Sunday, October 17, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN -

பகவான் ரமண  மஹரிஷி 

23 . இந்திராவுக்கு  அறிவுரை 

நானென்றித் தேக நவிலா துறக்கத்து
நானின்றென் றாரு நவில்நானொன் –
றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்
கெழுமென்று நுண்மதியாநழுவும் 23

நன்குணர்ந்த  ஞானிகள் எப்போதும் இந்த தேகத்தை  ''நான்'' என்று சொன்னதில்லை.''இது''  என்று  தான் சொல்லி அறிகிறோம். ஏன் என்றால் நான் எனும்  ஆத்மா  இந்த தேகம் இல்லை என்று உணர்ந்தவர்கள். அதே போல்  நன்றாக  தூங்கியவனை அப்புறம்  எழுந்தபின் கேளுங்கள், ''தூங்கும்போது நீ இருந்தாயா?''  '' நான்'  இருந்தேனே, நான் இருக்கத்தொட்டு தானே  தூங்கினேன்''   என்கிறான்.உன் உடம்பு இருந்தது தூக்கத்தில் தெரியுமா?'' ''தெரியாதே, மரக்கட்டை மாதிரி   ப்ரம்மானந்தமாக  சுகமாக  தூங்கினேன்'' . என்கிறான்.   
உடம்பு தெரியாமல் பிரம்மானந்தம் எங்கிருந்து வந்தது?,  ப்ரம்மம் எனும் ஆத்மா உள்ளே இருப்பதை அது தெரியாமலேயே  உணராமலேயே சுகமான என்ற  அனுபவ  வார்த்தை வந்துவிட்டது. அதை உணர்ந்தால் உண்மையிலேயே  ஆத்மானுபவ சுகம் , பிரம்மானந்தம்  அடைவானே . 
இப்படி  இருக்கும் நம்மை  ஸ்ரீ ரமணர்  தங்கப்பேழையின் மேல் உட்கார்ந்துகொண்டு காலணா பிச்சை எடுப்பவன் என்கிறார்.

தேகத்தின் உள்ளே ஒடுங்கி உள்ள  ''நான்'' எனும்  அஹம் வ்ருத்தி  தோன்றியபிறகே  இந்த தேகமும், உலகமும் தெரியும். யார் இந்த  நான் என்று கூர்ந்து கவனித்தால் அஹம்வ்ருத்தி மறைந்துவிடும். 

''நான்  ஓடுகிறேன், பாடுகிறேன்'', என்றெல்லாம்  சொல்கிறோமே, அது  ஆத்மாவை முன்னிலைப்படுத்தி சித்தத்தில் தோன்றும்  விகற்பம். ஆத்மா எதிலும்  ஈடுபடுவதில்லை,  தேஹத்தாலும் தானாக எதையும் செய்யமுடியாதே .  நடுவிலே  இந்த  அஹம்  ஒரு பிரதிபிம்பம்.  அஞ்ஞான  நிலையில் மனம் ''நான்'' தேகம்  என்று கூறுகிறது. ஆத்மா இல்லாத வெறும் பிணமான தேகம் எதுவும் கூறுவதில்லை,  செய்வதில்லை. ஆகவே  அது ''நான்''  இல்லை.

ஆகவே  ஆத்மாவை  மறைத்து நிற்கும்  அஹம் வ்ருத்தி,யை  புரிந்துகொள்ள நல்ல உதாரணம் திரைப்படம் காண  ஆதாரமான திரை.

 திரைப்படம் ஓடுகிறது.  எதிரே அமர்ந்து நாம் காட்சிகளை காண்கிறோம். திரைப்படம் முடிந்துவிட்டது. வெறும் வெள்ளித்திரை மட்டும்  காண்கிறது. அந்த வெள்ளித்திரை  காட்சிகளைக்  காணும் போது  நம் கண்ணுக்கும் கருத்துக்கும்   காணோமே.   உண்மையில் நாம்  அந்த திரையைத் தான்  இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால்  அது தெரியவில்லை, அதன் மேல் படர்ந்த பிம்பங்கள்  தான் நம்மை ஈர்த்தன.   அதே கதை தான் இங்கே.

ஆந்திர பக்தர் G V சுப்ப ராமய்யா தனது ரெண்டு பெண்குழந்தைகளோடு ரமணாஸ்ரமம் அடிக்கடி  வருவார்.  அந்த குழந்தைகள் லலிதா, இந்திரா.  ரமணர் அறைக்குள் ஓடும். ஐந்து வயது லலிதா  ரமணரின் கைத்தடி, கண்ணாடி புத்தகம்  கமண்டலம் எல்லாம் எடுத்து விளையாடும்.   ஒருநாள்  அதன் விஷமத்தை பார்த்து ரமணர் 
''லலிதா, நீ என்ன பண்றே?'' என்று கேட்டார்.
'ஒண்ணும்  செய்யலே'' என்றாள் .'
'ஆஹா  அப்படியே  இருந்தால் அது தான் ஞானம்''  என்றார் .
 இத்தனை காரியம் பண்ணியும் நான் ஒண்ணும்  பண்ணலே  என்றாயே  அது தான் ஸத்யம் ''

இன்னொரு குழந்தை  இந்திராவுக்கு  3 வயது. அதற்கு  பகவான் 
''தேஹம் நாஹம்:     தேகம்  நான் அல்ல.'
'கோஹம்   : நான் யார்?''
ஸோஹம்  : நான் ஆத்மா   
என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சுப்பராமய்யா ''பகவானே, பெரிய  பண்டிதருக்கு கூட புரியாத  கஷ்டமான ஞானம்  இந்த சின்ன குழந்தைக்கு புரியுமா? என்று கேட்டார்.   பகவான் அவரைப் பார்த்து சிரித்து 

''என்ன ஒய்,  புத்தியினால் புரிந்து கொள்வது மட்டும் தான் அறிவோ?''  என்று கேட்டார். 

 அதன் ஆழம்  சுப்பராமய்யாவுக்குபுரிந்ததோ
  இல்லையோ?    
சில நாட்களுக்கு பிறகு சுப்பராமய்யா  ஊருக்கு கிளம்பும்போது,  '

'இந்திரா  எங்கே  ''தேஹம் நாஹம் .. சொல்லு '' என்றார் . குழந்தை அவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே  சொல்லியது. 
 ''மறக்காதே''   நீ உன் வீட்டுக்கு போ, நான் என் வீட்டுக்கு போறேன்''  என்று  கைத்தடியால் குழந்தையை  செல்லமாக  தட்டிக்கொடுத்து  விட்டு அருணாசல மலையை நோக்கி நடந்தார் மஹரிஷி .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...