Sunday, October 24, 2021

sri lalitha sahasranamam

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN  

ஸ்லோகங்கள்  43-44.  நாமங்கள்  126- 143


शाङ्करी, श्रीकरी, साध्वी, शरच्चन्द्रनिभानना ।
शातोदरी, शान्तिमती, निराधारा, निरञ्जना ॥ 43 ॥

சாங்கரீ ஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |
சாதோதரீ சாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜநா || 43

निर्लेपा, निर्मला, नित्या, निराकारा, निराकुला ।
निर्गुणा, निष्कला, शान्ता, निष्कामा, निरुपप्लवा ॥ 44 ॥

Nirpepa nirmala nitya nirakara nirakula
nirgunaa, nishkalaa, saantha, nishkaama  nirupaplavaa. 44

நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா, சாந்தா நிஷ்காமா நிருபப்லவா || 44

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம விளக்கம்:  (126-143)

* 126 *
 शाङ्करी -சாங்கரீ - 
சங்கரனின் பத்னி. சங்கரனான சங்கரி. சம் என்றால் சந்தோஷம். கரி என்றால் செய்பவள். அதாவது அளிப்பவள். சிவனும் உமையும் வேறல்ல. அம்மையும் அப்பனும் ஆனவர்கள். தூத்துக்குடியில் இருக்கும்  போது பாகம்பிரியாள் என்ற அம்பாளை அனுதினமும் தரிசிப்பேன். ஆனந்தமாக இருக்கும்.

*127* 
श्रीकरी - ஸ்ரீகரீ -- 
ஸ்ரீ என்றால் லட்சுமி. செல்வம். அளவற்ற செல்வங்களை சந்தோஷத்தை வாரி வழங்குபவள் அம்பாள்.செல்வம் இங்கே அருட்செல்வம் பொருட்செல்வம் இரண்டையும் தருபவள் என்று பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை அல்லவா? ஈருலகும் நாம் அனுபவிக்க செய்பவள். அளவற்ற இச்செல்வங்கள் பெற்றவனே லக்ஷ்மிபதி.

* 128 * 
. साध्वी -ஸாத்வீ --
 கணவனோடு என்றும் இணைபிரியாமல், சிவபக்தியோடு   ஓம் நமசிவாய மந்த்ர ஸ்வரூபமாக இருப்பவள்.

*129 * 
 शरच्चन्द्रनिभानना -  சரச்சந்த்ர நிபாநநா -- 
வசந்தகால (அக்டோபர் பாதிக்குமேல்) சந்திரன் போன்ற அழகிய வதனம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். - அக்டோபர் நடுவிலி ருந்து, நவம்பர் , டிசம்பர் முற்பாதி வரை சரத்காலம். மழை கொட்டோகொட்டு என்று சென்னையில் தெருவெல்லாம் தெப்பம் விடும் காலம்.அம்பாள் நிறைய மழை தரட்டும். மேகங்கள் இன்றி வானம் துல்லியமாக இருக்கும். சந்திரன் முழுசாக களங்கமின்றி தெரிவான். அப்படிப்பட்ட முகம் அம்பாளுக்கு.

* 130*
 शातोदरी -சாதோதரீ - 
இடையே இல்லாதவள். கொடி இடையாள் . காமகலா என்னும் மெல்லிய நுண்ணிய ஸ்வரூபம்

* 131 * 
 शान्तिमती - சாந்திமதீ - 
அமைதியே உருவமானவள். ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஏன் சொல்கிறோம். 
எங்கும் எதிலும் மனம் சஞ்சலம் அடையக்கூடாது. அமைதியினால் தான் நிம்மதி பெறுகிறோம். அம்பாள் நமக்கு எது தேவை என அறிந்து அதுவே ஆனவள். பக்தர்கள் தவறை எல்லாம் புன்னகை யோடு பொறுப்பவள்.   அம்மா குழந்தை ரொம்ப விஷமம் பண்ணினால் தான்  ஒரு தட்டு 
 தட்டுவாள். தவறுகளை திருத்த ரெண்டு டீச்சர்கள் இருக்கிறார்களே. அஸ்வாரூடதேவி, வராஹி தேவி .அம்பாளின்  உபாங்கங்கள். இனி வரும் நாமங்களில் அம்பாள் எப்படி நிர்குணமாக இருக்கிறாள், அருவமாக என்று அறிவோம்.

* 132 *
 निराधारा -   நிராதாரா - 
உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு பிடிப்பு, ஆதாரம் தேவை. அம்பாளுக்கு எந்த ஆதாரமும் தேவையற்றவள் என ஒரு நாமம். முடிவில்லாதது அழியாதது என்கிறது சாண்டோக்யஉபநிஷத் (VII.24.1) ஆரம்பம் முடிவு இல்லாத ஒன்றுக்கு எது ஆதாரம்?

* 133 * 
 निरञ्जना - நிரஞ்ஜநா - அஞ்சனா: அவித்யா, அஞ்ஞானம்
அம்பாள் பூர்ண ப்ரம்ம ஞான உரு. குற்றங்குறை அற்றவள். மாசு மரு இல்லாத ஸ்ரீ லலிதாம்பாள். அஞ்சனம் என்றால் மை என்றும் ஒரு அர்த்தம். மை தீட்டுவதே அழகு சேர்க்க. அழகுக்கு எதற்கு மை? அம்பாள் அதனால் தான் நிர் -அஞ்சனா. நிஷ்களங்கமானவள்.

* 134 * 
 निर्लेपा   நிர்லேபா - 
பற்றுதல் ஏதும் இல்லாதவள். ஒட்டு உறவு மூலம் தான் பற்றுதல் வருவது. கர்மம், பந்தம் இதற்கெல் லாம் அப்பாற்பட்டவள் அம்பாள். அவள் பந்தமும் பாசமும் பக்தர்க ளிடம் மட்டுமே.

* 135 *
 निर्मला - நிர்மலா - 
அசுத்தம் நெருங்காதவள். பரிசுத்தமானவள். மலம் இங்கு ஆணவமலம், கன்மமலம், மாயாமலம். இதனால் தான் நாம் சம்சார பந்தத்தில் சிக்கி சுழன்று, வாடி வதங்குகிறோம்.

* 136 * 
 नित्या - நித்யா - 
சாஸ்வதமானவள். நிலைத்து நின்று அருளுபவள். அழிவற்றவள்.

* 137 * 
 निराकारा  -நிராகாரா - 
தனக்கென ஒரு உருவ மற்றவள். பக்தர்கள் வேண்டும் நாம ரூபத்தில் தெரிபவள். நிர்குணப்ரம்மம்.

* 138 '
 निराकुला -   நிராகுலா - 
மனதில் சஞ்சலம், சந்தேகம் இருந்தால் அடைய முடியாதவள். மாயை தான் தடுக்கிறது. பவித்ரமான சாதகனின் நெஞ்சுக்கு அவளைத் தெரியும்.

* 139 *
 निर्गुणा -   நிர்குணா - 
விவரிக்கமுடியாதவள். இது தான் குணம் என்று நிர்ணயிக்கமுடியாத அதீதமானவள் அம்பாள்.

* 140 * 
 निष्कला - நிஷ்கலா - 
அங்கங்களாக பிரிவு படாதவள். ப்ரம்மம் எப்போதுமே முழுசானது தானே. இந்த இடத்தில் கிருஷ்ணன் சொன்னது பொருத்தமாக இருக்கிறது. ''அர்ஜுனா, இதோ பார், எல்லைக்குட்பட்ட, இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் என்னில் ஒரு துண்டு, பாகமானவையே.''

* 141* 
 शान्ता - சாந்தா 
சில சமயம் ஒரே அர்த்தம் கொண்ட ரெண்டு மூன்று நாமங்கள் வந்தால் அவற்றை படிக்காமல் விடவேண்டாம். ஒரு காரணத்துக்காகவே திருப்ப சொல்லவேண்டி யிருக்கும். அதற்குள் முன்னர் சொல்லாத அர்த்தம் த்வனிக்கலாம். ஸ்ரீ லலிதாம்பிகை எப்போதும் சாந்தஸ்வரூபி. நமது பெண்கள் பலருக்கு சாந்தா, சாந்தி என்று பெயர் வைப்பதே நற்குணங்கள் நிரம்பி இருக்கவே. பாரபக்ஷமற்ற பாசம், நேசம் பக்தர்களிடம் கொண்டவள்

*142* निष्कामा -  நிஷ்காமா - 
எந்த விதமான ஆசையோ, விருப்பமோ, வேட்கையோ,தேவையோ, இல்லாதவள் அம்பாள். எல்லாமே தன்னுள் நிறைந்த ப்ரம்மத்துக்கு தனியாக என்ன ஆசையோ தோசையோ வேண்டும்?உயர்ந்த வேதாந்தமான ப்ரஹதாரண்யக உபநிஷத் ( II.iii.6) ''நெதி நெதி - ந இதி ந இதி ,'' இது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாக புறக்கணித்துக்கொண்டே வரும் வைராக்கியம் கடைசியில் எதுவும் எனக்கு தேவையில்லை என்று கொண்டுவிடும்.

* 143 *
निरुपप्लवा - நிருபப்லவா - 
ஸ்ரீ லலிதாம்பிகை நித்யஸ்வரூபி. என்றும் சாஸ்வதமானவள். உடம்பில் ஓடும் 72000 நாடி நரம்புகளுக்கு அம்ருதத்தை வழங்குபவள். ஆனந்தஸ்வரூபி. நிர் என்றால் தேகம். உப : அதைசேர்ந்த, ப்ளவா : கொட்டுதல். தொண்டை வழியாக குண்டலினி பெருக்கும் அம்ருதத்தை உடல் முழுதும் நரம்புகளில் பாய்ச்சி, ஆனந்தாம்ருதம் பருகச்செய்பவள்.

                         சக்தி தேவதை  ஆலயம்  -புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன், தஞ்சாவூர் 

1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய சென்றார். ப்ரம்மானந்தமாக தரிசனம் செய்து அன்றிரவு அங்கே தாங்கினார். ராத்திரி கனவில் சமயபுரம் காளி தோன்றினாள்.
''அடே வெங்கோஜி, நீ இருக்கும் தஞ்சாவூருக்கு வெளியே மூன்று மைல் தூரத்தில் ஒரு காட்டில் நான் இருக்கிறேனே. என்னை அங்கே பார்க்காமல் இவ்வளவு தூரம் வந்தாயே. முதலில் அங்கே வந்து என்னைப் பார்'' என்ற அம்மன் குரல் கேட்டு ராஜா வெங்கோஜி தன் ஊருக்கு ஓடினான். அவள் சொன்ன இடத்தில் ஒரே புன்னை மரக் காடு. வெட்டி வீழ்த்தினான் . வெள்ளெறும்பு புற்று உருவில் காளியை கண்டு பிடித்தான். இப்போது நாம் தரிசிக்கும் முத்து மாரி அங்கே கோவில் கொண்டாள். பின்னால் வந்த அரசர்களில் துளஜா மகாராஜாவின் பெண், நோயில் கண்ணை இழந்தவள், இங்கே அம்மனை வேண்டி கண் பெற்றாள். அக்காலத்தில் இந்த ஊர் பெயர் மாரியம்மாபுரம்.
மகா தவயோகி அவதூதர் சதாசிவ பிரம்மேந்திரர் ('மானஸ சஞ்சரரே'' பாடியவர்) அந்த புற்றை மாரியம்மனாக உருமாற்றினார். ஜனாகர்ஷணம் சக்ரம் பிரதிஷ்டை செய்தார். வெள்ளமாக பக்தர்கள் வருகிறார்கள்.

தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் ஐந்து கி.மீ தூரத்தில் பிரம்மாண்டமான புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் ஜே ஜே என்று கும்பலோடு வரும் பக்தர்களுக்கு ஆசி அருள்கிறாள். 

தனது மனைவி தீக் குளித்து மறைந்ததற்கு காரணம் அவள் தந்தையின் அலட்சியம் என்று கோபம் கொண்ட சிவன் தக்ஷனை அழித்தார். கோபத்தில் இறந்த பார்வதியின் உடலை தோளில் சுமந்து ஆடினார். அவள் உடலை 51 பாகங்களாக ஸ்ரீ விஷ்ணு பாரத தேசமெங்கும் விழச்செய்து அவை உயர்ந்த சக்தி பீடங்களாயின. அவற்றில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்/புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் ஆலயம்.

மாரி அம்மன் தமிழ் மக்களை வாழவைக்கும் காக்கும் தெய்வம். மாரி= மழை. மண்ணையும் மக்கள் மனமும் குளிர வைக்கும் மழை தரும் கருணை தெய்வம். வேப்பிலைக்காரி. வேப்பிலை கிருமி நாசினி. வியாதிகளை அண்டவிடாது. எத்தனையோ லக்ஷ மக்கள் மனம் மகிழ வைப்பவள் . அருள்மாரி பொழிபவள்.

இந்த கோவில் `மராட்டிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வம்சம் தஞ்சைக்கு வந்த காலத்தில் ஏகோஜி காலம்:1676-1684-   கட்டப்பட்டது என்கிறார்கள். கிழக்கு பார்த்த சந்நிதி. ஐந்து கோபுரங்கள். நாலு பிரகாரங்கள். கோவிலில் முகப்பில் ஒரு நுழைவாயில் கோபுரம். பிரபல நடிகை வைஜயந்திமாலா கட்டிக்கொடுத்தது. நல்ல காரியங்களை நடிகர்  நடிகைகளும் செய்யும்போது வணங்குகிறோம். ரெண்டாம் சிவாஜி காலத்தில் கல்லும் காரையுமாக இருந்த கோவில். இப்போது 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது.

ஒரு ஆதி சைவ சிவாச்சாரியார் குடும்பம் துக்கோஜி மஹாராஜா காலத்திலிருந்து வழிபாட்டை திறம்பட நடத்தி வருகிறது. நிறைய குருக்கள் இந்த தலைமுறையில் தொடர்ந்து வழிபாடு செய்துவருகிறார்கள்.

மாரியம்மனோடு பேச்சியம்மனும் ஒரு சந்நிதியில் இருக்கிறாள். சரஸ்வதி அவதாரம். தஞ்சாவூர் பகுதியில் குழந்தைகள் உடல் நலத்த்திற்கு இன்றும் சிறந்த டாக்டர் பேச்சியம்மன் தான். . தஞ்சாவூரில் மட்டுமல்ல, மற்றும் இவளைத் தெரிந்த எண்ணற்ற குடும்பங்களுக்கும் இவளே டாக்டர். நம்பிக்கை தானே வாழ்க்கை.

அம்மன் ஸ்வயம்பு. புற்று வடிவமாக இருந்தவள். ஐந்து வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு மண்டல காலம் சாம்பிராணி தைல காப்பு.தஞ்சை சென்றால் தரிசிக்க வேண்டியவள் புன்னைநல்லூர் மாரியம்மன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...