Thursday, October 28, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -   நங்கநல்லூர் J.K. SIVAN-
ஸ்லோகங்கள் 53-54  நாமங்கள் 205-218.

सर्व-सर्वयन्त्रात्मिका सर्व-सर्वतन्त्ररूपा मनोन्मनी ।
माहेश्वरी महादेवी महालक्ष्मीर् मृडप्रिया ॥ ५३॥
महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

ஸர்வ யந்த்ராத்மிகா ஸர்வ
தந்த்ரரூபா மநோந்மநீ |
மாஹேச்வரீ மஹாதேவீ
மஹாலக்ஷ்மீர் ம்ருடப்ரியா || 53

Sarva yanthrathmika Sarva thanthra roopa Manonmani
Maaheswari Mahaa devi Maha lakshmi Mrida priya

महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

Maha roopa Maha poojya Maha pathaka nasini
Maha maya Maha sathva Maha sakthi Maha rathi

மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக நாசிநீ |
மஹாமாயா மஹாஸத்வா  மஹாசக்திர் மஹாரதி: || 54

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (205 - 225) அர்த்தம்

சர்வேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகை எனும் காமாக்ஷி கையில் ஏன் கரும்பை வைத்துக் கொண்டிருக் கிறாள். அம்பாள் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கூட சாதகமாக்கிக்கொள்கிறாள் என்று புரிய வைக்கும் சம்பவம் அது.  

மன்மதன் காதல் கடவுள். காமன். அவன் சிவன் தியானத்தில் இருக்கும்போது தனது கரும்புவில்லில் ஐந்து புஷ்ப பாணங்களைத்  தொடுத்து சிவன் மேல் எய்துகிறான். மற்றவர்களாக இருந்தால் காமன் கணைகளால் அவன் வசப்பட்டு மதி மயங்குவார்கள். சிவன் தியானம் கலையவே யார் கலைத்தது என்று நெற்றிக்கண்ணால் (ஞானக்கண்) மெதுவாக எதிரே நோக்க அந்த ஞானத்தீ காமனை எரித்து சாம்பலாக்க, அவன் மனைவி ரதி ஓடிவந்து அம்பாளிடம் கதறுகிறாள். கணவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறாள். அம்பாள் யார்? சிவை. தனது கணவன் இட்ட தண்டனை அவள் இட்டது தானே? மீற முடியாதே. அதே நேரம் தாய் அல்லவா? பாசத்தோடு ரதிக்கு அருள்கிறாள்? எப்படி?

''மன்மதா, எழுந்திரு. உன் மனைவியிடம் சேர். உன் கரும்பு வில் இனி என் கையில் இருக்கட்டும். உன் புஷ்ப பாணங்கள் இனி உன் கரும்பு வில்லிலிருந்து புறப்படாது. அவை என் வசம் இருக்கும். இனி நீ உன் மனைவிக்கு அன்பு கணவன். அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவாய். உலகத்துக்கு பிரபஞ்சத்துக்கு நீ கரும்பு வில்லேந்தி கணைகள் வீசும் காமன் இல்லை. தேகம் இல்லாதவன்.  அநங்கன் .''

ரதி மகிழ்ந்து வணங்கி மதனோடு செல்கிறாள். மன்மதன் நமக்கெல்லாம் அநங்கன். உடல் இல்லாதவன். பஞ்ச இந்திரியங்களை கட்டுப்படுத்தும் மன்மதன் பாணங்கள் அம்பாளிடமிருந்து அவ்வளவு சுலபமாக வெளியேறாது.  இனி அம்பாளின் நாமங்களை தொடர்வோம்.


* 205 *  सर्वयन्त्रात्मिका --ஸர்வ யந்த்ராத்மிகா -
எந்த செப்பு, பித்தளை, தங்க வெள்ளி உலோக தகடாக, வேண்டுமானாலும் இருக்கட்டும்,  எந்தெந்த தெய்வத்தின் சக்தியை ஆகர்ஷிக்கும் யந்த்ரமாக இருந்தாலும்  இருக்கட்டும்.  அது ஸ்ரீ லலிதாம்பா வின் சக்தியாகவே தான் மிளிர்கிறது.

* 206 *  सर्वतन्त्ररूपा - ஸர்வ தந்த்ரரூபா -
தந்திரம் என்பது வழிபாடு. எந்த மந்த்ர தந்த்ர வழிபாடாக இருந்தாலும் அது அம்பாளையே குறித்து செய்ததாகும்.

* 207 *मनोन्मनी -    மநோன்மணீ  -
 நமக்கு எத்தனையோ எண்ணங்கள் மனதில் தோன்றுகிறதே அது எல்லாமே குப்பையாக அல்லவோ இருக்கிறது. ஆனால் அதற்கிடையே அற்புதமான சில எண்ணங்களும் கலந்திருக்கிறது. நிறைய மண்ணை மலைமலையாக தோண்டினால் தான் ஒரு  நூறு கிராம் வைரம் கிடைக்க வழி இருக்கி றது.  அது வேண்டுமானால் குப்பையும் மண்ணும் எறியப்படவேண்டும். நல்ல எண்ணங்களே மனத்தில் தோன்றும் மணி. மனோன்மணி. அதுவே அம்பாள். அவள் தான் மனோன்மணி, உண்மணி, என்கிறார் ஹயக்ரீவர். ஸ்ரீ ருத்ரம் சிவனை மனோன்மனன் என்கிறது. ரிஷிகளின் முத்திரைகளில் மனோன்மணி என்று தியான முத்திரை உண்டு.

* 208 *  माहेश्वरी -மாஹேஸ்வரீ -
 மஹேஸ்வரனோடு இணைந்த அம்பாள் தான் மஹேஸ்வரி.  பாகம் பிரியாள் . அர்த்த நாரி.

* 209 * महादेवी -  மஹாதேவீ -
 மஹாதேவனோடு ஐக்யமானவள் மஹாதேவி. அர்த்தமே தேவை இல்லை இதற்கு. மஹா என்றாலே வெகுவாக உயர்ந்த என்று பொருள். சிவனுக்கு எட்டு ஸ்வரூபங்கள்.   சர்வ ஈஸ்வரன் - பூமி. பவ: புண்ய நதிகள் போல ஜலரூபம், ருத்ரன்: அக்னி ஸ்வரூபம். எரிப்பவன் . உக்கிரன்: காற்று பீமன்: அகண்ட எல்லையற்ற ஜலசக்தி. சுனாமி போல் என்று வைத்துக்கொள்ளுங்கள், பசுபதி: ஆத்ம ஸ்வரூபம். ஈசானன்: சூர்ய ஸ்வரூபம். மஹாதேவன்: பிறைசூடி,   சந்திர ஸ்வரூபன். லிங்க புராணம் இதை சொல்கிறது. நான் அல்ல.

* 210 *महालक्ष्मी -     மஹாலக்ஷ்மி --
அளவற்ற செல்வங்களை வாரிவழங்கும் செல்வ ராணி ஸ்ரீ மஹா லக்ஷ்மி  தேவி,  விஷ்ணுபத்னி. மஹாலக்ஷ்மியை  பதிமூன்று வயது பெண்ணாக சொல்கிறது ஒரு புராணம். அதனால் தான் பதிமூன்றாம் நாளான திரியோதசி அன்று லக்ஷ்மி  பூஜை செய்வார்கள்.

* 211 *  मृडप्रिया - ம்ருடப்ரியா -
சிவனுக்கு ம்ரிடன் என்று ஒரு பெயர். சிவனின் தாண்டவ சப்தங்களில் உண்டான பெயர். அதை வாசிப்பதால் அதன் உருவானது தான் ம்ரித அங்கம் - மிருதங்கம் - நந்திகேஸ்வரன் சிவனின் தாண்டவத்துக்கு அந்த சப்தத்தை வாசித்து காட்டும் சொல் கட்டு.

* 212 * महारूपा -*மஹாரூபா --
அண்ட பகிரண்ட மகா பெரிய உருவம் கொண்டவள் அம்பாள். பெரியதில் பெரியது. சிறியதில் சிரியதானவள்.

* 213 * महापूज्या - மஹாபூஜ்யா -
எல்லோராலும் வழிபடப்படுபவள். எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் அவளை தான் வழிபட்டதாகும் அல்லவே. எல்லாமும் அவளே என்றபோது எந்த வழிபாடும் அவளுக்கு தானே.

* 214 * महापातकनाशिनी -  மஹாபாதக நாசிநீ --
எந்த தீய பாப செயலில் மாட்டிக் கொண்டாலும் அவற்றை நாசம் செய்து அதில் இருந்து பக்தனை மீட்பவள் அம்பாள். அதிக பட்ச பாபம் ப்ரம்மஹத்தி, பிராமணனை கொல்வது.

* 215 * महामाया - மஹாமாயா -
சிறு மாயை, பெரு மாயை எல்லா வித மாயைகளையும் அடக்கி ஆள்பவள் அம்பாள். அவளை அதனால் மஹா மாய ஸ்வரூபிணி என்பது. இந்த பிரபஞ்சமே மாயையால் உழல்வது. அவள் மாயையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிடில் உலகம் இயங்கமுடியாது. செயல் நின்று விடும்.

* 216 *महासत्त्वा - மஹாஸத்வா -
எல்லா ஞானமும் தானேயானவள். சத்வ குண சீலி.

* 217 * महाशक्तिः -மஹாசக்தி -
அதீத சக்தி படைத்தவள் அவள் பெயரே சிவசக்தி அல்லவா. சர்வ சக்தி கொண்ட அம்பாள் மஹா சக்தி என்று புகழ்ந்து போற்றுகிறார் ஹயக்ரீவர். ஆமாம் சந்தேகமென்ன என்கிறார் அகஸ்திய மகா ரிஷி.

* 218 *महारतिः*மஹாரதி:
உலகத்தில்  எதெல்லாம் நாம் சுகம் இன்பம் என்கிறோமே அதெல்லாம்  நாம் அனுபவிக்க வாரி வழங்குபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சந்தோஷபடுத்தும்  சந்தோஷி மாதா அல்லவா  அவள்?.

ஒரு  சின்ன விஷய தானம்.

அம்பாளின் கருணை ப்ரத்யக்ஷமாக எனக்கு கிடைத்ததற்கு  ஒரு சின்ன  உதாரணம்.  நான் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  விளக்கம் எழுத  ஆரம்பித்து முதல் கட்டுரை அனுப்பினேன்.  வயதான ஒரு  மெல்லிய குரல் டெலிபோனில் வந்தது. ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி, நாற்பத்தைந்து ஐம்பது வருஷங்களாக சக்தி உபாசகர்.   தினமும்  குறைந்தது ஏழு  எட்டு  மணி நேரங்களாவது லலிதா பூஜை வழிபாடு செய்துவிட்டு உண்பவர்.   இப்போது பொன்னேரியில் வசிக்கும்  அவர்  அடிக்கடி என்னோடு பேசுபவராகி விட்டார். மகா பெரியவளோடு நெருக்கமான ஒரு குடும்பம்.  மஹா பெரியவாளுக்கு ஆசானாக இருந்த  பருத்தியூர்  ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி குடும்பம்.  பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினியை  நான் தமிழில் எழுத  காரணமானவர்.
 
அவரிடமிருந்து  பஞ்ச பஞ்சிகா எனும் ஐந்து ஐந்து  தேவி நாமங்களை பற்றி அறிந்தேன். இந்த பூஜை நாமாவளி  நவாவரண பூஜைக்கு பிறகு உச்சாடனம் செய்வது.  குறிப்பாக இந்த ஐந்தைந்து பிரிவுகளும்   அதில் வரும் நாமங்களை மட்டும் அவரிடமிருந்து அறிந்ததை  விஷய தானம் செய்கிறேன்.
பஞ்ச பஞ்சிகா  பிரிவுகள்
1.லக்ஷ்மி பஞ்சகம்
2.கோச பஞ்சகம்
3.கல்பலதா பஞ்சகம்
4.காமத்துக்கா பஞ்சகம்
5.ரத்ன பஞ்சகம்
ஒவ்வொரு பஞ்சகத்திலும் வரும்   அம்பாளின் நாமங்கள்
1. லக்ஷ்மி பஞ்சகம்:      ஸ்ரீ வித்யா லக்ஷ்மி,  ஸ்ரீ லக்ஷ்மி,  கமலாலய  மஹா லக்ஷ்மி,   த்ரிசக்தி மஹாலக்ஷ்மி,  சாம்ராஜ்ய லக்ஷ்மி
2. கோச பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கோஸி ,  பரஞ்ஜோதி  கோஸி , பரா நிஷ்கள சாம்பவ கோஸி ,  அஜபா கோஸி  மாத்ருகா கோஸி
 3.கல்பலதா பஞ்சகம்:   ஸ்ரீ வித்யா கல்பலதா,  துக்தா கல்பலதா , ஸரஸ்வதி கல்பலதா , திரிபுரா கல்பலதா,  பஞ்ச பாணேஸ்வரி  கல்பலதா
4. காமதுகா பஞ்சகம்:  ஸ்ரீவித்யா மஹா திரிபுரசுந்தரி,  அமிர்த பீடேஸ்வரி,  சுதா, அம்ருதேஸ்வரி, அன்னபூர்ணா.
5. ரத்ன பஞ்சகம்:  ஸ்ரீ வித்யா ரத்னா, சித்த லக்ஷ்மி ரத்னா, புவனேஸ்வரி ரத்னா,  ராஜமாதங்கி ரத்நா , வாராஹி ரத்நா
ஸ்ரீ லலிதாம்பா நவாவர்ணமோ  சக்தி வழிபாடோ ஒரு பெரிய கடல்.  முத்துக்கள் நவமணிகள் நிறைந்தது.   அதன் ஆழத்தை, என் போன்று கடற்கரையில்  ஈர  மணலில் வீடு கட்டும் சிறுவர்கள் அறிய இயலாதது.

                                  ஒரு சக்தி ஆலயம்:     ஸ்ரீ  முண்டக கண்ணி  அம்மன்,  மைலாப்பூர்.

எல்லாவற்றையும் சிதைப்பது நமக்கு வழக்கம்.  பெயர்கள் பொருள்கள், புஷ்பம், பழங்கள், பண்பாடுகள், புஸ்தகங்கள், அனைத்துமே   எது கண்ணில் கருத்தில் பட்டாலும் அதை   த்வம்ஸம் பண்ணுபவர்கள்.  முண்டகம் என்றால் தாமரை, தாமரைக் கண்ணாள்  என்ற அழகிய பெயரை   விழி பிதுங்கியவள், பெருத்தவள் என்று முண்டக்கண் என்று கொச்சையாக சொல்லும்படியாக்கி விட்டார்கள். அரசாங்க  சுற்றுலாத்துறை பதிவுகள் கூடவா இதைத்  திருத்தக் கூடாது. பல நூறு வருஷங்களாக பிரபலமான ஒரு சென்னை நகர  ஹ்ருதயத்தில் உள்ள,   நகரை அலங்கரிக்கும்  ஒரு  அழகு இந்த முண்டகக்   கண்ணியம்மன்  ஆலயம்.  சக்தி வாய்ந்த  மாரியம்மன். தோஷ நிவர்த்தி பண்ணுபவள். பலவருஷங்களாக நான் சென்று வணங்குபவள் .சுயம்புவாய்த் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்யும் 1000 ஆண்டுப் பழைமையான முண்டகக் கண்ணியம்மன் கோயில்!
அம்பாள்  ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒருவள்.  சப்த கன்னிகைகளுள் ஒருவள் 
 மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மனும் முண்டகக்கண்ணி அம்மனும்  தான். அம்பாளின்  கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளைத் 
தாயாக ஏற்றுக்கொண்டு வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் தான் அதிகம்.  அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.

அதன்கீழ், நாக கன்னிகளின் விக்ரஹங்கள் .இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதேபோன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்  கூடிய மூன்றடி  கல்நாகமும் இருக்கின்றன. இந்தக் கல்லால மரம் தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அந்த நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் நம்பிக்கை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,  இந்த ஆலயம் இருந்த இடம் ஒரு குளம். அந்தக் குளக்கரையில்  புராதன  ஆலமரம். அதன் அடியில் ஸ்வயம்புவாக  அம்மன் வெளிப்பட்டாள் என்கிறார்கள்.  மூல விக்ரஹத்துக்கு  அம்மன்  உருவம்  இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.
 கருவறைக்கு  இருபுறமும் துவாரபாலகிகள்.  உள்ளே பிரமாண்ட பிரபையின் முன்  அம்பாள். மைலாப்பூர் செல்பவர்கள் ஒரு தரமாவது அம்மனை தரிசிக்கவேண்டும். அற்புதம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...