Sunday, November 6, 2022

pesum deivam

 

பேசும் தெய்வம்  - நங்கநல்லூர்   J.K. SIVAN

''அடைக்கல'' சாமியார்

''வாழ வைக்கும்  தெய்வமே'' என்று மனம் நிறைந்து பக்தர்கள் இன்றும்  கத்துகிறார்கள். சும்மாவா? ஏன்?  தெய்வம் மண்ணில் பிறந்து நம்மோடு வாழ்ந்து இன்னும் அருவமாக   எண்ணற்ற இதயங்களுக்கு ஆறுதலாக இருப்பதால், அருள் புரிந்து தாயினும் மேலான அன்போடு அருள் புரிவதால்.  இப்போதே  இப்படி என்றால்  அந்த தெய்வம் கண்ணுக்கு தெரிந்து காஞ்சிபுரத்தில் தரிசனம் தந்த போது  கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவர்கள்  அருளுரையை காதார கேட்டவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள்.!  காஞ்சி மடத்துக்குப் போய்விட்டு நிம்மதி, திருப்தி, சந்தோஷம் இல்லாமல் திரும்பியவர்கள் கிடையாது.


மஹா பெரியவா அப்படி எத்தனையோ பக்தர்கள் வாழ்க்கையில் துக்க நிவர்த்தி, ரோக நிவர்த்தி, சோக நிவாரணம் இன்னும் எத்தனை எத்தனையோ பலன்களை கொடுத்ததை அவர்கள் குடும்பங்கள் கதை கதையாக சொல்கின்றன. அப்படி ஒரு அற்புதம் இப்போது சொல்கிறேன்..

மஹா பெரியவா  காஞ்சி மடத்தில் இருக்கிறார் என்று சேதி காதில் விழுந்தால்  பொதும் . தரிசிக்க பக்தர்களின் கூட்டம்  எப்போதும் அலைமோதிக்கொண்டிருக்கும்.

1960 களில் ஒரு நாள்  பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்ருந்தனர். ஒரு 13 -14 வயசு பையனும் அதில் உண்டு. 
கொஞ்சம் கொஞ்சமாக வரிசை நகர்ந்து பையனும் பெரியவா அருகில் இப்போது வந்து விட்டான். எல்லோரும் பெரியவாளிடம் தங்கள் குறைகளையும்  வேண்டுதல்களையம்  சொல்வதைப்  பார்த்துக்கொண்டே இருந்தவன் அவர் எதிரே நின்றபோது என்ன சொல்வது என்று தெரியவில்லை .

'' அடே பயலே, என்னடா விஷயம், எதுக்கு இங்கே  வந்திருக்கே?''
பையன் நமஸ்காரம் பண்ணினான். மெதுவாக தயங்கி தயங்கி தனது மனதில் கொட்டினான்.

'' சாமீ எனக்கு அப்பா கிடையாது! நான் ஒரு ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கிறேன்! என் அம்மாவும் தங்கச்சியும் கூலிவேலை செஞ்சு பொழச்சுக்க பாம்பேக்கு  வேலை சம்பளம் நிறைய கிடைக்கும்னு  போய்ட்டாங்க.  யாரோ ஒரு பெரிய கம்பெனி முதலாளி வீட்டுலே வேலை கிடைச்சுது.

ஒருநாள் அந்த முதலாளி வீட்டுலே வேலை செஞ்சிட்டிருக்கும்போது   எங்கம்மா  மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க. டாக்டர் கிட்டே தூக்கிக்கிட்டு போனாங்க . டாக்டர் அம்மா  செத்துட்டாங்க ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாரு. முதலாளி வீட்டுலே நல்லவங்க. எல்லா செலவும் அவங்களே செஞ்சு அம்மாவை கரையேத்திட்டாங்க. இப்போ என் தங்கச்சி மட்டும் தான் பாம்பேல அவங்க வீட்டிலே வேலை செஞ்சுகிட்டு இருக்கா. ஆனா இனிமே என் தங்கச்சியை அங்கே ''வேலைக்கு வேணாம் உங்க அண்ணன் கிட்டே சொல்லி உன்னை உங்க ஊருக்கு கூட்டிட்டுப் போச் சொல்லு'' ன்னு  சொல்றாங்க. நான் என்ன  செய்யரதுங்க.''

நானே  ஒரு  ஹாஸ்டல்லே படிக்கிறது ரொம்ப  கஷ்டமா இருக்கு.  தங்கச்சியை  எங்கே  எப்படி சாமி கூப்பிட்டு வச்சிக்கிறது? சாப்பாட்டுக்கு என்ன செய்றது?  ஒண்ணுமே தெரியலே சாமி. யாரோ சொன்னாங்க உங்களாண்ட போய்  சொல்லுடா  ன்னு  நேரா வந்துட்டேன். சொல்லிட்டேன்''

'' உனக்கு யாராவது சொந்தக்காரா இருக்காளா?''
''அப்படி  எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்லீங்களே.'

பந்த பாசம் நேசம் உறவு எல்லாம் துறந்த அந்த தெய்வீக சந்நியாசி கண்கள் துளிர்த்தன. சந்யாசிகள் கண்ணீர் பூமியில் விழக்கூடாது. ததும்பிய ஜலத்தை காஷாய வஸ்த்ரத்தால் ஒற்றி துடைத்தார்.''சந்த்ரமௌலீஸ்வரா''

மஹா பெரியவாளின் தீர்க்க பார்வை பையன் மேல் விழுந்தது. சில நிமிஷங்கள் மௌனம். பையன் கண் கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'' இதோ பார்டா,   நீ கவலைப்படாதே.  இந்த மடத்துலயே ஒரு வாரம் தங்கிக்கோ.  அப்புறம் ஏதாவது ஒரு  பழி பண்ணலாம்.  சரியா?''

 அருகில் இருந்த ஒருவரை கூப்பிட்டு அந்த பையன் தங்க இடம், உணவு வசதிகள் பற்றி உத்தரவு இட்டார்.
ஒரு வார காலம் நெருங்கியது.
அன்று வெள்ளிக்கிழமை.
மஹா பெரியவாளைத் தரிசிக்க சில பெரிய  மனிதர்கள், பல வித  உத்யோகஸ்தர்கள்,  யார் யாரோ பக்தர்கள்  வந்திருந்தனர்.  அவர்களில்  நாலுபேர்  நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க அலுவலக உத்யோகஸ்தர்கள் .  ( NEYVELI LIGNITE CORPRATION) .  வழக்கமாக வரும் பக்தர்கள். நான்கு பேரும் பழ வகைகள், இனிப்பு வகைகள் என பலவித காணிக்கை களோடு  தரிசிக்க வந்தவர்கள். அவற்றை எல்லாம்  மஹா பெரியவா முன் வைத்து வணங்கினார்கள். .

அவர்களை  ஒரு நிமிஷம்  உற்றுப்  பார்த்த மஹா  பெரியவா   அருகே இருந்த ஒருவரைக் கூப்பிட்டார். 

''ஒரு வாரமா ஒரு பையன் இங்கே இருக்கானே அவனை அழைச்சுண்டு வா'' 
மடத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த அந்த ஏழைச் சிறுவனை அவரிடம் அழைத்து வந்தார்கள்.

தன்னை வணங்கி கை கட்டி நின்று கொண்டி ருக்கும் அந்த நான்கு அதிகாரிகளையும் ஒவ்வொருவராக உற்றுப்பார்த்த பெரியவாளுக்கு  என்ன தோன்றியதோ, அந்த நால்வரில் நான்காவதாக நின்றிருந்த  ஒருவரை   ஜாடை காட்டி  

 ''டேய் பையா என்கிட்ட சொன்னியே உன்  விஷயத்தை அப்படியே இப்போ  இவர் கிட்டே சொல்லு '' .
சிறுவனும் தன்கதையைக் கூறுகிறான்!

அதைக் கேட்ட அந்த அதிகாரி ஸ்ரீ மஹா  பெரியவாளின் முன்பு கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுதார். பெரியவா காலின் கீழ் எதிரே தடால் என்று விழுந்தார்.

''பெரியவா,  பெரியவா,  நான் என்னத்தை சொல்வேன். இந்த பையனுடைய தாயார் அவனுடைய  தங்கை  ரெண்டு பேருமே பம்பாயில் இருக்கும் என்னோட சொந்த அக்காள் வீட்டில்   தான் வேலையா இருந்தானு  இவன் சொல்றதிலிருந்து   தெரியறது. என் அக்கா சொல்லியிருக்கா யாரோ ஒருத்தி வேலை செய்ய வந்தா. ஒருநாள் வீட்டிலேயே நெஞ்சு வலி வந்து திடீர்னு செத்து போய்ட்டா. காரியம் எல்லாம் நாங்க தான் பண்ணோம். இப்போ அந்த சின்ன பொண்ணை எப்படி வேலைக்கு வச்சிக்கிறது. எப்படியாவது அதை அவளோட அண்ணன் கிட்ட  மதராசுக்கு  அனுப்பிடணும்னு என்கிட்டே கூட டெலிபோன் லே சொல்லி இருக்கா.  அது எனக்கு இப்போ ஞாபகம் வருது. 

நான் தான் இவன் ஹாஸ்டலை விசாரிச்சு   இவனோட ஹாஸ்டலுக்கு போன் பண்ணி   அவங்க மூலமா  ''ஒங்க அம்மா வேலை செஞ்சுகிட்டி ருக்கும்போதே இறந்து போய்டாங்க பா! நீ உடனே வந்து உன் தங்கச்சியை போய் கூட்டிக்கிட்டு வந்துடுனு சொன்னவன். மஹா பெரியவாளுக்கு இது எப்படி தெரிஞ்சுதுன்னு எ ஆச்சர்யமா இருக்கு தெய்வமே''.
ஓவென்று  அழுகைக்கு நடுவிலே விவரித்தார் அந்த அதிகாரி.

பரமாச்சார்யர் அவரை நோக்கி தலையை ஆட்டினார்.
''ஓ அப்படியா விஷயம். சரி நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணுவியோ?''
'' உத்தரவு கொடுங்க பெரியவா எது வேணாலும் நான் செய்யக் காத்துக்கிட்டுஇருக்கேன்'' என்கிறார் அந்த அதிகாரி.
''அப்படின்னா, நீ தான் இனிமே இந்த பையனையும் இவனோட தங்கையையும் ஒன்னோட ரெண்டு குழந்தைகள் மாதிரி பத்திரமா பாதுகாத்து வளர்க்கணும். அவா ரெண்டு பேரையும் நன்னா படிக்கவைக்கனும்! அந்த பொண்ணை ஒரு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் ! எனக்காக இத நீ பண்ணுவியாடா?''

இப்படி தெய்வமே மனமுருகி கேட்ட போது அந்த அதிகாரிக்கு  எப்படி இருந்திருக்கும்.  ஒரு கருங்கல்,பாறாங்கல்  தலை மேல் வைத்தாலும் அது வெண்ணெய் போல்  உருகி ஓடாதா?

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ,   அந்த அதிகாரி மஹா பெரியவாளின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

''பெரியவா இது எனக்கு உங்களால் கிடைத்த மிகப்  பெரிய  பாக்கியம். இது நான் செஞ்ச புண்யம்'' என்று வாக்களித்து தன்னுடனேயே அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார்.

சிறுவனும் அவன் தங்கையும் பத்திரமாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வளர்ந்தார்கள். நன்றாகப் படிக்க வைத்து அந்த பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணமும் செய்துகொடுத்துவிட்டார் அந்த அதிகாரி!

இது  கடல் மண்ணில் ஒரு சின்ன துளி.   மகாபெரியவாளின் பூரண அருட்கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் கணக்கிலடங்காத எத்தனையோ பேர். அந்த மகானின் அதிஷ்டானத்தில் இன்றும் கஷ்டமென்று வருபவர்களுடைய ள் மனக்  குறையெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஓடி ஒளிந்து விடுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  நானும் அதை அனுபவித்தவனாயிற்றே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...