Sunday, October 10, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN


21 தானற்று நானற்றவன்.

''தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண
லென்னும்பன் னூலுண்மை யெனையெனின் - றன்னைத்தான்
காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற்
காணலெவ னூணாதல் காணவையுங் - காணும்''
இந்த உள்ளது நாற்பதில் பலமுறை சொன்னதையே திருப்ப சொல்கிறீர்களே என்று யாராவது கேட்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திருப்பிச் சொன்னாலும் புரிந்து கொள்ளமுடியாத விஷயத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
தன்னைத் தான் காண்பது என்றால் நாம் நம்மை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது மட்டும் தான் நமக்கு தெரியும், அல்லது நமது போட்டோவை, வீடியோவை பார்ப்பது. ஆனால் அது ''நான்'' அல்ல. மாறிக்கொண்டே போகும், அழியப்போகும் உடல் ''நான்'' அல்ல. நான் வணங்கும் தெய்வத்தின் தரிசனமும் எனக்கு கிடைத்தது என்றாலும் அது சரியல்ல. ஊர்வலத்தில், உற்சவத்தில் பார்க்கும் விக்ரஹம் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விழாவிலும் மாறிக்கொண்டே தான் இருக்கும். மாறாதது ப்ரம்மம். அது தான் தெய்வம். அதைக் காண முடியவே முடியாது நம்மால். அதைக் காண முடியும் என்றால் நாம் ஆத்ம தரிசனம் பெற்றுவிட்டோம் என்று அர்த்தம். அது தான் ''தன்னை''க் காண்பது. உடல் உள்ளம், மனம், அகந்தை அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிட்டால் எஞ்சியது அந்த பகவான் எனும் ஆத்மா. அதனால் தான் பகவான் பரமாத்மா எனப்படுகிறான். இதை அழகாக அருணகிரி நாதரும் பாடுகிறார்: ''யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தத்பரமே '' கிருஷ்ணன் ராக்ஷசர்களை வதம் செய்தான் முக்தி அளித்தான்'' என்று எழுதும்போது என்ன அர்த்தம்?
ராக்ஷஸர்கள் தவம் செய்தவர்கள். எல்லோராலும் தவம் செய்ய முடியாது. பலவருஷம் கடினமாக தவம் செய்து கடவுளிடமிருந்தே வேண்டும் பலம், வரம் பெற்றவர்கள். அவர்களை அவனே வந்து அவர்களது வரங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களினால் அவர்களை வதம் செய்தபோது, அவர்கள் உடல், உள்ளம், மனம் அகந்தை எல்லாம் அழிந்து விட்டபிறகு எஞ்சிய அவர்கள் ஆத்மா இறைவனோடு கலந்துவிடுவது தான் முக்தி.
நாம் பல ஜென்மங்கள் எடுத்து கர்ம பலன்களை அனுபவித்த பின் முக்தி அடையவேண்டிய நிலையில் இருப்பவர்கள். இதற்கு பல பிறவிகள் எடுக்கவேண்டிய அவசியம் உள்ளவர்கள்.
இந்த பிறவியிலேயே மஹான்கள் உடல், உள்ளம், மனம், அகந்தை, புத்தி, எல்லாம் தனதல்ல, தான் அல்ல என்று உணர்ந்து ஜீவன் முக்தர்கள் ஆகிறார்கள்.
அநேக பக்தர்கள் ரமணரை அணுகி அவரது உபதேசம் பெற்று ஆத்ம விசாரம் பெற்று பலனடைந்து இருக்கிறார் கள். இந்த லிஸ்டில் சில வெள்ளைக்காரர்களும் கூட உண்டு. இப்படி பகவானின் க்ருபைக்கு பாத்திரமான பக்தர்களை முருகனார் என்ற மஹரிஷியின் பக்தர் (அவருடைய நிழலாக அருகே எப்போதும் இருந்தவர்) எப்படி வர்ணிப்பார் தெரியுயமா? ''யானை விழுங்கிய விளாம்பழம்''. ஏன் விளாம்பழம் ? வாழைப்பழம், மாம்பழம் என்று சொல்லவில்லை? யானை விளாம்பழத்தை விழுங்கினால் என்ன ஆகும் தெரியுமா? அதன் சாணத்தில் கலந்து விழும் விளாம்பழம் முழுசாக வெறும் ஓட்டுடன் மட்டும் தான் காணப்படும். உள்ளே இருந்த சத்து, சதைப்பற்ற பழம் எப்படியோ உறிஞ்சப்பட்டிருக்கும்.ஓட்டுடன் காலிப் பழம்! அப்படித்தான் ரமணரின் உபதேசம் பெற்றவர்கள் பார்ப்பதற்கு நம்மைப் போல மனிதர்களாக தென்பட்டாலும் உள்ளம், மனம் உடல் நினைவு அற்றவர்கள். சதா சிவத்தில் திளைத்த ப்ரம்ம ஞானிகள்.
ஒருவன் புலியைப் போய் பார்க்கிறேன் என்று ஒரு குகைக்குள் நுழைந்தான். அவனை அப்புறம் காணோம். அவன் தான் புளியைக் கண்டதும் அதோடு ஐக்யமாகிவிட்டனே. அதன் வயிற்றில் குடி கொண்டு விட்டானே. ஈஸ்வரசாக்ஷாத்காரத்தை அனுபவிக்க ஹ்ருதய குகையில் பிரவேசிக்கும் மனம் , புத்தி, அகந்தை, பக்தியில் திளைத்து, தன்னை இழந்து ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறது. நிறைய மஹான்கள் பிணத்தைச் சுடும்போது உபயோகமாகிய கொம்பு, தடி, பிணத்தோடு தானும் எரிந்து சாம்பலானதை உதாரணமாக சொல்வார்கள்.

இது தான் ஸார் ''தானற்று, நான் அற்ற நிலை'' என்கிற சாக்ஷாத் கார ஸ்வரூபம்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...