Sunday, November 13, 2022

SHADAARANYA TEMPLES







 ஷடாரண்ய  சிவஸ்தலங்கள் - நங்கநல்லூர்  J K  SIVAN 



நமது தமிழகத்தில் எண்ணற்ற  அதிசயமான அற்புதமான ஆலயங்கள் இருக்கிறது. எல்லாவற்றையும்  பார்க்க ஒரு ஜென்மம் போதாது என்பதால் சில வற்றை மட்டும் இந்த ஜென்மத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

உங்களுக்கு முருகனின் ஆறு படைவீடுகள் கோவில்கள் தெரியுமே, ஆறு வனங்கள், ஆரண்யம்  கோவில்கள் தெரியுமா? எனக்கும்  அவை என்ன என்று வெகு காலம் தெரியாது.தெரியாததை எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டாமா?

ஆரண்யம் என்றால் காடு, வனம் , ஒன்று அங்கே  யாராவது தவம் செய்ய போகலாம், அல்லது  சபித்தால்  கட்டளையிட்டால் போய்  ராமர் போல் பாண்டவர்கள்  போய்  வாழ வேண்டும்.   அல்லது காட்டிலாக்காவில் உத்யோகமாக இருந்தால் போய்த்தான் தீரவேண்டும். என் தாத்தா ஜம்புநாதய்யர்  காட்டிலாக்காவில் பல வருஷங்கள் வாழ்க்கையில் கழித்தவர்.  விக்கிரமாதித்தனுக்கு நாடாறு மாச காலம் காடாறு மாசம்.

யார் தொந்தரவும் இல்லாமல் தவமிருக்க ரிஷிகள் தேடியது காடு. கூட்டத்தில் பஜனை, பாராயணம் செய்யலாம். ஆத்மா வை தனிமையில் தான் தேடவேண்டும்.  ஆரணியம்  தனித்தது  அல்ல. அங்கும்  ஜீவராசிகள் உண்டு. அவை நம்மைப் போல பேசாது. சிலது  கொன்று விடும், தின்று விடும். 

நம் தமிழகத்தில் வேலூர்  ஆற்காடு  பக்கத்தில்  இப்படி தனிமையான  ஆரண்ய க்ஷேத்ரங்கள் ஆறு இருக்கிறது. ஷடாரண்யம்  என்று பெயர்.

ஆற்காடு மாநிலத்தில் ரிஷிகள் வாழ்ந்த இடமாக அடையாளம்   காட்டப்பட்ட  ஆறு  இடங்களில்  அற்புத  சிவாலயங்கள் உள்ளன.
பால  குஜாம்பாள் சமேத  வசிஷ்டேஸ்வரர்  ஆலயம்,  வேப்பூர்  கிராமம்
வடிவுடையம்மை சமேத  வால்மீகேஸ்வரர் ஆலயம்,  மேல்விஷாரம்.
தர்மசம்வர்தனி சமேத  பாரத்வாஜேஸ்வரர் ஆலயம்,  புதுப்பாடி  கிராமம்
திரிபுரசுந்தரி சமேத அத்திஸ்வரர் ஆலயம், குடிமல்லூர் கிராமம்    திரிபுரசுந்தரி சமேத அத்திஸ்வரர் ஆலயம், குடிமல்லூர் கிராமம்  
அகிலாண்டேஸ்வரி சமேத  அகஸ்தேஸ்வரர் ஆலயம், வன்னிவேடு கிராமம்கௌதமேஸ்வரர்  கிருபாம்பிகை ஆலயம், காரை கிராமம்
எல்லாமே பழங்கால கோவில்கள்.  ஆலய  சிவன்  பெயர்களை பார்த்தாலே  சப்தரிஷிகலில்  ஆறு  பெயர்கள்  தெரியும். இவர்கள் உபாசனை செய்த, தவமிருந்த ஸ்தலங்கள்.  பாலாற்றின் இரு மருங்கிலும் உள்ள  ஆலயங்கள்.

வேப்பூர்  பாலாறு  தென்கரையில் உள்ளது.  ஆர்க் காட்டிலிருந்து  3 கி.மீ.  வேலூரிலிருந்து நிறைய பஸ் போகிறது.
ஒரு காலத்தில் நிறைய  வேப்ப  மரங்கள் நிறைந்த  காடு. ஆகவே தான் வேப்பூர் என்று பெயர். இங்கே சிவன் கோவில் ஆயிரம் வருஷத்துக்கு முந்தியது. பின்னர் வீர சம்பன்ன சம்புவராயர்   புனருத்தாரணம் பண்ணி  கட்டிய  மகாமண்டபம், அர்த்த மண்டபம், மூலவர சந்நிதிகள்  இப்போதும் உள்ளது.  மகரிஷி வசிஷ்டர்  ஸ்தாபித்த  சிவலிங்கம்.   நிற்கும் வசிஷ்டர் சிலையை  கோவிலில் காணலாம்.  சிவனுக்கு அதனால் வசிஷ்டேஸ்வரர் என்று பெயர். அம்பாள்  பாகுஜாம்பிகை.  வழக்கம்போல் தெற்கு பார்க்கும் தக்ஷிணாமூர்த்தி, மற்றும் செல்வ விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தேவசேனாவுடன். சரபேஸ்வரர்  சப்தமாதாக்கள் , காசி விஸ்வநாதர்  வீரபத்திரர்  சனீஸ்வரர் காலபைரவர்.  இது ஒரு குருஸ்தலம்.

மேல் விஷாரம்  வேப்பூரிலிருந்து 3 கிமீ. தூரம்.  எட்டி மரங்கள் நிறைந்த காடாக இருந்த ஸ்தலம்.  விஷ விருக்ஷ வனம் என்று  பெயர்  காலம் செல்லச் செல்ல  விஷாரம் ஆகிவிட்டது.   வால்மீகி முனிவர் இங்கே இருந்து தவம் செயது  சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததால் சிவனுக்கு  வால்மீகேஸ்வரர் என்று பெயர். அம்பாள் வடிவுடை அம்மன்.  வால்மீகி கோயிலில் சிலையாக நிற்பதை காணலாம்.   ஆயிரம் வருஷத்திய கோவிலில் இதுவும் ஒன்று.

ஆற்காட்டிலிருந்து  6 கிமீ. தூரத்தில்  பாலாறு தென்கரையில் உள்ள இன்னொரு   ஷடாரண்ய க்ஷேத்ரம்  புதுப்பாடி . மாமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்ததால் ஆம்ரவனம் என்று பெயர்.  1600 வருஷங்கள் வயதான கோவில். இங்கே வந்து தவமிருந்த ரிஷி பாரதிவாஜர்.  அவர் ஸ்தாபித்த  சிவன் இங்கே  பாரத்வாஜேஸ்வரர் என்று பெயரோடு நமக்கு  அருள் பாலிக்கிறான்.  அம்பாள் அறம் வளர்த்த நாயகி என்ற அழகான பெயர் கொண்ட தர்ம சம்வர்த்தினி.
இங்கேயும்  நிற்கும் பாரத்வாஜ ரிஷியை தரிசிக்கலாம்.  மூலவர் சந்நிதி கஜப்ருஷ்ட ஆகம முறையில் கட்டப்பட்டுள்ளது.  கோஷ்டங்களில் பிராஹாரத்தில்  நர்த்தன கணபதி தக்ஷிணாமூர்த்தி மஹா விஷ்ணு.

நான்காவது சாதாரண்ய க்ஷேத்ரம்  குடிமல்லூரில் உள்ளது.  வாலாஜா  பட்டணத்துக்கும்  புதுப்பாடி கிராமத்துக்கும் இடையே  உள்ள ஊர் .பாலாற்றின்  வடகரையில்  உள்ள ஆலயம். 3  கி.மீ. உள்ளடங்கி  இருக்கிறது.   ஆறு ரிஷிகள் இந்த காடுகள் பக்கம் வந்து சிவனை பிரதிஷ்டை பண்ணினவர்களில் நாலாவது ரிஷி அத்திரி மகரிஷி  என்பதால் அவர் பெயரிலேயே  சிவலிங்கம்  அத்திரீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.   ஸ்வயம்பு லிங்கம்.  அம்பாள் திரிபுர சுந்தரி. அற்புதமான சிலை.    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் கம்பீரமான த்வஜஸ்தம்பம்.   இங்கே இன்னொரு சிவாலயமும் உள்ளது.  3 நிலை ராஜகோபுரம். சிவனுக்கு அங்கே  பூமிநாதேஸ்வரர் என்று பெயர். ஆலயத்தில் கணேசர்,முருகன், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மஹா விஷ்ணு ஆகியோரை  தரிசிக்கலாம்.
வாலாஜாபேட்டையிலிருந்து  பாலாற்றின் வடகரை வழியாக  2 கிமி. சென்றால்  வன்னிவேடு  என்கிற கிராமத்தை அடையாளம். அங்கே தான்  நமக்கு முன்பே  ஆயிரம் வருஷம் முன்பு  விலாசம் விசாரித்துக்கொண்டு  அகஸ்திய ரிஷி நடந்து வந்திருக்கிறார்.  அவர் நம்  போல் இல்லை. நாம் கோவிலுக்கு போவதில்லை, போனாலும் தான தர்மம் செய்வதில்லை மறந்து விடுகிறோம்.  அகஸ்தியர்  இங்கே  காடாக இருந்தாலும் பரவாயில்லை என்று உட்கார்ந்து ஒரு  சிவாலயம் கட்டிவிட்டார். சிவன் பெயர்  அகஸ்தீஸ்வரர்.   ஸ்வயம்பு லிங்கம்.   கை விரல்  ரேகைகள் லிங்கத்தின் மேல் படிந்திருக்கிறது என்கிறார்கள்.  அகஸ்தியர் போலவே  சிவலிங்கமும் உருவத்தில்  சின்னது.  அம்பாள்  அகிலாண்டேஸ்வரி. இங்கே  அம்பாள்  ஆவுடை மேல் நின்று தவம் செய்யும் கோலம்.   இந்த இடம் வன்னிமரங்கள் நிறைந்த காடாக இருந்தததால் வன்னிக்காடு வன்னிவேடு ஆகிவிட்டது. வன்னிமேடு என்றும் சொல்கிறார்கள்.   ஆயிரம் வருஷமாக இந்த கோவில் பிரகாரத்தில்  விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சனி பகவான் தரிசனம் தருகிறார்கள்.  மண்டபத்தில் சரபேஸ்வரர்,  சைவசமய குரவர்கள்  நால்வர் நிற்கிறார்கள். 
ராணிப்பேட்டையிலிருந்து  2 கி.மீ. சென்றால் இன்னொரு பாலாறு வடகரை  கிராமம் தான் காரை.   காரை என்று ஒரு தாவரம் இங்கே படர்ந்திருந்ததால் ஊரின் பெயரிலும் படர்ந்து விட்டது.  இங்கே வந்த ரிஷி கௌதமர்.  உட்கார்ந்திருப்பதை  கோவிலில் காணலாம்.   கௌதமர் ஸ்தாபித்த  ஸ்வயம்பூ லிங்கம்.  சுவாமி பெயர்  கௌதமேஸ்வரர், அம்பாள்  க்ருபாம்பிகை.
வேலூர்  ராணிப்பேட்டை  வாலாஜாபேட்டை  ஒருநாள்  போகவேண்டும் இந்த  ஆறு ஆரண்ய க்ஷேத்ரங்கள் ரிஷிகளை எல்லாம் தரிசித்து  அருள் பெறவேண்டும் . அடுத்த மாதம் போகலாம் என்று ஒரு எண்ணம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...