Saturday, November 12, 2022

PESUM DHEIVAM


 

பேசும் தெய்வம்   #நங்கநல்லூர்_J_K_SIVAN

மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள் .
மந்திரமாவது நீறு. 

மஹா பெரியவா படம் முன் தீபம் எரிகிறது.  அமைதியான சூழ்நிலை, மேலே  மெல்லிதாக சத்தம் இல்லாமல்சுழலும் மின் விசிறி.  திறந்த ஜன்னல்கள் கதவு. தரையில் உட்கார முடியாது என்பதால் ஒரு நாற்காலிமேல் நான். மெல்லிதாக ஓம் நமசிவாய  சான்டிங் கம்பியூட்டரில்  ஓடுகிறதா பாடுகிறதா?  காதுக்கு மட்டும் இல்ல மனதிற்க்கும் ரம்யமாக இருக்கிறது. தியானம் பண்ணிக் கொண்டிருந்தவன்   மெதுவாக கண் திறந்து புன்னகைக்கும் அந்த  பரம்பொருளின் முகத்தை பார்க்கிறேன்.   ஆழ்ந்த  ஒளிவீசும் கருணைக்கண்கள். நரைத்த வெண்மையான புருவங்கள். பரந்த நெற்றி.                              
மஹா பெரியவா  என்றதுமே  பளிச்சென்று வெள்ளை வெளேர்  விபூதி  ஜொலிக்கும் நெற்றி தான் நம் எல்லோர்  கண் முன்னே தோன்றும். 

20. மஹா பெரியவா, விபூதி  அணிந்த உங்கள் தெய்வீக  ஒளி முகத்தைப் பார்த்ததும்  உங்களை  விபூதி பற்றியே சொல்லுங்கோ என்று கேட்க தோன்றுகிறது?

''சொல்றேன் கேளு.  விபூதின்னா  வெறும் சாம்பல் னு நினைக்கவேண்டாம்.  வெறும் மரக்கட்டையை எரித்து  சாம்பலாக்கினால் மட்டும்  விபூதி கிடைக்காது.  வேறு சில சாமான்களும் எரிந்து பஸ்மமாக மிஞ்சு கிறது.   ஞானம் என்கிற அக்னி மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து  பஸ்மம் தான்  மிச்சம். கீதையும் இதையே  சொல்கிறது.  ஞானம் தான்  எஞ்சியுள்ள பஸ்மம் .   

பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களை  பார்க்கிறே. ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போய் விடுகிறது. நாம்  ''சாயம் வெளுத்துப் போய்ட்டது''   என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின்  எஞ்சி இருப்பதே மெய்.  மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் –  அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியாக  மிஞ்சுகிறது.  விபூதி நாம் யார், நம் முடிவு எப்படி? என்பதை தெளிவாக்குகிறது.

விபூதி   சிவப் பிரசாதம்.  சிவன்  ''காடுடைய சுடலைப் பொடி  பூசிய உள்ளம் கவர் கள்வன்'' .  பஸ்மம் சிறந்த  ரக்ஷை’, `திருநீறு’   ஸமஸ்க்ரிதத்தில்   விபூதிக்கு  எத்தனையோ அர்த்தம் இருக்கு. அதிலே ஒன்று மனத்தூய்மை .

 அரிமர்த்தன பாண்டியனுக்கு அப்புறம்   அவன் வம்சத்தில் கி.பி   640 முதல் 670 வரை மதுரைக்கு ராஜாவாக இருந்தவன்   மாறவர்மன்  அரிகேசரி பாண்டியன் எனும்  'கூன் பாண்டியன்'.   அவன் மனைவி சோழர்குலத்தை சேர்ந்த  மங்கையர்க்கரசி.

 அரிகேசரி சமண சமயத்தின் மீது பற்று கொண்டு  சைவ மதத்தை வெறுத்தான்.  ராணி  மங்கையர்க் கரசிக்கும்  மந்திரி  குலச்சிறையார்  இருவரும்  விபூதி கூட  அணிய முடியாத அளவு  தீவிர  சமணப்பற்று ராஜாவுக்கு.  இருவரும்   மதுரை சொக்கநாதனிடம்  எப்படியாவது  அரிகேசரி பாண்டியன் திரும்ப சைவ மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று    வேண்டிக் கொண்டார்கள்.  பாண்டிய  நாட்டில் சமணர்கள் அதிகாரம் மேலோங்கி இருந்தது.    இந்நேரம் தான்  திருஞான சம்பந்தர் புகழ் எங்கும் பரவிக்கொண்டு வந்ததது. ராணியும் மந்திரியும்  எப்படியோ  பக்தர்களை அனுப்பி  பாண்டிநாட்டில் சைவ வீழ்ச்சிபற்றியும், சமண ஆதிக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். பாண்டிய ராஜாவை சைவத்துக்கு மீட்க  அரும்பாடு பட்டனர்.  

 சம்பந்தர்  "வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்'' எனும்  கோளாறு பதிகம் பாடினார்.  ஞான சம்பந்தர் காலில் விழுந்து ராணியும்  மந்திரியும் அழைத்தனர். அடியார்களோடு ஒரு மடத்தில் மதுரையில் தங்கினார். அன்றிரவே  சம்பந்தர் தங்கியிருந்த  சைவ மடத்துக்கு சமணர்கள் தீ வைத்தனர். மடம் தீப்பற்றி எரிவதைக்  கண்ட  சம்பந்தர் சிறிதும் பதட்டமில்லாமல்  சிவன் மீது பதிகம் பாடினார்.   மடத்தில் தீ அணைந்தது. ஆனால், அந்த தீ  பாண்டிய  ராஜாவைத்  தாக்கி திடீரென்று ராஜாவுக்கு  தாங்கமுடியாத உஷ்ணத்தோடு  எரிச்சல் சேர்ந்த  வெப்பு நோய்.  அனல் மாதிரி  ஜுரம், மூன்று நான்கு நாட்களாகியும்   ஜூர வேகம் உஷ்ணம் குறைய வில்லை. வலி பொறுக்கமுடியாமல் துடித்த ராஜாவுக்கு சமணர்களின் மருத்துவம் பலனளிக் கவில்லை . வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.   ராணிக்கும் மற்ற எல்லோருக்கும் அரண்மனையில் கவலை. கண்ணீர் வெள்ளம் உகுத்தார்கள். ராஜாவுக்கு வியாதி எப்படி குணமாகும்?. சமணர்கள் மருத்துவம் பலனளிக்க வில்லையே.

 ''நாதா,  ஞான சம்பந்தரை  அழிக்க சமணர்கள் வைத்த தீ தான் உங்களை வாட்டுகிறது. அவரால் தான் மடத்தை பாதித்த தீ அணைந்தது. உங்கள் நோயையும் தீர்ப்பார். நான் அவரை   வேண்டி  வரவழைக்கட்டுமா?உத்தரவு தாருங்கள் ''

''ஆஹா உடனே கூப்பிடு  சம்பந்தரை.  என் வெப்பு  நோயை அவர் போக்கினால், நான் சமணத்தை  விட்டு  விடுவேன். சைவ  மதத்தில் மீண்டும் இணைகிறேன்'' கூப்பிடு அவரை'.

அரண்மனைக்குள்  சம்பந்தர் காலடி பட்டதுமே  எங்கும் தென்றல் வீசியது.  கம்மென்று  பன்னீர் மணம் கமழ்ந்தது. பச்சிளம் பாலகனாக முருகனே நேரில் வந்தது போல்  சம்பந்தர் அரசனை அணுகினார்.  

''என்ன ஆயிற்று என்று வினவ, ராஜா தனது தாங்க முடியாத வலியை  முக்கி முனகி ஒருவாறு சொன்னான். அவர் காலில் விழுந்தான். அவன் தலையை அன்பாக ஆதுரமாக தடவி, அவன் எதிரே அமர்ந்தார். ஒரு சில வினாடிகள் சிலையாகி  கண்மூடி மதுரை சுந்தரேசன் மீனாட்சியை மனதில் வேண்டினார்.   கணீரென்று குரல் எழும்பியது. அரண்மனையில் பெரும் கூட்டம். ராஜாவை சுற்றி நிற்க இடம் இல்லை. எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

 `மந்திரமாவது நீறு’ என  துவங்கி  10  பாடல்கள் ஒலிக்க ,  ராஜாவின்  உடல் மீது தனது பட்டுக் கையினால்  சம்பந்தர்  விபூதியை  எடுத்துப்  பூசினார்.   சில நிமிஷங்களில்  இருந்த இடம் தெரியாமல்  ராஜாவின்  வெப்பு நோய் நீங்கியது.   நன்றிக்  கண்ணீரோடு  பாண்டியன்  சம்பந்தர் காலில்  விழுந்தான்.  அப்புறம்  அனல் வாதம் புனல் வாதம் போட்டிகள் நடந்தது.  கூன் விழுந்த பாண்டியன் நிமிர்ந்து நின்றான் `கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன்' ஆனான். சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான்.  

நான் சொல்ல வந்தது  10  திருநீற்றுப் பதிகங்கள் பற்றி.  முதல் ரெண்டு மூன்றாவது மனப்பாடம் செய்ய வேண் டிய பதிகங்கள்.

மந்திர மாவது நீறு
  வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
  துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
  சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
  திருஆல வாயான் திருநீறே.  1

வேதத்தி லுள்ளது நீறு
  வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
  புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
  உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
  திருஆல வாயான் திருநீறே.  2

முத்தி தருவது நீறு
  முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
  தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
  பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  3

காண இனியது நீறு
  கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
  பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
  மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  4

பூச இனியது நீறு
  புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
  பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
  வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
  திருஆல வாயான் திருநீறே.  5

அருத்தம தாவது நீறு
  அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
  வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
  புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
  திருஆல வாயான் திருநீறே.  6

எயிலது வட்டது நீறு
  விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
  பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
  சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
  தாலவா யான் திருநீறே.  7

இராவணன் மேலது நீறு
  எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
  பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
  தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
  ஆலவா யான்திரு நீறே.  8

மாலொ டயனறி யாத
  வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
   மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
  இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
  மாலவா யான்திரு நீறே.  9

குண்டிகைக் கையர்க ளோடு
  சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
  கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
  ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
  ஆலவா யான்திரு நீறே.  10

ஆற்றல் அடல்விடை யேறும்
  ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
  பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
  தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
  வல்லவர் நல்லவர் தாமே.

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன், திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர்  மேனிமேல் பூசிக் கொள் வது.  அழகு தருவது. நூல்களால் புகழப் படுவது.

குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

திருஆலவாயன் திருநீறு  மோக்ஷம் தருவது.  முனிவர்கள்  அணிவது.  நிலையானது. பெரியோர்கள் போற்றுவது.  சிவனிடம் பக்தி தருவது. சித்திகளை அளிப்பது. கண்ணுக்கினியது. அழகூட்டுவது. பெருமை தருவது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
 புண்ணியம் வளர்ப்பது.   பேச இனியது.  ஆசை அறுப்பது.   நோய் தீர்ப்பது. துன்பம் போக்குவது.  திரிபுரம் எரித்தது. இம்மை மறுமை  இரண்டிலும் இன்பம் தருவது. செல்வமாக  கருதப்படுவது. தூய்மையை அளிப்பது. ராவணேஸ்வரன்பூசி வரம் பெற்றது.  நல்லோர் மனதில் இடம் பெற்றது.  பராசக்தி  வடிவம்.  பாபம் போக்குவது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
மீண்டும் மனத்தில் திரை விழுந்தது.  அடுத்து  பெரியவாளை சந்திக்கும்போது என்ன கேட்பது என்பது பற்றி யோசிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...