Saturday, November 24, 2018

RAGAVENDRAR

ஸ்ரீ ராகவேந்திரர் J.K. SIVAN
2. வெங்கண்ண பட்டா

ஒரு எச்சரிக்கை. படிப்பதற்கு முன். ஆரம்பத்தில் நிறைய ''பட்டாக்கள்'' வருகிறது. பொறுமையாக எந்த பட்டா (BHATTAA) யார் ? என்று புரிந்து கொண்டு தொடரவும். ஆனால் நாம் எங்கேயோ யாரிடமோ வாங்கின நிலத்துக்கு நம் பெயரில் பட்டா (PATTAA ) வாங்கும் சிரமம் மேலே சொன்ன பட்டா (BHATTAA ) வை புரிந்துகொள்வதில் இருக்காது.

திம்மண்ண பட்டாவின் அப்பா பெயர் கனகாசல பட்டா.
கனகாசல பட்டாவின் அப்பா ஸ்ரீ கிருஷ்ண பட்டா. கிருஷ்ண பட்டா வீணை நன்றாக வாசித்து கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் சுகமாக வாழ்ந்தார்.
கிருஷ்ண பட்டாவின் பேரன் திம்மண்ண பட்டா
கிருஷ்ண பட்டா கோபிகாம்பா என்ற மாதுவை மணந்து ரெண்டு பிள்ளைகள் பெற்றார்.
திம்மண்ண பட்டாவின் இரண்டாம் மகன் வெங்கண்ண பட்டா, என்கிற வேங்கடரமணன் என்கிற வெங்கட நாதன் என்று ஏன் பெயர் கொண்டான் என்றால் அவன் குடும்பத்தில் குல தெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வரர் என்பதாலும் அவர் அனுக்ரஹத்தால் அவன் பிறந்ததாலும் என்றும் சொல்லி விடுகிறேன்.

வெங்கண்ண பட்டா இப்போது பிறந்தவன் இல்லை. கிட்டத்தட்ட 420 வருஷங்களுக்கு முன்பு 1595ம் வருஷம்,, பங்குனியில் ஒரு வியாழக்கிழமை , மிருக சீரிஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவன். நீங்கள் இப்படிப்பட்டவன் எங்கே பிறந்தான் என்று கேட்பதற்கு முன்பாகவே அது தமிழ் நாட்டில், சிதம்பரம் அருகே புவனகிரியில் என்றும் சொல்லிவிடுகிறேன்.

வெங்கண்ண பட்டா நன்றாக படித்தான். சிறுவயதிலே சகல கலைகளும் கற்று தேர்ந்தான். வீணை வாசிப்பதிலும் நல்ல பயிற்சி பெற்றான்.

திம்மண்ண பட்டா, காலமானார். சிறுவன் வெங்கண்ண பட்டா அவன் அண்ணா குருராஜ பட்டாவிடம் வளர்ந்தான். கல்வி கற்றான். அத்திம்பேர்(தமக்கையின் கணவன்) லக்ஷ்மி நரசிம்ஹாச்சர்யாரிடம் மதுரையில் கல்வி கற்றான் .

1614 ல் மதுரையிலிருந்து திரும்பி வந்ததும் சரஸ்வதி பாய் மனைவியானாள். லக்ஷ்மி நரசிம்மாச்சாரி என்று ஒரு பிள்ளை பிறந்தான். குடும்பம் கும்பகோணம் போயிற்று. அங்கே த்வைத வேதாந்தம், இலக்கணம், இதிகாச புராணங்கள் பாடமாயிற்று. அங்கே தான் வெங்கண்ணாவிற்கு சுதீந்திர தீர்த்தர் குருவானார்.

வெங்கண்ண பட்டா பாஷ்யங்களில் நிபுணனானான், பண்டிதர்கள் பலரை தர்க்கத்தில் வென்றான். அவனுக்கு மூலராமனும் ஸ்ரீ பஞ்சமுக முக்ய ப்ராண தேவரும் இஷ்ட தெய்வமானார்கள். அவர்களிடம் பரம பக்தி. சிஷ்யர்கள் பலருக்கு சம்ச்க்ரிதம், வேதங்கள் கற்றுக்கொடுத்தான். காசுக்காக அல்ல. மனைவி பிள்ளையோடு தரித்ரத்தோடு, பல நாள் ஆகாரம் இன்றி ஏழ்மையான வாழ்க்கை நடத்திக்கொண்டு. வாரத்தில் பல நாள் வாயு பக்ஷணம் நீராகாரம் மட்டுமே. சரஸ்வதிக்கு மாற்று புடைவை கூட கிடையாது. பாதிப் புடைவை உடம்பில் சுற்றி, மீதி ஈரமான புடைவை காயும் வரை காற்றில் பிடித்துக்கொண்டு நிற்பாள். வேதாந்தியான அவளுக்கு இது துன்பமாக படவில்லை. வெங்கண்ண பட்டாவுக்கு பக்திக்கே நேரம் போதவில்லை. துணி எங்கே போய் தேடுவது?

ஒரு வீட்டில் ஏதோ விசேஷம். கூப்பிட்டிருந்தார்கள். இந்த ஏழைக்குடும்பத்திற்கு சாப்பாடு சும்மா எதற்கு போட வேண்டும் அந்த வீட்டுக்காரன் நினைத்தான். ஆகவே ஏதாவது ஒரு வேலை கொடுப்போம் இந்த பயலுக்கு என்று வெங்கண்ண பட்டாவிடம்

'' நீ போய் அந்த கல்லில் எல்லோருக்கும் சந்தனம் அரைத்துக்கொண்டு வா' என்று வேலை வாங்கினான். வழக்கம் போல் ஸ்தோத்திரங்களை சொல்லிக்கொண்டு வெங்கண்ண பட்டா சந்தனம் அரைத்தார். அதை தரித்துக்கொண்ட அனைவருக்கும் திகு திகு வென்று மிளகாயை பூசிக்கொண்டது போல் எரிந்தது.

''ஏன் சந்தனம் எரிச்சலை தருகிறது?''

''அக்னி ஸ்தோத்ரம்'' சொல்லிக்கொண்டு வெங்கண்ண பட்டா சந்தனம் அரைத்ததால் அக்னி சந்தனத்தில் தனது குணத்தை காட்டிவிட்டான். மந்த்ரத்தை சரியாக புரிந்துகொண்டு உச்சரித்தால் அது எப்படி பலன் தரும் என்றும் தெரிந்தது. வீட்டுக்காரன் வெங்கண்ணாவை அவமரியாதையாக நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

வெங்கண்ணா மீண்டும் சந்தனம் அரைத்தார். இந்த தடவை வருணனை உபாசித்து அரைத்ததால், அது எரிச்சலை தணித்தது. எரிச்சல் நீங்கியது. குளு குளு வென நறுமணம் கமழ்ந்தது.

கும்பகோணம் மட பீடாதிபதி சுதீந்ர தீர்த்தருக்கு தனது அந்திம நேரம் வந்துவிட்டது தெரிந்து கவலையும் சேர்ந்து கொண்டது. இனி அடுத்த வாரிசு மடத்திற்கு யார் என்று யோசிக்கும்போது. மூலராமரே கனவில் வந்து வெங்கண்ண பட்டாவே தகுதியானவர் என்றதால் அவருக்கு அழைப்பு வந்தது.

''வெங்கண்ணா, உன்னை அடுத்த குருவாக இந்த மடத்திற்கு தேர்வு செய்திருக்கிறேன் '' என்றார் குரு.

''சுவாமி, நான் குடும்பஸ்தன், மனைவி பிள்ளைக்கு நான் ஆற்றவேண்டிய கடமை இருக்கிறதே'' என்றார் வெங்கண்ண பட்டா.

சரஸ்வதி அவர் கனவில் வந்தாள். ''நீ சன்யாசியாக வேண்டும் அப்பா இது லோகக்ஷேமார்த்தம் '' என்றாள்

1621ல் தஞ்சாவூரில் பங்குனி சுக்ல த்வீதியையில் வெங்கண்ண பட்டா சந்நியாசியானார். இனி அவரை ஸ்ரீ ராகவேந்த்ர தீர்த்தர் என்போம்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...