Friday, October 8, 2021

ULLADHU NAARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN  --

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி

20.  தன்மய அப்பளம்.

காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல்
காணு மனோமயமாங் காட்சிதனைக் – காணுமவன்
றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த்
தான்கடவு ளன்றியில தாலுயிராத் – தான் கருதும் 20

அடாடா,  நான் ரொம்ப  புனிதமானவன். மனதால் நினைத்தால் எனக்கு பகவான் கண் முன்னே  தோன்றுவார் என்று சொல்பவன் ஆத்மாவை அறியாதவன்.  ஆத்மா  தான் பகவான். அது தான் ஸ்வயம் பிரகாசமான ப்ரம்மம். ஆத்மாவை கவனம் கொள்ளாமல் மனதால் நினைத்த ஒன்றை தரிசனம் செயகிறேன் என்பது  அகங்காரத்தின் விளைவு.  மனம் இல்லாதது தான் ஆத்மா.  ஆத்ம ஞானி மட்டுமே  பகவானைக் காண்பவன்.

ரமணாஸ்ரமத்தில் நடேசய்யர் என்று ஒரு பக்தர். சமையல் வேலை பார்ப்பவர்.  தினமும் பஞ்சாயதன பூஜை, கோசாலை அருகே பண்ணுபவர்.  விக்ரஹ ஆவாஹனம், அபிஷேகம், அலங்காரம் என்று முறையோடு செய்பவர். மூர்த்திகளுக்கு நைவேத்தியம் பண்ணும் சமயம் ரமண மஹரிஷி வருவார். தீபாராதனை  பெற்றுக் கொள்வார். சில சமயம்  தொட்டு கூட அனுக்ரஹிப்பார். ரெண்டு வருஷங்கள் இப்படி போயிற்று.  ரமணர்   நடேசய்யர் பூஜைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். நடேசய்யர் மகரிஷியிடம் சென்று ''ஸ்வாமி ஏன்  இன்று  பூஜைக்கு வரவில்லை?''என்றார்.
மகரிஷி என்ன பதில் சொன்னார்?
''நீ இன்னமுமா பூஜை செய்து கொண்டிருக்கிறாய்?'' எப்போது சித்தம் அந்தர்முகமாக திரும்பும்?''
நடேசய்யர் அதுமுதல் ஆத்ம ஞான விசாரம்  மேற்கொண்டு ஆனந்த நிலையில் இருந்தவர்.  எப்போது  தேகத்தை விடப்போகிறேன் என்று முன்பாகவே குறிப்பிட்டு சொல்லிவிட்டு  அந்த  நாளில், நேரத்தில் மறைந்தார்''

நாம் செய்யும் கர்ம வினைகள் நமது ஆழ் மனதில் குடி கொள்பவை. எண்ணற்ற தடைகளை உருவாக்குபவை.  நமது உடல் இந்த மாதிரி  எண்ணற்ற  முளைக்காமல், முளைவிடாமல் அமிழ்ந்து கிடைக்கும் கர்மவிதைகள் புதைந்த வயல்.   பலனை எதிர்நோக்காமல் கடமையை ஆற்றும் போது உடல் மறந்து போய்விடும். உடல் மீதுள்ள  பற்று, அபிமானம் மறந்து, மறைந்து போகும்.

நாம் எதைப்  பார்த்தாலும், செய்தாலும்  அதை மூன்றாக  பிரித்து அறிகிறோம்.  செய்பவன், செய்யப்படுபவது , செயல். அதே  போல்  பார்ப்பவன், பார்க்கப்படுவது,  பார்வை.  இதை  த்ரிபுடி என்கிறோம்.  மூன்றுமே  ஒன்றுதான் என்று அறியும்போது இதை நிகழ்த்துவது ஆத்மா என்ற ஒன்றே தான் என புரியும்.  அதற்கு தான் ஆத்ம சாக்ஷாத்காரம் என்று பெயர்.

ஒரு பக்தர்  ரமணமஹரிஷியிடம் ''ஸ்வாமி எனது சாதனையால் ஒரு தடவை   சிவ தர்சனம் கிடைத்தது. மறுபடியும் கிடைக்க என்ன வழி?'' என்று கேட்டார்.

''சிவன் ரூபத்தை கண்டது யார்?  எந்த இடத்தில் உதித்து  சிவன் எங்கே மறைந்தார்?   ''நான் உண்டு'' என்ற உணர்விலே ,  சிவனும், சிவனைக் கண்ட ''நானும்'' , தரிசனம் என்ற செயலும் நடந்தது.  இந்த  த்ரிபுடியில்  '' நான்''  யார்  என்ற  ''தானே''  சிவன் மற்றது வேறொன்றுமில்லை என அறியமுடியும்.   மனம் தான் சகலத்துக்கும் காரணம், அது ஒடுங்கினால்  அகந்தை அகன்றால் ஆத்மா  ஒன்றே  இருப்பது புரியும். 

இன்னொரு பக்தர்'' பகவான் அருணாச்சலேஸ்வரர் உங்கள் முன் ப்ரத்யக்ஷமானால்  அவரிடம் என்ன கேட்பீர்கள்?''  என்று வினவினார்.
''இந்த ப்ரத்யக்ஷப்படும் விளையாட்டு வேண்டாம் '' என்பேன். சிவன்  ஆத்ம ஸ்வரூபம்.உருவமற்ற ஞானமயம்.   
அவரவர்  உபாஸனைக்கேற்ப  தங்கள் இஷ்ட தேவதைகளை மனதில் கொண்டு, கண்டு, ஆனந்தப்படுகிறார்கள். அதனால் தான் வெவேறு ரூபங்களில் பெயர்களில்  தங்கள் மனதுக்கு பிடித்தது போல்  தேடி  மகிழ்கிறார்கள்.  ஒன்றே பலவாக காண்பது இது தான்.   ''தான்''  எனும் வஸ்துவை கவனிப்பது தான் ஆத்மஞானம். இந்த அனுபவத்தை தான் ஜீவன் முக்தி என்பார்கள். 

பாகவதத்தில்  ஒரு ஸ்லோகம் ''ததஸ்தா: க்ருஷ்ண சந்தேஸைர் வ்யபேத விரக  ஜ்வரா:  உத்தவம் பூஜ்யாஞ் சக்ருர்  ஞாத்வா ஆத்மானம்  அதோக்ஷஜம்''

''தனது பிரிவால் வாடி வருந்திய கோபியர்களுக்கு கண்ணன்  உத்தவர் மூலமாக  ஆத்ம தத்துவத்தை போதிக்க   செய்கிறார்.  அதை கிரஹித்த பரம பக்தைகளான  கோபியர் பூர்ண ஞானிகளாகிறார்கள் க்ரிஷ்ணனை  ஆத்மஞானமாக அறிகிறார்கள்''

ஒரு விஷயம்.  ரமண மஹரிஷி  மறைந்ததும் சிஷ்யர்கள் பலருக்கு துக்கம்.ரமணர் போதித்த   தேஹம்வேறு ஆத்மா வேறு என்று புரிய  நேரம் பிடித்தது. 
''எல்லாம் ஓடுங்கனும் , அடங்கணும்  சாந்தமாகணும்  ''தான்'' மட்டுமே எஞ்சி நிற்பதே  உண்மையான  யோகம் .'' என்று அடிக்கடி கூறுவார். அப்போது யார்  யாரை பூஜிப்பார்கள் . இருப்பதே ஒன்று தானே. தானே தானாக புசிக்க தன்மய  அப்பளம்'' என்பார் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...