Saturday, November 19, 2022

STORY


 


பாதுகாப்பு - #நங்கநல்லூர்_J_K_SIVAN


ஏன்  கிருஷ்ணன் ஹிந்துக்களின் மனதில்  முதல் இடத்தில் இருக்கிறான்?அவன் எல்லோர் மனத்தி லும்  இடம் பிடித்து  உறைந்திருக்க  காரணம்   அவனுக்கு  ஜாதி மதம், கீழோர் மேலோர், பணக்காரன், ஏழை,  ஆண்  பெண், ஆத்திகன்  நாத்திகன்  வித்யாசம் எல்லாம் கிடையாது. கங்கை நதி வித்யாசம் பார்த்தா அனைவரும்  ஸ்னானம் செயது  புண்யம் பெற  உதவுகிறது. அதே  மாதிரி தான். நாம்  தான் வித்யாசம்  எல்லாம் கண்டுபிடித்து அவஸ்தை படுபவர்கள்.  நீரை  பூஜைக்கு  புனிதமாக, பல ஜீவன்கள்  தாகம் தீர குடிக்க,  குளிக்க,  பாத்திரம் கழுவ, துணி துவைக்க,   ஏன்  பல இடங்களில் அதை  துஷ்ப்ரயோகம் செய்து உபயோக மற்ற  துர்நாற்றம் பிடித்ததாகவும் மாற்றுபவர்கள்.

சென்னையில் ஒரு காலத்தில் சுத்தமாக  ஓடிய  கூவம்  நதியை எப்படியெல்லாம் மாற்றி  சித்ரா, காசினோ  டாக்கீஸ் பக்கமே போக முடியாதபடி  துர்கந்தமான நாற்றத்தை   பரப்பி விட்டோம்.

மனிதர்களில் அப்படித்தான்  சிலர்களை  தீயவர்களாக, கெட்டவர்களாக  காண்கிறோம். ஆனால் எல்லோர் உள்ளேயும்  ஒரே தன்மையுடைய, வஞ்சனை செய்யாத  தூய  ஆத்மா இருக்கிறது. 
ராம கிருஷ்ண பரமஹம்ஸரை ஒரு பக்தன் கேட்டான்:
''குருவே,  ஒரு கெட்டமனிதன், நமக்கு  துன்பம், கேடு விளைவிக்க  திட்டமிடுகிறான் என்று தெரிந்தால் நாம் சும்மாவா இருக்கவேண்டும்?''

'' ஒவ்வொருவனும்  தனக்கு  தீங்கு மற்றவனால் விளையும் என்று தெரிந்தாலே  தீயவன், பழகாத தகாதவன் என்று அறிந்து அவனை விட்டு  விலக வேண்டும்.  ஒருவனை   தீயவன் என்று  முத்திரை குத்தி, அவன்  நமக்கு  கெடுதி செய்வான் என்று  கருதி,  அவனை தண்டிப்பது, அவனுக்கு தீங்கு விளைவிப்பது  தவறு.''

இது புரிய ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு காட்டில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் தங்கள் பசுக்கள் கன்றுக்குட்டிகளை அருகே இருந்த காட்டிற்கு இட்டுச்சென்று  மேய்ப்பது வழக்கம். அங்கே  விளையா
டிக் கொண்டிருப்பார்கள்.  அங்கே ஒரு விஷ பாம்பு வசித்தது அவர்களுக்கு தெரிந்ததும், அந்த பக்கம் போவதற்கே  தயக்கமாக இருந்தது.  மாடு கன்று  மேய்க்க  இயலவில்லை. 'விஷ நாகம்  எப்போது  எங்கிருந்து வந்து  யாரை கடிக்குமோ'' என்று உயிருக்கு  பயந்தார்கள்.

ஒருநாள்  அந்த ஊருக்கு  ஒரு  முனிவர் வருகிறார். அவரிடம் சிறுவர்கள்  ''சாமி,  அந்த காட்டு பக்கம் போகாதீ ங்க . ஒரு பெரிய  விஷ நாகம்  அங்கே இருக்கிறது.''

''அதனால் என்னப்பா. எனக்கு விஷப்பாம்புகள் அடக்கும் மந்திரம் தெரியும்.  பாம்பிடம் எனக்கு பயமில்லை ''
முனிவர் காட்டுப்பாதையில் நடந்தார்.  அவரோடு வர  பையன்கள் பயந்தார்கள். வழியில்  புஸ என்று சப்தமுடன் படமெடுத்து  அந்த விஷ நாகம்  முனிவர் முன்  நின்றது.  முனிவர் ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.  அது தலையை சுருக்கிக்கொண்டு  சாதாரண  கயிறு போல் சுருண்டு  அவர் காலடியில் கிடந்தது.

''ஏ . பாம்பே,  எதற்கு நீ  எல்லோரையும் கடிக்கிறாய். உன்னைக்கண்டு பயப்படுகிறார்கள்.  கெட்ட பெயர் சம்பாதிக்கிறாய்.  உனக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன்.  அதை உச்சரித்தால் உனக்கு பகவான் ஸ்மரணை உண்டாகும்.  உன்னுடைய  கடுமையான  தீங்கு செய்யும் குணம் விலகும்'' என்று  உபதேசித்தார்.  பாம்பு மந்திரத்தை கற்றுக்கொண்டது.   எவருக்கும் தீங்கு நினைக்காத ஆன்மிக சாது பாம்பாக மாறியது. முனிவரை வணங்கியது.  

''முனிவரே  நான் எப்படி இனிமேல் நடந்து கொள்ள வேண்டும்?' என்றது பாம்பு.
' நான் சொல்லிக்கொடுத்த மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டே இரு. யாரையும்  எதையும் கடிக்காதே.' நான் அப்புறம் வரும்போது உன்னை பார்க்கிறேன்.'' முனிவர் சென்றுவிட்டார்.

சில நாட்கள் சென்றது.  காட்டில் பயத்தோடு  சிறுவர்கள்  பாம்பைக்  கண்டனர்.  அது  எங்கோ ஒரு ஓரமாக சுருண்டு கிடந்தது. யாரையும்  கடிக்கவில்லை.  அது கடிக்காமல்  ஒரு ஓரமாக  நகர்ந்து கொண்டிருந்தாலும், அதன் மேல் கல்லை வீசினார்கள். துன்புறுத்தினார்கள்.  அப்போதும் வலியை பொறுத்துக்கொண்டு பாம்பு அவர்களை தாக்கவில்லை, கடிக்கவில்லை.  ஒரு புழுவைப் போல் நடந்துகொண்டது.   பயம் நீங்கிய  சிறுவர்கள் அதை நெருங்கி இப்போதெல்லாம் அதன் வாலைபிடித்து இழுப்பது, அதை பிடித்து மரத்தின் மேல், கல்லின் மேல் அடிப்பது போன்ற சுற்றி எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கண்களில்  கண்ணீரோடு அந்த பாம்பு பொறுத்துக் கொண்டது.  வாயில் ரத்தம் கக்கியது.  மயங்கியது.  மரணத்தின் வாயிலில் ஊசலாடியது.  நகரவே முடியவில்லை.  

''பாம்பு செத்துவிட்டது  வாங்கடா போகலாம்''  பையன்கள் சந்தோஷமாக  திரும்பினர்.  சிறிது நேரத்தில்  மெதுவாக  ஊர்ந்து பாம்பு தனது பொந்துக்குள் நுழைந்தது.  எலும்புகள் நொறுங்கி  வாடியது.ஆகாரம் தேடி வெளியே போக முடியவில்லை. பட்டினியில்  எலும்பும் தோலுமானது.  இருட்டில் மெதுவாக  வெளியே வந்து ஏதாவது கிடைத்தது உண்டு ஜீவித்தது. பையன்களுக்கு  பயந்து  வெளியே கண்ணில் படாமல் வாழ்ந்தது.  அப்படியும் விடாமல் முனிவர்  உபதேசித்த மந்திரத்தை உச்சரித்துக்  கொண்டு வந்தது.

ஒரு மாதம் கழிந்தது. முனிவர் மீண்டும் ஒருநாள் அந்த காட்டுப் பக்கம் வந்தார்.  பாம்பு ஞாபகம் வந்தது. தேடினார்.  பையன்கள்  பாம்பு செத்து போய்விட்டது கொண்டுவிட்டோம் என்று பெருமையாக சொன்னார் கள்.  முனிவருக்கு  பாம்பு இறந்திருக்காது. தான் உபதேசித்த  மந்திரம் அதற்கு உதவி இருக்குமே என தோன்றியது.

''என் நண்பா, பாம்பே எங்கே இருக்கிறாய். வா என்னிடம்.'' என்கிறார்.  தனது குருவின் குரல் கேட்டதும்  பாம்பு மெதுவாக  முடியாமல் ஊர்ந்து  எதிரே வந்தது.
 'எப்படி இருக்கிறாய் நண்பா?''
'' ஏதோ இருக்கிறேன் குருவே. பாருங்கள் என் நிலைமையை  ''
'' ஏன்  அடையாளம் தெரியாமல் இளைத்து, மெலிந்து  நோய்வாய்ப்பட்டு இருக்கிறாய்?''
''குருவே, தாங்கள் உபதேசித்தபடி நான்  எவருக்கும்  தீங்கு செய்யாமல் சாத்வீகமாக இலையும் காயும் கீழே விழுந்த பழங்களிலும் உயிர் வாழ்கிறேன்.''

முனிவருக்கு புரிந்துவிட்டது. சாத்வீகமான பாம்பை மாடு மேய்க்கும்  பையன்கள் துன்புறுத்தின் மரண தருவாயில் இருக்கிறதே.

" பாம்பே,  உனது சாத்வீகம் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வரவில்லை.  உன் மாற்றத்தை பையன்கள் புரிந்து கொள்ள வில்லை.   நீ ஒரு முட்டாள் பாம்பு.  உன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத மக்கு.  நான் உன்னை எவரையும் கடிக்காதே என்று தானே சொன் னேன். சீறாதே, பயமுறுத்தாதே  என்றா சொன் னேன்?   அருகில் எவராவது வந்தால் நீ  உஸ்  என்று சீறி அவர்கள் உன்னை துன்புறுத்தாமல்  காத்துக்  கொண்டிருக்க லாமே. அவர்களை பயமுறுத்தி அதன் மூலம் உன் உயிரை பாதுகாத்துக்கொண்டிருக்கலாமே. இதனால்  எவருக்கும் தீங்கு இல்லையே.  பசுவுக்கு கூட  கூரான கொம்பு தந்திருக்கிறான்  ஈஸ்வரன்,  அது போல்  தானே  குதிரை மானுக்கு  வேகமும் முள்ளம்பன்றிக்கு முள்ளும், ஆமைக்கு ஓடும், தன்னை பாது காத்துக் கொள்ள   பகவான் கொடுத்திருக்கிறான். மனிதனுக்கு புத்தியை தந்திருக்கிறான். கெட்டவர்களிடமிருந்து விலக  அறிவைத்  தந்திருக்கிறான்.''

அப்புறம்  பாம்பு கிட்டே  பையன்கள்  போவார்களா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...