Friday, November 2, 2018

GOVARDHAN GIRI

      மழையும் மலையும்    J.K. SIVAN 

உலகில் ஒவ்வொருவரும் ஏதாவதொரு தொழிலில் ஈடுபட்டு பிழைக்கிறார்கள். சிலர் கூட்டமாக ஒரே தொழிலில் ஈடுபட்டு வாழ்வதும் உண்டு .பழங்காலத்தில் சில ஊரே இப்படி ஒரே வித வாழ்க்கை முறையை அனுசரித்து வாழ்ந்தது. வெள்ளி தங்க நகை செய்பவர்கள், துணி வெளுப்பவர்கள், மண்பானை குடங்கள் பண்டங்கள் செய்பவர், வைதிக தொழிலை சேர்ந்தவர்கள், ஆடு மாடு கன்று வளர்த்து அவற்றால் கிடைக்கும் பொருள்களில் ஜீவனம் என்று இப்படி எத்தனையோ.

பசுக்கள் பால் வழங்கி அவற்றின் மூலம் கிடைக்கும் வெண்ணை தயிர் ஆகியவற்றை உண்டு மீதியை விற்று காசாக்கியோ, பண்டம் மாற்றியோ,  வாழ்ந்த ஆயர்குடி மக்கள். கோகுலம், பிருந்தாவனம் போன்ற இடங்களில் வாழ்ந்தவர்கள். அந்த பசுக்களை தெய்வமாக கொண்டாடி அவற்றுக்கு பூஜை செய்யும் திருநாளாக வருஷத்தில் ஒருநாள் கொண்டாடுவது தான் ''கோ வர்தன பூஜா'' (கோ என்றால் பசு, வர்தனம் என்றால் சிறந்த பராமரிப்பு). இதை ''அன்னகுட் பண்டிகை'' என்று நிறைய தானியங்களை மலை போல் குவித்து கோவர்தன மலையாக்கியும், பசும் சாணத்தை மலைபோல் குவித்தும் பல இடங்களில் கொண்டாடினாலும் இது தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியேயாகும். இதை கிருஷ்ணன் வழக்கத்தில் கொண்டுவந்தான். கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி நாள் இந்த பூஜைக்கு ஏற்ற நாளாயிற்று. இதன் பின்னாலேயே இன்றைய கதை ஒளிந்து கொண்டிருக்கிறது. மலையைக் கிள்ளி எலியை பிடிக்கலாமா?

ஆயர்பாடி பிருந்தாவனத்திலிருந்த கோபர் கோபியர் காலம் காலமாக மழை தரும் கடவுளாக, சூல் கொண்ட கருமேகங்களின் அதிபதியாக இந்திரனை வழிபட்டு நன்றி செலுத்துவதற்காக வருடமொருமுறை இந்திரனுக்கு விழா எடுத்து வந்தனர்.

அன்று கண்ணன், அப்பா நந்தகோபனுடன் வாசலில் அமர்ந்திருந்தான். மேலே கருமேக கூட்டங்கள் மூட்டம் போட்டு எங்கும்   இருள். அவற்றினிடையே கஷ்டப்பட்டு சூரியன் வெளியே கொஞ்சம் கொஞ்சம் அப்பப்போ தலையை காட்டி கொண்டிருந்தான். எங்கும் கோலாகலம். தோரணம், மாலைகளோடு இனிப்பு வகைகளோடு  மக்கள் புத்தாடை அணிந்து உலவுவதை பார்த்த கிருஷ்ணன் கேட்டான்:


 "அப்பா இன்று என்ன விசேஷம்?" 
'' இன்று "இந்திர விழா"
" அப்படின்னா என்ன?"
"மழை கொடுக்கிற இந்திரனாலே தான் நாமெல்லாம் சந்தோஷமா இருக்கோம் இல்லியா? அதற்காக இந்திரனுக்கு இன்று பூஜை"
"அதோ இருக்கே, அந்த கோவர்தன மலை தானே நமக்கு காற்று, தண்ணி எல்லாம் தருது. நீ சொல்ற கருப்பு மேகங்களை எல்லாம் தடுத்து இங்கே மழை பெய்ய வைக்கிறது.   அந்த மலையிலிருந்து தானே நமக்கு மூலிகை எல்லாம் கிடைச்சு நமக்கு நோய் வராம இருக்கு.  அந்த மலையிலே தானே நம்முடைய ஆடு மாடு எல்லாம் நிறைய மேச்சலுக்கு போறது. நிறைய நிறைய பழம் காய் எல்லாம் இருக்கிற செடி,கொடி, மரம் எல்லாம் அந்த மலை மேலே தானே நமக்காக இருக்கு. நமக்கு அந்த மலை தானே ரொம்ப முக்கியம். அதுக்கு தானே நாமெல்லாம் நன்றி சொல்லணும், பூஜை பண்ணனும் இல்லியா?.''

''அதெல்லாம் சரி தான் கிருஷ்ணா,  இந்திரன் தான் கடவுள் அவனுக்கு தான் நாம் பூஜை செய்யணும்'' என்றான் நந்தகோபன்

''எப்படி அப்பா அது சரியாகும். கண்ணுக்கு நேரே இருக்கிற இந்த மலை தான் கடவுள். இதைவிட்டு எங்கேயோ கண்ணுக்கு தெரியாத மேலே இருக்கிற இந்திரனுக்கு  எதுக்கு இந்த பூஜை?. நீங்களே யோசியுங்கோ " என்றான் கிருஷ்ணன்.

நந்தகோபன்  சிறுவன் கிருஷ்ணனின் சிந்தனை உரிந்து.  மற்றவர்களுக்கு  கிராமத்தில் எடுத்து சொன்னான்.  சிறுவனாக இருந்தாலும் கிருஷ்ணன் சொல்வதில் உள்ள உண்மை, கருத்து கோபாலர்களுக்கு புரிந்து ஆச்சர்யபட்டார்கள். இந்த வருஷம் இந்திரனுக்கு பதிலாக  கோவர்தன மலைக்கே  பூஜை செய்வது என்று முடிவெடுத்தனர். கண்ணன் பேச்சு தான் சிறந்ததாக எப்போதும் எடுபடுமே .

விஷயம் இந்திரன் காதுக்கு எட்டி அவனுக்கு கடும் கோபம் வந்தது.   யாரோ ஒரு சிறுவன் பேச்சைக்  கேட்டு நன்றி மறந்த இந்த கோகுல பிருந்தாவன மக்களுக்கு பாடம் புகட்ட நிறைய கருமேகங்களை அனுப்பினான் .

''வருணா, கோகுல  கிராமம் முழுதும் விடாத மழை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் அழியச் செய்'' என உத்தரவிட்டான். மேகங்கள் சூழ்ந்தன. சூரியனின்றி பகல் இரவாகியது. மழை கொட்டியது.
நந்தகோபன்  கலங்கினான். எல்லோரும்  உன்னால் தானே இது நடக்கிறது என்று அவனை குற்றம் சாட்டினார்கள்.
"பார்த்தாயா கிருஷ்ணா, நான் சொன்னதை நீ கேட்காததால் வந்த விளைவை ?
''அப்பா,  இந்திரனுக்கு வந்த கோபத்தால் இந்த மழை வெள்ளம் என்கிறீர்களா?.அவன் நமக்கு பாடம் கற்பிக்கிறானா? கொஞ்சம் பொறுங்கள்" என்ற கண்ணன் வெளியே சென்றான்.

இதற்குள் மழை வெள்ளம் இடுப்பளவு ஊரில் வந்துவிட்டது. உரக்க கூவி அனைவரையும் கோவர்தன மலைக்கருகே வரச்  சொன்னான் கிருஷ்ணன். அவன் குரல் கேட்டு அனைவரும், ஆடு மாடு அனைத்தும் பின் தொடர நேரே கோவர்தன மலை யருகே சென்றார்கள்  கண் இமைக்கும் நேரத்தில் இடது கை சிறுவிரலால் கோவர்தன மலையை அலாக்காக  மேலே  தூக்கினான்.  ஊரையே  மறைக்கும் குடையாக அது மேலே நின்று அனைவரையும் மழையினின்று காத்தது.  ஏழு  எட்டு நாள்  இந்திரன் கடும் மழைபொழியச்செய்தான். ஒன்றும் பயனில்லை. இந்திரன் அசந்து போனான். சிறுவன் சாதாரணன் அல்லன் என்று புரிந்தது.  மழை நின்றது. வெள்ளம் வடிந்தது. இந்திரன் நீரோடு நீராக கலந்து கண்ணன் கால்களை அலம்புவதுபோல் வணங்கி கிருஷ்ணன் ஆசியை பெற்று அகம்பாவம் நீங்க பெற்றான். கிருஷ்ணன் இருந்த 5000 ஆண்டுகளாக இன்றும் கோவர்தன பூஜை நாடெங்கும் நடப்பது இந்த கதை நிஜமாக நடந்ததற்கு ஒரு சான்றாகுமல்லவா?
நன்றி மிக்க  ஆயர்பாடி மக்கள்  கிருஷ்ணனுக்கு  நிறைய  பக்ஷணங்கள், தின்பண்டங்கள், உணவு வகைகள் கொண்டு வந்து பரிசளித்தனர்.  
''நான் ஒன்றுமே உதவவில்லையே,  எல்லோரையும் அந்த கோவர்தன மலை அல்லவோ  காப்பாற்றியது. அதற்கு தான் நன்றி சொல்லவேண்டும் '' என்றான் கிருஷ்ணன்.  அனைவரும்  கோவர்தனகிரிக்கு  படைத்தார்கள்.  
கோவர்தனகிரியை சாப்பிடச் சொல் என்று கிருஷ்ணனை கேட்டுக்கொண்டபோது  ''நீங்கள் எல்லோரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் அது சாப்பிட்டுவிடும்'' என்றான் கிருஷ்ணன்.   அவர்கள் கண்களைமூடிக்கொண்டபோது கிருஷ்ணனே  கோவர்தனகிரியாக மாறினான். அவர்கள் அளித்த காணிக்கைகளை ஏற்றான். 
இது தான் அன்னக்கூட்  பண்டிகை. எங்களது 25.11.18 அன்று நடக்கப்போகும்  அன்னக்கூடை விழா இதன் நினைவாக தான். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...