Sunday, November 13, 2022

KNOWN ADVICE

 தெரிந்ததை மறக்காதே..-  நங்கநல்லூர்  J K  SIVAN 


எல்லோருக்கும் தெரிந்ததையே  மீண்டும் சொல்வதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. அட, என் மனதில் இருப்பதை அப்படியே  இந்த பயல் எழுதி இருக்கிறானே என்று தோன்றும் அல்லவா?  நான் உள்ளம் கவர் கள்வன் இல்லை. என் பெயர் சிவனாக இருக்கலாம். அதற்காக  நான் அந்த உ.க.க. ஆகமுடியுமா?

சரி, அப்படி என்ன எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை நான் சொல்லப்போகிறேன்?  இது தான் ஐயா அது.

அப்பா அம்மாவை மனம் நோகும்படி பேசாதே.  மரியாதை குறைவாக நடக்காதே.. அவர்கள் ஓய்ந்து போய் கடைசியில் உன்னிடம்  அடைக்கலம் கொண்ட  தளர்ந்தவர்கள்.  உங்கள் குழந்தைகள்  நீ செய்வதை, சொல்வதை  பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஞாபகம் இருக்கட்டும்.  ஒருநாள் எதிர்காலத்தில் உனக்கும் அதே நடக்கலாம்.

வாழ்நாளில் பெரும்பகுதி பணம் தேடுவதில், சேமிப்பதில் சென்றுவிடுகிறதே. பணம் சேர்த்த பின் சுகமாக வாழலாம் என்று நினைக்கும்போது உடல் வியாதிகளை  ஒவ்வொன்றாக  ஏற்றுக்கொள்ளும்.  சேர்த்த பணம் சேமிப்பு எல்லாம் ஆஸ்பத்ரிக்கும் வெள்ளை கோட்டுக்கும் போய்விடும். அப்புறம் எப்படி  சுகமாக வாழ்வது? எங்கே நிம்மதி? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

''ஆமாம்,  ஒரு பைசா லஞ்சம் வாங்காமல், திருடாமல் ஏமாற்றாமல் நேர்மையாக வாழ்ந்தேன் என்ன சாதித்துவிட்டேன்? என்று புலம்பாதே.  நேர்மையாக வாழ்வதே ஒரு பெரிய சாதனை என்பதை மறவாதே. நேர்மை சோதனைகளை தந்தாலும் கடைசியில் நேர்மையே உன்னை காப்பாற்றும். கைவிடாது.

கோபம் பாபம்  சண்டாளம்.  எதற்கெடுத்தாலும் வள்  வள்  என்று  விழாதே.  கோபப்படாதே, சந்தோஷம் ஓடிவிடும்.குடும்பம் சிதறும். நட்பு விலகும்.  

''எங்க வீட்டுக்காரர்  ஒரு அம்மா கோண்டு'' என்று மனைவிகள் சிலர் புலம்புகிறார்கள். ஒரு உண்மையைப்  புரிந்துகொள்.  உனக்காக  அவள்  அப்பா அம்மாவையே  பிரிந்து வந்தவள். உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம் நீயும் தான் உண்மையாக இருக்க வேண்டும்.

பிறருக்கு தீங்கு செய்வதில்  சிலருக்கு படு குஷி. அதுவே  திரும்பி அவர்களுக்கு வரும் என்பதை   மறந்துவிடுகிறார்கள். வட்டியும் முதலுமாக  வலியும் வேதனையும் காத்திருக்கிறது.

வாழ்க்கை என்றால் பிளஸ்  மைனஸ் கலந்தது தான். நிறையும் குறையும் நிறைய இருக்கும். நிறையை மட்டும் நினைத்து சந்தோஷமாக இரு.   அப்போது தான் வாழ்க்கையை  வெல்ல முடியும். 

யாரோடும் உன்னை கம்பேர் compare  பண்ணாதே.  உனக்கும் கீழே உள்ளவர்  கோடி என்ற பாட்டு ஞாபகத்தில் இருக்கட்டும்.

வாழ்க்கை  பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ளது. அதில் நீ செய்த புண்யம் பாவம் மட்டுமே உன்னோடு அடுத்த பிறவிக்கு வருகிறது என்று கண்ணன் கீதையில் சொன்னது நமக்காகத்தான். அர்ஜுனனை சாக்கிட்டு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...