Monday, November 21, 2022

pesum dheivam

 பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
விருப்பம்  நிறைவேறியது.

இந்த விஷயத்தை நான் முன்பே  அறிந்து  எழுதியதாக  ஞாபகம்.  இருந்தும்  இன்று மீண்டும் கண்ணில் பட்டதால் இன்னொரு முறை எழுதுகிறேன். சேர்ந்து அனுபவிப்போம்.  மஹா பெரியவா  தொண்டர்  ஸ்ரீமடம்  பாலு  மூலம் தெரிந்த ஒரு ஆச்சர்யமான சம்பவம் இது.

மஹா பெரியவா தரிசனம் பெற  எங்கிருந்தெல்லாமோ  வருகிறவர்களில்  முதியோர், பெண்கள், குழந்தைகள், வெளி நாட்டோர்,   வெளி மாநிலம்,  பல மொழி பேசுவோர் என்று வித்யாசமே  கிடையாது.  யாருக்கு  கொடுப்பினை இருக்கிறதோ அவர்கள் மஹா பெரியவா தரிசனம் பெற்றவர்கள்.

ஒரு பக்தர்  வெகுநாளாக  காஞ்சிபுரத்துக்குப்  போய்  மஹா பெரியவாளை ஒரு தடவை தரிசனம் பண்ண வேண்டும் என்ற  தீராத  ஆசை கொண்டவர்.  ஆசை நிறைவேற வழியில்லை,  முதலாவதாக  உடல் நிலை  மோசமாக இருந்தது.   அழைத்துச் செல்ல எவரும் இல்லை.  கார்  டாக்சி  ஆட்டோ வைத்துக்கொண்டு போக  வசதியுமில்லை. மனத்தில் ஆசை  விருப்பம் மட்டும் பொங்கி வழிந்தது. இத்தனைக்கும் அவர் எங்கோ வெளிநாட்டிலோ, வெளி மாநிலத்திலோ  வெகு தூரத்திலோ இல்லை. சென்னையின் ஒரு கோடியில் வாழ்ந்த முதியவர்.

''ஹர ஹர சங்கர ஜயஜய சங்கர''என்று வாய் எப்போ தும்  முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. எதிரே இருந்த பெரியவா படத்தை  ஆயிரம் தடவைகள்  கைகளைக்  கூப்பி வணங்குபவர். வாய் ஓயாது இருமல், உடலில் ஒரு நடுக்கம்,  நிலையாக நிற்க முடியாமல்  உடல் தள்ளாடியது.

''கலியுகத்தில் ப்ரத்யக்ஷ தெய்வமே, அவன் வந்துண்டே இருக்கான், அவன் பார்வையிலே பட்டா நான் தப்ப முடியாது, கயிறில் கட்டி சுருட்டிக்  கொண்டு போயிடு வான்.அதற்குள்ளே, அவன் வரதுக்குள்ளே,   உங்களை ஒரு தடவை எப்படியாவது பார்க்கணும், நமஸ்கரிக் கணும் னு  ஆசையிலே  துடிக்கிறேன்.பகவானே  நீங்கள் எனக்கு அருள் புரியணும்.  என்  ஆசை வெறும்  பகல் கனவாக தான் முடியப்போறது. நான் மஹா பாவி''

முதியவர்  தவித்துக் கொண்டிருந்தார். யார் மூலமாவது உதவி கிட்டாதா?

வாசலில் ஏதோ காலடி சத்தம் கேட்ட போதெல்லாம்  ஆவலாக  யார் என்று  எட்டிப் பார்ப்பார்.   ''அவனாக''  இருந்தால் கொண்டு போய்விடுவானே,  ஒருவேளை அவன் தான் வந்திருக்கானோ?''  பயம் வேறு அவர் மனதில் மரணத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தது.

உண்மையில் மரணத்தை பற்றி அந்த  80 வயதுக்கு மேற்பட்டவர்  பயப்படவில்லை. அவன் வந்து தொலைத் தால், மஹா பெரியவாளை  அப்புறம்  இந்த ஜென்மத் தில்  தரிசிக்க  முடியாமல் போய்விடுமே என்ற ஏக்கம்,  கவலை. 

ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.

''சார்,  ப்ரஹதீஸ்வரய்யர் வீடா?'' 
ஒரு புதுக்குரல்  வாசல் கதவுக்கு வெளியே  கேட்டது.'

'வாங்கோ  நான்  தான்''
 கம்பை ஊன்றிக்கொண்டு  மெதுவாக வாசல் கதவை திறந்தார்.
''யார்  நீங்க?  என்ன வேண்டும்?'''
''ப்ரஹதீஸ்வரய்யர்...
''நானே தான்.  நீங்க யாருன்னு சொல்லலியே''
'இங்கே தான் இருக்கேன். காஞ்சிபுரத்திலே  சேவை டூட்டி.  நேத்திக்கு பெரியவா தரிசனம் பண்ணின போது பெரியவா என்னை கூப்பிட்டு நீ எங்கிருந்து வறேன்னு  விசாரித்தார். அப்புறம்  உங்களை தெரியுமான்னு .கேட்டார்.  இல்லைன்னு சொன்னேன். உங்களை  சந்திச்சு உடனே கையோடு கூட்டிண்டு வர  உத்தரவு போட்டார். 

''ரெடியா இருக்கேளா  நான் வண்டி கொண்டு வந்திருக் கிறேன். போகலாம் ''
''நீங்க  யார் னு சொல்லலியே?'
'நான் ஆத்மநாதன்  பக்கத்திலே  திருவல்லிக்கேணிலே
 குடும்பம்
' ப்ரஹதீஸ்வரய்யருக்கு  தூக்கி வாரிப்போட்டது. பயம் இல்லை. ஆச்சர்யம். 

''ஆஹா  யமதூதனோ என்று கவலைப்பட்டுக் கொண்டி ருந்தவனுக்கு  ஆத்மநாதனே வந்து  உதவி பண்றேள் . இதோ கதவைப் பூட்டிண்டு வரேன்''.

அது சரி . எப்படி பெரியவாளுக்கு என் பேர்,  அட்ரஸ்,  தெரிஞ்சுது?  நான்  தரிசிக்க விரும்பறேன் ஆசையோடு காத்திருக்கிறேன் என்று எப்படி தெரியும்?  சே. என்ன கேள்வி இது.  பகவானுக்கு தெரியாதா.  எதற்கு அவரை எங்கும் இருப்பவன், சர்வ வியாபி சகலமும் அறிந்தவன் என்று சொல்கிறோம்.. மஹா பெரியவா தீர்க்க தரிசி. முக்காலமும் அறிந்தவர்.  என் மனத்தை, அதில் இருப்ப தை ,எனக்கு  நானே பேசிக்   கொண்டிருப்பதை  அறியா மலா  இருப்பார்.  பகவானே...  என்னை பெரியவா அறிந்து கொள்ள  நான் என்ன  பெரிய  பண்டிதனா, படித்தவனா,  தனவந்தனா, தர்ம காரியம் கைங்கர்யம் பண்ணியவனா, பெரிய  அரசாங்க  உத்யோகஸ்தனா, மந்திரியா... மண்ணாங்கட்டி. 
எப்போ  தேங்காயை உடைத்தாலும்  பெரியவா பேரை சொல்லி உடைப்பவன்,  எதை சாப்பிடும் போதும்  பெரியவாளை  மனதில் நினைத்து வணங்கி சாப்பிடு பவன்.  தினமும் விளக்கேற்றி நமஸ்கரிப்பவன்.... அவ்வ ளவு தானே. இப்படி செய்பவர்கள் கோடானுகோடி பேர்  உலகத்தில் இருக்காளே'' 
 மனதில் நன்றி உணர்ச்சியோடு சம்பாஷணை .

அழைத்துப் போனவர்  மடத்தில்  சேவை செய்பவர்.  மெதுவாக  ப்ரஹதீஸ்வரனை கைத்தாங்கலாக பிடித்து  காரில் ஏற்றினார்.  அருகில் அமர்ந்து கொண்டார்.  கார் பறந்தது. 

''ஆஹா  கார்  வந்திருக்கிறது... நான் யமலோகத்துக்கு  ஸ்பெஷல் விமானத்தை, எருமை வாகனத்தை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன்..''..

வேகமாக  கார்  ரெண்டு  ரெண்டரை மணி நேரத்தில்  காஞ்சிபுரம் கொண்டு சென்றுவிட்டது.  மஹா பெரியவா காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் இருந்த சமயம்  உள்ளே நுழைந்தார்கள்.

''அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் பெரியவாளை  தேடித் போகலாமா?''என்றார் கூட வந்தவர். 

'' இல்லே இல்லை,  எனக்கு முதல்லே,  மஹா பெரியவா தரிசனம் அப்புறமா.  மத்ததெல்லாம். ...  அவர் தரிசனத் தை மிஸ் பண்ணிடுவேனோ  என்கிற  பயம் இன்னும் எனக்கு விடலை''.

மெதுவாக  கூட வந்தவரைப் பிடித்துக் கொண்டு நடந்து  மஹா பெரியவா  இருந்த இடம் சென்றார்.  நல்லவேளை ரொம்ப  கும்பல்  இல்லாத அபூர்வ நேரம்.   

 மஹா  பெரியவாள்  முன்பு  நெருங்கி போய்  நின்றார். பேச்சு வரவில்லை.   கண்ணாடியை மேல் துண்டால் துடைத்து விட்டுக்கொண்டு  துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பெரியவாளை உற்றுப் பார்த்தார். கண்ணார தரிசனம் செய்தார்.  கைகட்டி நின்றார்.  வாய் பேச வில்லை. வார்த்தை வரவில்லை. கண்களில் தாரை தாரையாக  ஆனந்தக்  கண்ணீர்.  

 மஹா பெரியவா கண்கள்  ப்ரஹதீஸ்வரன் கண்களை சந்தித்தது.   கண்கள்  தமக்குள்ள என்ன பேசிக் கொண் டன  என்பது நமக்கு தெரியாதே

.ப்ரஹ தீஸ்வரன்  ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு
உட்கார்ந்து குனிந்து கால்களை நீட்டி கைகளை சிரத்துக்கு மேல் நீட்டி  படுத்தவாறு  பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.  

ஐந்து நிமிஷமாயிற்று.  ப்ரஹதீஸ்வரன் எழுந்திருக்க
வேயில்லை.

பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து மட சிப்பந்திகளிடம்  சொன்னது:
''இதை அவர்  சரீரத்தின் மேல் போர்த்துங்கோ ''
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளைச் செய்யும் படி மஹா பெரியவாவின் உத்தரவு நிறைவே றியது ப்ரஹதீஸ்வரன் ஆசை  நிராசையாக வில்லை. பூரணமாக  நிறைவேறிற்று. 

மஹா பெரியவாளின் காஷாய  வஸ்திரத்தோடு  கைலாசம் செல்லும்  பாக்யம்  எத்தனை பேருக்கு கிட்டும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...