Tuesday, November 6, 2018

AVVAIYAR



தமிழ் புலவர்கள்      J.K. SIVAN 
ஒளவையார் 2

                                   
      நல்வழி - 2 

ஒளவை பாட்டியை பிடிக்காதவர்கள் உண்டோ? அற்புத பெண் கவி.  ராஜாக்கள் எல்லாமே தலை வணங்கிய  கூழை மட்டும் விரும்பி பெரும்  ஞானி, துளியும் கர்வமில்லாத,  பற்றற்ற துறவிக் கிழவி. பூர்ண வேதாந்தி.  இன்றும் சில நல்வழிகளை அவள் கூறுவதை அனுபவிப்போம்.                                                      

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.3

இந்த உலகில் டாக்டர்கள்  ஆஸ்பத்திரிகள்  மருந்து விற்பவர்கள்  சந்தோஷமாக  வளர்ந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் நமது உடம்பு ஒன்றே.   இந்த உடம்பு தான் நமக்கு இன்பத்துக்கு ஆதாரம் என்று முட்டாள் தனமாக  மயங்கி இருக்கும் காசை எல்லாம் அழிக்கிறோம். உண்மையில்  துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது  நம் உடம்பு தான்.  இதற்கு எப்படியோ தப்பாக மெய்  என்று பெயர் வைத்துவிட்டார்கள்  யாரோ உடம்பை விரும்பியவர்கள்.   இது பொய்யான உடம்பு.   துளியும் உபயோகப்படாத  பொருள் உலகிலேயே இது தான்.   இதை தூக்குவதற்கு, எரிப்பதோர்க்கோ புதைப்பதற்கோ கூட நிறைய பணம் கொடுக்கவேண்டும்.  அப்படியிருக்க இதை யார் வாங்குவார்கள்? என்ன ப்ரயோஜனம்?   இதை மெய் , சாஸ்வதம் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா? கூடாது.  ஊழ்வினை தான்  இதை தனது  வசத்தில்  வைத்திருக்கிறது. 
நல்லூழ் இருந்தால்
 இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதை அறிந்து புரிந்து  கொண்டு வாழ்வதுதான் வீடுபேறு. இந்த வீடுபேற்றினைப் பெற்றவர்கள் தான் உண்மையிலேயே  வாழ்பவர்கள் .  அவர்களை தான் உலகம் மதித்துக் கொண்டாடும்.

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.4

நாம்  தான்  எல்லாவற்றிற்கும் காரணம். நமது புத்திசாலித்தனம், கெட்டிக்காரத்தனத்தால் தான்  நாம் வெற்றியாக ஒவ்வொரு காரியத்தையும் முடிக்கிறோம் என்று பகல் கனவு காண்கிறோம்.   எந்த ஒரு  செயலும்   யாராலும் தானாகவே செய்ய  இயலாது.   கர்ம பலத்தினால்  அது நிறைவேறும்.  அவனன்றி ஒரு அணுவும் அசையாது.  செயலெல்லாம் அவனவன்  செய்த புண்ணியத்தால் நிறைவேறும். அருமையான ஒரு உதாரணம் கொடுக்கிறாள் ஒளவை.   

ஒருவன்  கண் தெரியாதவன் . மாமரத்தின் அடியில் நிற்கிறான்.  மரத்தில் நிறைய மாங்காய் காய்த்து தொங்குகிறது என்று யாரோ சொல்வது காதில் கேட்டது.   தான் ஊன்றி நடக்கும் தடியை மேலே சுழற்றி வீசினான்.  அவன் அதிர்ஷ்டம் அவன் செய்த புண்ணியம் அவனது தடி வீச்சு ஒரு சில  மாங்காய் மேலே பட்டு அவன் காலடியிலேயே  கீழே விழுந்தது.   இந்த அதிர்ஷ்டம் தான் அவன் செய்த புண்ணிய பலன் நினைத்தது நடந்தது.   அது அவனுக்கு ஆகும் காலம்.   இல்லாவிட்டால்  கைத்தடியும் மரத்தில் எங்கோ கிளையில் சிக்கி அவன் நடப்பதற்கு கூட முடியாமல் போயிருக்கும். பலே கிழவி!

''வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.5

என்னதான் தலை கீழே நின்று முயற்சித்தாலும்   எவ்வளவோ வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு  என்றுமே  வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும்  என்று நாம் விரும்பினாலும் நம்மை விட்டு என்றும் எப்போதும்  போகவே போகாது.   இது இன்றோ நேற்றோ நடப்பதில்லை. காலம் காலமாக பல தலைமுறைகள் நடப்பது தெரிந்தும்  இப்போதும் நாம்  எதையாவதை ஒன்றை அடையவேண்டும்  என்று  முயற்சிக்கிறோம்.  ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி  நிறைய  திட்டம் தீட்டுகிறோம்.  பிரயாசை கொஞ்ச நஞ்சமில்லை.  இதுவே நமக்கு  ஒரு முக்கிய வேலையாகவும் ஆகிவிட்டதே சாகும் வரையிலும் கூட,  என்கிறாள் கிழவி.  அற்புத பாட்டி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...