Wednesday, October 27, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K  SIVAN --

பகவான் ரமண மஹரிஷி .

27.   ஆத்மா  புரிகிறதா இப்போது?

நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை னானுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி னிற்பதெவன் சாமுன்னர் 27

நமக்குள்   ரெண்டு  ''நான்''  இருக்கிறது.  ஒன்று நிஜமான ஸத்யம் . இன்னொன்று  பொய் . அது தான்  சகல துன்பங்களையும் தருவது.   மூலமான ஸத்ய  ''நான் ''  
 மாதிரி   தோன்றுகிற   இந்த  பொய்   ''நான்'' என்பது அழிந்தால்  தான்  உண்மை ''நான்'' புரியும். ஆத்ம விசாரத்தால் தான், அதாவது அந்த  உண்மையான ஸத்யமான  ''நான் ''  யார் என்று விடாமல்  தேடிக்கொண்டு உள் புகுந்தால் தான்  அதை உணரமுடியும்.   அப்படி செய்யாத   போது  நான் தான்  ஆத்மா என்று யாரால்  சொல்லிக்கொள்ள முடியும்?. 

இந்த  செய்யுள்  அஹம்காரத்தை முதலில் ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கிறது. 

உபநிஷத்துகளின்  ஸாரம்  மஹா வாக்கியங்கள்.  அவை நாலு.  
1. ப்ரஞ்ஞானம்  ப்ரம்மம்   :    சுத்தமான  போத  ஸ்வரூபம் தான்  ப்ரம்மம் என்பது.
2  அஹம் ப்ரம்மாஸ்மி :  நான் தான்  ப்ரம்மம்.
3. தத்வம் அஸி  :  நீ தான் அது.
4.அயம் ஆத்மா ப்ரம்மம்:   இந்த  ஜீவனாக  காணப்படுவது  தான்  ப்ரம்மம்.

இந்த  நாலும்  ரமணரின் ஒவ்வொரு பாடலிலும்  தெளிவாகிறது.  மேலே சொன்ன பாடலை  மீண்டும் படியுங்கள் அது இப்போது புரியும்.  உண்மையான ஸத்யம் தான்  ''நான்''  .  அது நீ  தான்,  எப்போது?  என்றால் உன்னில்  ''நீ'' யாக தெரியும் அந்த அஹம்காரம் ஒடுங்கினால்  எஞ்சியிருப்பது.  அந்த உண்மையான  ஸத்யமான  ''நீ'' தான்  நான், மற்றும்  எல்லாமே. ஸர்வம்  ப்ரம்ம மயம்.

உண்மையான  ஸத்யத்தை  உணர்ந்த நிலையை  ஸஹஜ நிர்விகல்ப நிலை,  ஸாக்ஷாத் காரம்    என்கிறோம்.  பொய்யான  அஹம்காரம் உண்டாக்குபவை தான்   விகல்பம் .  நிர்விகல்பம் என்றால் அப்படிப்பட்ட  விகல்பம் இல்லாத ஆனந்த நிலை.  ப்ரஞானம்  எனும் ப்ரம்ம சமாதி நிலை. சமாதி என்றால் செத்துப்  போவதோ , அதற்கு பிறகு  அடக்கமோ  இல்லை.  ஆதி அந்தமில்லாத  ஞானமாகிய ஸத்யமான  ''நான்'' எனும்  ஆத்மாவுடன்  ஸமமாக இணைவது.  உயிருடன் இருக்கும் போதே   அடிக்கடி  இந்த நிலையை அனுபவித்துக் கொண்டு  வாழ்ந்தவர்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்பது  உதாரணம்.  அதிலேயே எப்போதும் லயித்துக் கொண்டிருந்தவர்  ஸ்ரீ பகவான் ரமணமஹரிஷி .இன்னும் எத்தனையோ மஹான்கள் மஹா பெரியவா மாதிரி. 

அஹங்காரத்தை அழிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஈஸ்வர பக்தியோ, ஸரணாகதியோ ,   குருவின்  வழி காட்டலோ ரொம்ப  உபயோகமாக இருக்கும். கொஞ்சம் சுலபமாகும். ஏனென்றால் முழுக்க முழுக்க ஓரு  சாதகன்  தானே  விடாமல்  விசாரத்தில்  லயித்து  இருந்தால் தான் இது சாத்தியம்.  நிறைய படிப்பதால், கேட்பதால் மட்டும் கிடைக்கும் விஷயம் இல்லை. உழைப்பு வேண்டும். 

ஒரு  பக்தன்  ரமணரிடம் ''எனக்கு நீங்கள் இப்போதே பகவானைக் காட்டணும்.  இல்லாவிட்டால் உங்கள் எதிரிலேயே என் கழுத்தை  நெறித்துக்  கொண்டு  என்னை கொன்றுகொள்வேன்'' என்றான்.
பகவான் பேசாமல் அவனை புன்சிரிப்புடன் பார்த்தார். அவன் சற்று நேரத்தில் தனது கழுத்தை
நெறித்துக் கொள்ள  முயற்சித்தான். அருகில் உள்ளவர்கள் தடுத்தார்கள்.  அவனது அருகில் அழைத்து  சிரத்தை தடவிக் கொடுத்து 
''நமக்கு எதற்கு  சுவாமி பகவான் எல்லாம் ?வேண்டாம். ''எனக்கு ''  பார்க்கணும்,  ''என்னை''  கொன்று  கொள்வேன்'  என்று சொன்னாயே  அது தான் உன்னை ஆட்டிவைக்கும் அஹங்காரம், அது எங்கே இருக்கிறது உனக்குள் என்று கண்டுபிடித்து அதை விரட்டிவிடு. அப்புறம் நீ சுவாமி, பகவானைப்   பார்க்கவே வேண்டாம், ஏனென்றால் நீ தான் அப்போது  சுவாமி, பகவானாகவே  ஆகிவிடுவாயே'' என்றார் .
இன்னொரு  பக்தன் ஒரு முறை  ''சுவாமி எனக்கு  தவம் பண்ண ஒரு பவித்ரமான இடத்தை காட்டுங்கள். அங்கே சென்று தவம் பண்ணுகிறேன்''  என்றான்.
''வந்த வழியே  போ''  என்கிறார்  பகவான்.  
நடந்து வந்த கிராமமோ, ஊரையோ சொல்லி அங்கே திரும்பிப் போ என்று அதற்கு அர்த்தம் இல்லை.  நீ தோன்றிய,  இந்த உலகத்துக்கு வந்த   பிறப்பிடம்  எதுவோ அதை  உள்நோக்கி தேடு. அதை அடைந்தால்  அது தான் தவப்பயன். 
பூமி  ஜலத்தில்  மூழ்கும்.  ஜலம்  அக்னியில் வற்றிப்போகும்.   அக்னி வாயுவில் அணைந்து போகும்.  வாயு ஆகாயத்தில் அங்கும் இங்கும் சுற்றி ஒடுங்கும்.   இந்த ஆகாயம் மனம் ஒடுங்கும்போது
 மறைந்து மேலே சொன்ன எல்லாமே  மறைந்துபோகும்.  அஹம்காரம் தான் மனதை வளர்க்கிறது.  தேகம் என்பது மனம் சவாரி செய்யும் கார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...