Tuesday, October 19, 2021

RUKMINI ABDUCTED


 கடத்தல் கல்யாணம்.  நங்கநல்லூர்  J K  SIVAN


குழந்தையும்  தெய்வமும் கொண்டாடும் இடத்திலே  என்கிறோம்.  குழந்தைகள் தெய்வங்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தெய்வீகம் உண்டு. வாய் பேசாமல், கண்களாலேயே கவரும் சக்தி இயற்கையாகவே  கடவுள் கொடுத்த ஒரு தனி பரிசு.   நாய் பன்றி பூனை, பறவைகள் எதுவுமே  இளம் பிராயத்தில் மனதை கவரும் காந்த சக்தி கொண்டவை.  அப்படி இருக்கும்போது  தெய்வமே  குழந்தையாக அவதரித்தால்  அதன் அழகை வர்ணிக்க முடியுமா?

சின்ன குழந்தையாக  இருந்த  போதே நிறைய  முனிவர்கள்,  ரிஷிகள்,ஏன், நாரதர் கூட  குண்டினபுர  பீஷ்மக ராஜாவின் அரண்மனைக்கு  வந்த போதெல்லாம்     ஏகமனதாக  என்ன சொன்னார்கள்?
"இந்த  குட்டி கிருஷ்ணனுக்கு என்று  பிறந்தவள்"    
அவர்கள் சொல்வதை எல்லாம் அந்த குழந்தை கேட்டு விட்டு ஒரு  கேள்வி கேட்டது
" கிருஷ்ணன் யாரு ?" 
அடிக்கடி கேட்டது. வளர்ந்தது.
அவனது கம்பீரம், அழகு,வீரம், சாதுர்யம், பழகும் இனிமை அன்பு, பண்பு, இதெல்லாம் நிறைய கேட்டு கேட்டு,  தெரிந்த பின்  அந்த பெண்ணின்  மனம் மெதுவாக அவனையே நினைத்து தன்னை அவன் மனைவி எனவே  எண்ண வைத்தது. 
கிருஷ்ணனுக்கும் அவளைப்  பற்றிய சகல விவரங்களும் போய் சேர்ந்தது.  இவளே எனக்கு மனைவியாக தகுந்தவள் என்று கிருஷ்ணனின்  மனம் ஏற்றுக்  கொண்டது.  
இதில்  ஒரே  ஒரு சிக்கல்.   வில்லன் நம்பியாராக  மூத்த அண்ணன் ருக்மி.
 தன் ஒரே தங்கை   தனது நண்பன்  சிறுபாலனுக்குத் தான் என்று  பிடிவாதமாக  முடிவெடுத்தான்.  பீஷ்மக ராஜாவின்  குடும்பம் அவன் சொல்லுக்கு  கட்டுப்டும்  நிலையில் அவன் பலசாலி. நாட்டின் தளபதி.
அண்ணாவின்   நண்பன் சிசுபாலனோ   கிருஷ்ணனின் பரம வைரி.   எப்படி  கிருஷ்ணனை அவள் கல்யாணம் பண்ணிக்  கொள்ள இயலும்?   ருக்மியைக் கண்டு  அண்டை ராஜ்ஜியங்கள்  அலறின.  அவனை எதிர்க்கவோ வெல்லவோ  முடியாது.   அப்படி எல்லோரும்  அஞ்சும்  சக்தி கொண்டவனை   கிழ  பீஷ்மக ராஜாவால் எப்படி  எதிர்த்துப்  பேச  முடியும்?
கல்யாணத்துக்கு நாளும் குறித்தாகிவிட்டது.  அந்த பெண்  நன்றாக யோசித்தாள். மணந்தால் கிருஷ்ணன், அன்றேல், மரணம்.  அதற்கு முன்  இந்த  நிலைமையை  கிருஷ்ணனுக்கு  எப்படி  உணர்த்துவது?  இந்த  சிறைப் பறவை அவனையே  நினைத்து  இப்படி  அவனை அடைய  வழி தேடியபோது  தான்  அரண்மனைக்கு  சுனந்தனன் என்கிற  ப்ராமணர் ஒருநாள்   வந்தார்.   நீரில் மூழ்குபவன்  ஏதாவது ஒரு புல் கிடைத்தாலும் விடமாட்டான் அல்லவா?
 
அந்த பெண்  சுனந்தனரை  எப்படியோ தனியாக சந்தித்து  கிருஷ்ணனுக்கு  ஒரு அவசர  கடிதம் கொடுத்து  எப்படியாவது  கிருஷ்ணனிடம் இதை  உடனே  அவரிடம் கொடுத்து விடுங்கள்”  என்றாள்.  அதில் என்ன எழுதி இருந்தாள்?

"கிருஷ்ணா, புவன சுந்தரா (உலகிலேயே  அழகா)
, அழகு, வீரம், தைர்யம், அறிவும், சாதுர்யம்  அனைத்திலும் சிறந்தவா!! 
 உன்னை  நான் பார்த்ததே இல்லை, உன்னை பற்றி கேள்விபட்டே  உன்னையே  என்  கணவனாக  வரித்து விட்டேன். எந்த அளவுக்கு உன் மேல் காதல் இருந்தால் வெட்கத்தை விட்டு அந்நிய புருஷன் உனக்கு இதை எழுதுகிறேன். புரிந்து கொள். 
உடனே என்னை வந்து காப்பாற்றி அழைத்துச் செல்.  இல்லாவிட்டால் இன்னொருவன் எனக்கு  தாலிக்கயிறு  கட்டு முன்  தூக்கு கயிறு என் கழுத்தை அலங்கரித்து விடும். ஒருவேளை இந்த ஜன்மத்தில் உன்னை  அடைய முடியாவிட்டால்  அடுத்தடுத்த ஜன்மங்களிலாவது உன்னை  அடைய பாடு படுவேன்.
இப்படிக்கு  
உனக்காகவே  வாழும் ருக்மிணி"

துவாரகையில்  கிருஷ்ணன் அரண்மனை வாயில் காக்கும்  வீரர்களிடம் சுநந்தனர்  அவசரமாக  கிருஷ்ணனை பார்க்க வேண்டும்  என்று சொல்லி காத்திருந்தார். விஷயம் கிருஷ்ணனுக்கு சென்றது.  
 "உள்ளே  விடு அவரை  "  என்றான் கிருஷ்ணன்.
. கற்றறிந்த  அந்த பிராமணருக்கு உரிய உபசாரங்களை  அளித்தபின் கேட்டான்.
''என்ன விஷயமாக  என்னை பார்க்க வந்தீர்கள்?''
  எல்லா விவரங்களையும் சொன்ன  சுனந்தன் அந்த பெண்ணின்  அழகை வர்ணித்தார்.  அவள் கொடுத்த கடிதம் கிருஷ்ணன் கைக்கு வந்தது. புன்முறுவலுடன்  அதை படித்த கிருஷ்ணன்  தக்க வெகுமதியுடன் அவரை அனுப்பி வைத்ததோடல்லாமல் 
 "அவளை பார்த்து சொல்லுங்கள்,  கடிதம் கிடைத்தது.  தக்க தருணத்தில் வருவேன்''  என்று சொன்னதாக  அவளிடம் கூறுங்கள்.

அந்த  ராஜ குல வழக்கத்தின் படி  கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெ ண் தனியாக தோழிக ளுடன்  ஊருக்கு  வெளியே  இருந்த  பார்வதி கோவிலில் பூஜை செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ள சென்றாள்.  அங்கு  ஒரு  ரதம் காத்திருந்தது.   கிருஷ்ணன்  அவளை  அங்கு  சந்தித்து அவளை கடத்திச்  சென்றான்.  ருக்மிணி கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் த்வாரகையில் ருக்மிணி ராணியும் ஆனாள்.  அவளை எவன்  தாலி கட்ட  காத்திருந்தானோ  அவன் ஏற்கனவே கிருஷ்ணனின்  ஜன்ம வைரியாக இருந்த பின்னும்,  பொறுத்திருந்து  அவனுக்கு திருந்துவதற்கு கிருஷ்ணன் நிறைய சந்தர்ப்பங்கள்  கொடுத்தான்  வேறுவழியின்றி  கிருஷ்ணனிடம்  அவன்  உயிரிழந்ததை வேறு  ஒரு கதையில்  படிப்போம் ,

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...