Thursday, November 22, 2018

RAMANUJAR



உன்னை காணாத கண் என்ன கண்ணே....
J.K. SIVAN

ஸ்ரீ வைஷ்ணவ திலகமான எம்பெருமானார், உடையவர், யதிராஜர் என்றெல்லாம் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜரை நான் அறிமுக செய்து வைக்க அவசியமே இல்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது அதை பரிமாறிக்கொள்ள இதை எழுதுகிறேன்.

120 வயது வரை ஒரு நாளும் லீவு எடுக்காத, சம்பளம் வாங்காத, வோட்டு கேட்காமலேயே மக்களுக்காகவே உழைத்த மஹான் ஸ்ரீ ராமானுஜர். அவரது வைணவ சேவையில் எண்ணற்றோர் பங்கேற்றனர். அவருடன் நிழலாக உழைத்தார்கள். சந்யாசிகள் மட்டும் அல்ல, குடும்பஸ்தர்களும் அந்த கோஷ்டியில் உண்டு. அவர்களில் ஒருவனைப் பற்றி சொல்கிறேன்.

பொன்னியின் செல்வன் கதையில் வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற வாணர் குலவீரன் வருவான். வாணர்கள் சோழமன்னனின் மெய் காப்பாளர்கள். ஒரு வாணன் ராமானுஜர் காலத்தில் உறங்கா வில்லி என்ற பெயரால் அழைக்கப்பட்டவன். உறையூரில் தநுர்தாஸன் என்ற இயற்பெயர் உடையவன். அரசனின் மல்லர் தலைவன். பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவளான பொன்னாச்சி என்னும் பேரழகி அவன் மனைவி. மனைவி .

ஒரு சமயம் அரங்கனுக்குச் சித்திரை உத்ஸவம் நடப்பதைக் கேள்விப்பட்ட தனுர் தாசன் ப்ரம்மோத்ஸவத்தைக் காண திருக்கரம்பனூரிலிருந்து பொன்னாச்சியுடன் கால்நடையாக பரிவாரங்கள் புடை சூழ கொள்ளிடத்தைக் கடந்து வரும்போது சித்திரை வெயில். பட்டை தீர்த்தது. கால்கள் அப்பளமாக கொப்புளிக்கும் சூடு. பொன்னாச்சியின் பாதங்களுக்கு பரிவாரம் நடை பாவாடை விரிக்க வெயில் அவள் உடலில் படாமல் தனுர் தாசனே ஒரு தாழங்குடை யை அவளுக்கு பிடித்துக் கொண்டு வந்தான்.

இந்த விசித்திர செயல் சிஷ்ய ஸமூஹத்தோடு திருக்கரம்பன் துறையிலே நீராடி எழுந்தருளிய ஸ்ரீ ராமானுஜர் கண்ணில் பட அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. தனுர்தாசனை '' இங்கே வா அப்பனே'' என்கிறார்.

''சுவாமி என்னை அழைத்தீர்களா?''

''ஆம் அப்பனே, நீ யார்? எங்கிருக்கிறாய்? எதற்காக ஸ்ரீரங்கத்திற்கு வந்திருக்கிறாய்? உன்னை இதுவரை நான் பார்த்ததில்லையே'' '

“அடியேன் உறையூரில் வசிப்பவன். தனுர் தாசன். சோழ ராஜாவின் சேனா வீரர்களில் மல் யுத்தத்தில் சிறந்தவனாக கௌரவிக்கப்பட்டு மல்லர்கள் தலைவனாயிருக்கிறேன்! ஸ்ரீங்கநாதனின் சித்திரைத் திருவிழாவை நேரில் கண்டு களிக்க நானும் மனைவியும் வந்துள்ளோம்” என்று பதிலளித்து வணங்கினான் தனுர் தாசன்.

''அப்பா, மஹா பலசாலியே, நீ இப்படி பட்டப்பகலில் பலர் அறிய லஜ்ஜையை விட்டு மனைவிக்கு குடை பிடித்துக் கொண்டு வருகிறாயே ,அப்படி அவளிடம் என்ன விசேஷம் கண்டாய் ? .

தனுர்தாசனுக்கு அவர் கேள்வி ஆச்சரியமாக இருந்தது. தயங்கிக்கொண்டே “சுவாமி! என் மனைவி பொன்னாச்சி அற்புதமான கண் அழகு படைத்தவள். அக்கண்ணழகில் மயங்கி தோற்று நிற்கிறேன். அந்த மலர்க்கண்கள் இந்த சுடும் எதிர் வெய்யிலில் கருகிப் போகாமல் இருக்கவே குடை பிடித்துக்கொண்டு வந்தேன்'' மென்று விழுங்கினான் தனுர்தாசன்.
''ஹா ஹா'' என்று உடல் குலுங்க சிரித்தார் ராமானுஜர். ''இவன் மிகச் சிறந்த வைணவன். தனது சக்தியை உணராத பேதை'' என்று அவர் மனதில் ஆழமாக பட்டு அவனை நல்வழிப் படுத்த சித்தம் கொண்டார்.
“அடடா! நீ பரம ரஸிகனாய் இருக்கிறாயே ! உனக்கு உன் பொன்னாச்சியின் கண்களைவிட மிகவும் அற்புதமான பேரழகு கொண்ட கண்களைப் பார்க்க பிடிக்குமா? அதைக் காண விருப்பமா? .என்றார் ராமானுஜர்.

'' சுவாமி, இதென்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். அழகிய கண்களை பார்க்க யாராவது வேண்டாமென்றா சொல்வார்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை என் பொன்னாச்சியின் கண்களை போல் வேறொருவர் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கமுடியாது என்று எனக்கு நிச்சயமாக தெரியுமே.' என்று சிரித்துக்கொண்டே தனுர்தாசன் பதில் சொன்னான்.

'ஓ அப்படியா. என்னோடு வருகிறாயா. வந்தால் காட்டுகிறேன். பார்த்துவிட்டு பிறகு சொல் யார் கண்கள் அழகானவை என்று, சரியா?'' என்று அவனை ஈர்த்தார் உடையவர்.

"எனக்கு அழகான கண்கள் மிகவும் விருப்பமானவை. கண்டால் விடவே மாட்டேன்'' என்றான் அந்த ரசிகன்.

''அப்படியானால் என் பின்னே வா. அவ்வழகிய கண்களை நாம் இருவருமே சேர்ந்து பார்ப்போம்'' என்று அவன் கையைப் பிடித்து ஸ்ரீ ரங்கநாதன் ஆலயத்தின் உள்ளே அழைத்துச் சென்றார் ராமானுஜர் இருவரும் ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்து, பாம்பணையில் பள்ளிகொண் டிருக்கும் ஆதிபுருஷனான ஸ்ரீரங்க ராஜனின் எதிரில் நின்றபோது

"அழகிய மணவாளா , திருப்பாணாழ்வார் போல்வாருக்குக் காட்டிய அக் கண்ணழகை, இதோ வந்திருக்கும் இந்த வில்லிக்கும் நீ காட்டி அருள வேண்டும் " என்று ராமானுஜர் மனம் பிரார்த்தித்தது.

''அப்பா தனுர் தாஸா இதோ. இவர் கண்களை முக அழகை ப்பார். இது போல் எங்காவது பார்த்திருந்தால் என்னிடம் சொல்லு ?
''தனுர் தாசர் எதிரே படுத்திருந்த அரங்கனையா பார்த்தார்?. ......
CONTD...



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...