், பை மேல். சட்டையில், நிறைய பறவைகள் எச்சம் பெற்றிருக்கிறேன். ​ வடபழனி ஆண்டவர் கோவிலோ, சினிமா ஸ்டுடியோக்களோ தலை எடுத்து உயராத காலம். AVM விஜயா வாஹினி என்கிற பேர்கள் பேச்சில் அடிபடும். கேட்டிருக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் மணியடித்து கதவுகள் சாற்றி, பெருக்கி, துடைக்கும் அப்பாதுரை பெரிய குரலில் சத்தம் போட்டால் பறவைகள் பறந்து போகும். ஒருமணி நேரத்துக்கு ஒருதடவை வந்து கத்துவார். இல்லாவிட்டால் அவற்றின் தொந்தரவு சத்தம் அதிகம்.

​நான்காவது முதல் சுப்ரமணிய அய்யர்​ தலைமை ஆசிரியராக இருந்த கார்பொரேஷன் ​ பள்ளிக்கூடத்தில். சூளைமேட்டில். கோடம்பாக்கத்தில்.​ ​நான்காவது ஐந்தாவது. அந்த அனுபவம் வினோதமானது. சமீபத்தில் ஒருநாள் அந்த பள்ளிக்கூடத்தை பார்த்தேன். பெரிய கட்டிடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள் போல் இருக்கிறது. மாடிகட்டிடமாக உயர்ந்து விட்டது. ஒரு நிமிஷம் நின்று சுப்ரமணிய அய்யரை நினைத்துவிட்டு கண்களில் பெருகிய ஜலத்தை துடைத்துக் கொண்டேன். அவரைப் பற்றி சொல்கிறேன்.








No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...