Saturday, November 12, 2022

POORNAM

 பூர்ணம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


நமது ரிஷிகள் தம்மை  தவத்தால்  பிழிந்தெடுத்துக்கொண்டு வெளிப்படுத்திய  அற்புத  உண்மைகள்   உபநிஷதங்கள். ரொம்ப சின்ன  ஸ்லோகங்கள். அப்படி ஒரு உபநிஷத்  ஈசாவாஸ்ய  உபநிஷத். இதில் ஒரு குட்டி  அற்புத ஸ்லோகத்தை தருகிறேன்.

ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते | पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ||
ॐ शान्तिः शान्तिः शान्तिः ||

Om poornamadah poornamidam poornaat poornamudachyate Poornasya poornamaadaaya poornamevaavashishṣyate
Om shaantih shaantih shaantih

ஓம்  பூர்ணமத , பூர்ணமிதம்  பூர்னாத்  பூர்ணமுதச்யதே  பூர்ணஸ்ய  பூர்ணமாதைய  பூர்ணமேவா  வசிஷ்யதே 

என்னய்யா இது  ஒரேயடியாக  பூர்ணம் பூர்ணம் என்று எதோ சொல்லி இருக்கிறது? 
அர்த்தம் இது தான். 

அது முழுமையானது, இதுவும் முழுமை பெற்றது. முழுமையிலிருந்து  பெறுவது முழுமையாகத்தானே இருக்கும். அப்படியென்றால் முழுமையிலிருந்து  முழுமையை அகற்றினாலும்  எஞ்சியிருப்பது  முழுமையே . அமைதி அமைதி அமைதி.

புரியவில்லை அல்லவா? விளக்குகிறேன்.

பிரம்மம் எல்லையற்றது, அளவற்றது, விளக்கமுடியாதது.  அதை  ''எல்லாம்'   பூரணம், நிறைந்திருப்பது,  என்கிறோம் .  ப்ரம்மம் பிரபஞ்சமாக இருக்கிறது. அதில் நாம் வாழும் இந்த உலகமும் உள்ளது. ஆகவே நமது உலகமும்  பூரணமானது. பிரம்மம் என்ற பூரண பிரபஞ்ச வஸ்துவில் இருந்து தான்  உலகம் என்ற பூரண  வஸ்துவும்  தோன்றியது.  இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம்  என்ற   பூரணத்திலிருந்து  அகற்றிய  போதிலும் பிரம்மம் குறைந்து போகவில்லை.  ப்ரம்மம்  பூரணமாகவே இருக்கிறது ''குறைவற்ற  எல்லாம் ''ஆகவே  இருக்கிறது.

எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும்?. பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மீதி இருக்க  முடியும்?

பார்க்கப்போனால்  உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோற்றமளிக்கிறது . (Appearance) . அவ்வளவுதான். 

இருட்டிலே ஒரு  கலர் கலரான  ஒரு  பிளாஸ்டிக் கயிறை  பார்த்துவிட்டு பாம்பு என்று நினைக்கிறோம்.  அப்போது கயிறே  பாம்பாகத் தோன்றியது . கயிறு  எப்போதும்  பாம்பாக மாறவில்லை.  அது பிளாஸ்டிக்  கயிறு தான் என்று  தெரிந்து கொண்டதும்  பூரணமாக கயிறாகவே கிடக்கிறது.  கயிறு என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம்  தோன்றியது போல்   பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் கயிறு தான் பூரணம். இன்னோரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது.  கயிற்றில் பாம்பு  பார்க்கப்பட்டதால் அதன் எடை கூடவில்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து சே, இது வெறும் கயிறு தான் அறிவுக்கு புரிந்ததும் கயிறின் எடை குறையவில்லையே. 

அது போலவே  பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மாறுவதில்லை.  முழுமையாகவே பூரணமாகவே இருக்கிறது. 

கயிறு  எதனால் முதலில்  பாம்பாகத் தெரிந்தது?. இருட்டினால்.  நம் கண்ணை மட்டும் அல்ல அறிவை மயக்கும்  இருட்டு தான் மாயை.   மாய பிரபஞ்சம்  மாய உலகம் என்கிறோம் . இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. 

மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாதது. அதற்கு நாம் எவ்வளவு மதிப்பு அளித்தாலும் உண்மையில் அது அசத்தியம்தான் - இல்லாத வஸ்துதான் - அதாவது பூஜ்யம்தான்.  எந்த  எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...