Friday, November 11, 2022

guru ashtakam


குரு அஷ்டகம் -  நங்கநல்லூர்  J.K. SIVAN

ஆதி சங்கரர்  

தத: கிம்? தத: கிம்? தத: கிம்? தத: கிம்?

ஆதி சங்கரர்  ஜகத் குரு.  முப்பத்திரெண்டே வயதில் மூன்று உலகமும் போற்றும் அற்புத காவியங்களை படைத்து நமக்களித்தவர். மகேஸ்வரனின்  மறு அவதாரம்.  குருவாக நமக்கு நல்வழி போதிக்கும் ஆதி சங்கரர் தனது குருவான கோவிந்த பாதரை போற்றி அருளிச் செய்த எட்டு ரெண்டுவரி ஸ்லோகங்கள் தான் குரு அஷ்டகம். என்ன பிரயோஜனம் என்ன பிரயோஜனம் என்று ஒருதடவை அல்ல, நான்கு தடவை அழுத்தம் திருத்தமாக சொல்கிற முடிவும் அதன் அவசியத்தை உணர்த்துகிறது.

கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு தெரியும். கொன்னக்கோல் என்றால் வாயிலே தாளங்களை போட்டு இசைக்கு மெருகு சேர்ப்பது. அதுவும் நாட்டிய பாடல்களுக்கு கொன்னக்கோல் உயிர்மூச்சு. அபிநயத்துக்கு அழகூட்டுவது. அதி சங்கரருக்கு சகலமும் தெரிந்த போது கர்நாடக சங்கீதமோ, கொன்னக்கோலோ தெரியாதா?  என்ன பிரயோஜனம்?  என்பதற்கு ''தத  கிம்  என்ற வார்த்தையை பிரயோகித்து  நாலு தடவை கொன்னக்கோல்  தாளம் போடுவது போல  இந்த அஷ்டகத்தை அமைத்திருக்கிறார்.  இது  போன்று இன்னொன்றை இன்னும் நான் காணவில்லை.

சம்சார சாகரத்தை கடக்க இதைவிட எளிய உபதேசம் கிடையாது. குருவின் அனுக்கிரஹம் இல்லாமல் எதையும் அவ்வாறு பெறமுடியாது என்பதும் தெளிவாக இதன் மூலம் உணர்த்துகிறார்.

शरीरं सुरूपं तथा वा कलत्रं, यशश्चारु चित्रं धनं मेरु तुल्यम् ।   मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 1 ॥

Sareeram suroopam Thada va kalathram, Yasas charu chitram dhanam Meru thulyam,
Gurongri padme, Manaschenna lagnam, Tada kim, tada kim, tada kim, tada kim.

ஶரீரம் ஸுரூபம் ததா² வா கலத்ரம் யஶஶ்சாரு சித்ரம் த⁴நம் மேருதுல்யம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 1॥

''காசே தான் கடவுளடா''.... பாட வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் கவைக்குதவாது. உடல் அழகு, கம்பீரம் கண்ணுக்கு நன்றாக இருக்கலாம்.   ஆனால் நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம். ரொம்ப சரி. எட்டு திசையிலிருந்தும் வாழ்த்துகள்.

கவுரவம் மாலை, மரியாதை, போற்றி போற்றி எல்லாம் சந்தோஷம் தான்.செல்வம் கறுப்பிலும் வெளுப்பிலுமாக மூட்டை மூட்டையாக வந்து சேர்கிறது. ஆஹா மகிழ்ச்சி! இதெல்லாம் இருந்தால் மட்டும் போதுமா? தன்னை சீராக்கிய, உபதேசித்த, நல்வழி காட்டிய ஆசார்யன், குருவின் பாதாரவிந்தங்களை பணியவில்லையே. அப்படியென்றால் மற்றவற்றால் என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்?

कलत्रं धनं पुत्र पौत्रादिसर्वं, गृहो बान्धवाः सर्वमेतद्धि जातम् । मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 2 ॥

கலத்ரம் த⁴நம் புத்ரபௌத்ராதி³ ஸர்வம் க்³ருʼஹம் பா³ந்த⁴வா: ஸர்வமேதத்³தி⁴ ஜாதம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 2॥

ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல என்று படித்தால், பாடினால் மட்டும் போதுமா? அழகிய மனைவி, சொத்து,  நிலம் நீச்சு,வீடு,  வாசல், புத்திரர்கள், புத்திரிகள், பேரன் பேத்திகள் எல்லாம் இருக்கு சார். ஜே ஜே ன்னு சொந்தம் பந்தம் எல்லாம் வரும் போகும். இதெல்லாம் கிடைக்க அனுக்கிரஹம் பண்ணின குருவை ஒரு க்ஷணம் நினைக்காமல், அவர் திருவடிகளில் விழுந்து ஆசிபெறாத போது இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்?

சம்சார சாகரத்தை கடக்க இதைவிட எளிய உபதேசம் கிடையாது. குருவின்  அனுக்கிரஹம் இல்லாமல் எதையும் அவ்வாறு பெறமுடியாது என்பதும் தெளிவாக சொல்கிறார்.


क्षमामण्डले भूपभूपलबृब्दैः, सदा सेवितं यस्य पादारविन्दम्  षड़ङ्गादिवेदो मुखे शास्त्रविद्या, कवित्वादि गद्यं सुपद्यं करोति ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 3 ॥

ஷட³ங்கா³தி³வேதோ³ முகே² ஶாஸ்த்ரவித்³யா கவித்வாதி³ க³த்³யம் ஸுபத்³யம் கரோதி ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 3॥

நமது உடலில் கை கால், மார்பு, வயிறு, தலை, என்று அங்கங்கள் இருப்பது போல் வேதத்தை ஒரு உருவமாக பார்த்தால் அதற்கு ஆறு அங்கங்கள் உண்டு. ஒருவன் சிறந்த ஞானத்தை, விஞ்ஞான தத்துவங்களை உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்த வாய் தான் உதவுகிறது.
ஒருவனுக்கு இயற்கையாக கவித்துவம் கற்பனா சக்தி அபரிமிதமாக உள்ளே பொங்கி வெளிவரும். அதை எழுத்து வடிவமாக்க அவனது கரங்கள் உதவுகிறது.
என்னதான் சக்தி அவனது அங்கங்களுக்கு இருக்கட்டுமே. ஒன்று மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். அவனது மனமானது தனது பரமேஸ்வர ஸ்வரூப குருதேவரின் தாமரைத் திருவடிகளில் மையம் கொள்ளவில்லையென்றால் மற்றவற்றால் அப்போது என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?

विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः, सदाचारवृत्तेषु मत्तो न चान्यः । मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 4 ॥

விதே³ஶேஷு மாந்ய: ஸ்வதே³ஶேஷு த⁴ந்ய: ஸதா³சாரவ்ருʼத்தேஷு மத்தோ ந சாந்ய: ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 4॥

''நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் எனக்கு எத்தனையோ மரியாதை, மதிப்பு, வரவேற்பு, கவுரவம்... என் சொந்தஊரில் எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்காதீர்கள். சொல்லமுடியாத அளவுக்கு அப்பப்பா என்ன பெருமை என்ன வளமை சௌகரியம்!    
ஒரு நேர்மையான ஆன்மீக வழி நடப்பவன் பக்திமான் என்று பார்த்தால் என்னை மிஞ்சுபவர்கள் எவரும் இல்லை',   இப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் ஒருவன் குளிர் காயலாம். ஆமாமய்யா, இதெல்லாம் சரிதான். உனக்கு மனம் என்று ஒன்று இருக்கிறதே. அது எப்போதாவது உன் குருவின் தாமரைத்திருவடிகளில் சரணடைந்து அசையாமல் அங்கே நிலை பெற்று நிண்றதுண்டா... இல்லையென்றால் மற்றதெல்லாம் அடைந்து என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?

क्षमामण्डले भूपभूपलबृब्दैः, सदा सेवितं यस्य पादारविन्दम् । मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 5 ॥

Kshama mandale bhoopa bhoopala vrundai,Sada sevitham yasya padaravindam, Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim. 5

க்ஷமாமண்ட³லே பூ⁴பபூ⁴பாலப்³ருʼந்தை:³ஸதா³ ஸேவிதம் யஸ்ய பாதா³ரவிந்த³ம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 5॥

அவனை  ராஜாதி ராஜன்  கவி அரசன் என்று  எல்லோரும் புகழ்கிறார்கள். தலையில் வைத்து கூத்தாடுகிறார்கள். ரெண்டு பக்கம் கவரி வீசுகிறார்கள். தங்க சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். நிறைய படித்தவன் மேதாவி என்று ஊர் உலகமே போற்றுகிறது. பெரிய ராஜாக்கள் அவன் காலடியில். இருக்கட் டுமே. அவனுக்கு தனது குருவின் ஞாபகம் இல்லை, அவர் தாமரைத் திருவடியில் தண்டம் என தன்னை சாஷ்டாங்கமாக சமர்ப்பித்து வணங்கும் நினைவு கூட வரவில்லையெனில் அவன் புகழ், பெருமை,அவன் கல்வி அறிவு, அவன் பெருமை, இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?

यशो मे गतं दिक्षु दानप्रतापात्, जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात् ।मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 6 ॥

யஶோ மே க³தம் தி³க்ஷு தா³நப்ரதாபா- ஜ்ஜக³த்³வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதா³த் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மேதத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 6॥

Yaso me dhanam bhikshu dhana prathapa,Jagadvasthu sarvam kare yat prasadath.,
Gurongri padme, Manaschenna lagnam,Tada kim, tada kim, tada kim, tada kim. 6

நான் யார் என்று உலகமே அறியும். என்னை விட சிறந்த தான தர்மங்கள் பண்ணினவன் எவனுமே இல்லை. என் பெயர் புகழ் உலகமறியும்'' -- இப்படி ஒருவன் புகழ் பெறலாம். உண்மையிலேயே அவன் அவ்வளவு தர்ம காரியங்கள் செய்பவனாகவே இருக்கட்டுமே. அவன் ஒரு கணமேனும் தனது குருவை வணங்கி அவர் தாமரை பாதார விந்தங்களில் விழுந்து ஆசி பெற வில்லையெனில் அவனது தான தர்மத்தால் என்ன பிரயோஜனம்?, என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?

न भोगे न योगे न वा वाजिराजौ, न कन्तामुखे नैव वित्तेषु चित्तम् ।  मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 7 ॥

Na bhoge na yoge na va vaaji raajow, Na kantha mukhenaiva vitheshu chittam, manachchena lagnam Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim. 7

ந போ⁴கே³ ந யோகே³ ந வா வாஜிராஜௌ ந காந்தாமுகே² நைவ வித்தேஷு சித்தம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே   தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 7॥

இந்த உலகத்தில் சுகம் என்பது  உண்ணும் உணவிலோ, போகப் பொருள்களிலோ, யோகத்திலோ எல்லாம் இல்லை. உலக உணர்வு வெறும் மிருக உணர்வாக இருப்பது மனிதனுக்கு பொருந்தாது. குழந்தை குட்டி என்று குடும்ப விருத்தி அவனை மிருகத்திலிருந்து வேறு படுத்தாது.   பணமும் குடும்பமும் அவன் பெறவேண்டிய சுகத்தை தராது. இதிலெல்லாம் சுகம் தேடி பெறுபவனின் வாழ்க்கையில் தான் என்ன பயன்?. ஒரு கண நேரமாவது அவன் தனது குருவின் பாதார விந்தங்களில் பணிந்து அருள் பெறவில்லையென்றால் மற்றதில் கிடைக்கும் சுகத்தால் என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?

अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये, न देहे मनो वर्तते मे त्वनर्ध्ये । मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 8 ॥
Aranye na va swasya gehe na karye, Na dehe mano vartha medath vanargye, urongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim.

அரண்யே ந வா ஸ்வஸ்ய கே³ஹே ந கார்யே ந தே³ஹே மநோ வர்ததே மே த்வநர்க்⁴யே ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 8॥

இயற்கையின் மொத்த உருவம் காடு, வனம் , ஆரண்யம்.  மரங்கள் நிறைந்த  வனம் எல்லோருக்கும் பிடித்த ஒன்று.  தன்னுடைய  அரண்மனை போன்ற  பெரிய வீடு வாசல் இதிலும் அவன் புத்தி போகவில்லை. சரி. அவன் செய்யும் நித்ய கடமையில் அவன் மனம் செல்ல வில்லை. அதுவும் சரி. அவன் தேகத்தின் மீதும் அவனுக்கு எண்ணம் போக வில்லை. ரொம்ப சரி. இதெல்லாம் விட்டு வேறு விஷயங்களிலும் அவன் நினைப்பு இல்லை. ஓஹோ இதெல்லாம் ஒருவனை மிகப்பெரிய ஞானி, மஹான் என்று ஆக்கி விடுமா? ஒரு கணமாவது அவன் மனம் அவனது குருவை நினைத்ததா? என்பது தான் முக்கியம்.   குருவின்  தாமரைத் திருவடிகளில் சரணடைந்தானா? ஓஹோ  அப்படி செய்ய வில்லையா? பிறகு மற்ற அவனது சிறந்த செயல்களால் என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?


இந்த எட்டு குரு அஷ்டகங்களை ஒருவன் உணர்ந்து அதன் படி  தனது,குருவை வணங்கி (தனக்கு என்று ஒரு குரு இல்லையென்றால் ஜகதகுரு பரமா சார்யர் மஹா பெரியவரை  மனதால் நினைத்து) சரணடைவானாகில் அவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அவன் ராஜாவாக இருக்கட்டும், பெரிய ஞானியானாலும் சரி, சிஷ்யனாக இருப்பினும் சரி, கிரஹஸ்தனானாலும் சரி, வாழ்க்கையில் அவன் பெறவேண்டிய அருளை பெறுவது நிச்சயம். அதுவே   கிடைத்தற்கரிய ப்ரம்மத்தோடு இணையும் பாக்கியம் .

கு³ரோரஷ்டகம் ய: படே²த்புண்யதே³ஹீ யதிர்பூ⁴பதிர்ப்³ரஹ்மசாரீ ச கே³ஹீ ।
லபே⁴த்³வாஞ்சி²தார்த²ம் பத³ம் ப்³ரஹ்மஸம்ஜ்ஞம் கு³ரோருக்தவாக்யே மநோ யஸ்ய லக்³நம் ॥

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...