Friday, November 2, 2018

HELMET



காவலும் கவசமும் J.K SIVAN

​''​தாத்தா, இனிமேல் நீ தெருவில் ஸ்கூட்டர் ஒட்டிக்கொண்டு செல்லக்கூடாது.​''​
​'​ஏன்?
​'​ரொம்ப வண்டி நடமாட்டம் இருக்கு, டேஞ்சர். அதைத்தவிர...
''ம் ம் ம்''
​'​நாளையிலிருந்து தலைக்கு கவசம் இல்லாமல் போனால் பிடித்துக்கொள்வார்கள்​'​.
​'​என்ன கவசம்?
​'​தலைக்கு HELMET​'​.
​'​ஏன்?​​
​''​அப்போதான் ​உனக்கு அடிபடாது. அடிபட்டாலும் உயிர் தப்பும்.​​
​''​அதை அணிந்தால் தான் எனக்கு ஆபத்து​'​.
​'​எப்படி தாத்தா?​'​ .
​'​நான் எண்பது வயதில் ஸ்கூட்டர் ஓட்டுவதே முன்பு போல் அதிக தூரம், அதிக நேரம் நடக்க முடியாததால் தான். ​செக்குமாடு மாதிரி நங்கநல்லூரிலேயே சில இடங்களில் வளைய வருபவன். ​ என் ஸ்கூட்டர் என்னைப்போலவே வயதானது அல்ல. ஆகவே அதை எனக்கு ஏற்றபடி ஓட பழக்கி வைத்திருக்கிறேன். பெரியோர் சொற்படி கேட்கும் நல்ல பிள்ளை ​மாதிரி அது.​ ஆதலால் நான் நடப்பதை விட கொஞ்சம் வேகமாக போகும்.
எங்கோ தலை தெறிக்க வேகமாக எதற்கோ போகிறவர்களை எல்லாம் வழியில் ​பார்த்தால் நான் ​ ' நீங்கள் 'போங்கள்'' என்று வழிவிட்டு ஓரமாக போகிறவன். தெருவை குறுக்கே கடக்கும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்த வண்டியும் மனித ஜீவராசி எதுவும் இல்லையென்றால் தான் ​தெருவின் குறுக்கே ​ கடப்பது. எனக்கு இதற்கு எதற்கு கவசம்.
இன்னொரு விஷயம். தலையை சுத​​ந்திரமாக முன்னும் பின்னும் பக்கத்திலும் அசைத்து பார்த்து இதுவரை வண்டி ஒட்டியவன். இப்போது கவசம் அணிந்தால் தலையை திருப்பி பார்க்க முடியாது என்னால். குதிரைக்கு கண்ணுக்கு மறைப்பு போடுவதை போல என் பார்வை சுலபமாக வழக்கமாக இருபக்கமும் பார்க்க முடியாமல் நேராக பார்த்துக்கொண்டு என்னால் ஓட்ட முடியாது. பக்கத்தில் உரசிக்கொண்டு யார் வேகமாக போவார்களோ என்ற எண்ணம்​, பயமே, போதும் என்னை சிதைத்து ​விட. எனக்கு ஆபத்தே இந்த கவசத்தால் தான் வரு​மோ என்று மனதில் படுகிறது. நிதானமாக அங்கே இங்கே திரும்பி பார்த்துவிட்டு ஜாக்ரதையாக ஓட்டுபவனுக்கு எதற்கு இதெல்லாம். வேதாந்த பரமாக சொல்லப்போ​னால் எப்போது எது நடக்க பிராப்தமோ அது நடந்தே தீரும்​'​.

​'தாத்தா, இதையும் கேளு. இனிமே எப்போ எங்கே கேட்டாலும் நீங்க ஒரிஜினல் லைசன்ஸ் காட்டணும்​'​.
​'​எங்கேயாவது மறதியா இப்படி யாரு கிட்டயாவது காட்டி தொலைஞ்சு போச்சுன்னா?​​
​''​அப்புறம் நீ வண்டி ஓட்டக்கூடாது..​'​.
​'​ஏண்டா எனக்கு புரியும்படியாக சொல்லு. போலீஸ் சொல்றதால தலைக்கு கவசமா,​ என்னை காப்பாற்றிக்கொள்ளவா? ​ லைசன்சுக்காக வண்டியா, அல்லது ,நடக்கமுடியாத எனது சௌகர்ய த்துக்காக வண்டியா? நிச்சயம் என்னுடைய வசதிக்காகவே தான். அதிகாரத்தை உபயோகித்து என்னை முடியாததை செய்ய சொல்லி அதன் விளைவாக எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமோ போலீசோ எனக்குப்பிறகு இது போல் கட்டுரைகள் எழுதுமா?​

​​ ​''​போ தாத்தா உன்னை திருத்த முடியாது, உன்னிடம் வாய் கொடுக்க எனக்கு நேரமில்லை​​ ​என்று பேரன் நகர்ந்துவிட்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...