Tuesday, October 12, 2021

KRISHNA STORIES


 


விஸ்வரூபனின் வாமன கதைகள் --  நங்கநல்லூர் J.K. SIVAN
 மதுரா விஜயம்


கம்சன் இதுவரை செய்த, எடுத்த, எல்லா முயற்சிகளும் தோற்றனவே!! கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பிய பலமும் பெயரும் பெற்ற அசுரர்கள், அரக்கர்கள், அரக்கி யாவருமே முடிவில் கிருஷ்ணனால் கொல்லப்பட்டு மறைந்தார்களே தவிர அந்த சிறு பயல் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறான். நாமே அவனையும் அவன் சகோதரன் பலராமனையும் சிங்கத்தின் குகைக்கு அழைத்தால் என்ன? அவர்கள் முடிவு மதுராபுரியில் என் கண்ணுக்கு முன்பு என்று விதி எழுதியிருக்கிறதே என்று கம்சன் கோட்டை கட்டிவிட்டான்.

ஒரு பெரிய தனுர் யக்னம் பண்ணப்போவதாக அறிவித்து அனைவரையும் அழைத்தான். கிருஷ்ணன் பலராமனுக்கும் அழைப்பு வந்து விட்டது பிருந்தாவனத்தில். கம்சன் 
அழைப்பை
 ஏற்று பலராமனும் கிருஷ்ணனும் மதுராபுரி சென்றனர். உறவை மீண்டும் பலப்படுத்த பாசத்தாலோ நேசத்தாலோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கம்சனுக்கு தெரியும். தன்னுடைய சாமர்த்தியம் மற்றவர்களுக்கு தெரியாது என்ற எண்ணம்.

"பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ டொய்ங், டொய்ங் டொய்ங் " என்ற ஒரு பழைய கால பாட்டு ஞாபகமிருக்கிறதா?. ரொம்ப பிரபலம் அது அக்காலத்தில். தெருவில் பல பேர் பாடிக்கொண்டு போவார்கள்.

மதுராபுரி அழகிய ஒரு பிரதேசம். தெருக்கள் விசாலமாக தேரோடும் வீதிகளாக காட்சியளித்தன. வரிசை வரிசையாக வீடுகள், ஒவ்வொரு தெருவிலும் ஆழ் கிணறுகள், பூச்சொரியும் வித விதமான மரங்கள் இரு பக்கமும். வீட்டு வாசலில் நிறைய பேர் நின்று கொண்டு கிருஷ்ணன் பலராமன் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த மாயா ஜாலச் சிறுவர்களை பற்றிய செய்தி தான் எங்கும் பரவி விட்டதே. இந்த இரு தெய்வீக குழந்தைகளைத்தான் கம்சன் கொல்வதற்கு ஆளுக்கு பின் ஆளாக அநேக ராக்ஷசர்களை அனுப்பினானாம். ஆனாலும் அவர்களை நெருங்க முடிய வில்லை யாமே!! அரக்கர் அரக்கியரை எல்லாம் எளிதில் கொல்லும் இந்த மா வீர சிறுவர்களை பார்க்கவே ஆர்வம் அவர்களுக்கு. மதுராவில் அனைத்து மக்களும் இந்த இரண்டு அழகிய இளம் சிங்கங் களையும்ஆவலோடும், அன்போடும் வரவேற்றனர். நிறைய பரிசுகள் குவிந்தன அவர்களுக்கு. மாலைகள், இனிப்புகள், தின்பண்டங்கள், உடை, ஆபரணம் எல்லாம் சேர்ந்து விட்டன.

தெருவில் அவர்கள் சந்தோஷத்தோடு நடந்து வந்து கொண்டிருக்கும் போது "கம்" மென்று வாசனை மூக்கை துளைத்தது நன்றாக அரைத்த சந்தனத்தின் மணம்.
"கிருஷ்ணா உனக்கு பிடித்த சந்தன வாசனையை மூக்கு நிறைய உள்ளே இழுத்துக்கொள்” என்று சிரித்தான் பலராமன்.
கிருஷ்ணன் திரும்பி பார்த்தான். சந்தனக்குழம்பு நிறைந்த பாத்திரத்தை வைத்திருந்த இளம் பெண் தான் அவள், ஆனால் முதுகு திருப்பி போட்ட "ட" மாதிரி வளைந்திருந்தது. பிறந்ததிலிருந்தே இந்த குறைபாடு இருந்ததால் அந்த பெண் துளிக்கூட அது பற்றி நினைக்க வில்லை. கிருஷ்ணன் தன்னை பார்ப்பதைக் கண்டவுடன் வணங்கினாள். அவள் கையில் ஒரு பெரிய தூக்கில் நிறைய சந்தனம் அந்த தெரு பூரா வாசனையை பரப்பிக் கொண்டிருந்த்ததே!

"அட, அழகான பெண்ணே, நீ தான் சந்தன "கம கம"வை வெள்ளமாக பரப்புகிறாயா? யார் நீ"?” எங்கே யாருக்கு இந்த சந்தனத்தை எடுத்துகொண்டு போகிறாய் ?"

"சாமி, ராஜா மாதிரி இருக்கீங்க, இன்னிக்கெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல" . வெளியூருங்களா? "

"ரொம்ப தான் சாமர்த்திய காரி நீ! நான் உன்னை கேட்ட கேள்விக்கு பதிலாக என்னையே கேள்வி கேட்கிறாயே ?" அது சரி உன் பேர் என்ன?

"அதெல்லாம் இல்லை சாமி, எனக்கு எதுங்க பேரு. கேலியாக என்னை  'த்ரிவக்ரா' . 'கூனிப் பொண்ணு' ன்னு  தான் எல்லாரும்  கூப்பிடறாங்க. முதல்லே ரொம்ப நாள் அழுகை அழுகையா வந்தது. அப்பறம் அவங்க பேச்சு ஏச்சு எல்லாமே பழகிப் போச்சு”

"எங்கே இவ்வளவு சந்தனம் கொண்டு போறே?" .

நான் கம்ஸ  மஹா ராஜா அரமனையிலே வேலை செய்றேன். ராஜாவுக்கு தினமும் சந்தனம் பூசர வேலைங்க"
"சந்தனத்தை எங்களுக்கு கொடுத்தாலாவது உனக்கு புண்யம்.   அங்கே எதுக்கு போய் செஞ்சது  போதாதுன்னு இன்னும் பாவம் சேர்த்துக்கறே ” என்று பலராமன் குறுக்கிட்டான்.

"புரியல்லீங்க.   உங்களைப் பாத்ததுமே  இந்த சந்தனம் எல்லாம் உங்களுக்கு தான்னு  தோணிடுச்சி''

அந்த பெண் கை நிறைய சந்தனம் எடுத்து பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் கழுத்து கை மார்பு முதுகு முகம் என்று ஏராளமாக பூசினாள். அவள் அன்போடு மனம் மகிழ்ந்து பூசிய சந்தன குழம்பு இரு பாலகர்களின் அழகுக்கு அழகு செய்தது. கண்ணன் மிக்க மனம் மகிழ்ந்தான். அவன் தான்
 சிறு சிறு பொருள்களை, சாதாரண வஸ்துக்களையே உள்ளன்போடு கொடுத்தால் உலகத்தையே பரிசாக கொடுப்பவனாச்சே!

அந்த பெண் சந்தோஷத்தோடு பூசிய சந்தனம் மிக்க மன நிறைவைக் கொடுத்ததில் என்ன ஆச்சர்யம். அவளுக்கு "பதில் மரியாதை" என்ன செய்யலாம் என்று பலராமன் யோசிக்கு முன்பே கண்ணன் தீர்மானித்துவிட்டான். அந்த பெண்ணை அருகில் அழைத்தான் அவள் கால் கட்டைவிரலை தனது காலால் அழுத்திக்கொண்டு அவள் இரு கன்னங்களிலும் இரு கைகளை வைத்துக்கொண்டு ஒரு தூக்கு தூக்கி விட்டான். நேர் கோடாக, அந்த கூன் விழுந்த பெண் நிமிர்ந்து நின்றாள்.

இந்த அதிசயத்தை அந்த தெருவில் பார்த்துகொண்டிருந்த மக்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் விழித்தனர். அந்த பெண்ணுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவே வெகு நேரம் ஆயிற்று. அவளுக்கு பேச்சு வரவே இல்லை. தான் நடுத் தெருவில் நிற்கிறோம் என்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை. அப்படியே கிருஷ்ணனை வாரி அணைத்துகொண்டாள்.

“ என் வீட்டுக்கு வா. என்னோடே இரு என் வீட்டில் உனக்கு நல்ல சாப்பாடு பண்ணி போடுகிறேன், வா” என்று கையை பிடித்து இழுத்தாள். கிருஷ்ணன் கை அவள் மேல் பட்ட அடுத்த கணமே அவள் திவ்ய ரூப சுந்தரியாக மாறிவிட்டாளே!!

இதற்குள் அந்த அங்காடியிலிருந்த அனைத்து வியாபாரிகள், மற்றும் சில்லறை பண்ட மாற்று பவர்கள், பெண்கள் ஆண்கள் அனைவரும் ஓடி வந்து விட்டனர். கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் தங்களிடமிருந்த விலை யுயர்ந்த பொருள்களை, வாசனை திரவியங்களை, வஸ்த்ரங்களை, வெற்றிலை பாக்கு தின்பண்டங்கள் அனைத்தையும் போட்டா போட்டியோடு முண்டி யடித்துக் கொண்டு யார் முதலில் தருவது என்று கிருஷ்ணனை நெருங்கிவிட்டனர். ஒருவழியாக அவர்களை சமாளித்து திருப்தி படுத்திக்கொண்டு கிருஷ்ணனும் பலராமனும் மேலே நடந்தனர்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...