Tuesday, November 27, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 
 மஹா பாரதம் 

                    சுகமான  தீர்த்த யாத்திரை 

ஜனமேஜயா  தொடர்ந்து  சொல்கிறேன் கேள்.  
யுதிஷ்டிரனும் சகோதரர்களும் திரௌபதியும் தீர்த்த யாத்திரையில் தொடர்ந்து நடக்கிறார்கள். லோமசர் வழி முழுதும் சிறந்த கதைகளை சொல்லிக்கொண்டே வருவதால்  நடை களைப்பு இல்லை.  ஆர்வமும் அதிகரிக்கிறது.  

''யுதிஷ்டிரா,   ஒரு நாள்  ரிஷி ரைவியர்  ஆஸ்ரமம் சென்ற யவக்ரி , அவர்  மகன்  பரவசுவின் மனைவியை பார்த்துவிட்டு  அவளை  அடைய முயற்சிக்க அவள் கோபம் கொண்டு  ரைவியரிடம் போய்  நடந்ததை சொல்ல, அவர் தவ சக்தியால்  ஒரு  ராக்ஷசனை உருவாக்கி அவன்  யவக்ரியை கொல்கிறான். 

பாரத்வாஜர் ஆஸ்ரமத்தில்  அவர் மகன் யவக்ரியின் உடல் தொப்பென்று விழுகிறது.   அறிவுரை சொல்லிய கேட்காத மகன் யவக்ரியின்  உடலை அணைத்துக்கொண்டு  கண்ணீர் விடுகிறார்.  நடந்ததை அறிகிறார்.  ''ரைவியரை அவர்  மகனே  கொல்லட்டும்'' என்று சாபமிடுகிறார். யவக்ரியைக்கு  அந்திம க்ரியைகளைச் செய்து முடித்து புத்திர சோகத்தோடு  அந்த தீயில் விழுந்து தானும் மாள்கிறார்.

வ்ரிஹத்யும்னன்  என்கிற அரசன் ஒரு யாகம் செய்ய, அதற்கு  பரவசுவும் அர்வாவசுவும் செல்கிறார்கள்.  எதற்கோ ஆஸ்ரமம் திரும்பிய   பரவசு,    இரவில் காட்டில்  ரைவியர்  ஒரு  கருப்பு மான்  தோலை உடுத்து எதிரே  வந்து கொண்டிருந்தார்.   ஏதோ காட்டுமான் எதிரே வேகமாக வருகிறது என்று  நினைத்து  தந்தை ரைவியரை  பரவசு  கொன்றுவிடுகிறான்.  தந்தையைக் கொன்ற   பிரம்மஹத்தியால்  அவன்  யாகம் செய்ய அருகதை அற்றவனாகிறான். எனினும் தன்  தந்தையைக் கொன்றது  தனது சகோதரன் அர்வாவசு தான்   என்று அரசனிடம் பொய்  வேறு  சொல்லி விடுகிறான். அவன் வார்த்தையை நம்பி   அரசன் அர்வாவசுவை நாட்டை விட்டு  விரட்ட ஆணை இடுகிறான்.   அர்வாவசு தான்  நிரபராதி என்று சொல்ல , அரசன் அக்னியை விவரம் கேட்க, அர்வாவசு  இதற்குள்  தவம் செய்து சூரியனை  வேண்ட,  ரைவியர், அவரால்  இறந்த யவக்ரி,  அவனால்  மாண்ட பாரத்வாஜர் அனைவருமே உயிர் பிழைக்கிறார்கள். ( பழைய புராணக் கதைகளில்   கற்பனை  வளம் நிறைய கொழிக்கிறது)

''யுதிஷ்டிரா, நில்  இதோ பார்  இது  தான் பாரத்வாஜர் ஆஸ்ரமம் இருந்த இடம்''   என்று  சிதைந்திருந்த ஒரு ஆஸ்ரம பிரதேசத்தை காட்டுகிறார் லோமசர்.  வாயைப்பிளந்து கொண்டு  ஆச்சர்யமாக பார்க்கிறான்  யுதிஷ்டிரன்.

''அடுத்து  கந்தமாதன பர்வம் செல்வோம்.  அங்கு தான்  நர நாராயண ரிஷி தவமிருந்தார். அவரே  நரனாக அர்ஜுனனாக  பிறந்தவர். நாராயணனும் அவரே.  ஒரு வேளை  அங்கே  தவம் செய்ய சென்ற  அர்ஜுனனை  சந்திக்கவும்  வாய்ப்புள்ளது. ''  என்றார்  லோமசர். கந்தமாதனத்தை அணுகுமுன் எத்தனையோ  சிகரங்கள் கடக்கவேண்டுமே.  த்ரௌபதியால்  நடக்கமுடியாமல் போக,  பீமன்  தனது மகன் கடோத்கஜனை நினைக்கிறான். அவன்  உடனே  அங்கே  தோன்றி அவர்களை சுமந்து அழைத்துச் செல்ல  ரிஷி  நர நாராயணன்  ஆஸ்ரமத்தை கண்டு வணங்குகிறார்கள்.   தூரத்தில் மைநாக   மலை தெரிகிறது.  அருகே  பாகீரதி நதி வெள்ளிக்கம்பியாக  அதல பாதாளத்தில்  வளைந்து பாம்புபோல்  நெளிந்து ஓடுவது  தெரிகிறது.  கைலாசம் அருகிலே போகும்போது எங்கிருந்தோ ஒரு  சிறு மலர்  காற்றில்  வந்து திரௌபதியின் அருகே  விழுகிறது.  அதன் மணம்  ஊரைக்கூட் டுகிறது.

 ''இது போன்ற  மலரை  நான் கண்டதில்லையே என்ன நறுமணம்.  கை நிறைய இது வேண்டும். அதை  யுதிஷ்டிரனுக்கும், உனக்கும்,  அர்ஜுனனுக்கும் அளித்து  அர்ச்சிக்கவேண்டும். நமது காம்யக வனத்துக்கு  நிறைய  கொண்டுபோகவேண்டும்   என்கிறாள் திரௌபதி.  இது எங்கேயிருந்து வந்தது. இதை   கொண்டுவருகிறாயா''  என்று  பீமனைக் கேட்கிறாள்.

காற்று அந்த  மலரைக் கொண்டுவந்த  திசையில்  பீமன் புறப்பட்டான்.
தொடரும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...