Friday, November 2, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 
மகா பாரதம் 
                                                                
                         
     சகரனின்  கவலை 
                                                                          
''மகரிஷி  லோமசரோடு என் தாத்தாக்கள் தீர்த்த யாத்திரை சென்றதை பற்றி நீங்கள் சொல்லும்போது நானும் அவர்களோடு கூடவே சென்றதைப் போல இருக்கிறது.  மேலும் கேட்க ஆவலாக இருக்கிறேன்? யாரந்த பகீரதன்? அவன்  எதற்காக கங்கையை கொண்டு வரவேண்டும்? --   ஜனமேஜயன் வைசம்பாயனரை நச்சரித்துக்கொண்டிருந்தான்.

மௌனமாக வெகுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த வைசம்பாயனர் புன்னகையோடு ''ஜனமேஜயா, நான் ஒரு கணம் யோசித்து பார்த்தேன், உன் குணம் தான் உன் கொள்ளு தாத்தா  யுதிஷ்டிரனுக்கும் இருந்திருக்க வேண்டும். அவனும் இதே போல் தான்  ரிஷி லோமசரை பகீரதன் யார் அவன் சரித்திரம் என்ன என்று விடாமல் கேட்டுக்கொண்டே நடந்தான். யுதிஷ்டிரனுக்கு தான் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆவலாயிற்றே. யுதிஷ்டிரன் லோமசரை  விட்டு விடுவானா,  நீண்ட  தூரம் நடக்கவேண்டுமே.  எனவே  மெதுவாக  ஆரம்பித்தான்.''

 " லோமச  மகரிஷி, எனக்கு  தாங்கள்  பகீரதன் எப்படி  கடல் நிரம்ப காரணமானான்  என்று  விளக்க வேண்டும்''  என்று கேட்டான்.  லோமச ரிஷி சொல்ல ஆரம்பித்தார். நான் லோமசரை  சுருக்கிச் சொல்கிறேன்; 

 "இக்ஷ்வாகு வம்சத்தில் சகரன்  என்கிற  ராஜாவுக்கு பிள்ளை இல்லை. இரண்டு மனைவிகள்.  அவர்களோடு சேர்ந்து  இமய பர்வதத்தில் கடுந்தவம் செய்தான்.  அவன் தவத்தை மெச்சி  அருள் புரிந்தார்  இறைவன். 

 ''ஒருமனைவிக்கு அரசன்  வேண்டிய நேரத்தின் படி  அறுபதினாயிரம் பிள்ளைகள் ஜனிப்பார்கள். ஆனால் அத்தனை  பேரும்  அழிவார்கள். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு புதல்வன் பிறப்பான். அவனால்  உன்  வமிசம்  வளரும்''  என்று வரம்  கிட்டியது.

அறுபதினாயிரம் பிள்ளைகளும் வளர்ந்தார்கள்,  அட்டகாசம் தாங்க முடியவில்லை, தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள்  எல்லோருமே   அந்த அரசகுமாரர்களின் தொல்லை தாங்கமுடியாமல்  பிரம்மாவிடம் சென்று முறையி ட்டார்கள்.  அவர்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார்கள்.  காலம் சென்றது.  சகரன்  ஒரு அஸ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தன. வழக்கம்போலவே  அவனது அஸ்வமேத யாக  குதிரை எல்லா இடமும் சென்றது.எவரும் எதிர்க்கவில்லை. பணிந்தார்கள். இந்த  அறுபதினாயிரம்  இளவரசர்களும்   ஆயுதங்களோடு   கூட  செல்லும்போது எவரால் எதிர்க்க முடியும்? குதிரை   கடலைப் பார்த்தது.    நீரில்லாமல்  அது பெரிதாக  ''பே'' என்று இருந்ததால்  ஒரே ஒட்டமாக ஓடிவிட்டது.    காணாமல் போனது.  எவனோ  ஒரு  மாயாவி, ராக்ஷசன் அதை திருடியிருக்கலாம் என்று  அத்தனை வீரர்களும்  தேடிச் சென்றார்கள்.

கடலையே  குடைந்தார்கள்,   ஆழமாக  எங்கோ  வழிவிட்டது.  கபில மகரிஷி ஆஸ்ரமம் கண்ணில் பட்டது.  அங்கே காணாமல் போன  குதிரை நின்று கொண்டிருந்தது. சந்தோஷம் ஒருபுறம்.  இங்கே யார்  கொண்டுவந்து  நமது அஸ்வமேத யாக குதிரையை பிடித்துக்  கட்டியவன் என்ற கோபம்  வேறு.  த்யானத்தில்  அமர்ந்திருந்த கபிலர் ஆஸ்ரமத்தில் நுழைந்து  அட்டகாசம் செய்தார்கள்.  அவரை நெருங்கி கூவினார்கள். சூரிய ஒளி  போல  அவரது தேகம் தவத்தால்  பிரகாசிக்க,  தவம்  கலைந்த கபில ரிஷி மெதுவாக  கண்களை திறந்து எதிரே நோக்கினார்.   சகர குமாரர்கள்,  அனைவரும், அறுபதினாயிரம் பேரும்  எரிந்து சாம்பலாயினர்.  அங்கே  ஒரு சாம்பல்  மேடு தான்  மலையாக தெரிந்தது.

 அஸ்வமேத யாக குதிரையோடு கூட சென்ற  தனது  அறுபதினாயிரம் பிள்ளைகள்  ஏன் இன்னும் திரும்ப வில்லை என்று  சகரன்  கவலையா யிருந்தபோது நாரதர் ஒரு முறை  சகரனைக் கண்டார். அவன்  தனது  அறுபதினாயிரம் பிள்ளைகள் எங்கே என்று தெரியவில்லையே என்று  வருந்தினான்.  அவர்  நடந்ததை  சொன்னார். அப்போது தான் அவனுக்கு  சிவன் தந்த வரம் நினைவுக்கு வந்தது.  தனது பேரன்  அம்சுமானை அனுப்புகிறான். ''என் கண்ணே,  நீ  உனது தந்தை, மற்றும்  உறவினரை தேடிச் செல். எப்படியாவது அவர்களை  அழைத்துக்கொண்டு  வா'' என்றான்.

சகரனின்  இரண்டாவது மனைவிக்கு ஒரு பிள்ளை. அவன் பெயர் அசமஞ்சன். அவனும் கொடியவன் என்பதால்  நாடு கடத்தப் பட்டான். அவன் மகன் அம்சுமான். 'சகரன் அவனை அழைத்து இந்த வம்சம் வளர நீ தான் உதவவேண்டும். வெற்றியோடு திரும்பி வா'' என்றான்.  அம்சுமான் புறப்பட்டான். கடைசியில் கபிலர் ஆஸ்ரமம் அடைந்தான்.  தவம் செய்யும் கபிலர் முன் பணிந்து நின்றான்.  அவர் கண் திறந்து அவனைக் கண்டார். அவன் தான் எதற்கு வந்தேன் என்பதை  எடுத்துச் சொன்னான் .யாகத்திற்கு முதலில் குதிரை வேண்டும், தனது தந்தைமார் செய்த குற்றம் மன்னிக்கப்படவேண்டும் என்று இரண்டாவதாக வேண்டினான்.   ''குழந்தாய் , இறந்தவரை நான் உயிர்பிக்க முடியாது. நீ கங்கையை  நோக்கி  தவம் செய், சிவனையும்  வேண்டி அவர் உதவியும் பெறுவாய்.   அவரை நோக்கி தவம் செய், உன் விருப்பம் நிறைவேறும் என்றார்''

அம்சுமான் குதிரையை மீட்டான். அஸ்வமேத யாகம் நிறைவேறியது. தேவர்கள் திருப்தி அடைந்தார்கள். சகரர்கள் இன்னும் நரகத்தில் தான் வாடினார்கள்.  அம்சுமானுக்குப் பிறகு  திலீபன் அரசனானான். முன்னோர்களின் துயரம் அவனை வாட்டுகிறது.  கபில முனிவரின் வாக்கின் படி எப்படியாவது ஆகாச கங்கையை வரவழைக்க்வேண்டுமே என்று  துடிக்கிறான். அவன்  விருப்பம் நிறைவேறவில்லை. அவனுக்குபின் அவனது பிள்ளை பகீரதன் அரசனாகிறான்.

பகீரதன் கங்கையை நோக்கி  கடுந்தவம் புரிகிறான். அவனைப்போல்  கடுமையாக  ஒரு மனதாக  எவரும்  தவம் செய்யாததால்  பகீரதன் தவம்  சிறந்த பெயர் பெற்றது.  முடியாத  காரியத்தை நோக்கி  பிரயாசைப் படுகிறவர்களை  நாம்  ''அவன் பகீரதப் பிரயத்தனம் செய்தான் '' என்று சொல்வது இதனால் தான். 

மகாபலிபுரத்தில் பல்லவர்கள்  மலையைக் குடைந்து வடித்த சிற்பங்களில் பகீரதன் தவம் சிலை மிகப் பெருமை வாய்ந்தது. நான்  பலமுறை சென்று அந்த சிற்பத்தை ரசித்ததுண்டு.  இதை அர்ஜுனன் தவம், அவன்  சிவனை வேண்டி  பாசுபதம் பெற செய்த தவத்தை குறிக்கும் சிலை என்றும் சொல்வார்கள்.  நடுவே  கங்கை மேலிருந்து கீழே இறங்குவதாக  இரு பாறைகளின் இடை காட்டியது சிற்பியின் திறமை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...