Saturday, October 23, 2021

sri lalitha sahasranamam


 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -   நங்கநல்லூர்   J.K. SIVAN

ஸ்லோகங்கள்  41-42.    நாமங்கள்  112-125.

भवानी, भावनागम्या, भवारण्य कुठारिका ।
भद्रप्रिया, भद्रमूर्ति, र्भक्तसौभाग्य दायिनी ॥ 41 ॥

Bhavani bhavanagamya bhavaranya kutarika
Bhadrapriya bhadra-murti rbhakta-saobhagyadaeini -41

பவாநீ பாவநாகம்யா பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர் பக்தஸௌபாக்ய தாயிநீ || 41

भक्तिप्रिया, भक्तिगम्या, भक्तिवश्या, भयापहा ।
शाम्भवी, शारदाराध्या, शर्वाणी, शर्मदायिनी ॥ 42 ॥

BhaktI-praya bhaktI-gamya bhakti-vashya bhaya-paha
Shanbhavi sharadaradhya sharvani sharmadaeini – 42

பயாபஹா |ஸாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயிநீ பயாபஹா |
ஸாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயிநீ || 42

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம விளக்கம்  (112-125):

* 112 * भवानी -பவானி -
இனி வரும் நாமாவளிகள் ஸ்ரீ லலிதாம்பிகை எப்படி பக்தர்களை பரிபாலிக்கிறாள் , அனுக் ரஹிக்கிறாள் என்பது பற்றி வரும். ''பவ '' மஹாதேவ உருவ சிவனைக் குறிக்கும் சொல். ''அனா'' என்றால் உயிரூட்டுவது. எனவே அம்பாள் சிவனாகவே அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரூட்டுகிறாள். மன்மதனுக்கு பவன் என்று ஒரு பெயர். அவனுக்கு உயிரளித்ததால் அம்பாள் பவானி.

* 113 *  भावनागम्या -பாவநாகம்யா'' -
அம்பாளை மனதால் உணரவேண்டும். மனவழிபாடு, உள் வழிபாடு, தியானம், எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றே தான். அந்தர்முக தியானம் என்பது இதைத்தான். பாவனா என்று பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறோமே அது அம்பாள் மேல் உள்ள பக்தியால். வெளிமுகமாக நாம் செய்யும் ஸ்ரீ சக்ர பூஜை, நவாவரண பூஜை எல்லாம் நம்மை உள்முகமாக கொண்டுசெல்ல படிக்கட்டுகள். இதை நான் சொல்லவில்லை. ''பாவனோபநிஷத்'' சொல்கிறது.

* 114 *  भवारण्यकुठारिका -   பவாரண்ய குடாரிகா --
குடாரி என்பது தான் கோடாரியாக மாறிவிட்டது. வெட்டும், பிளக்கும் கருவி. அம்பாள் ஒரு கோடாலி எனும் கோடரி மாதிரி. உலக துன்ப வாழ்க்கையை நம்மிடமிருந்து பிளந்து வெட்டி அகற்றுபவள். ஆரண்யம் என்றால் காடு. எந்த காட்டை அழிக்கிறாள் ? சம்சார காட்டை. ஆசை, பேராசை, பொறாமை, சுயநலம் எல்லாம் மரங்களாக வளர்ந்த வாழ்க்கையின் துன்பக்காடு. இதை வெட்ட கோடாரி வேண்டாமா?

* 115 *   भद्रप्रिया -   பத்ரப்ரியா --
 ''பத்திரம் பத்ரம், ஜாக்கிரதை '' என்று சொல்கிறோமே எதற்கு? எதையோ பாதுகாக்க.
அம்பாள் 
பக்தர்களை இரவும் பகலும் அனுதினமும் பத்திரமாக பாதுகாக்கிறாள். அதில் அவளுக்கு பிரியம் என்கிறது இந்த நாமம்.

* 116 *  भद्रमूर्तिः - பத்ரமூர்த்திர் --
 எதெல்லாம் புனிதமானதோ, அதெல்லாம் அம்பாள் தான். ப்ரம்மம் பரிசுத்தமானது. அது அம்பாள். விஷ்ணுவை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ''மங்களானாம் ச மங்களம்'' (நன்மை பயக்குவதில் எல்லாம் சிறந்த நன்மை) என்று சொல்வது இதையே தான்.

* 117 *  भक्तसौभाग्यदायिनी - பக்த ஸௌபாக்ய தாயிநீ --
சக்தி உபாசகன், அம்பாள் பக்தன் கொடுத்து வைத்தவன். மேலே மேலே கொண்டுவந்து சாய்க்கிறாள் அம்பாள். இந்தநாமத்துக்கு அர்த்தமே வேண்டாம். சகல சௌபாக்யமும் தருபவள் என்று புரிகிறதா?

* 118 *  भक्तिप्रिया -  பக்திப்ரியா -
பக்தி இருந்தால் போதும் அது தான் எனக்கு பிரியம் என்கிறாள் அம்பாள் இந்த நாமத்தின் மூலம். பக்தி மட்டுமா பிடிக்கும். பக்தி பண்ணும் பக்தன் அதில் சேர்க்கை தானே! சிவானந்த லஹரி ஒரு இடத்தில் ஸ்லோகத்தில் ஊசி எப்படி காந்தத்தை நாடுமோ, கொடி எப்படி மரத்தை சுற்றுமோ, நதி எப்படி கடலை ஆவலாக தேடி ஓடுமோ, அப்படி சிவனின் தாமரை திருவடிகளை தேடி ஓடும் மனது அந்த ஈடுபாடு தான் பக்தி. என்கிறது.

* 119 *  भक्तिगम्या - பக்திகம்யா --
அவளைத்தேடி நீ போகவே வேண்டாம். உண்மையான பக்தி உன்னிடம் அவள் மேல் இருந்தால் அது போதும். தாய் சேயைத் தேடி ஓடி வருவாள். பக்தியால் அடையக்கூடியவள் என்று இந்த நாமம் பிரம்மத்தை உணர்ந்தவன் மோக்ஷத்தை அடைந்தவன் என்கிறது சாந்தோக்ய உபநிஷத். அம்பாள் தானே ப்ரம்மம். நிறைய தடவை திருப்பி திருப்பி சொல்கிறேனே. அவளை மனத்தால் ஏகாக்கிரமாக ஒன்றி நினைத்தால் அது தான் தியானம். ''அர்ஜூனா , இதோ பாரடா, என்னை எவன் பூரண பக்தியோடு சரணடைகிரானோ அவன் என்னோடு வைகுண்ட வாசன்'' (Bhagavad Gīta XVIII.55) “ பரிபூரண எந்த கலப்படமுமில்லாத பக்தி ஒன்றே என்னை பக்தன் உணர வைக்கும். நான் யார் எப்படி இருக்கிறேன் என்று நேரடியாகவே புரியவைக்கும்,'' என்கிறான் பகவத் கீதையில். (XI.54)

* 120 *  भक्तिवश्या - பக்திவஸ்யா --
அம்பாளை நம்மால் கட்டிப்போட முடியும் என்கிறார் ஹயக்ரீவர். பரிபூர்ண பக்தி என்கிற கயிறு அது. வசியம் என்றால் கவர்வது. இந்த சொல் துஷ் கார்யங்களுக்கு மட்டுமே பயன்படுவது நமது துரதிர்ஷ்டம். பக்தியை பற்றி கூடை கூடையாக புத்தகங்கள் நிறைய இருக்கிறது. படித்தால் மட்டும் போதுமா? சர்க்கரை என்று லக்ஷம் தடவை படித்து, அதன் படத்தை புத்தகத்தில், டிவியில், யூட்யூபில் பார்த்தால் போதுமா. துளியூண்டு நாக்கில் பட்டால் தானே அதன் ருசி புரியும். எத்தனை பக்கங்கள் படித்து என்ன பிரயோஜனம். பக்தியை பண்ணிப்பார். நீ ரசிப்பாய், ருசிப்பாய்.

*121* भयापहा -பயாபஹா - 
நல்ல நாமம்.அம்பாள் பயத்தை போக்குபவள். பயம் ஒன்று தான் மற்ற ஜீவன்களையும் நம்மையும் பிரிக்கிறது. பயம் நம்மை விட்டு போக வைக்க முடியும். அதற்கு  உண்டான திறமை, வழி, நம்பிக்கை, நமக்கு புரியும். மற்ற ஜீவராசிகள் பயத்தில் வாழ்ந்து முடிகிறது. பிரம்மத்தை புரிந்துகொண்டவன், தெரிந்து கொண்டவன். பயத்திற்கு அப்பாற்பட்டவன். எல்லாம் நானே, நானே ப்ரம்மம்., எல்லாம், பிரம்மமே எல்லாம் என்றால் பயம் எதனிடமிருந்து வர முடியும். எது பயம் தரும்? என்ன இருக்கிறது பயப்பட? என்னிடம் எனக்கே பயமா? புரிகிறதா? ஆதிசங்கரரும் சரி, துர்வாச முனிவரும் சரி இருவருமே பயப் பட வேண்டியது அடுத்தடுத்து நிகழும் ஜனனமரணம் பற்றி தான். இதிலிருந்து தான் விடுபடவேண்டும் என்கிறார்கள்.

*122*  शाम्भवी -ஸாம்பவீ -
சிவனை சம்போ, சம்பு என்பதால் சிவை சாம்பவி என்ற நாமம் பெறுகிறாள். பக்தர்களுக்கு எல்லா சௌகர்யங்களையும் அருள்பவள். குண்டலினி வழிபாட்டில் சாம்பவி முத்திரை என்று ஒன்று உண்டு. அர்ச்சனை, நைவேத்தியம் எல்லாம் பண்ணும்போது கை விரல்களால் சில முத்திரைகள் காண்பிக்கவேண்டும்.  சக்தி உபாசகர்கள் தீக்ஷை பெறும்போது சக்தி தீக்ஷை, மாந்த்ரீ தீக்ஷை, சாம்பவி தீக்ஷை என்று உண்டு.

*123* शारदाराध्या - சாரதாராத்யா -
 சாரத ராத்திரி என்று நவராத்ரியை சொல்வது வழக்கம். சாரதா என்றால் சரஸ்வதி. வாக்தேவி. சக்தி உபாசனை இரவில் தான் நடக்கும். தாந்த்ர  சாஸ்திரத்தத்தில் இது தான் வழக்கம். விஷ்ணுவை காலையில் தொழவேண்டும். சிவன், அம்பாளை இரவில் வழிபட வேண்டும்.

* 124 *  शर्वाणी -சர்வாணீ -
சர்வம் சிவமயம் என்றால் எல்லாமே சிவன். சிவன் என்றால் சிவையான ஸ்ரீ லலிதாம்பாளையும் சேர்த்து தான்.ஆகையால் ஸர்வாணி. சர்வ வியாபி என்று நாமம்.

*125*   शर्मदायिनी -சர்மதாயிநீ --
சர்ம என்றால் வெகு சந்தோஷம் என்று அர்த்தம். சந்தோஷத்தை வழங்குபவள் ஸ்ரீ லலிதா.தெய்வத்தாய் அவள். குழந்தைகளாகிய நம் மேல் எவ்வளவு பிரியம். வாரி  வழங்கமாட்டாளா?

சக்தி ஆலயம்:
 வடக்கே  பீஹார் தேசத்தில்  மங்கள கௌரி ஆலயம் என்று  அம்பாளுக்கு ஒரு சக்தி பீடம் உள்ளது. பழம் பெரும்  ஆலயம்.  பத்ம  புராணம், வாயு புராணம், அக்னி புராணம்  எல்லாமே இந்த அம்பாளைப் புகழ்ந்து  சொல்கிறது.   தக்ஷ பிரஜாபதி எனும் தனது தந்தை கணவனான பரமேஸ்வரனை இகழ்ந்து அவமதித்ததில்  மனம் உடைந்து   அவன்  வளர்த்த யாகத்தீயில் குதித்து சாம்பலாகிறாள்.  இதை அறிந்த  சிவன்  தக்ஷன் மேல் கோபம் கொண்டு அவனது யாகத்தை அழித்து இறந்த சாம்பலான சதி  தேவியின் உடலை சுமந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.  அவளது உடல்  51  துண்டுகளாக பூமியில் விழுந்த இடங்கள் இன்றும் சக்திபீடங்களாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது.  அம்பாள் மார்பக பகுதி ஒன்று விழுந்த இடம்  மங்கள கௌரி  ஆலயம், பீகாரில் உள்ளது.
1500 வருஷங்களுக்கு முன்பு ஒரு சிறு குன்றின் மேல் அமைந்த ஆலயம் அந்த குன்றுக்கு  பஸ்ம கூட  பர்வதம் என்று பெயர்.   சிறிய வாயில். குனிந்து தான் உள்ளே செல்லவேண்டும்.  நாள் முழுதும் எரியும் அகண்ட தீபம் ஒன்று வரவேற்கும்.  எத்தனையோ நூற்றாண்டுகளாக தொடர்ந்து எரியும் அகண்ட தீபம் இது.   அருமையான சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த சுவர்கள்.  யாகம், ஹோமம் நிகழ்த்தும் குண்டங்கள் உள்ளன.  நிறைய  வைணவ  ஆலயங்கள் உள்ள பகுதி என்றாலும் சில சிவாலயங்களும் உள்ளன.அதிலொன்று தான்  மங்கள கௌரி  ஆலயம்.  இங்கே ஒரு விசேஷம் பக்தர்கள் தங்களுக்கு எதிர்காலத்தை உத்தேசித்து  தனக்கே  ஆத்ம  ஸ்ராத்த  பிண்ட சடங்கை இங்கே செய்து கொள்ள வசதி உண்டு.  நவராத்ரி ஒரு முக்கிய பண்டிகை. கிழக்கு பார்த்த ஆலயம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...