Tuesday, November 22, 2022

THIRUVISAINALLUR AIYAAVAAL






 கிணற்றில் கங்கை.  -   #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
நாளை  கார்த்திகை அமாவாஸ்யை திதி.  மனதளவில் பின்னோக்கி சென்று  முன்னூறு வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு அதிசயத்தை, அது இன்றும் வருஷா வருஷம்  தொடர்வதை  நினைவு கூர்கிறேன்.

 திருவிசநல்லூர் கிராமம், கும்பகோணத்திற்கு கிழக்கில் நான்கு மைல்கள் தூரத்தில் உள்ளது. திருவிடைமருதூருக்கு மேற்கில் இரண்டு மைல்தூரம். அங்கு வாழ்ந்த ஒரு மஹான் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.  யார் இவர்?

 கோவிந்தபுரம்  பகவந்நாம போதேந்திராள் ‘ராம’ நாமாவையும், ‘கோவிந்த’ நாமாவையும் பிரசாரம் செய்து வந்த மஹான். அவருடைய சம காலத்தவரான  ஐயாவாள்  ‘சிவ’ நாமாவின் மகிமையைப் பரப்பி வந்தார். இரண்டு பேருக்குமே சைவ வைஷ்ணவ பேதம் கிடையாது. அதனால் இருவருமே சேர்ந்துகூடத் திருவிசநல்லூரில் நாம ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்தவர்கள். 

ரொம்ப  சின்னூண்டு கிராம மான  திருவிசைநல்லூரில்  வருஷா வருஷம் கார்த்திகை அமாவாசை அன்று ஒரு அதிசயம் நடக்கிறது.  நான்கு வருஷங்களுக்கு முன்பு நான்  அங்கே சென்று கண்ணால் கண்ட அதிசயம்.  ஒரு ஸாதாரண  சின்ன ஒட்டு  வீட்டில், ஒரு சாதாரண கிணற்றில் அமாவாசைக்கு  முதல் நாள் பார்க்கும்போது எங்கோ அதல பாதாளத்தில் கீழே தண்ணீர் தெரிந்தது. மறுநாள் அதிகாலையில் கிணறு பொங்கி வழிகிறது. சாதாரண நீர் அல்ல. கங்கா ஜலம் . இதை பொய்யென்று மறுப்பவரோடு எனக்கு எந்த வாதமும் கிடையாது. ஆமாம் என்று ஒப்புக் கொள்வோர்களில் நானும் ஒருவன்.

கார்த்திகை  அமாவாசை அன்று மட்டும் அமைதியான அந்த கிராமம் புத்துயிர் பெற்று அநேக கார்கள், பஸ்கள், வாகனங்கள், எங்கெங்கோ இருந்தெல்லாம் மனிதர்கள் கூட்டம் ஆயிரத்தில், அங்கே கூடவேண்டும்?  அவ்வளவு  பேருமா முட்டாள்கள்?...

ஐயாவாளை பற்றி முதலில் சொல்லிவிட்டுத் தான் அதிசயம் பற்றி சொல்ல வேண்டும். 
லிங்கராயர் என்கிற தெலுங்கு ப்ராமண  சிவபக்தர் மைசூர் சமஸ்தான  வித்வான்.  அவர்  ஒரே  பிள்ளை ஸ்ரீதர வெங்கடேசன். அப்பா காலமான பிறகு  மைசூர் சமஸ்தானம்  வெங்கடேசனுக்கு அப்பாவின்  உத்யோகத்தை  அளித்த  போது  ''எனக்கு  அரண்மனை உத்யோகம் வேண்டாம்'' என்று  நிராகரித்து விட்டான்.  அவன் மனம் உஞ்சவிருத்தியில் சிவனை ஆராதனை செய்வதிலும் நாம சங்கீர்த்தனத்திலும் பரம சந்தோஷத்தோடு  ஈடுபடுத்திருந்தது. 
குடும்பத்தோடு க்ஷேத்ராடனம் சென்றான்.  அப்போது திருச்சியில் நாயகர் வம்சம் ஆண்டது. சைவ வைஷ்ணவ பேதம் அதிகம் இருந்த காலம்.

 ஊரில் ஒரு பிராமணரின் பிள்ளை  திடீரென்று நோய்வாய்ப்பட்டு நினைவற்று மிக மோசமான நிலையில் இருந்தான். வைத்தியர்கள் மருந்தில் பயனில்லை.  எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்.    யாரோ ஒரு பெரியவர்   அந்த பையனின் அப்பாவிடம்   ''இஙக  ஸ்ரீதர வெங்கடேசன் எனும் ஒரு சிவபக்தர் இருக்கிறார். அவரிடம் போய் சொல்லி ஏதாவது விபூதி மந்திரிச்சு கொடுங்கோ, உடனே போங்கோ''  என்கிறார்.  சிவனை வேண்டி தியானித்து  அந்த பிள்ளைக்கு  வெங்கடேச ஐயாவாள்  தான் ஜெபம் செயத மந்த்ர ஜலத்தை  ஒரு உத்ரணி கொடுத்தார்.  உயிருக்கு மன்றாடிய அந்த பிள்ளை  எழுந்து நடமாடி பழையபடி ஆகிய   சேதி  ஊர்  எங்கும் பரவியது. அந்த சின்ன  ஊரிலும் அண்டை அசல் ஊர்களிலும் ஐயாவாள் பேர் திமிலோகப்பட்டது. அரசன் முதல் ஆண்டி வரை ஜனங்கள் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தஞ்சை ஜில்லாவுக்கு நடந்து  விட்டார். அப்போது தஞ்சை நகரம் ஷாஹாஜி என்ற மராத்தி ராஜா ஆட்சியில்  இருந்தது.ராஜா  அவரை கௌரவித்து வரவேற்றான். சிறிது காலத்தில் அங்கிருந்து திருவிசநல்லூர் வந்து விட்டார். நிறைய ஸ்லோகங்கள், வியாக்கியானங்கள் எழுதினார் .பதமணி மஞ்சரி, பகவன் நாம பூஷணம், தயா சதகம், ஸ்துதி பத்ததி, சிவபக்தி கல்பலதா. சிவ பக்த லக்ஷணம், அச்சுதாஷ்டகம், முதலிய நூல்கள் அவர் இயற்றியவை. 

நாமசங்கீர்த்தன ஜாம்பவான் பகவன் நாமா போதேந்திர ஸ்வாமிகள் ராமேஸ்வரம், பழனி, ஸ்ரீரங்கம், திருவானைக் கோவில், கும்பகோணம் என்று பல க்ஷேத்ரங்கள் சென்று   திருவிடை மருதூர் வந்தபோது ஸ்ரீதர அய்யாவாளை சந்தித்து அளவளாவினார். திருவிச நல்லூர் வந்தபோது அவரது ஸ்தோத்திரங்கள் பற்றி அறிந்து சந்தோஷித்தார்.

ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க பிரியர். பரம பக்தர். திருவிடை மருதூர் நடக்கும் தூரம் தான். ஒருநாள் கூட அவரை தரிசிக்காமல்  போஜனம்செய்வது  கிடையாது. 

ஒரு நாள் கொட்டும் கனமழை.  காவிரியில் வெள்ளம். ஆற்றைக் கடந்து அல்லவோ  திருவிடைமருதூர் மகாலிங்கத்தை தரிசிக்க முடியும். கோபுரதரிசனம் செய்து ''ஆர்த்தி ஹர ஸ்தோத்ரம் '' பாடினார்.   மகாலிங்க தரிசனம்   பண்ணாததால் அன்று  ஐயாவாளுக்கு போஜனம் கிடையாதே . எப்படி வெள்ளம் பெருகி ஓடும்  காவிரி  ஆற்றைக்கடப்பது?ஆற்றங் கரையில்  ஜலத்தில் தவளைகள் ''கர'' ''கர'' வென்று விடாமல் சேர்ந்து கத்தியது அவருக்கு மனதில் ''ஹர ஹர ''என்று கேட்டு மகிழ்வித்தது. வெகு நேரம் நின்றார்.திடீரென்று ஒரு சிவ பக்தர் எதிரே வந்தார். அதிர்ஷ்டவசமாக  அவர் திருவிடை மருதூர் மகாலிங்க ஆலய சிவாச்சாரியார் களில் ஒருவர். அவரை ஆற்றங்கரையில்  ஐயாவாள்  பார்த்து அதிசயிக்கிறார். சிவாச்சார்யருக்கு   தெரியும் ஐயாவாள் அன்று   ஆற்றைக்கடந்து  மகாலிங்க தர்சனம் பண்ண முடியாதே என்று.

'என்ன ஐயாவாள் தரிசனம் எப்படி பண்றதுன்னு யோசனையா?''
'ஆமாம் சுவாமி. ஒரு நா கூட மகாலிங்கத்தை பாக்காம  என்னாலே இருக்க முடியாதே''
''அப்படின்னா, இந்தாங்கோ பிரசாதம். இன்னிக்கு அபிஷேகம் அலங்காரம் பிரமாதமா நடந்தது'. சிவாச்சாரியார் மடியிலிருந்து ஒரு சுறுக்குப்  பையை எடுத்து அதிலிருந்து  மகாலிங்க விபூதி '' அளித்தார்.

ஐயாவாள்  வீட்டுக்கு போகும் வழியில் தான் அவருக்கு ஞானோதயம் தோன்றியது. ஆற்றில் தான் வெள்ளம் கரைபுரண்டு நேற்று சாயந்திரத்திலிருந்து படகுகள் கூட அக்கரை செல்ல முடியவில்லையே. எப்படி அந்த சிவாச்சாரியார் ஆலயத்தி லிருந்து ஆற்றைக் கடந்து  இந்த கரைக்கு வந்திருக்க முடியும்? கொட்டும் மழையி லும்  எப்படி  சிவாச்சாரியார்  உடலிலோ விபூதியிலோ கொஞ்சமும் ஈரமே இல்லையே?

 மறுநாள் வழக்கம்போல் வெள்ளம் விடிந்தபின் ஆற்றைக் கடந்து மகாலிங்க தரிசனம் செய்தபோது அந்த சிவாச்சார்யரை  அங்கே  பார்த்தார். மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டார்.

''சிவாச்சாரியாரே, நேற்று நீங்கள் எப்படி ஆற்றைக் கடந்துவந்து எனக்கு விபூதி பிரசாதம் தந்தீர்கள்?.''

'' நானா, நேற்று வந்தேனா? நேற்று எங்குமே நான் வீட்டை விட்டு போகவில்லையே.  மஹாலிங்கம் கோவிலுக்கும் போகமுடியவில்லை. காவேரி  ஆற்றை எப்படி கடக்க முடியும்?. நிச்சயம் நான் நேற்று உங்களை சந்திக்கவே இல்லை'.

''ஆஹா, சிவாச்சாரியார் உருவில் வந்தது மஹாலிங் கமே'' என ஐயாவாளுக்கு புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. தான் பட்டினி  கிடக்கக் கூடாது என்ற பரமேஸ்வரனின் கருணை  ஐயாவாள்  நெஞ்சை உலுக்கியது. நன்றிப் பெருக்கோடு மகாலிங்கத்தின் மேல் ஐயாவாள் அப்போது ஸ்ரிஷ்டித்தது தான் ''தயாஷ்டகம் '' ஸ்லோகம்.  அபாரமானது. ஒருநாள்  எழுதுகிறேன்.

''எனக்கு ரெண்டு வரம் தா. மஹா தேவா.    ஒன்று உன்னை இடைவிடாமல் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்தது சிவா, உன் நாமம் என்நாவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கவேண்டும்''

இனிமேல்  திருவிசநல்லூர்  அதிசயம் பற்றி அறிவோம்..  ஐயாவாளுக்கு  ரொம்ப தயாள குணம் .இளகிய மனசு. கருணை உள்ளம்.   ஒருநாள் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டே  வீட்டுக்கு நடந்து வந்தார். ஆறு அவர் தகப்பனாருக்கு ஸ்ராத்தம்  பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு.  ஸ்ராத்த பித்ரு பிராமணர்கள், சாஸ்திரிகள்  காவேரியில் ஸ்னானம் பண்ணிவிட்டு  வரும்  நேரம். ஸ்ரார்த்தம் எப்போதும் உச்சி காலத்துக்கு மேல் தான் என்பதால் அவர் மனைவி ஒவ்வொன்றாக எல்லா பக்ஷணங்கள், சமையல் அயிட்டங்கள் எல்லாம் விறகு அடுப்பு மூட்டி   தயார் பண்ணிவிட்டாள் .

ஐயாவாள் இரங்கிய, கருணை உள்ளம். தாராள மனசு  கொண்டவர்..  ஒருநாள் காவேரியில் ஸ்நானம் செய்விட்டு  ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வீட்டுக்கு  நடந்து வந்தார்.  அன்று அவர் தகப்பனாருக்கு வீட்டில்  ஸ்ரார்த்தம்.  பிராமணர்கள், சாஸ்திரிகள் வரும் நேரம். ஸ்ரார்த்தம் எப்போதும் உச்சி காலத்துக்கு மேல் தான் என்பதால் அவர் மனைவி  ஒவ்வொன்றாக  எல்லா பக்ஷணங்கள், சமையல் அயிட்டங்கள் எல்லாம் விறகு அடுப்பில்  செய்து வைத்துவிட்டாள். 

அந்த நேரம் பார்த்து  ஐயாவாள்  வீட்டு வாசலில் ஒரு பரம ஏழை   தாழ்ந்த குலத்தவன் பசி மயக்கத்தில் விழுந்து கிடந்தான்.  அவர் மனதில் பெருகிய கருணை, இரக்கம், உடனே உள்ளே சென்று தயாராக இருந்த உணவை எடுத்து வந்து அவனுக்கு அளிக்க செய்தது. அவர் தான் எல்லோரிலும் மஹா தேவனைப் பார்ப்பவர் ஆயிற்றே.  அவர் மனைவி மீண்டும் ஸ்நானம்   செய்து விட்டு   மறுபடி புதிதாக  ஸ்ரார்த்த சமையல்  சமைக்க ஆரம்பித்தாள். மடி சமையல் தான் பங்கப்  பட்டு விட்டதே. அதை கொண்டு போய் கொட்டினாள்.
 சற்று நேரத்திற்கெல்லாம்  காவேரி ஸ்நானம் பண்ணிவிட்டு பிராமணர்கள் ஸ்ராத்த விதிப்படி ஹோமம் செய்ய வந்துவிட்டார்கள். தங்களுக்கு தயாரிக்க பட்ட உணவை ஒரு தாழ்ந்த குலத்தவன் ஏற்கனவே உண்டுவிட்டான் என்று அறிந்ததும். ரொம்ப ரொம்ப  கோபம் வந்தது.  உலகமே முழுகிப் போய்விட்ட தாக கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி விட்டார்கள். அந்த காலத்தில் இந்த  மாதிரி  பேதங்கள் புழக்கத்தில்   இருந்ததால்   ஸ்ரார்த்த அன்னத்தை   மற்றவர்கள்  முதலில்  சாப்பிடுவது ஒரு மன்னிக்கமுடியாத குற்றமாக கருதப்பட்டு   ஸ்ராத்தம் நின்றுவிட்டது. ஊர் கட்டுப்பாட்டுக்குள் ஐயாவாள் குடும்பம் கொண்டு வரப்பட்டு  ஜாதிப்ரஷ்டம் பண்ணாத குறை.

''நீங்கள் செய்த குற்றத்துக்கு  பிராயச்சித்தம்  கங்கையில் குளித்து விட்டு பாபத்தை போக்கிக் கொள்ள வேண்டும்'   என்று கட்டளை யிட்டார்கள்.  ஊர்க்கார  பிராமணர்கள் ஐயாவாளை ஒதுக்கி வைத்து  ஸ்ராத்தம் நடத்த மறுத்ததால்  அவர் சிவனை வேண்டி கண்ணீர்  விட்டார்.

யாரோ   மூன்று  அயலூர் பிராமணர்கள்  ஐயாவாள் தர்மிஷ்டர், பரோபகாரி, ஒரு ஏழைக்கு  பசிப்பிணியி லிருந்து  உயிர்காத்தவர் என்று அறிந்து  ஊர்  கட்டுப் பாட்டையும் தெரிந்து கொண்டு  அவர் வீட்டுக்கு வந்து  வாசலில் காத்திருந்தார்கள்.  ஒருவேளை ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களோ!.    ஐயாவாள்  பாபம் தொலைய  கங்கையில் ஸ்னானம் செய்தால் தான் மீண்டும் ஊரில் உள்ளவர்கள்  அவரை சேர்த்துக் கொள்வார்கள்.  திருவிநல்லூர் எங்கே, கங்கை எங்கே!  

கண்ணை மூடி சிவனை  ஐயாவாள் பிரார்த்தித்தார். கடகட வென்று  கங்காஷ்டகம் ஸ்லோகம் வந்தது. அதே வேகத்தோடு  வீட்டின் புழக்கடை பின்னால் இருந்த சிறிய கிணற்றிலும் கங்கா பிரவாகம் நிரம்பி வழிந்து வீடு பூரா வந்து அலம்பிவிட்டது.  விஷயமறிந்த பிராமணர்கள் அசந்து போனார்கள். எவ்வளவு பெரிய மஹானுக்கு அபவாதம் பண்ணினோம். அபச்சாரம் செய்தோம் என்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.    அப்பா  ஸ்ரார்த்தமும் இனிது  சாஸ்த்ரோக்தமாக  நடந்தது ஒரு  கார்த்திகை அமாவாசை  அன்று .   பல நூறு வருஷங்களுக்கு  முன்...இன்றும் அதே நாள்.   என்றும்  இதே நாளில்  திருவிசநல்லூரில்  அந்த சின்ன   கிணற்றில் கங்கா பிரவாகம்.
இப்போது  என் கதை.  நான்கு ஐந்து வருஷங்களுக் கு முன் திருவிசைநல்லூரில்  விடியற்காலை மூன்று மணிக்கே  காவேரி யில்  ஆயிரக் கணக்கானவர் களோடு   நானும் என் மனைவியும்  ஸ்நானம் செய்து ஈரத்துணியோடு வரிசையில் நின்றோம் .  அந்த  விடிகாலை  நேரத்திலும் எனக்கு முன்னே  பல நூறு பேர். பின்னே இன்னும்  நூற்றுக்கணக்கான எத்த னையோ பக்தர்கள். எல்லோரும் சொட்ட சொட்ட ஈரத்தோடு. குளிரில் உடம்பு  நடுங்க  மெதுவாக வரிசை முன்னேறி  ஒரு மணி நேரத்தில்  அந்த மடத்தை அடைந்தோம்.   அது திருவிசநல்லூர்  ஐயாவாள் அதிஷ்டானம். அதில் உள்ள  கிணற்றங்கரைக்கு  நகர்ந்து  சென்றோம்.  

மூன்று நான்குபேர் அந்த சின்ன கிணற்றின் மேல் நின்று  வாளியில்  நீர் மொண்டு ஒவ்வொரு தலையிலும் அரை வாளி  கங்காஜலம் ஸ்னானம் ஆயிற்று.  ஜருகண்டி..  கிணற்றில் ஜலம் .கிட்டத்தட்ட    விளிம்பு வரை   பெருகிக் கொண்டே இருக்கிறது.

 வரிசையாக   கங்கா ஸ்நானம் செய்து விட்டு  தலை யைத் துவட்டின கையோடு  யாரோ ஒரு மஹானுபவன்  சூடான காப்பி எல்லோருக்கும்  விநியோகம் செய்தார்.  அன்று எப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஸ்னானம் செய்ய  கிணறு பொங்கி வழிந்தது?  விடை இன்னும் தெரியவில்லை.  யாரோ  ஒரு கெட்டிக்காரர்,  காவிரி ஆற்றில் அன்று அதிகம் தண்ணீர் திறந்து விட்டதால் ஏதோ குழாய் வழியாக கிணற்றுக்கு பாய்ச்சி இருப்பார்கள் என்றார்.  ஆனால்   வருஷங்களாக  உள்ள ஒரு நம்பிக்கையை இழக்க நான் மட்டுமல்ல பல பகதர்கள்   இதற்கு தயாரில்லை.

ரொம்ப  சின்ன கிராமம்.  ஹோட்டல் எல்லாம் கிடை யாது.  சாப்பாடு வசதிகள் அந்த ஒருநாள் கூட்டத்துக் காக ஏற்பாடு செய்ய முடியாது.  ஆனால் அந்த ஊர்க்கா ரர்கள்  செய்தார்கள்.  ஊருக்குள் வரும்போது பருப்பு, தயிர், அரிசி, மிளகாய், எண்ணெய் ,  நெய்  என்று சாமான்கள் நிறைய வாங்கி கொண்டுவந்து கொடுத் தோம். எங்களுக்கு மட்டும் அல்ல, இன்னும் வருவோர் களுக்கு அந்த க்ரஹஸ்தர்கள் நல்ல சூடான உணவு அளித்தார்கள். இது தான் நமது பாரம்பரியம். தங்கவோ உண்ணவோ  வசதி  இல்லாத  அந்த மாதிரி கிராமத்தில் இப்படி கைங்கரியம்  வருஷா வருஷம்  நிறைய வீடுகளில்  செய்கிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...