Saturday, October 9, 2021

oru arpudha gnani

 ஒரு அற்புத ஞானி. -  நங்கநல்லூர்  J K  SIVAN  -


-ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் 

குருக்களின் கவலை... 

சாமியார்கள் தங்களைச் சுற்றி கும்பல் கூடினால் மகிழ்பவர்கள்.  அவர்கள் பேசுவதை, உபதேசிப்பதை எல்லோரும் கேட்கவேண்டும் என்று  விரும்பு வார்களா,  நினைப்பவர்களைப்  பற்றி  கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரடி அனுபவம் எவரோடும் எனக்கு கிடையாது.அவர்களது புத்தகங்களை விலை போட்டு விற்பவர்களும்  நாம் அறிவோம்.  விளம்பர பிரியர்கள், போட்டோக்களில் ஆசி அளிப்பவர்கள் எல்லாம் அதிகம்.  நிறைய  மடங்கள் ஸ்தாபித்து ஆட்கள் சேர்த்து   ஆடம்பரம் வாழ்வு தேடும்  துறவிகள்  பற்றி  நிறைய  செயதிகள் தினமும் வருகிறதே.
இப்படிப்பட்டவர்களுக்கு  இடையே   ஒரே ஒரு சாமியார், அருகில்  எவரையும் சேரவிடாமல் விரட்டியவர். எவருடனும் பேசி பழக விரும்பாதவர், எங்கும் எவர் வீட்டிலும் தங்க  பிடிக்காதவர் புத்தகம் எழுதாதவர், ப்ரம்ம ஞானியாகவே எந்த பேதமும் இல்லாமல் சகல உயிர்களுடனும் சமமாக   காணப்பட்டவர், சர்வ வல்லமை படைத்த சித்தர், ஒருவர் உண்டென்றால் அது ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தான். அவருக்கு சீடரும் இல்லை, குருவும் இல்லை.  அவரது மஹிமை அதீத சக்தியை உணர்ந்த வர்கள், அறிந்தவர்கள், பக்தர்கள்,  அவரை சதா சர்வகாலமும்   எங்கு சென்றாலும் நிழல் போல்  பின் தொடர்ந்து சூழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

காவேரிப் பாக்கத்தில் ஸ்வாமிகள் காணப்பட்டார் என்று அறிந்து அண்டை அசல் ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்  கொண்டு வந்துவிட்டார்கள்.  சேஷாத்ரி ஸ்வாமிகள் தரிசனம் கிடைத்தாலே சகல பாபங்களும் விலகும் துன்பங்கள் தீரும் என்று  உணர்ந்து,  அவர் மஹிமை அறிந்தவர்கள்  அவர் ஆசி பெற காத்திருந்தார்கள். 
அவர்  எப்போதும் தவத்தில் இருப்பவர்.  கும்பல் சேர ஆரம்பித்ததும்   எவரிடமும் சொல்லாமல் திடீரென்று அங்கிருந்து  கிளம்பிவிட்டார் அந்த தனிமை விரும்பி சுவாமியார்.  ரெண்டு மூன்று  மாதங்கள் ஒரு சேதியுமில்லை அவரைப் பற்றி. எங்கிருக்கிறார்?  நடுநடுவே  ''நான் ஸ்வாமிகளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்'' என்று எவராவது சொல்வார்கள்.  பாதி புரளியாக இருக்கும் என்பதால் நிச்சயமாக தெரியவில்லை. செங்கல்பட்டில்  சிவன் கோவிலில் இருக்கிறார் என்று யாராவது சொல்லி அங்கே ஓடினால்  இருக்கமாட்டார்.  ''வந்தவாசியில் அல்லவா பார்த்தேன்'' என்று இன்னொருவர் சொல்வார்.

''இன்னிக்கு  காலையில் வந்தவாசி சிவன் கோவிலில் அவரைப் பார்த்தேன்... இப்போது மத்தியானம் எங்கே போனார் என்று தெரியவில்லையே'' என்பார்கள்.   தனது யோக சக்தியால்  ஸ்வாமிகள் எங்குவேண்டுமானாலும் காணப்படுவார்.

ஸ்வாமிகள்  திண்டிவனம் வந்துவிட்டார்  என்று   கேள்விப்பட்டு  பக்தர்கள் அங்கே சென்றார்கள்.  அவர்  அங்கே இருந்தது வாஸ்தவம்.  மௌன விரதம். யாருடனும் பேசவில்லை.  ஏதாவது சொல்ல விரும்பினால் எழுதிக் காட்டுவார்.  அங்கே நிறைய பக்தர்கள் அவரை மௌன ஸ்வாமிகள் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.  
திண்டிவனம் ஒருகாலத்தில்   திண்டீஸ்வரம் என்ற க்ஷேத்ரம்.  அங்கே சிவனுக்கு பெயர்  திந்திரிணீஸ்வரர் அம்பாள் மரகதவல்லி, மரகதாம்பாள்.  தேவாரம்  பாடல் பெற்ற ஸ்தலம்.   நமது சென்னையிலிருந்து  திருச்சி மார்கத்தில்   மூணு மணி நேரத்தில் போகலாம்.  நிறைய பஸ்  வசதி இருக்கிறது.   ஊரில்  இரண்டு சிவன் கோவில்கள் .

இந்த திந்த்ரிணீஸ்வரர்  ஆலயத்தில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகள்   ஸ்ரீ  T K  கண்ணையர்  என்கிற  பக்தரிடம் ஒருநாள் 

''எனக்கு இங்கே இருக்க முடியலே. தனிமையாக  தியானம் பண்ணனும்'' என்றார்.   கண்ணையர்  சிவன் கோவில் அர்ச்சகர் குப்புசாமி குருக்களிடம்  ஸ்வாமிகளுக்கு  தனியாக  கோவிலில்  யாரும் வராத ஒரு இடம் கொடுக்க சொன்னார்.  மூடியிருந்த யாகசாலை  மண்டப  அறையை   அர்ச்சகர் திறந்து ஸ்வாமிகளுக்கு ஒழித்து விட்டார்.

ஸ்வாமிகள்   அந்த அறைக்குள் சென்றவுடன் 

'' ஒரு காரியம் பண்ணுங்கோ,  வெளியே கதவை  சாத்தி  பூட்டிடுங்கோ. ஒரு  மாசம் கழிச்சு திறந்தா போதும்.  யாரும் அதுவரைக்கும் என்னை தொந்தரவு பண்ண வேண்டாம்.''

நாலு நாள்  ஆனவுடனேயே  அர்ச்சகர் வயிற்றில் புளியை கரைத்தது. 

''ஐயையோ  ஸ்வாமிகள் சொன்னாரே என்று  அவரது உயிரோடு உள்ளே வைத்து கதவை பூட்டிவி ட்டோமே.  அன்ன ஆகாரம், நீர்  இல்லாமல்  உள்ளே  தியானம் பண்றேன் ன்னு போனவர் சத்தமே காணோமே.  ஐந்தாவது நாள் காலை  குருக்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. 

''ஸ்வாமிகளுக்கு  ஏதாவது ஆயிடுத்துன்னா....
என்னை அல்லவோ  அத்தனை பழியும் வந்து  சேரும்?   உன்னை யாருடா  அவரை உள்ளே வச்சு வெளியே பூட்ட  சொன்னது.  அந்த மனுஷன் பசியும் தாகமுமா  போய்ட்டா உன்னை சும்மா விட்டுடு வோமா?  என்று டாணாக்காரன் சொன்னா  என்ன பதில்? 

வெள்ளைக்காரன்  கொலை குத்தத்திலே   உன்னை தூக்குல தொங்கவிட்டுடுவான் ''-- இப்படி சிலர் பயப்படுத்தினார்கள்.

''ஐயோ   அப்படி ஏதாவது   நடக்ககூடாதது ஏதாவது ஆச்சுன்னா, கோவில் புனிதம் வேறு  கெட்டுவிடுமே .  மறுபடி ஹோமங்கள் சாந்தி,  புண்யாஹவாசனம், சுபம் எல்லாம்  கோவில் முழுக்க  பண்ணணுமே ... நிர்வாகத்துக்கு என்ன பதில் சொல்றது. இப்படி தப்பு பண்ணிட்டேனே.. இதுக்கெல்லாம் நீ தான் பொறுப்பு வை பணத்தை கீழே என்று சொன்னா,  என்னாலே எப்படி அத்தனை செலவை ஏத்துக்க முடியும் ?''

பயத்தில் நடுங்கினார் குருக்கள்.  பக்தர்களிடம் சொல்லி கண்ணையர் கிட்ட போய் ஸ்வாமிகளை வேறே எங்காவது ஒரு இடத்துக்கு மாத்தி அனுப்ப ணும் என்று சொல்லிவிட்டார்கள்.  கண்ணையருக்கு வேறு வழி இல்லை. 

ஆறாவது நாள்  காலையிலேயே கதவை திறந்து விட்டா ர்கள்.

உள்ளே  மரக்கட்டை போல  அசையாமல் சேஷாத்ரி ஸ்வாமிகள் தியானத்தில் இருந்தார். ஊர் மக்கள் திறந்து இருந்த   அறை  வாசலில் பெரிய கூட்டமாக  கூடிவிட்டார்கள். ஆறுநாள் அன்ன ஆகாரம் தண்ணீர் இல்லாமல் தவமா??..

 அரைமணி நேரம் கழித்து  ஸ்வாமிகள் தியானம் கலைந்தது.  
கண்ணையர்  இரு கை  கூப்பி  ஸ்வாமிகளிடம் குருக்களின் பயத்தைப்பற்றி சொன்னவுடன்  ஸ்வாமிகள் ஒன்றும் சொல்லவில்லை.  ஸ்வாமிகள் எல்லோரையும்  ஒருமுறை  பார்த்து விட்டு விடுவிடுவென்று எங்கோ நடந்தார்..

எங்கே??   யாருக்கு தெரியும்?''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...