Sunday, October 31, 2021

SRI LALITHA SAHASRNAMAM

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  -

ஸ்லோகங்கள்:  55-56     நாமங்கள்: 219 -231  

महाभोगा महैश्वर्या महावीर्या महाबला ।
महाबुद्धिर् महासिद्धिर्म हायोगेश्वरेश्वरी ॥ ५५॥

Maha bhoga Mahaiswarya  Maha veerya Maha bala
Maha bhudhi Maha sidhi Maha Yogeswareswari

மஹாபோகா மஹைச்வர்யாமஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர்மஹாயோகேச்வரேச்வரீ || 55

महातन्त्रा महामन्त्रा महायन्त्रा महासना ।
महायाग-क्रमाराध्या  महाभैरव-पूजिता ॥ ५६॥

Mahathanthra Mahamanthra Mahayanthra Mahasana
Mahayaaga kramaaraathyaa mahabhairava poojithaa.

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக க்ரமாராத்யா மஹாபைரவ பூஜிதா || 56

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (219 - 231 )  அர்த்தம்  


* 219 *  महाभोगा -மஹாபோகா  --  
அம்பாள் ஒரு  மஹாராணி.  ராஜ போகம் . அவளுக்கில்லாத  சந்தோஷங்களா? . சர்வமும் அவளே, அவளுடையதே  என்கிறபோது  மகிழ்ச்சிக்கு அளவேது?

* 220 *महैश्वर्या -    மஹைஸ்வர்யா   -
அவளே  அளவற்ற செல்வ ஸ்வரூபம். பிரம்மானந்தம்.  அதை தான்  விபூதி  என்பது. சகல  ஸர்வ ஸ்வதந்த்ர சக்தி அம்பாள்.    '' அர்ஜுனா,  எனக்கு எல்லையே இல்லையடா. எல்லா உயிர்களின் இதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேனடா. நானே எல்லாவற்றிற்கும்  எவ்வுயிர்க்கும் முதல், நடு, முடிவு எல்லாமே''  என்று கிருஷ்ணன் சொன்னானே அதே தான் இங்கே  அம்பாள் காட்சி அளிப்பது.

 *221*महावीर्या -   மஹாவீர்யா  --
எல்லையில்லா பெரும் காம்பீர்யம், சக்தி, அதிகாரம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. .  பக்தியோடு அணுகிய பக்தனுக்கு  சகலமும்  அருள்பவள். வழங்குபவள்.

*222* महाबला - மஹாபலா -  
அபரிமிதமான பலத்தை கொண்டவள் அம்பாள்.  சக்தியிலேயே  மிகப் பெரியது ப்ரம்ம சக்தி. அதுவே  ஸ்ரீ லலிதாம்பிகை.

* 223 *. महाबुद्धिः - மஹாபுத்திர் -
அதிக புத்தி கூர்மையானவள்.  அவளறியாத விஷயமே இல்லை.  சர்வ சகல ஞானி.

* 224 * महासिद्धिः - மஹாஸித்திர் --  
அதீதமான  சித்தத்தில்  வாய்க்கப்பட்டவள் .  இயற்கையாகவே  சர்வமும்  வரப்பெற்றவள்.   அஷ்ட மா சித்திகள்  மட்டுமா?  சகல சித்திகளுக்கும்  ஆதார நாயகி   அம்பாள்.

* 225 * महायोगेश्वरेश्वरी -  மஹாயோகேஸ்வரேஸ்வரீ-  
எல்லா யோகங்களும்  கை வரப் பெற்ற  மஹா யோகிகளும் வணங்கி போற்றும்   யோகிகளுக்குக் கெல்லாம் யோகியாகிய  யோக ஈஸ்வரி ஸ்ரீ லலிதை என்கிறார்  ஹயக்ரீவர்..

* 226 * महातन्त्रा - மஹாதந்த்ரா -  
பூரணமாக  தந்த்ர சாஸ்திரங்களின்  வெளிப்பாடானவள்.  வழிபடப்படுபவள் ஸ்ரீ லலிதை.

* 227 * महामन्त्रा -மஹாமந்த்ரா -  
 வேத  மந்திரங்களின் உட்பொருள்  அம்பாள்.  சிறந்த மந்த்ரங்களை தனது  கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள். எல்லா மந்திரங்களும்  ஸமஸ்க்ரிதத்தின்  51 அக்ஷரங்களான  கூட்டமைப்பு அல்லவா.  இந்த அக்ஷரங்கள் மாலையாக அம்பாளை அலங்கரிக்கிறதே.  பஞ்சதசி  ஷோடசி மந்த்ரங்கள் அவளே அல்லவா.

* 228 *  महायन्त्रा - மஹாயந்த்ரா --
அம்பாளைதான்  சக்தி வாய்ந்த  யந்திரங்கள் குறிக்கின்றன.  ஸர்வ யந்த்ராத்மிகே  என அவளைத்தானே  மந்த்ரங்கள் போற்றுகின்றன. மகா யந்த்ரம் தான்   ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரம்.  

* 229 * महासना - மஹாஸநா -  ஸ்
ஸ்ரீ  சக்ர   ராஜ சிம்ஹாஸனி  என்பது அம்பாளை அல்லவா.  சர்வ சக்தியான அம்பாள் மஹாராணி அல்லவா?

* 230 *   महायागक्रमाराध्या - மஹாயாக க்ரமாராத்யா --  
பாவன யாகம், சிதாக்னி குண்ட யாகம் போன்ற  பெரும்  யாகங்களில் வழிபடப்படுபவள் அம்பாள்.  அம்பாளின் பிரதிநிதியாக  64 யோகினிகளை வணங்கி வளர்க்கும் யாகம் மஹா யாகம். தந்த்ர சாஸ்திரத்தில் சொல்லப்படும் நவாவரண வழிபாடு.  க்ரமா என்பது முறையாக, கிரமமாக  அந்த யாகத்தை செய்வது.   64  யோகினிகள் பெயர் தெரியுமா?   சில பெயர்கள்  சில இடங்களில் மாறி வரலாம்:
 1.  பிராம்மணி  2. சண்டிகா 3. ரௌத்ரி, 4. கௌரி  5. இந்திராணி  6.கௌமாரி  7. பைரவி  8.துர்கா 9. நாரசிம்ஹி,10. காளிகா 11. சாமுண்டா 12. சிவ தூதி  13.வாராஹி  14.கௌசிகி  15 மகா ஈஸ்வரி  16. சங்கரி  17. ஜெயந்தி 18. சர்வ மங்களா 19 காளி  20.கராளிணி   21 .மேதா  22. சிவா 23. சாகம்பரி  24.  பீமா 25.சாந்தா  26 ப்ரமாரி  27.ருத்ராணி  28. அம்பிகா  29.  க்ஷமா  30. தாத்ரி  31. ஸ்வாஹா  32. ஸ்வதா  33. பர்ணா  34. மஹௌந்தரி  35. கோர ரூபா  36 , மஹா காளி 37. பத்ரகாளி  38. கபாலினி  39.  க்ஷேம கரி  41. சந்திரா 42.  சந்திராவளி  43. பிரபஞ்சா  44. ப்ரளயந்திகா  45.  பிசுவக்த்ரா  46. பிசாசி  47.  ப்ரியங்கரி  48.  பால விகர்மி  49. பால ப்ரமந்தநீ  50.  மத நௌன் மந்தணி  51. சர்வ பூதாதமனி  52  உமா  53. தாரா  54 மஹா நித்ரா  55.  விஜயா  56. ஜெயா 57.  சைலபுத்ரி , 58. ஸாயந்தி , 59. துஸ்ஜயா  60. ஜெயந்திகா 61. பிடாலி  62. கூஸ்மாண்டி   63. காத்யாயனி  64. மஹா கௌரி.

 * 231 *  महाभैरवपूजिता -  மஹா பைரவ பூஜிதா   -  
மஹா சக்தி வாய்ந்த   பைரவராலேயே பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.  மீண்டும் கவனப்படுத்துகிறேன்.  சிவனும் சக்தியும் கலந்த அம்சம் தான் பைரவர் எனும்போது எவ்வித  சக்தியும் வலிமையும்  உடையவர் என்று புரியும்.

சக்தி ஆலயம்:  அவனியாபுரம்  ரேணுகாம்பாள்:

''அப்பா, நீங்கள் விருப்பப்பட்டபடியே நான் புண்ய ஸ்தலங்களுக்கு சென்று யாத்திரை செய்து வருகிறேன்'' என்று  ஜமதக்னி ரிஷியை வலம்வந்து நமஸ்கரித்து   கிளம்பினார் பரசுராமர். ஒரு வருஷ காலம் சென்றது. திரும்பினார். தந்தைக்கு யாக யஞங்களுக்கு உதவியாக இருந்தார்.

வழக்கம் போல ஓர் நாள் ஆற்றங்கரைக்கு சென்ற  அவரது தாய்  ரேணுகா தேவி தரையில் குனிந்து மண் குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த மண் அன்று அந்த நிமிடமே மண்குடம் ஆகவில்லை. அடடா என்ன தவறு செய்துவிட்டேன். என்னால் மண்ணில் குடம் செய்து நீர் கொண்டு செல்ல முடியவில்லையே என்று திகைத்தாள். ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டு வரச் சென்ற ரேணுகா   ஏன் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார்.  ஞானக் கண்ணால் ஆற்றங்கரை நிகழ்ச்சி தெரிந்தது. ரேணுகாவின் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்து ஜமதக்னி ரிஷி,  சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயை  உடனே  கொல்லுமாறு கர்ஜித்தார்.
தந்தையின் இந்த கோபமான கட்டளை பிள்ளைகளை திகைக்க வைக்க அவர்கள் அப்பாவின் கட்டளையை நிறைவேற்ற தயங்கினார்கள். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கோட்பாடு கொண்ட பரசுராமன் அதை நிறைவேற்ற முன் வந்தான். அவனுக்கும் தாய்ப்பாசம் அதிகம். எனினும் தனது தந்தை சொல் தான் முக்கியம் என்று உணர்ந்தான்.   பரசு என்ற தனது ஆயுதமான  கோடாலியைக்   கையில் ஏந்தினான். ஆற்றங்கரை சென்றான். துளியும் யோசிக்காமல் அங்கே திகைத்து நின்ற தாய் மீது கோடாலியை வீசினான். அவள் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன.

ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். எதுவும் நிகழாததுபோல் கையைக் கட்டிக்கொண்டு

''ராமா! உன் சகோதரர்கள் எனது கட்டளையை நிறைவேற்றத்  தயங்கினாலும் நீ யோசனையே செய்யாமல் என் கட்டளைக்குக்  கீழ்ப்படிந்த   உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார் ஜமதக்னி ரிஷி.

''தந்தையே, என் குருதேவா... எனக்கு என்ன வேண்டும்.....தங்கள் தவ மகிமையால் இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அவர்கள் உயிர் பெற்ற பின்னர் நான் தான் அவர்களைக் கொன்றேன் என்ற எண்ணமே அவர்களுக்கு எழக்கூடாது. இந்த வரம் அருளவேண்டும்'' என்கிறார் பரசுராமன்.

உயிர் பெற்ற  ரேணுகா தான் மாரி அம்மன். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். சென்னையை அடுத்த போளூர் வந்தவாசி சாலையில் அவனியாபுரம் என்கிற ஊரில் அற்புதமாக ஒரு ஆஞ்சநேயர், நரசிம்மர். ரேணுகாம்பாள் ஆலயம் எல்லாம் தரிசித்த நினைவு வருகிறது.

ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனை கொல்கிறார் .

தந்தையை இழந்த கார்த்தவீரியார்ஜுனன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில்  ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் அருகே சென்று வாளை ஓங்கினான். ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது.

துண்டான ஜமதக்னி மஹரிஷியின் தலையை கார்த்தவீரியன் புதல்வர்கள் எடுத்துப்  போனார்கள். வெளியே இருந்து திரும்பிய பரசுராமன் விஷயம் அறிந்து நெருப்பாக கொதித்தார்.

இந்த கணம் முதல் க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிப்பேன் என சபதம் பூண்டு புறப்படுகிறார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார். கார்த்த வீர்யன் புதல்வர்கள் மற்றும் அரச குமாரர் களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது.

குருக்ஷேத்ரத்தில் இரத்தம் குளமாகியது. ஜமதக்னியின் தலையை மீட்டு உடலோடு சேர்த்து ஈம கிரியைகளை செய்தனர். இருபத்தொரு திக்விஜயம் செய்து பாரதம் முழுதும் பல க்ஷத்ரியர்கள் வம்சம் வேரறுந்தது. அந்த க்ஷத்ரிய ஹத பாபத்திற்கு பரிகாரமாக யாகங்கள் செய்தார்.

சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார்.

இன்றும் பரசுராமர் மஹேந்திர மலையில் சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு சிரஞ்சீவியாக தவம் செய்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன் பரசுராமரால் உயிரிழக்காமல் தப்பி பெண்களால் காப்பாற்றப்பட்டு அவன் வம்சம் தழைக்கிறது. பெண்களால் காப்பாற்றப்பட்டதால் அவனை ''நாரி வசன்'' என்பார்கள். மூலகனுக்கு அப்புறம் ஒரு தசரதன், இவன் ராமன் தந்தை அல்ல. அப்புறம் அந்த வம்சத்தில் கடைசியில் இன்னொரு தசரதன் தான் ராமன் தந்தை.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சிவ தனுசை ஒடித்து சீதையை மனைவியாக அடைந்து மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் ராமனோடு மோதுகிறார். தன் த\வவலிமை முழுவதையும் ராமபாணத்திடம் இழந்து '' நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக'' என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர்.

மகாபாரதத்தில் பரசுராமர் காசிராஜன் மகள் அம்பை ஸ்வயம்வரத்தில் பீஷ்மரால் கவரப்பட்டு அவரது விருப்பப்படி அவர் தம்பி விசித்திர வீர்யனை மணம் செய்துகொள்ள மறுத்து, அவள் காதலித்த சால்வ மன்னனால் நிராகரிக்கப்பட்டு பீஷ்மனை வெல்ல, கொல்ல, பரசுராமன் தயவை நாடுகிறாள். தவம் செயது பீஷ்மனை கொள்ள சிகண்டியாக உருவெடுக்கிறாள். பீஷ்மருக்கும் பரசுராமருக்கு போர் நடக்கிறது. பீஷ்மர், தனது பிரம்மச்சர்ய விரதத்தை காக்க உயிரையே பணயம் வைத்து பரசுராமரிடம் யுத்தம் புரிகிறார். பரசுராமர் தோற்கிறார். பின்பு தவம் செய்யச் சென்றார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தவர். கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி ஏமாற்றியதை அறிந்து அவனுக்கு தன்னிடம் கற்ற வில் வித்தை தக்க சமயத்தில் மறந்து போக சபிக்கிறார். இந்த சாபத்தாலும் அர்ஜுனன் கர்ணனை வென்று கொல்ல எளிதாகிறது.

இன்றைய கேரளாவிற்கு பரசுராம க்ஷேத்ரம் என்று பெயர். திருவானந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் உள்ளது.

கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கூடு என்ற ஊரில் உள்ள கண்டேஸ்வரர் ஆலயம் பரசுராமர் வழிபட்ட க்ஷேத்ரம். தனது தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கௌதம ரிஷி  ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டு நித்ய பூஜை நடக்கிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் விக்ரஹம் உள்ளது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...