Friday, October 29, 2021

MATHS TEACHER


 எங்க வாத்யார்..... நங்கநல்லூர் J K SIVAN


ராகவாச்சாரி பல்லைக் கடித்தான். இருப்பதே பத்தரை பல்லு தான். அதுவும் அங்கொன்று இங்கொன்றுமாக மேலும் கீழும். சீடை, முறுக்கு கடித்து ரொம்ப காலமாகிவிட்டது. பெரிய குடுமி காணாமல் போய் வழுக்கை மண்டை விளக்கொளியில் கண்ணைக் கூச, ரெண்டு காதுக்கும் மேலே சில வெள்ளிக்கம்பிகள் பின்னால் சென்று இணைந்து சங்கமமாகி ஒரு சிண்டு தான் மிச்சம்.

அவன் கணக்கு வாத்தியாராக ரிடையர் ஆனவன். பிள்ளைகள் வளர்ந்து உத்யோகமாகிகுடும்பஸ்தர்கள். பேரன் பேத்திகள் தாத்தாவோடு விளையாட, ஏன் பேசக்கூட நேரமில்லாதவர்கள். ஒரு காலத்தில் வைதேகி இருந்தாள் , அடிக்கடி காப்பி கேட்பான். ஆனால் ரெண்டு வேளை தான் அரை டம்ளர் கொடுப்பாள். திட்டுவான். ஆரம்ப பயம் அவளுக்கு மறத்து போய்விட்டது. அவனுக்கு பிடித்த சுண்டைக்கா வத்தக் குழம்பு, ஜவ்வரிசி வடாம் பண்ணி போடுவாள். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் கீரை சுண்டல், கீரை மசியல், மணத்தக்காளி கீரை பொறிச்ச கூட்டு ரொம்ப பிடிக்கும். பண்ணி போடுவாள். ஐந்தே முக்கால் வருஷம் ஆகிவிட்டது அவள் போய். அந்த சாப்பாடு இல்லாம நாக்கு செத்து போச்சு.

இப்போது என்ன கொடுக்கிறார்களோ அதைச் சாப்பிட பழக்கம் பண்ணிக் கொண்டு விட்டான், இன்னும் ரெண்டு நாளில் காலண்டர் சீட்டு கிழித்தால் 78வயது முடியப்போகிறது. இடுப்பு வெட்டி அவிழ்வது தெரியவில்லை. பார்வை கொஞ்சம் மங்கல். அதிக பக்ஷம் 10 அடி தூரம். காதும் கிணற்றுக்குள் இருந்து யாரோ பேசுவது போல் தான் கேட்கிறது. தூக்கம் அடிக்கடி வருகிறது. கோழி தூக்கம். உடனே விழிப்பு.
''ஒரு பயலும் என்னை லக்ஷியம் பண்ணறதில்ல''. உள்ளே ஒரு குரலின் கேள்வி.

''அதனாலென்னடா ராகவா, நீயும் லக்ஷியம் பண்ணாதே அவ்வளவு தானே.. '' இன்னொரு குரலின் பதில். இன்னும் பேசுகிறது:'' கிருஷ்ணன் இருக்கான், நாராயணன் இருக்கான், பிரபஞ்சம் முழுக்க அவனே தான். எப்பவும் உன்னை பார்த்துண்டு இருக்கான். எதிரே படம் மாட்டியிருக்கியே. அந்த கண்ணுலே பார் எத்தனை கருணை, தயை, அன்பு. அம்மாடா அவன். அவன் ஒத்தன் உன்னை எப்பவும் லக்ஷியம் பண்ணி தானே உன்னையே பாக்கிறான் போறாதா?''

''நீ சின்ன வயசிலிருந்து பார்க்கறியே, இந்த சூரியன். எத்தனை தடவை நமஸ்காரம் பண்ணி இருக்கே? . அன்னிலேருந்து இன்னிக்கு வரை உன்னை ஒரேமாதிரி தானே லக்ஷியம் பண்ணி அதே வெளிச்சம் கொடுக்கிறது. அந்த சந்திரனும் , காத்தும், மழையும், கிணற்று நீரும் அப்படி தானே, யாரு உன்னை அலட்சியம் பண்ணறா சொல்லு? - அதேகுரல் தொடர்கிறது.
நீ நட்ட மாஞ்செடி கொல்லப்பக்கம் எத்தனை மாங்காயை, பழத்தை தறது. உன்னை அலக்ஷியம் பண்ணலையே. பின்னே எதுக்கு வேண்டாத கவலை உனக்கு?
''அப்போ யாரு என்னை அலக்ஷியம் பண்ணது?:: ராகவாச்சாரி குரலைக் கேட்டான்.

''நீயே தாண்டா. உன் மனசு. அது தான் பொல்லாதது. அப்பவும், இப்பவும், எப்பவுமே அது தான் நம்பியார்.
நீ எத்தனை பேரை தூக்கி அடிச்சு பேசினவன், உதாசீனம் பண்ணவன், அவனுக்கு வலிக்குமேன்னு அப்போ தெரியலையே? உன்னை மதிச்சு வந்தவனைக் கூட நீ எதுத்தவன் தூக்கி யடிச்சு முட்டியவன். அப்போ வலிக்கலே. சிலர் உன்னை லக்ஷியம் பண்ணாவிட்டா லும் அவன் பின்னாலேயே எல்லாம் காரியம் ஆகணு ம்னு ஒடினியே. அப்போ இந்த தன்மானம் எங்கே போச்சு?இப்படி பண்றதெல்லாம் நீ இல்லை. உன் மனசு. அதோட தன்மையை தான் ''மனப்பான்மை'' என்று சொல்கிறோம். வேண்டுமென்றால் உயர்த்தி, வேண்டாமென்றால் துச்சமாக, கால் தூசியாக தள்ளும் குணம். இப்போ யாரைப் பாத்தாலும் உன்னை அலட்சியம் பண்றதாக ஒரு நினைப்பு. அவனவன் கவலை அவனுக்கு. அது உனக்கு மறந்து போயிடுத்து. நீயே உன்னை ஏன் தாழ்வா நினைச்சுக்கறே. இல்லாததை இருக்கறா மாதிரி ஒரு பாவனை ஏன்.

ராகவாச்சாரி என்னிக்கும் கணக்கு ப்ரபோஸர் தான். அவனுக்குன்னு ஒரு தனி மதிப்பு எப்போதும் உண்டு. எத்தனை பேர் உன்கிட்டே படிச்சதுக்கு தினமும் ஒரு தடவையாவது நினைக்கிறான்னு உனக்கு தெரியுமா? உன்னை தெய்வமா எத்தனை பேர் கொண்டாடறான் தெரியுமா உனக்கு? 32 வருஷம் வீடு வாசல் குழந்தை குடும்பம், எல்லாம் மறந்து கணக்கே பிரதானம்னு திருப்பி திருப்பி ஒவ்வொருத்தனுக்கும் புரிய வைச்சியே, காசா பணமா? என்ன எதிர்பார்த்தே? ஒண்ணுமில்லே. மாசம். 186 ரூபா சம்பளம் ஒண்ணுக்காக தானே உசிரைக்கொடுத்து, அத்தனை நன்றியோடு உழைச்சே. அது வீண் போகுமா? . நீ தெய்வம்டா ராகவா. ஒரு கணம் இப்படி நீ நினைச்சதுண்டா. உன் ஸ்டூடண்ட்ஸ் உலகமெல்லாம் எங்கெங்கேயோ இருக்காண்டா. அவன் பிள்ளை குட்டிக் கிட்டே ''எனக்கு கிடைச்சது போல் உங்களுக்கு கணக்கு, இங்கிலிஷ் சொல்லிக் கொடுக்க ராகவாச்சாரி மாதிரி வாத்யார் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கிடைக்க மாட்டார் டா'' என்று சொல்றது உன் காதிலே விழலே. '' பாவம், நாங்கல்லாம் அவரை கிழிசல் கருப்பு கோட்டு'' ன்னு தான் கேலி பண்ணுவோம் என்று வருத்தப்படறானுங்க உன் மாணவர்கள் எல்லாம். உனக்கு எங்கே அதெல்லாம் தெரியும். பெரிய சூரியனும் அதன் சின்ன பிரதிபலிப்பும் ஒண்ணு தான். ரெண்டுக்கும் வெளிச்சம் உண்டு. நீ பெரிசாவே நினை. சின்ன எண்ணங்கள் காணாமல் போயிடும். இப்பல்லாம், நீ ஏன் பெரியாழ்வார் படிக்கறதை நிறுத்திட்டே? . எடு புஸ்தகத்தை. தினமும் மூணு நாலு பாசுரம் உரக்க படி, பாடு. உனக்கு கேட்டால் போதும் உன் குரல்.

அப்புறம் எவன் என்ன நினைச்சா என்ன, பெரியாழ்வார் என்ன நினைச்சார் என்பதே மனதில் நிக்கும். உன்னை நேரடியாக பாராட்ட எவரும் வேண்டாம். நீ பாராயணம் பண்றியே அந்த பெருமாள் உன்னை பாராட்டுவார்.

''டேய் , ராகவா நீ நல்லவன். உன்னாலே எத்தனையோ குடும்பங்கள் உன்கிட்டே நன்னா படிச்சு, சந்தோஷமாக நல்ல உத்யோகம் கிடைச்சு சுபிக்ஷமா வாழறதுடா. ஒரு க்ஷணம் இதை எண்ணி பார்த்தா, நீ இமயமலை மேலே நிக்கிறேடா. பாரிஜாதம் யாருக்கு வேணும் யாருக்கு வேணாம் என்று யோசித்து பூக்கறதில்லே. வாரி வாரி வழங்கறது., தரையெல்லாம் பாவாடை விரிக்கிறது. நீ வாத்யார் வேலை அப்படி தான் செஞ்சவன். உன்கிட்டே இருக்கிற வித்தையை வாரி வாரி தானம் பண்ணினவன். ஒரு க்ஷணம் திரும்பி பாருடா. உனக்கு தெரிஞ்ச, அந்த முகம் மறந்துபோன, மாணவர்கள் புரிஞ்சுக்கற வரையிலும் நீ விடமாட்டே. விடாம திருப்பி திருப்பி சொல்லிக் கொடுப்பே, கேள்வி கேட்பே. அவங்களுக்கு அப்போ அது புரியல. அப்புறம் வளந்து மூளை விரிஞ்சதும் புரிஞ்சுது. உன்னை வாழ்த்திண்டே தான் இன்னும் இருக்கானுங்க.

நீ என்ன பண்றே. உனக்கு அப்படிப்பட்ட ஒரு பாக்யத்தை கொடுத்த பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணி பெரியாழ்வார் ரொம்ப பிடிக்குமே படி எடுத்து மறுபடியும் இனிமே படி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...