Saturday, November 19, 2022

THIRUMOOLAR


திருமூலர்  திருமந்திரம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

பண்டை காலத்தில்  மருந்து மாத்திரை மருத்துவர் கிடையாது. எல்லாவற்றுக்கும்  மந்திரம். தாயத்து, பரிகாரம்  இது தான்.
தலைவலித்தால்  ஒரு  மந்திரம்,  ஊருக்கு போகுமுன், போகும் வழியில்   வழித்துணைக்கு, மந்திரம், குளிக்கும் முன், குளிக்கும் போது, குளித்தபின், படுக்கு முன், படுக்கையை விட்டு எழுந்த பின்  என்றெல்லாம்  எத்தனை  எத்தனையோ, ஸ்லோகங்கள் மந்திரங்கள்.  பகவான் காப்பாற்றுவார். அவன் தான் வைத்யநாதன், அவன் தான் தன்வந்திரி, என்று இருந்த காலம். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் என்பதே போதும் இதிலெல்லாம் அவர்களுக்கு பலன் கிடைத்தது என்பதற்கு சான்று.

நாளாக நாளாக  பழைய வழக்கங்கள் எல்லாம்  குறைந்து வந்து கொண்டே  வருகிறது.  நாம் மந்திரங்கள் பூஜை செய்வதில்லை, நமக்கு பதிலாக  யாரோ  எப்போதோ சொல்லிய,  பேசிய, மந்திரங்களை  ஒரு  பட்டனைத் தட்டி ஒலிக்கிறோம் . பக்தியின்  அட்வான்ஸ்ட் டெக்னாலஜி இது.  


''ஹர்  ஹர்  மஹா தேவ் '' என்று  சிவாஜி மகாராஜாவின்  படைகள்  வீரமாகச் சொல்லிக்கொண்டே தான் எதிரியின் சேனைக்குள் நுழைவர்.  உயிரைத்  திரணமாக  மதித்து  போரிட்டு வெற்றி பெற்றனர்.

சிவாலயங்களில்  கோவிலுக்குள்  சென்று சிவன் சந்நிதியில்  ''ஓம்  நமச்சிவாயா''  என்றும்  ''ஹர ஹர மகாதேவா''  என்றும் அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பூர்வமாக  சொல்லும்  போது  கிடைக்கும்  ஆனந்தம்  எழுத முடியாது.    அந்த அனுபவம்  அலாதியானது.  ஹர ஹர  என்றால் கிடைக்காதது  ஏதாவது உண்டா?   ஏன்  இது  தெரியவில்லை பலருக்கு?  ஹர ஹர  என்று  சொல்பவன்  உண்மையிலேயே உணர்ந்து  போற்றி வணங்கி  சொல்வானேயானால்  அவன்  மனிதனல்ல  தேவன்.  


இன்னொரு  அருமையான  ரகசியம்.  ஹர ஹர  என்று மனமும் நாவும்  உவந்து சொல்வார்க்கு பிறப்பே இனி கிடையாது. இந்த  ரகசியம்  ஏதோ  நான்  சொன்னதாக  நினைக்கவேண்டாம்.  திருமூலர் தனது  திருமந்திரத்தில் அப்படி  சொல்லியிருகிறாரே:

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே

மகா பெரியவர்  போல்  ஒரு  நடமாடும் தெய்வத்தின்  தரிசனம்  வீட்டில்  மாட்டி இருக்கும்  படத்தில்  காண்பதே  ஒருவனுக்கு பாட்டரி  ரீ  சார்ஜ் செய்ததுபோல்  ஆகிவிடும். முற்றிலும்  அவனை  மாற்றிவிடும் அந்த  ஒரு  தரிசனம். இன்னும்  கொஞ்சம் அவனை  உயர்த்திக்கொள்ள  அவன்  செய்யவேண்டுவது  வேறொன்றும்  இல்லை.  அந்த  குருவின்,  பெயரைச்  சொல்லி  வணங்குவது.  அதற்கும்  மேலே  ஸ்ரேஷ்டமானது  அந்த  மஹா பெரியவரின்  வார்த்தைகளை  தெய்வத்தின்  குரல்  போன்ற  புத்தகங்களிலும்,  இப்போது தான்  அடிக்கடி  வருகிறதே  டிவியில்  யு ட்யூபில் அதுமாதிரி  அவர்  ஒரு காலத்தில்  பேசிய  வார்த்தைகளை  காதாரக்  கேட்பது. கடைசியில்  அவன்  முற்றிலும்  முதிர்ச்சி பெற   அந்த குரு பற்றிய  நினைவுகளில்  வாழ்வது.  எவ்வளவு  அழகாக படிப் படியாக  சொல்லியிருக்கிறார்  தெய்வீக சித்தர் திருமூலர்.  இத்தகைய  பாடல்களுக்கு,  தப்பு  தப்பு,  மந்திரங்களுக்கு  அர்த்தமே  தேவையில்லை.  அதுமாதிரியான  எளிய  அர்த்தம்  நிறைந்த  அமுதங்களைத்  தான் நான்  எங்கெல்லாமோ தேடிப்பிடித்து  படித்து  உங்களுக்கும்  அளிக்கிறேனே . அதெல்லாம் நீங்களும் எல்லோருக்கும் அனுப்புங்கள் ஆயிரம் பேரில்  ஐம்பது பேராவது பயன் பெறட்டும். நான் இரவு பகலாக இந்த   ஆன்மீக  விஷய தானத்தில் மனமார  ஈடுபடுவதன் நோக்கம் எனக்கும் கொஞ்சமாவது புண்யம் கிடைக்கட்டும்  என்று தான்.   

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

நமது  வாழ்க்கை  இலையின் மேல்  வாழும்  பனித்துளி  போன்றது. இரவு  ஜனித்தது.  விடியலில்  சூரியன்  ஒளியில் இருள்  மறைந்தது. இவ்வளவு  நிச்சயமில்லாத சுருக்கமான  வாழ்க்கையில்  எத்தனை  திட்டங்கள், நம்பிக்கைகள், கோபம், தாபம், எரிச்சல், பொறாமை,  சுயநலம்.விரோதம்.  இதெல்லாம் விட்டொழிக்க வேண்டியவை.  நிரந்தரம் இல்லாததை விட்டு  நித்யமானதைத் தேடவேண்டும்.  நமது  வாழ்க்கை  எப்படியாம்  தெரியுமா?

நேற்று  பார்த்தேனே,  நன்றாக  பேசினானே, அடுத்தவாரம்  ஒரு புது  வீடு வாங்குவதாக சொன்னானே. அவனா  போய்விட்டான்  என்று சொல்லும் நிலையற்ற  வாழ்க்கை.  இறந்து போனவனைச்   சுற்றி  ஏகக் கூட்டம்.  ஊரே  திரண்டு விட்டது.  ஓவென்று  பேரிரைச்சல்.  அழுகை,  இனி அவனுக்கு பூமியில்  இடம்  எவ்வளவு  நேரம்?  ஒரு  நாள்  கூட  தாங்காது.  அவன்  பெற்ற பெயர், பட்டம், எல்லாம்  அவன் மரணத்தோடு மறைந்து விட்டதே.    அவன் அடைந்த  புதுப் பெயர்  இப்போது  பிணம். இந்த பெயர் கூட  அவனை  இடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் வரை  தான்.  அவன் இப்போது இல்லை.  அவனைத் தீக்கிரையாக்கியாச்சு.  வேலை முடிந்தது.  எல்லோரும்  திரும்பிவிட்டார்கள்.  குளித்தார்கள்,  வீடு  திரும்பினார்கள். நல்ல பசி.  ''இன்னும் கொஞ்சம் ரசம். வடை ஜோர்''. சாப்பிட்டார்கள். மேற்கொண்டு  தங்கள்  வழக்கமான  வேலையைத் தொடர் ந்தார்கள்.   இருந்தவன் இறந்தபின் நினைவானான். நினைவும்  கொஞ்சம் கொஞ்சமாக  நீங்கியது. அவனும் அவன்  நினைவும்  கூட  சில காலத்திற்குப் பின்  இப்போது  இல்லை.  

இதை  பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே  திருமூலர்  கவனித்து  எழுதியிருக்கிறார்.  ஒரு விஷயம்  தெரியுமா?  திருமூலர்  மூவாயிரம்  ஆண்டு  இருந்தார்.  ஆண்டுக்கு  ஒரு  பாட்டு (திருமந்திரம்  எழுதினவர்)  திருமந்திரம்  மொத்தம் 3000.!!  அதில் இது ஒன்று.
 
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...