Friday, October 29, 2021

ulladhu narpadhu

 


உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K  SIVAN--
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி --

28.  மூழ்கி முத்தெடுப்போம்.

எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காண வமுழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறிபிணதீர்ந்துடலம் 28

உங்களுக்கெல்லாம்  ஞாபகம் இருக்கிறதா?  முன்பெல்லாம்  வீடுகளில் குழாய் நீர்  கிடையாது. கிணற்று நீர் தான் குடிக்க குளிக்க எல்லாவற்றுக்கும்.  அநேக வீடுகளில் மின்சாரம் கூட கிடையாது. ஹரிக்கேன் லைட் வாழ்க்கை.  ஆனந்தமாக இருந்தது.

அப்போதெல்லாம்  சனி ஞாயிறுகளில்  தெருவில் ஒருவர் ''தூறு வார்ரது '' என்று  கத்திக்கொண்டே போவார்.  வீட்டில் கிணற்றில் தவலை , குடம், பாத்திரங்கள் விழுந்துவிட்டால் எடுத்துக் கொடுப்பார்.   கிணற்றில் மூழ்கி  எடுத்துக் கொடுத்து  கூலியாக  ரெண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய்  வரை  வாங்கிக்கொண்டு போவார்.  இது ஐம்பது அறுபது   வருஷங்களுக்கு முன்பு. நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு மூச்சுப்பிடித்து நீரில் மூழ்கி முத்துக் குளிப்பது போல், கிணற்றில் ஆழமாக, அடியில் விழுந்ததை எடுப்பது போல  மனதிற்குள் ஆழமாகப்  போய் அகந்தை, நான் எனும் அகம்பாவம் எங்கிருக்கிறது என்று  தேடி அப்புறப்படுத்த வேண்டும். நீரில் மூழ்கி தேடி எடுக்க நல்ல மூச்சுப் பயிற்சி வேண்டும்.  

உபாசனை என்றால்  கடினமான  அனுஷ்டானம், சாதனை. அது இருந்தால் விடாமல்  ஹ்ருதயத்தை அலச முடியும். அப்படி தேடினால் தான் SCAN  பண்ணினால்  தான் அகந்தை எங்கெல்லாம் உற்பத்தியாகிறதோ அதெல்லாம் காணாமல் போகும்.  ''நான் '' எனும் எண்ணத்தை, அகந்தையை,   அது உற்பத்தியாகும் மூலத்தில் தேடுவதை தான் ரமணர்  உபாசனை என்கிறார்.  இப்படி  விடாமல் ''நான்''  யார் எனும்  விசாரத்தில் மூழ்கும்போது  அஹங்காரத்தின்  சலனத்தில் தான் கவனம் இருக்கும். நீரில் மூழ்கியவன்  தவலை  குடம் எங்கிருக்கிறது என்பதில் தான் கவனமாக தேடுவான். 

நீரில் மூழ்குபவன் பேச்சையும்  மூச்சையும் அடக்கிக்கொண்டு தான் தேடுவான். நாம்  ஏகாந்தமாக,  எண்ணங்களை  அடக்கி அலையவிடாமல் உள்நோக்கி  ஆத்ம விசாரத்தை பழகவேண்டும். ஆஹாரம்  சுத்தமானதாக, சாத்வீகமானதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும்.  நீண்ட உறக்கம், கண் விழித்தல் வேண்டாம். 

தூக்கத்தால்,  எண்ணங்கள் அலைபாய்வதால், மனம் மூடத்தனம் மிகுந்ததாகி,  விவேகமில்லாமல்
துன்பம் அடைந்து  சீரழிகிறது.  அதை ஓடாமல் நிறுத்தி ஒரு நிலையில் வைப்பது முதலில் அவசியம். அதற்கு ஒரு சின்ன  உபாயம்.  மூச்சு, ப்ராணன்,  ஸ்வாஸம் , உள்ளே செல்வதையும், நிற்பதையும், வெளியே வருவதையும், நிதானமாக கவனித்துவந்தாலே மனம் அதில் மட்டும் ஈடுபடும்.  நிஸ்சலமாகும் . 

கரண்ட் இல்லாமல், இருட்டிலே  மணிக்கணக்காக உட்கார்ந்தோமானால்,  அங்கு இருப்பதெல்லாம் தெரிகிறது. 

உள்ளே புகுந்து அலசும்போது  ''நான்''  என்பதை தேடும்போது, மனம்  அது தேடும் இடம், வழி,  எல்லாம் தெரிந்து கொள்ளும், எதை தேடுகிறோம் என்றும் புரிந்துகொள்ளும். 

இப்படி  உறக்கமோ, எண்ணங்களோ இல்லாமல்,  தேஜோமயமாக  நிச்சலம்   அனுபவமாகிவிட்டால், அது தான் மஹா யோகம்.  தினசரி வாழ்க்கை உறவுகளில்  கூட  சலனத்தை நிறுத்த முடியும்.  அப்புறம் நினைத்த போதெல்லாம்  சஹஜமாக  மனம் நிச்சயமாகும். முன்பே சொன்னேனே  நிர்விகல்ப சமாதிநிலை. அது கை கூடும். அப்புறம் என்ன. சதானந்தம், சித்தானந்தம் தான். 

மேலே  tank   தொட்டியில் நீர்  அழுக்காக  நிறைந்திருக்கிறது.  மேலே ஏறி  தொட்டி உள்ளே குதித்து,  நன்றாக  தேய்த்து, அடைப்பானை பிடுங்கிவிட்டால் அழுக்கு நீர்  எல்லாமே  பீச்சியடித்துக்கொண்டு வெளியே ஓடும். அப்புறம் தொட்டி காலி. சுத்தமாகி,  நல்ல நீர் ஒன்றே  அதில் இருக்கும். அது தான் ஸார்  இந்த  ஆத்ம விசார பயிற்சி. அகந்தை, மனம் எல்லாம் காலியாகி,   ஹ்ருதயத்தில் ஆத்மா ஒன்றே  இருக்கும். அது தான் ஸாக்ஷாத்காரம். ஆனந்தம், சாந்தி , அம்ருதானுபவம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...