Wednesday, November 2, 2022

THIRUPPORUR TEMPLE






திருப்போரூர்  சிதம்பர ஸ்வாமிகள்  -  
#நங்கநல்லூர்_j_k_SIVAN


மஹாபலிபுரம் பக்கம்  ECR  சாலை போக வேண்டுமானால் திருப்போரூர்  வழியாக  போகும் வழக்கம்.  அங்கே  அற்புதமான குளம் அதை ஒட்டி முருகன் ஆலயம் கண்ணில் படும். ஒரு நிமிஷம் நின்று வணங்கிவிட்டு போவேன். அந்த ஆலயத்திற்கும் பல முறை சென்றிருக்கிறேன். சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம்  திருப்போரூர் என்பதால்  பிரசித்தமான இந்த ஆலயத்திற்கு  உங்களில்  பலர்  சென்றிருப்பீர்கள்.

திருப்போரூரில் 400  வருஷங்களுக்கு முன்  சிதம்பர ஸ்வாமிகள் என்று   ஒரு ஞானி இருந்தார்.  அவரை   மதுரை மீனாட்சியின் செல்லக் குழந்தை என்பார்கள்.  ஏனென்றால், மீனாட்சி அருளால் சிறுவயதிலிருந்து கவி பாடும் திறன் அவருக்கிருந்தது. அவர் இயற்றியது தான் ஸ்ரீ மீனாட்சி பிள்ளைத் தமிழ்.

கோயம்புத்தூரை சேர்த்த அவிநாசி ரெட்டியாருக்கு புத்ர பாக்யம் இல்லை.  ஒருநாள் அவர் வீட்டுக்கு ஒரு சிவபக்தர் யோகி  குமாரதேவர் வருகிறார். ''நீயும் உன் மனைவியும் இந்த விபூதியை உட்கொள்ளுங்கள். புத்ர பாக்யம் ஏற்படும்'' என்று ஆசிர்வதித்தார்.  பிறந்த குழந்தை தான் சிதம்பர ஸ்வாமிகள். குமார தேவரிடமே பாடம் கற்றார். குமாரதேவரின் குரு  சாந்தலிங்க ஸ்வாமிகளின் ஆசியும் பெற்றார். குமார தேவரிடம்  21 தீக்ஷை பெற்று ஞானியானவர். தியானத்தின்
 போது அடிக்கடி மயில் சிறகு விரித்து ஆடுவதன் காரணம் என்ன என்று குரு  குமாரதேவரிடம் கேட்கிறார்.
''நீ உடனே மதுரை சென்று மீனாட்சியை வழிபடு.. '' என்கிறார் குறு குமாரதேவர்.   குரு உபதேசம் அவரை மதுரை சென்று அங்கயற்கண்ணி புத்திரனாக மாற்றிவிட்டது.  அம்பாள் மயிலுக்கு பதிலாக  அவர் கண் முன் நர்த்தனம் ஆடினாள் . ''மீனாக்ஷி கலிவெண்பா''  பிறந்தது.  கட்டாயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய நூல்.

“சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே, சேயிழையே!
காராரும் மேனிக் கருங்குயிலே! –ஆராயும்
வேதமுதல் ஆகி நின்ற  மெய்ப்பொருளே! மின் ஒளியே
ஆதிபராபரையே!அம்பிகையே! –சோதியே!”

என்று கடகட வென்று  தமிழ் ஓடுகிறது. எளிதில் புரிகிறது.

"அன்ன நடைச்சி, அருமறைச்சி, ஆண்டிச்சி
கன்னல் மொழிச்சி, கருணைச்சி- பன்னுதமிழ்
வாய்ச்சி, சடைச்சி, வடிவுடைய மங்கச்சி,
பேய்ச்சி, இளமுலைச்சி, பேதைச்சி - காய்ச்சியபால்
வெண்ணெய் மொழிச்சி, வெளிச்சி, வெளி இடைச்சி
அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி"

என்றெல்லாம்  குழந்தையை  நாம் திருட்டு குட்டி, பொல்லாது,  நாக்குட்டி, பூனைக்குட்டி என்று கொஞ்சுவது போல் பலவாறாகப்  பார்த்து மனமாரப் போற்றி  பரவசமடைகிறார் சிதம்பர ஸ்வாமிகள்..  

மதுரை மீனாட்சி ஒருநாள் சிதம்பர ஸ்வாமிகள் கனவில் தோன்றினாள்.
‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளினாள், ''யுத்தபுரி'' தான் போரூர்.  திருப்போரூரில்  முருகன் கோவில  அப்போது  கிடையாது.   யாரைக் கேட்டாலும்   ''இங்கே  முருகன் ஆலயம் கிடையாதே''  என்றார்கள்   அங்கே இருந்த  வேம்படி விநாயகர்  கோவிலைத்தான்  காட்டினார்கள்.   அந்த கோவிலை ஒட்டி ஏராளமான பனைமரங்கள் வளர்ந்த காடு.  பனங்காட்டில் பாலன் முருகனைத் தேடி  சிதம்பர ஸ்வாமிகள் அலைந்தார்.      
''முருகா  உன் கோவில் எங்கேடா?''  என்று   தேடினார்.  அருகே விருத்தாசலத்தில்    தனது  குரு குமார தேவர் முக்தி அடையப் போகிறார் என்ற   உணர்வு  வந்து அங்கே சென்று அவரை  தரிசிக்கிறார்.  கிளியனூரில் ஞானம்மை எனும் பெண்ணுக்கு ளாசி, அப்புறம் பொம்ம பாளையத்தில்  சிவஞானபாலைய சுவாமிகளோடு ஏழுநாட்கள் இரவு, பகல் பாராமல் விவாதம்.  
ஒருநாள்  கனவில் குரு  குமாரதேவர்  தோன்றி  விபூதி அணிவிக்கிறார்.  துல்லியமாக  முருகன் கோவில் இருந்த இடம் தெரிகிறது. குருவின் பாதார விந்தங்களில் விழுந்து எழுந்ந்தார்.   குரு  அடையாளம் காட்டிய இடத்தில் தேடி அலைந் தார். பல்லவர்கள் கால  கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் தெரிகிறது.  ''ஆஹா  இதை  எப்படியாவது புனருத்தாரணம் செய்ய வேண்டும்''  என்று மனதில் வேண்டிக் கொண்டார் 

ஒருநாள்   பெண் பனை மரம் ஒன்றின் அருகே சுயம்புவாக  முருகன்  அவருக்கு  தென்பட்டான். ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் முருகன்  காணப்பட்டான்.  இந்த பாத்திரத்தை  இப்போதும் காணலாம்.. அள்ள  அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். பெரு மகிழ்ச்சியோடு அவனைத்   தனது   குடிசைக்கு கொண்டு போய் ஜாக்கிரதையாக  வைத்தார்.  அந்த  ஸ்வயம்பு   முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப் பெரு மானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.  பக்தர்களுக்கு விஷயம் தெரிந்தது.  ஆவரலில் அநேகரின் வியாதிகளுக்கு ஒளஷதமாக  முருகன் விபூதி கொடுத்தார். அநேகர் குணமடைந் தார்கள்.  காணீக்கையாக  முருகன் கோவில்  கட்ட நிதி,  பொருள்கள்  சேர்ந்தது.  

திருப்போரூரை   ஒரு காலத்தில்  ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன் மனைவிக்கு தீராத வயிற்று வலி. நவாப் சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி அவர் முருகன் அருளினால் அவன் மனைவிக்கு திருநீறு பூச, அவளுக்கு உடனே வலி நீங்கி, நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோவில்  வளாகம்.  ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே உள்ளது

திருடர்கள்  ஒருநாள் சுவாமிகள் குடிலில்  திருட வந்த போது  அவரைத் தாக்க கைகளை ஒங்க,  அவர்கள் கைகள்அப்படியே  நின்று  போனது. கண் குருடானது .   ஸ்வாமிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.  திருடர்கள் மன்னிப்பு கேட்டு, தாங்கள் திருடிய அனைத்து பொருள்களையும் கோவில் திருப்பணிக்கு சேர்ப்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி மேலும்  பக்தர்களிடம்  சென்றது .726 பாடல்களை கொண்ட  ''திருப்போரூர் சந்நிதி முறை '' பாடி நமக்கருளியிருக்கிறார். திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம்,  விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகியவையும்  அவர் இயற்றியவை .

மீனாக்ஷி   இட்ட பணியாக  ஸ்வாமிகள் மூலம்  நமக்கு திருப்போரூர் முருகன் கோவில் கிடைத்தது.  மூலவர் சந்நிதி அருகே மண்டபத்தில் தெற்கு பார்த்த   யந்திர ஸ்தாபனம்  இருக்கிறதே  அது  வேறு  எந்த  முருகன் கோவிலிலும் பார்க்க முடியாது.  ஸ்வாமிகளே அமைத் தது.  கூர்மம், அஷ்ட கஜங்கள் (எட்டு யானைகள்) அஷ்ட நாகங்கள், தேவ கணங்கள்  கொண்ட பீடம்.  அதன் மேல் இந்த  யந்த்ரம். சக்ரம்.    இதற்கான  விசேஷ பூஜை முறைகளை வழக்கப்படுத்தினார்.  

கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில்  கண்ணகப் பட்டு என்னும் கிராமம்  உள்ளது.    ஷண்முகனுடன் அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து தாக்கி னார்கள். ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணை யோடும் அவர்களை முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில் அகப்பட்டு) என்று பெயர் பெற்றது. .அங்கே ஒரு மடாலயம், ஒடுக்க அறை, பூஜை மடம் எல்லாம் அமைத்து அங்கேயே  ஸ்வாமிகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.  எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் குழுமினர். சிலர் தீக்ஷை பெற்றனர்.

1659 வைகாசி விசாக த்தன்று  மடாலயத்தின் ஒடுக்க அறைக்குள் இருந்து  சுரங்க வழியே அருகில் உள்ள சமாதிக் குழிக்குள், வழிபாட்டுப் பொருட்களுடன் சென்று வழிபாடு நடத்தி சமாதியின் உள்ளேயே அமர்ந்து பரிபூரணத் துவத்தை அடைந்தார்.  அவர் சமாதி அடைந்த  அதே நேரத்தில்  திருப்போரூர் முருகன் சந்நிதியில் மூலவரின் சந்நிதியில்  சிதம்பரம் சுவாமிகள் கூப்பிய கரங்களுடன்  நகர்ந்து  சுப்ரமணிய ஸ்வாமியோடு கலந்தது, ஐக்யமானதை  அன்று   முருகன் தரிசனம் செய்த பக்தர்கள்  பலர்  பார்த் தார்கள். எவ்வளவு  பாக்கியசாலிகள் அவர்கள்!

கண்ணகப்பட்டில்  யாரும் இதுவரை சிதம்பர ஸ்வாமி கள்  ஜீவ சமாதி என்றோ அதிஷ்டானம் என்றோ ஒன்றையும் ஏன் குறிப்பிடவில்லை???? மடாலயம் என்று மட்டும் ஏன் பெயர்??  என் கேள்விக்கு யாரும் அங்கே பதில் சொல்லவில்லை.

ஒடுக்க அறையில் நிஷ்டை, யோகம் முதலானவற்றை சுவாமிகள் இப்போதும் அனுஷ்டித்து வருவதாக ஐதீகம். எனவே, அவருக்குத் தொந்தரவு கூடாதாம். எனவே  வழிபாடு இல்லை.  ஒரே ஒரு  தீபம் மட்டும் 24 மணி நேரமும் சுடர் விட்டு எரிகிறது.  சுவாமிகள் பயன் படுத்திய சுரங்கத்தை  மேடையாக்கி  மூடிவிட்டார் கள்.இன்றும் அங்கே  அவர் உபயோகித்த  புலித்தோல்  ஆசனம், பாதரட்சை  இருக்கிறது. தரிசித்து வணங்கினேன்.


சென்னைக்கருகே காஞ்சிபுர வட்டத்தில்,  பழைய மஹாபலிபுரம் சாலையிலிருந்து கிழக்கு கரை சாலை போகும் வழியில் திருப்பத்தில்  திருப்போரூர்  சுப்ரமணியசுவாமி கோவில் தெரியும்.  சோழர் பல்லவ ராஜாக்கள் காலத்தை சேர்ந்த கோவில். 2ம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு (கிபி 1076) இவ்வூரை ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிர மணிய தேவர்'' ஆலயம் என்கிறது.   சந்நிதிகள் ப்ரணவமந்த்ரமான ''ஓம்'' வடிவில் அமைக்கப் பட்டுள் ளது ஆச்சர்யம்.

சுப்பிரமணியன் எனும் முருகன்,  தேவசேனாபதியாகி சூரனை எதிர்த்து  சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார். ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி. கந்தசஷ்டி கவசத்தில் ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார்.

தினமும் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரையிலுமாக இரண்டு வேளைகளில் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி தினங்களில் இரவு 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பஜனைகள் ஆகியவை சிறப்புற நடைபெறும். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பலர், அன்றிரவு இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் தரிசனம் முடித்து திரும்புகின்றனர். தவிர கிருத்திகை, ரோகிணி, விசாகம், பரணி ஆகிய நட்சத்திர தினங் களிலும் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக இருக்குமாம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...